Friday, October 15, 2010

ராஜபக்ஷே கொடும்பாவி எரிப்பு; கோவையில் வைகோ, அர்ஜுன் சம்பத் கைது.

Friday, October 15, 2010
கோவை: காமன்வெல்த் போட்டிகள் நிறைவு விழாவிற்கு, ராஜபக்ஷே வருவதைக் கண்டித்து, கோவையில் ராஜபக்ஷேயின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன; வைகோ, அர்ஜுன் சம்பத் உட்பட, ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர். டில்லியில், காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை அழைத்திருப்பதைக் கண்டித்து, ம.தி.மு.க., சார்பில், கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், நேற்று காலையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, நேற்று காலையில் 100க்கும் மேற்பட்டவர்கள், கறுப்புக் கொடிகளுடன் அங்கு கூடியிருந்தனர். காலை 10.45 மணி வரையிலும் ஆர்ப்பாட்டம் துவங்கவில்லை. 11.00 மணியளவில், "பொதுச் செயலர் வர்றாராம்' என்ற தகவல், அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் பரவியது. இதைக் கேட்டு தொண்டர்கள் உற்சாகமடைய, போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில், வைகோ அங்கு வந்து சேர்ந்தார். உடல்நலக்குறைவுடன் காணப்பட்ட அவரை, திரும்பிச் செல்லுமாறு முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதை மறுத்த வைகோ, ஆர்ப்பாட்டத்தில் தானே பேசுவதாகக்கூறினார். அவருடன் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத்தும் வந்திருந்தார். அதுவரையிலும், "மைக்'கிற்குக் கூட ஏற்பாடு செய்யாமலிருந்த நிர்வாகிகள், அவசர அவசரமாக "மைக்' ஏற்பாடு செய்தனர். வைகோ வந்ததும், அவரை வாழ்த்தி, தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். உடனே வைகோ குறுக்கிட்டு, "ராஜபக்ஷே ஒழிக' என்று கோஷம் எழுப்புமாறு கூறினார். உணர்ச்சிப்பூர்வமாக அர்ஜுன் சம்பத் கோஷங்களை எழுப்ப, அவரைத் தொடர்ந்து வைகோவும் கோஷம் எழுப்பினார்; இதனால், தொண்டர்கள் மிகவும் உற்சாகத்தோடு பதில் கோஷம் எழுப்பினர். ராஜபக்ஷே, சோனியா மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதன்பின், வைகோ பேச ஆரம்பித்தார். அவர் பேசி முடிப்பதற்குள் ராஜபக்ஷே கொடும்பாவியை சில தொண்டர்கள் கொண்டு வந்து ரோட்டில் போட்டு எரிக்க முயன்றனர். பாதி எரிவதற்குள் சுதாரித்துக் கொண்ட போலீசார், அரைகுறையாக அதைப் பறித்துச் சென்றனர். அதன்பின், தொண்டர்கள் கொண்டு வந்த இரண்டு உருவ பொம்மைகளையும் போலீசார் பறித்து விட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும், வைகோ, அர்ஜுன் சம்பத் மற்றும் மூன்று பெண்கள் உட்பட, 146 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றிச் சென்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள பெரியார் திராவிடர் கழகம் அலுவலகம் முன், ராஜபக்ஷே கொடும்பாவி எரிக்கப்போவதாக வந்த தகவலால் போலீசார் அங்கு விரைந்தனர். போலீசார் வந்தபின், நிதானமாக வெளியில் வந்த தொண்டர்கள், போலீசாருக்கு முன்பாகவே கோஷங்களை எழுப்பி, இலங்கைக் கொடிகளை கிழித்து எறிந்தனர். ராஜபக்ஷேயின் படத்தைச் செருப்பால் அடித்துக் கிழித்தனர். அங்கிருந்த 14 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அந்த வாகனம் கிளம்புவதற்குள், காந்திபுரம் சிக்னல் பகுதியிலிருந்த போலீசார் சத்தம் போட்டு, இங்கிருந்த போலீசாரைக் கூப்பிட, தலை தெறிக்க அங்கு ஓடினர். அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் சுசி கலையரசன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர், ராஜபக்ஷே உருவபொம்மையை எரிக்க முயன்றனர். போலீசார் பெரும் போராட்டம் நடத்தி, அவர்களிடம் இருந்த உருவபொம்மையை சல்லி சல்லியாகப் பிரித்துப் பறித்தனர். கோஷம் எழுப்பிய அவர்களையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

அந்த வாகனம் கிளம்புவதற்குள், அதே கட்சியின் தொண்டர்கள் ஐந்து பேர், சிக்னலுக்கு சற்று தொலைவில் சத்தி ரோட்டில் ராஜபக்ஷே உருவ பொம்மையைப் போட்டு எரித்தனர். போலீசார் செல்வதற்குள் அது பெருமளவு எரிந்து முடிந்தது. ஒரு குடம் தண்ணீரை ஊற்றி போலீசார் அணைத்து விட்டு, மீதமிருந்த சிறு பகுதியை போலீஸ் ஜீப்பில் பத்திரமாகக்கொண்டு சென்றனர். இந்த அமைப்பைச் சேர்ந்த 24 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்தடுத்து நடந்த இச்சம்பவங்களால் போலீசார் அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்பட்டனர். உருவ பொம்மை எரிக்க முயன்ற இளைஞர்கள் படுவேகமாக ஓட, கனத்த சரீரத்தைத் தூக்கிக் கொண்டு ஓட முடியாமல் உள்ளூர் போலீசார் திணறினர். தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போலீசார் இருந்தும், இரண்டு உருவபொம்மைகளை எரித்து விட்டனர். போலீசார் அங்குமிங்குமாக ஓடுவதையும், உருவபொம்மையை பறிப்பதற்குப் போராட்டம் நடத்தியதையும் அவ்வழியாக பஸ்களில் சென்ற ஏராளமான மக்கள் வேடிக்கை பார்த்தனர். போலீசாரின் தொப்பையைக் குறைக்க, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நடத்தி வரும் பயிற்சிகளை விட, போராட்டக்காரர்களால் போலீசாருக்கு நடந்த ஒரு மணி நேர, "பரேடு' மிகவும் சுறுசுறுப்பாகவும், சுவராஸ்யமாகவும் இருந்தது.

Sunday, October 10, 2010

அரசாங்கத்திற்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளில் இடைவெளி-–முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள் அவர்கள்.

Sunday, October 10, 2010
அரசாங்கத்திற்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளில் இடைவெளி காணப்படுவதாக வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களுக்கான சகல தேவைகளையும் அரசாங்கத்தினால் பூர்த்தி செய்ய முடியாது எனவும் அதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் சிவில் மக்களுக்கும் இடையில் காணப்படும் பிணைப்பை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது காரியாலயங்களில் பிரபாகரனின் படத்தை வைத்திருந்ததாகவும் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்க உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் வடக்கு மாகாணசபைக்கான தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து தாம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரப்பகிர்வு குறித்து கூடுதல் கவனம் செலுத்துவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தியின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

எனினும், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி அதிகாரத்தை பகிர்வதன் மூலமே முழுமையான அபிவிருத்தி இலக்குகளை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரம் பகிரப்படாமல் மக்களின் ஜனநாயக விருப்பங்களை நிறைவேற்ற முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஜனாதிபதியின் தற்போதைய நிலைப்பாட்டில் மாற்றம் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

18 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வரையறுக்கப்படாத காலத்திற்கு ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக லக்பிம பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதியின் படம் தொடர்பான விஷமத்தனமான கருத்துக்கு அரசாங்கம் கண்டனம்.

Sunday, October 10, 2010
நியூயோர்க்கில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 65 ஆவது பொதுச் சபை மாநாட்டில் கலந்து சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்பதியினார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தம்பதியினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள விஷமத்தனமான விமர்சனங்கள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவார் வெளியிட்டுள்ள அறிக்கையில்-
சர்வதேச மாநாடுகளின் நடைமுறைகள் பற்றித் தெரியாத சில ஊடகங்கள் பொது மக்களை பிழையாக வழிநடத்தும் நோக்கில் இவ்வாறான தவறான செய்திகளை வெளியிட்டுள்ளமை கவலைக்குரியது.

ஐ.நா. மாநாடுகளில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி வரவேற்று உபசரிப்பது வழமையான ஒரு சம்பிரதாயமாகும்
இம்முறை இச்சந்திப்பு நியூ+யோர்க்கில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க இயற்கை நூதன சாலையில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போதுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பாரியாருடன் அமெரிக்க ஜனாதிபதியையூம் அவரது பாரியாரையூம் சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கைக்கும் அமெரிக்காவூக்கும் இடையில் நெடுக்கால நட்புறவூ நிலைக்கின்றது. வா;த்தக ரீதியிலான நெருங்கிய தொடர்பும் உள்ளது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தொடர்பில் பிழையான செய்திகள் பரப்பப்படுவது கவலைக்குரியது.
வெளிநாட்டுத் தலைவர்களின் தூதுக் குழுவில் உள்ள எந்த படப்பிடிப்பாளாருக்கும் இந்த இடத்தில் படம் எடுக்க அனுமதியில்லை. அங்குள்ள உத்தியோகபூர்வ படப்பிடிப்பாளரே அதற்கான பணியில் ஈடுபடுத்தப்படுவர். அவரிடமிருந்தே ஜனாதிபதியின் படமும் கிடைத்துள்ளது. இது இணையத்தளங்களிலும் வெளியானது.

தமது தீருகுதாளங்களை சர்வதேசம் புரிந்துகொள்ளும் என்பதால் இப்படம் தொடர்பில் பிழையான தகவல்களை எந்த ஊடகமும் ஆங்கில மொழியில் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலைநாட்டில் சீரற்ற காலநிலை நீடிக்கிறது.

Sunday, October 10, 2010
மத்திய மலைநாட்டில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அடைமழை பெய்கின்றது.

இதன் காரணமான கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து, அதன் வான்கதவுகள் இரண்டு நேற்று திறக்கப்பட்டு இன்று மூடப்பட்டுள்ளது. கெனியன் மற்றும் லக்ஷபான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்து திறந்துவிடப்பட்டுள்ளன.

அத்துடன், ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளின் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. பொகவந்தலாவை, நோர்வூட், சாஞ்சிமலை ஆகிய பகுதி ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

மேலும் மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் அடிக்கடி மின் துண்டிப்பும் இடம்பெற்று வருகின்றது.

Friday, October 8, 2010

ராதாகிருஷ்ணன் மலையக மக்கள் முன்னணியில் இணைந்தார்.

Friday, October 8, 2010
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் கங்கிரஸின் உப தலைவருமான வீ. ராதாகிருஷ்ணனுக்கும் தமக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிந்ததாக மலையக மக்கள் முன்னணியின்; தலைவர் சாந்தினி தேவி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இந்த பேச்சு வார்த்தை இன்று இடம்பெற்றது.

இதன் போது, உயர் பதவி ஒன்றுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணனை தமது கட்சியில் இணைத்துக் கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மலைகய மக்கள் முன்னணியின் தலைவி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்படவுள்ள பதவி குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளாh.

இதேவேளை இது தொடர்பாக எமது செய்தி சேவை நாடாளுமன்ற உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணனை வினவிய போது, பேச்சுவர்த்தை வெற்றியளித்ததாக தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியால் வழங்கப்பட போதும் உயர் பதவியை ஏற்றுக் கொள்ள தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருதலைப்பட்சமான தமிழ் ஈழப் பிரகடனம் என்னால் மேற்கொள்ளப் படவில்லை–முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள் அவர்கள்.

Friday, October 8, 2010
ஒருதலைப்பட்சமான தமிழ் ஈழப் பிரகடனம் என்னால் மேற்கொள்ளப் படவில்லை–முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள் அவர்கள்.

நேர்காணல் :

முதலாவதாக வடகிழக்கு மாகாணசபைக்கு என்ன நேர்ந்தது? அபகீர்த்தியான ஒருதலைப் பட்ச சுதந்திரப் பிரகடனத்துக்கு வழி கோலியது எது?

முதலில் மாகாணசபைகளின் உருவாக்கத்துக்கு வழியமைத்தது எது என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவை இந்திய - ஸ்ரீலங்கா உடன்படிக்கைப் பிரகாரம் இன மோதல்களுக்கு ஒரு தீர்வு காண்பதற்காக 13 வது திருத்தத்தின் மூலமாக நிறுவப் பட்டவை. ஆனால் மாகாணசபைகளின் தேர்தல்கள் தெற்கில் மட்டுமே நடத்தப் பட்டன. நாங்கள் தேர்தல் எங்களுக்கும் தேவை என வற்புறுத்தினோம். ஏனெனில் மக்களால் தெரிவு செய்யப் பட்ட பிரதிநிதிகள் இங்கு இல்லாதபடியால் அதைப் பயன் படுத்தி புலிகள் தாங்கள் மட்டுமே மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனத் தெரிவித்தார்கள்.

நான்அரசாங்கத்திடம் தெரிவித்தேன்,மக்கள் மற்றொரு குழவினரை அதிகாரத்துக்கு தெரிவு செய்தால் அவர்களால் அப்படிச் சொல்ல முடியாது என்று.இறுதியாக ஜே.ஆர்.1988 நவம்பரில் தேர்தல்களை நடத்துவதற்குச் சம்மதித்தார். எனது அரசாங்கம் 1988 டிசம்பரில் உருவாக்கப் பட்டது.இதன் சில மாதங்களின் பின்னர், ஜே.ஆர். இன் பதவிக் காலம் முடிவடைந்து பிரேமதாஸ பதவிக்கு வந்தார்.

பிரேமதாஸ 13 வது திருத்தத்தைப் பலப்படுத்தப் போவதாகச் சொன்ன போதிலும், ஜனாதிபதியாகப் பதவி ஏற்றவுடனேயே மாகாணசபை முறைகளுக்குக் குழி பறிக்கத் தொடங்கினார்.அ ரசாங்கத்துடனும், எதிர்கட்சித் தலைவர்களுடனும், இந்திய அரசு அதிகாரிகளுடனும் அதிகாரப் பரவலை முன்னகர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த என்னால் இயன்ற மட்டும் முயற்சித்தேன். ஆனால் எவருமே அதிகாரப் பரவலாக்கத்தில் ஆர்வம் காட்டவில்லை.அத்துடன் பிரேமதாஸ தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கூட்டுச் சேர்ந்து மாகாணசபை முறைகளுக்குக் குழி பறிக்க ஆரம்பித்தார். புலிகளும், ஸ்ரீலங்கா இராணுவமும் ஒருவருக்கொருவர் உதவத் தொடங்கினார்கள்.எங்கள் இயக்கத் தோழர்கள் கொலை செய்யப்படலானார்கள்.எங்கள் இயக்கம் வெட்டிக் குறைக்கப் படலாயிற்று.எங்களின் நாட்கள் முடிவுக்கு வரத்தொடங்கி இருப்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். அதனால் ஒரு போராட்டத்துடனேயே வெளியேறுவதற்கு முடிவு செய்தோம்.

1987க்கு முன்பு நாங்கள் ஆயதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்.ஆனால் இந்தோ-லங்கா உடன்படிக்கையின்படி நாங்கள் எங்களின் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு வன்முறையற்ற நீரோட்டத்தில் கலந்து கொண்டோம்.ஆனால் எங்களுக்கு இந்திய ஸ்ரீலங்கா அரசுகளால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காப்பாற்றப் படவில்லை.எனவே இறுதியாக எனது கட்சியும், மாகாணசபையின் பெரும்பான்மையோரும் எங்கள் இறுதிக் கோரிக்கைகளை முன்வைக்க யோசித்தோம். நாங்கள் 19 அம்சக் கோரிக்கைகளை உருவாக்கி அதை மாகாணசபையில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றினோம்.மேலும் இதை இந்திய ஸ்ரீலங்கா அரசுகளுக்கும் அனுப்பி வைத்தோம்.ஆனால் யாரும் எங்கள் 19 அம்சக் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கவில்லை.இந்தக் கோரிக்கைகள் பெடரலிசம் எனப்படும் கூட்டு ஒருங்கிணைப்பைக் கூட கொண்டிருக்கவில்லை எல்லாமே ஒற்றையாட்சி முறைக்குள் அடங்கியிருந்தன. 19 அம்சக் கோரிக்கைகளுக்கு பலம் சேர்ப்பதற்கு வேண்டி நாங்கள் ஒரு எதிர்க்கோரிக்கையையும் இணைத்திருந்தோம்.அரசாங்கம் எங்களின் இந்தக் கோரிக்கைகளை ஏற்று ஒரு வருடத்துக்குள் நடைமுறைப் படுத்தாவிட்டால்,நாங்கள் பிரிந்து போகத் தீர்மானித்துள்ளோம் என்பதே அது.

தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தைப் பற்றி நாங்கள் நன்கு அறிந்திருந்த போதிலும் 19 அம்சக் கோரிக்கைகள் பற்றி எதுவும் அறிந்திருக்க வில்லை.எப்படியாயினும் பார்வையின் பின்னணியில் அந்த எதிர்க் கோரிக்கை ஒரு பாரதூரமான தவறு…..?

நல்லது. என்ன நடந்ததென்றால் நாங்கள் செய்ததைப் பற்றி மிகத் தீவிரமான ஒரு விரிவரன விளம்பரப் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது.ஜனாதிபதி பிரேமதாஸ மற்றும் பிரபாகரன், இந்த இரண்டு ‘பிக்களும் சேர்ந்து மிகவும் திறமையாகவும் கூர்மதியுடனும் பெருமாள் தன்னிச்சையாக ஈழத்தைப் பிரகடனப் படுத்தி விட்டார் என வெளியுலகிற்கு பரப்பினார்கள்.அது உண்மையில்லை.எனது பிரகடனம் 19 அம்சக் கோரிக்கைகளே.இன்றும் முழுச் சிங்கள தேசமும் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தில் என்னைக் கூட்டுச் சேர்க்கிறதேயன்றி எனது 19 அம்சக் கோரிக்கைகளைப் பற்றி எவரும் பேசுவதில்லை.

நான் நினைக்கிறேன் சரித்திரம் உங்களின் கேள்விக்கு ஏற்கனவே பதில் சொல்லி விட்டது என்று. பிரேமதாஸவும் புலிகளும் சேர்ந்து எங்களை நாட்டை விட்டு வெளியே வீசுவதில் வெற்றிகண்டிருந்த போதிலும் நாங்கள் வெளியேறும் முன் அரசாங்கத்தை எச்சரித்திருந்தோம்,இரத்தம் சிந்துவதற்கும் துன்பம் பெருகுவதற்குமான ஒரு அத்தியாயத்திற்கு அவர்கள் கட்டியம் கூறுகிறார்கள் என்று.பயங்கரவாதிகள் பக்கம் சார்ந்து ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி மீது தாக்குதல் நடைபெறக் காரணமாக இருந்த அரசாங்கம் ஒரு தீய உதாரணத்தைத் தந்தது. எப்படியாயினும் பிரீமதாச புலிகளுடனான தேனிலவு நீண்டகாலம் நிலைத்திருக்கவில்லை. நான் ஒன்றைப் பற்றி மிகவும் மனவேதனைப் படுகிறேன் பிரேமதாஸ ஒரு சிறிய அளவிலேனும் எங்களுடன் ஒத்துழைத்திருந்தால் 1990 களுக்குப் பிறகு நாங்கள் இழந்த மிக அதிகளவிலான 200,000 உயிர்களையும் இந்த நாடு காப்பாற்றி இருக்கலாம்.இது சிங்களத் தலைவர்களின் தெiலை நோக்கப் பார்வையின் குறைவினால் ஏற்பட்டது.

19 அம்ச பிரேரணைகளைப் பற்றி விபரிக்க முடியுமா?

இந்திய - ஸ்ரீலங்கா உடன்படிக்கையின் நறுமணம் அரசியலமைப்பில் எதிரொலிக்க வேண்டுமென நாங்கள் கூறினோம்.13 வது திருத்தம் ஒரு நல்ல சட்டவாக்கம் அல்ல.அது முறையான அதிகாரப் பகிர்வினைத் தடைசெய்து மத்தியினை நோக்கியே சகலதையும் வழி நடத்துகிறது.மற்றோர் முக்கிய அம்சம் தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஆயதப் படைகளில் இணைத்து நாட்டின் மக்கள் தொகையியலை அதில் பிரதிபலிக்கச் செய்தல்.அப்போது ஒரு விகிதத்திலும் குறைவான தமிழர்கள் கூட பாதுகாப்புப் படையில் இருக்கவில்லை. அதே நிலமைதான் இன்றும் கூட. நாங்கள் மேலும் வடக்கு கிழக்கினை மீள் எல்லை வரையறை செய்ய விரும்பினோம்.மாகாணங்களின் பல மாவட்டங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இருந்தன.அவர்கள் தங்கள் பாதுகாப்பில் கவலை கொண்டிருந்தார்கள்.அவர்களின் கவலை சட்டபூர்வமானதென்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.அவர்களின் அச்சத்தைப் போக்க எல்லை வரையறைகள் அவசியம் என்பதை உணர்ந்தோம். வடக்கு கிழக்கு மாகாணங்களின் எல்லைப் பகுதிகளில் அமைந்திருக்கும் அதிகளவான சிங்களக் குடியேற்றங்கள் அருகிலிருக்கும் சிங்கள மாகாணங்களுடன் இணைக்கப் படவேண்டும் அதாவது திருகோணமலையிலுள்ள சிங்களக் குடியேற்றங்கள் பொலன்னறுவையுடனும் அம்பாறையிலுள்ளவை, மொனராகலையுடனோ அல்லது அம்பாந்தோட்டையுடனோ இணைக்கப் படுதல்.எனவே பெரியளவு சிங்கள மக்கள் தொகை சிங்கள மாவட்டங்களுடன் இணைக்கப் பட்டு விடும்.

நீங்கள் 1990 களில் நாட்டை விட்டு வெளியேறினீர்கள்.இந்த 20 வருடங்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.எது உங்களைத் திரும்பி வரத் தூண்டியது?

நான் 1990 ம் ஆண்டில் நாட்டைவிட்டு வெளியேறினேன்.ஏனெனில் இங்கு வாழ்வது பாதுகாப்பாக இருக்கவில்லை. அத்தோடு பிரேமதாஸவின் மரணத்தின் பின்பு ஐக்கிய தேசியக் கட்சியின் கீழில் என்னால் திரும்பி வரமுடியவில்லை.பிறகு சந்திரிகா பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்தார் நான் அவருடன் பேசினேன் ஆனால் அங்கிருந்து சாதகமான ஒரு மறுமொழி கிட்டவில்லை.1998லேயே அவர் சம்மதம் தெரிவித்தார்.இங்கு நான் கருதுவது என்னவென்றால் எந்தவிதமான சட்டக் காரணங்களும் எனது வருகையை தடை செய்யவில்லை, ஆனாலும் அங்கு புலிகளிருந்தார்கள். எனக்கு பாதுகாப்பு தேவையாகவிருந்தது. பாதுகாப்பு அதை அரசாங்கத்தினால் மட்டுமே வழங்க முடியும்.1999 ஜனவரியில் நான் திரும்பி வந்தேன். அதிகாரப்பரவலாக்கத்தை சந்திரிகா பண்டாரநாயக்கா வெளியிடுவார் என நான் நினைத்தேன்,அவரது மறுசீரமைப்புகளுக்கு நாம் ஆதரவாகவிருந்தோம்.ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி,மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன அதை எதிர்த்தன.

2002ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கா பிரபாகரனோடு ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தார் அத்தோடு இந்த நாடு பயங்கரவாதிகளின் பிடியிலானது.எனது பாதுகாப்பு நீக்கப் பட்டது, எனது வீட்டைச்சுற்றிலும் புலிகளின் ஆதரவு பாராளுமன்ற அங்கத்தவர்கள் குடியிருந்தனர். புலி அங்கத்தினர்கள் எவ்வித தடையுமின்றி அடுக்கு மாடிவீடுகளுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இந்தியாகூட எனது பாதுகாப்பைக் குறித்து எனக்கு எச்சரிக்கை செய்தது,திரும்பவும் நான் நாட்டைவிட்டு 2003ல் வெளியேற வேண்டியதாயிற்று.போர் முடிவடைந்த பின்பு பாதுகாப்பு பற்றிய பிரச்சனை அவ்வளவாக முக்கியம் பெறவில்லை.நான் இங்கேயே வேலை செய்யமுடியும் என நினைக்கிறேன்.ஆனால் நான் அரசாங்கத்துடனோ எதிர்கட்சியுடனோ சேரப்போவதில்லை.நான் திரும்பவும் எனது சொந்தப் பாதையைச் செதுக்குவேன்.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மிக முக்கியமான பிரச்சனை மீள்குடியேற்றம்.மக்கள் முறையாக மீள்குடியமர்த்தப் படவில்லை. மககளிடம் எதுவுமே இல்லாதிருக்கும் போது,ஒரு சில கூரைத்தகடுகளும் சிறிதளவு பங்கீட்டு உணவுப் பொருளும் மக்களுக்கு போதுமானதாக இல்லை.அரசாங்கமும் சர்வதேச சமூகங்களும் அவர்கள் தங்கள் வாழ்க்கையும் தொழில்களையும் மீளக்கட்டி எழுப்புவதற்கு தாராளமனமுள்ள உதவிகளைச் செய்யவேண்டும்.

அரசாங்கத்துக்கும் குடியியல் அமைப்பு நிறுவனங்களுக்கும் இடையில் கூட்டுச் செயற்பாடுகள் மிகவும் குறைவாக இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது.அரசாங்கம் தனது சொந்தப் பொறிமுறைகளைக் கொண்டே சகலதையும் செய்வதற்கு எத்தனிக்கிறது, ஆனால் அவர்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளும் தேவை, ஏனெனில் அவர்களுக்கு மக்களுடன் நல்ல தொடர்புகள் இருக்கின்றன.அரசாங்கம் அவைகளைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.தனது சொந்த நிருவாகப் பொறிமுறையில் மட்டும் தங்கியிருக்கக் கூடாது, ஏனெனில் அது கடந்த 20 வருடங்களாக புலிகளினால் சீரழிக்கப் பட்டு விட்டது.பல நிருவாக அலுவலர்களும் பிரபாகரனின் புகைப்படத்தை தங்கள் அலுவலகங்களில் தொங்கவிட்டு புலிகளுடன் இணைந்து வேலை செய்தவர்கள்தான்.அவர்கள் இப்போது அதை மறுபக்கமாகத் திருப்பி விட்டிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அதே ஆட்கள்தான்.

வரப்போகும் வடமாகாணசபைத் தேர்தல்களில் அல்லது உள்ளுராட்சித் தேர்தல்களில் போட்டியிடும் திட்டம் ஏதாவது உங்களிடம் உள்ளதா?

மிகவும் முக்கியமான விடயம் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (PநுPசுடுகு.) கட்சியினைப் புனரமைப்பதே. இக் கட்சி வரப்போகும் தேர்தல்களில் போட்டியிடும் ஆனால் நான் போடடியிடுவது பற்றி இன்னமும் தீர்மானிக்க வில்லை,அது சார்ந்திருக்கிறது. எனது முக்கிய கவனம் யாவுமே எனது கட்சியும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அதிகாரப் பரவலாக்கத்தையும் அடித்தளமாகக் கொண்டு எல்லாத் தமிழ் கட்சிகளிடையேயும் ஒருமனதான ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதுமே.நாங்கள் அதிகளவில் இன்னமும் சோஸலிஸ வாதிகள்தான் ஆனால் அது உடனடி நிகழச்சி நிரலில் இல்லை.இந்த நாட்டுக்கு முதல்தேவை இன்னமும் தீர்க்கப் படாதிருக்கும் இனமோதல்களை தீர்த்து வைப்பதே அது தீர்வடையும் போது சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமான இடையிலான புரிந்துணர்வு நிச்சயம் வளரும். அது ஐக்கியமான கட்சியினை உருவாக்கும் தளமாக அமையும்.

ஸ்ரீலங்காவில் தற்போதுள்ள அரசியல் விவகாரங்களைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்களா?

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதிகாரப் பரவலாக்கத்தை தனது நிகழச்சிநிரலின் மிக அடியில் போட்டு விட்டார். அவர் நினைக்கிறார் அவர் ஏற்கனவே நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி விட்டதால் அபிவிருத்தி மட்டுமே எல்லாவற்றுக்குமான தீர்வினைத் தந்து விடும் எனறு. அந்த எண்ணம் தவறானது.அபிவிருத்தியானது ஜனநாயகத்துடனும் அதிகாரப் பரவலாக்கத்துடனும் கையோடு கை சேர்;த்து நடைபோட வேண்டும். அதிகாரப் பரவலாக்கமில்லாது மக்களின் ஜனநாயக அபிலாசைகள் நிறைவடைந்து விடாது. அதிகாரப் பரவலாக்கமில்லாது அபிவிருத்தியை அடைந்து விட முடியாது,ஏனெனில் அரசியல் ஐக்கியம் அதிகாரப் பரவலாக்கத்திலேயே தங்கியுள்ளது எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதிகாரப் பரவலாக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் சமமான பங்களிப்பை வழங்க வேண்டும்.

நீங்கள் சொல்கிறீர்கள் நாட்டுக்கு இன்னும் அதிகளவிலான அதிகாரப் பரவலாக்கல் தேவை என்று,ஆனால் அரசியலமைப்பின் 18வது திருத்தம் அதிகாரங்களை ஒருமுகப் படுத்துவதற்கே வழி நடத்துகிறதே?

ஆம். எல்லா அதிகாரங்களும் ஒரு ஆளையே மையமாகக் கொண்டு சுற்றி நிற்கின்றன. இது எல்லா அதிகாரங்களையும் ஒரு மந்திரி சபைக்கு ஒருமுகப்படுத்துவதை விட மோசமானது. குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு இவ்வளவு அதிகாரங்களையும் ஒரு ஆளிற்கே வழங்குவது, மிகவும் ஆபத்தானது.ஆனால் நாங்கள் காலவரையின்றி இதை ஒருவருக்கே வழங்கியுள்ளோம். அப்படிப்பட்ட மனிதர் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதில் ஒருபோதும் மகிழ்ச்சியடைய மாட்டார். எனவே 18வது திருத்தம் அதிகாரத்தைப் பன்முகப் படுத்துவதற்கும் பரவலாக்குவதற்கும் முட்டுக்கட்டை போடுகிறது.

என்ன சாதகங்களை நீங்கள் காண்கிறீர்கள்? போர் முடிவடைந்து விட்டது.நீங்கள் மீண்டும் அரசியற்களத்தில் இறங்க முடியும் இதையிட்டு நீங்கள் மகிழச்சியடைகிறீர்களா?

எங்களிடம் இன்னமும் ஜனநாயகம் இருக்கிறது. நம்பகமாக சீக்கிரத்தில் அது ஒரு இராணுவ ஆட்சியாக முறுக்கடைந்து விடாது.அத்துடன் தமிழர்கள் யாருக்கும் பிரிவினை தேவையில்லை.பிரிவினைக்கான அவா முடிவடைந்து விட்டது. ஆனால் அது ஒரு சாதகமான அரசியல் முறையாக மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது.ஆனால் அரசியல் முறைகள் விருத்தி செய்யப் பட வேண்டும்.ஏதோ தேர்தல்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து விடுவதால் மட்டும் அரசியல் நாகரிகம் ஜனநாயகமாகி விட்டது என்கிற கருத்தாகி விடாது.இந்தப் பிரச்சனைகளில் எம்மை ஈடுபடுத்திக் கொள்ளாவிட்டால் வருங்காலங்களில் அதிகப் பிரச்சனைகள் தோன்றக் கூடும்.

ஒருகாலத்தில் வடகிழக்கு மாகாணசபையில் உங்களின் கீழ் அமைச்சராக இருந்த தயான் ஜயதிலகா உடன் இன்னமும் நீங்கள் தொடர்புகளை பேணி வருகிறீர்களா?

அவர் ஒரு அரை நாள் அமைச்சர். அவர் மதியம் அமைச்சராகச் சத்தியப் பிரமாணம் செய்தார்,பிற்பகலில் வடகிழக்கை விட்டுப்புறப்பட்டார்,பின்பு திரும்பி வரவேயில்லை.ஆனால் அவர் அந்தப் பதவியை மதிப்புக்காக இன்னமும் பயன் படுத்துகிறார்.அவர் வடகிழக்கை விட்டுப் புறப்பட்ட போது விஜயகுமாரதுங்கவின் சித்தாந்தத்துக்கமைவான வேலைகளைத் தொடரப்போவதாக கூறிச் சென்றார்;. ஆனால் கொழும்பை அடைந்ததும் ஜனாதிபதி பிரேமதாஸ உடன் இணைந்து கொண்டார்

எனக்கு அவருடன் தனிப்பட்ட எதிர்ப்பு எதுவுமில்லை.ஆனால் நாங்கள் வடகிழக்கில் செய்தவைகளை அவர் விமர்சிக்கும் விதத்தில் எனக்கு அத்தனை மகிழச்சியில்லை. அந்த நாட்களில் நாங்கள் செய்தவைகளை எல்லாம் புகழ்ந்து தள்ளியவர் 10 வருடங்களின் பின் சொல்கிறார் நாங்கள் செய்தவைகள் எல்லாம் பிழையானவை என்று.அவர் இதை ஏன் செய்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் அவைககளை அப்போதே ஏன் எதிர்க்கவில்லை.அவர் ஒரு செழுமையான எழுத்தாளர்,எந்தக் கருத்தரங்கிலும் ஆர்வத்துடன் பஙகு பற்றுபவர். ஆனால் அவர் பார்வையின் தெளிவு மிகக் குறைவு.

(நன்றி: லக்பிம நியூஸ்) தமிழில்: எஸ்.குமார் (தேனீக்கான மொழிபெயர்ப்பு)

பொன்சேகாவின் எம்.பி. பதவி வெற்றிடம்; பாராளுமன்ற செயலாளர் அறிவிப்பு.

Friday, October 8, 2010
ஜனநாயகத் தேசிய கூட்டமை ப்பு கொழும்பு மாவட்ட எம். பி. சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தம்மிக தசனாயக்க நேற்று (7) தேர்தல் ஆணை யாளருக்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 66-டீ சரத்தின் பிரகாரம் இந்த பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். மேற்படி சட்டத்தின்64-ளி சரத்தின் படி பாராளுமன்ற பதில் செயலாளர் இதனை அறிவித்து ள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகாவு க்கு 30 மாத கடூழிய சிறைத்தண் டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதற்கு முப்படைகளின் தளப தியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் 29ம் திகதி அங்கீகாரம் வழங்கினார். இதனடிப்படையில், பொன்சேகாவுக்கு எதிரான தண்டனை 30 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டதோடு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சரத் பொன்சேகாவின் வெற்றிடத்திற்கு கொழும்பு மாவட்டத்தில் இருந்து ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு பட்டியலில் அடுத்ததாக உள்ள லக்ஷ்மன் நிபுனஆரச்சி நியமிக்கப்பட உள்ளதாக அறியவருகிறது.

இதேவேளை, சரத் பொன்சேகாவின் எம். பி. பதவி வெற்றிடமாக இருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் அறிவித்திருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் பிரியங்கா ஜயரட்ன, அரசியலமைப்பின் பிரகாரம் சட்டபூர்வமாகவே பாராளு மன்ற செயலாளர் அறிவித்துள்ளதாகக் கூறினார்.

Tuesday, October 5, 2010

வன்னியில் மக்கள் கருத்து கேட்கும் நிகழ்வில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ்- வரதராஜப்பெருமாள்-- புதுக்குடியிருப்பில் மக்களை சந்திக்க சென்ற போது


Tuesday, October 5, 2010
புதுக்குடியிருப்பில் மக்களை சந்திக்க சென்ற போது பத்மநாபா ஈபிஆர்எல்எவ்-முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள்.

இறுதிக்கட்ட போரின் போது பெரிதும் பாதிகப்பட்ட இடங்களை பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இனர் பார்வையிட்டனர். அங்கு தற்போது மீள் குடியேற்றம் நடைபெற்று வரும் மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர். மேலும் ஈபிஆர்எல்எவ் இன் உறுப்பினர் பலரையும் மீண்டும் சந்தித்து உறவுகளை புதுப்பித்து கட்சி வேலைகளை ஆரம்பித்து வைத்தனர். முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு பகுதிக்கு விஐயம் செய்த முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள் அவர்கள் அங்கு நடைபெற்ற மீள் குடியேற்ற இடங்களை பார்வையிட்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------- -----------
வன்னியில் மக்கள் கருத்து கேட்கும் நிகழ்வில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ்- வரதராஜப்பெருமாள்.

மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறியும் நிகழ்வின் ஒரு பகுதியாக வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் தலைவர்களில் ஒருவரான முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை முதல் அமைச்சர் அ. வரதராஜப்பெருமாள். வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீநகர் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் எமது முன்னாள் தோழர் கணபதி கதிரவேலு (ரகுபரன்) அவர்களால் நடாத்தப்படும் ஸ்ரீஸ் கந்தராஐ இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியினை மங்கள விழக்கேற்றி ஆரம்பித்து வைத்து சிறப்புரையாற்றினார். அவருக்கு கோயில் நிர்வாகிகள் மற்றும் இசைக்குழுவினர் சார்பில் மாலைகள் அணிவித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்

அமைதியை நிலைநாட்ட ஜனாதிபதிக்கு வாய்ப்பென்கிறார் றொபேர்ட் ஓ பிளேக்.

Tuesday, October 5, 2010
இலங்கையில் பல்வேறு இனங்களிடையே ஜனநாயத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்கான வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்குக் கிடைத்துள்ளதாகத் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

உலகின் கொடூர பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றைத் தோற்கடித்துள்ளதன் மூலம் நாட்டில் நிலையான சமாதானத்தையும் வளமான அபிவிருத்தியையும் முன்னெடுப்பதற்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தெற்காசியக் கொள்கைகள் குறித்து சன்டியாகோவில் நடைபெற்ற உலக விவகாரங்கள் தொடர்பான உரையின்போதே அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

மோதல்கள் அற்றதும் காத்திரமான பொருளாதார முன்னேற்றத்தையும் கொண்டதாக இலங்கையின் எதிர்காலம் அமையவுள்ளதாக கொழும்பிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளார்.

வடமாகாண இலக்கிய விழா இறுதி நாள் விழா இன்று.

Tuesday, October 5, 2010
கடந்த முதலாம் திகதி கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் ஆரம்பமான வட மாகாண இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.

கிளிநொச்சி இந்துக் கல்லூரி 'மெட்றாஸ் மெயில் அரங்கில்' பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகும் இவ்விழாவை முன்னிட்டு கிளிநொச்சி பிரதான நகரிலிருந்து பண்பாட்டுப் பேரணியொன்றும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணக் கல்விப் பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் தலைமையில் இன்றைய இறுதிநாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வடமாகாண ஆளுநர் உட்பட அரச அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

சிறந்த நூல்களுக்கான பரிசுகள் மற்றும் கௌரவ ஆளுநர் விருது என்பவை வழங்கல், மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் என்பவை இடம்பெறவுள்ள இவ்விழாவில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழப்பு.

Tuesday, October 5, 2010
காலநிலை காரணமாக இதுவரை பத்துப்பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகிறது.

உயிரிழந்தோரில் 6 பேர் மின்னல் தாக்கத்தினால் பலியானதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இவர்களைத் தவிர மேலும் ஆறுபேர் இயற்கை அனர்த்தங்களால் காயங்களுக்குள்ளானதாகவும் அவர் சொன்னார்.

மழைவெள்ளம் காரணமாக முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளைச் சேர்ந்தோருக்கு இழப்பீடுகள் வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மழை வெள்ளம் காரணமாக 30 வீடுகள் முற்றாகவும் 84 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ எச் எம் பௌசி குறிப்பிட்டார்.

Monday, October 4, 2010

முப்பது வருடங்களின் பின்னர் நாட்டின் சகல பிரதேசங்களும் எம்வசம்-பொலனறுவையில் ஜனாதிபதி!

Monday, October 4, 2010
முப்பது வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் சகல பிரதேசங்களும் தற்போது எம் வசம் உள்ளன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொலனறுவைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலதிஸி மண்டபத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில் மக்களுக்கான சேவையை நிறைவேற்றும் போது நாம் கட்சி நிறம் என பேதம் பார்ப்பதில்லை.

வட மத்திய மாகாணத்தை உள்ளடக்கும் அனுராதபுரம் பொலனறுவை மாவட்டங்களின் மக்கள் தேவையை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இம்முறை வரவூ செலவூ திட்டத்தில் நிதி ஒதுக்குவதற்குத் தயாராகிவருகின்றௌம்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு மாவட்டத்தில் ஒரே கட்சியின் உறுப்பினர்கள் மட்டும் பாராளுமன்றத்தில் அமரும் காலம் இது. பொலனறுவை மாவட்டத்தில் ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த ஏர்ள் குணசேகரவூம் இப்போது எம்முடன் உள்ளார்.

முப்பது வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் சகல பிரதேசங்களும் தற்போது எம் வசம் உள்ளன. பொலனறுவை மாவட்ட மக்கள் புலிகளிடமும் காட்டு யானைகளிடமும் சிக்கித் தவித்த காலகட்டங்களை நாம் மறக்கவில்லை. சிங்கப்பூரைப் போன்று 20 மடங்கு பிரதேசத்தைப் புலிகள் தம் வசம் வைத்திருந்தனர்.

கடற் பரப்பில் 3ல் இரண்டு அவர்களிடம் இருந்தது. இப்போது சகலதும் இணைக்கப்பட்டு ஒரே ஆட்சியின் கீழ் ஒரே கொடியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியாகவூம் ஐக்கியமாகவூம் வாழக்கூடிய சு+ழலை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது.

இந்த நிலைக்கு நாட்டைக் கொண்டு வருவதற்கு மதத் தலைவர்களும் மக்களும் வழங்கிய பங்களிப்புகள் அளப்பரியவை. அதற்காக அவர்களுக்கு நாம் நன்றிகூறுகின்றௌம்.

இப்போது எல்லைக் கிராமங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இம் மாவட்டம் அரசர்கள் ராஜதானிகளைக் கொண்டிருந்த மாவட்டமாகும். இங்கிருந்து முழுநாட்டிற்கும் அரிசி வழங்க முடியூம்.

விவசாய சமூகத்தின் சகல தேவைகளையூம் நிறைவேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தமது பிள்ளைகள் விடயத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.

பொலனறுவை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்குச் செல்வோரின் தொகை குறைவடைந்துள்ளதாக அறிய முடிகிறது. பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியை வழங்குவதில் பெற்றௌர் உரிய பங்களிப்பையூம் அர்ப்பணிப்பையூம் வழங்குவது அவசியமாகும்.

நாம் எத்தகைய அபிவிருத்திகளை மேற்கொண்டாலும் பிள்ளைகளை கல்வியிலும் ஒழுக்கத்திலும் முன்னேற்றாவிடில் பயனில்லை. பிள்ளைகள் போதைக்கு அடிமையாகாமல் நல்வழியில் செல்ல பெற்றௌர்களும் அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படவேண்டும். குறிப்பாக பெற்றௌர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகத் திகழவேண்டும் எனவூம் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

விடிவின் இன்னுமொரு பரிமாணம்!

Monday, October 4, 2010
இற்றைக்கு சுமார் ஒரு வருட காலத்துக்கு முன்னர் தலை நகரில் நடமாடுவதென்பது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடமாடுவதற்கு ஒப்பானது. எந்த நேரத்தில் எந்த இடத்தில் என்ன மாதிரியான குண்டு வெடிக்கும் என்ற பீதி மக்களை ஆட்கொண்டிருந்த காலம் அது. தலை நகரில் மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் எந்தப் பாகத்தையும் இந்தப் பீதி விட்டுவைக்கவில்லை. குறிப்பாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நடமாடும்போது ஒன்றில் கால்களை இழக்க நேரிடும் நிலை அல்லது உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையே காணப்பட்டது.

சுமார் மூன்று தசாப்தங்கள் நீடித்த இந் நிலையை முற்றாக மாற்றி மக்கள் இன்று எந்தப் பீதியுமின்றி பருத்தித் துறை முதல் தேவேந்திர முனை வரையான முழு இலங்கைத் தீவிலும் சுதந்திரமாகவும் உயிருக்கான உத்தரவாதத்துடனும் நடமாடக் கூடிய நிலையை மிகக் குறுகிய காலத்துக்குள் வெற்றிகரமாகத் தோற்றுவித்து இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து நிற்கும் உதாரண புருஷரான நம் நாட்டின் தலைவர் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலப் பகுதி இந் நாட்டு வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காலப்பகுதியாகும்.

அத்தோடு மட்டும் நின்று விடவில்லை நமது ஜனாதிபதி அவர்கள் தொடர்ந்து உலகுக்கு ஆச்சரியமூட்டும் பல நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார். அவ்வகையான ஒரு நிகழ்வுதான் அன்மையில் வவுனியா கலாசார மண்டபத்தில் நடந்தேறியது. அதாவது உலகின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கம் என்று வர்ணிக்கப்பட்ட எல்ரீரீஈ இயக்கத்தின் முன்னாள் அங்கத்தவர்களை போர்க் கைதிகளாகப் பிடித்து சித்திரவதைக்குட்படுத்துவதற்கு மாறாக புனர்வாழ்வு நிலையங்களில் அவர்களுக்கு துறைசார் தெழிற் பயிற்சிகளை வழங்கியது மாத்திரமன்றி தொழிற் சந்தையில் இலகுவாக அவர்கள் தொழில் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் சுய தொழில் செய்ய இருப்பவர்களுக்கு இலகு வட்டியுடனான கடனாக இரண்டரை லட்சம் ரூபாக்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு புனர்வாழ்வு நிலையங்களில் தொழிற் பயிற்சி பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சுமார் 403 பேர் கடந்த 30ஆம் திகதி காலை பத்து மணியளவில் வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் அவர்களது பெற்றௌர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவ்வாறான நிகழ்வொன்று இடம்பெற்றது உலகிலேயே இலங்கையில்தான் முதன்முறையாகும்.

இவ்வாறு தம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் எல்ரீரீஈ அங்கத்தவர்கள் பலர் கருத்து வெளியிடுகையில் “தாங்கள் புது மாத்தளனில் வைத்து கைது செய்யப்பட்டபோது இதன் பிறகு எமக்கென்றொரு எதிர்காலமில்லை மரணம்தான் எமது முடிவாக அமையப் போகிறது என்று நினைத்த எமக்கு ஆச்சரியமூட்டும் வகையில் எந்தவிதமான சித்திரவதைகளும் செய்யாமல் சிறைகளில் கூட எம்மை அடைத்து வைக்காது புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைத்து தொழிற் பயிற்சிகள் வழங்கியது மாத்திரமன்றி தொழிற் சந்தையில் இலகுவாக தொழில்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தந்ததுடன் சுய தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு கடன் வழங்கி ஒளிமயமான எதிர்காலமொன்றை எமக்கு ஏற்படுத்த இந்த அரசாங்கத்துக்கு என்றென்றும் நன்றிக்குரியவர்களாக இருக்க நாங்கள் கடமைப்பட்டவர்கள்” என்று தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ குணசேகர பிரதியமைச்சர், விஜிதமுனி சொய்சா ,அரச மற்றும் இராணுவ உயரதிகாரிகள் பெற்றோர்கள் பொது மக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Sunday, October 3, 2010

கிளிநொச்சியில் தமிழ் அரசியல் கட்சிகள் சந்தித்து பேச்சுவார்த்தை.


Sunday, October 03, 2010
தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கியுள்ள உடனடி தேவைகள் குறித்து இன்றைய தமிழ் கட்சிகளின் அரங்கம் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது என ஸ்ரீ டெலோ சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டதொடர் கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

ஈ.பி.டி.பி.செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் வரதராஜபெருமாள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பூ.பிரசாந்தன், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு செயலாளர் கே.சிவாஜிலிங்கம், புளோட் சார்பில் உதயன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மிக முக்கிய பிரச்சினைகளில் ஐந்து விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது, வடகிழக்கில் யுத்த காலத்தில் கொல்லப்பட்ட போராளிகள் உட்பட பொதுமக்களின் மரணச் சான்றிதழை பெற்றுக்கொடுள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

பொதுவாக ஒருவர் காணாமல்போகும் பட்சத்தில் அவர் 5வருடங்களில் திரும்பிவராவிட்டால் அவருக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கப்படுகின்றது. எனினும் ஜே.வி.பி.யினர் கொண்டு வந்த தீர்மானம் ஒன்றின் படி இரண்டு வருடங்களில் அவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இதன் காரணமாக யுத்த காலத்தில் கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் கொல்லப்பட்ட பொதுமக்கள் இதுவரையில் மரணச்சான்றிதழ் பெற்றுக்கொள்வதில் பலத்த சிரமத்தினை எதிர்நோக்கிவருகின்றனர்.

இதேபோன்று யுத்த காலத்தில் பிறந்த பிள்ளைகளுக்கான பிறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை இருந்தது.அதனை பெற்றுக்கொடுப்பது சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டன.

அத்தோடு வடகிழக்கில் காணி உரிமையற்றவர்கள் குடியேறுதல் தொடர்பிலான தகவல்களை திரட்டி இது விடயமாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மழைகாலம் ஆரம்பமாகியுள்ளதால் வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. ஆதலால் அந்த மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்து யுத்த நடவடிக்கையில் ஈடுபட்ட புலி உறுப்பினர்களுக்கு மாத்திரமே அரசாங்கம் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்கள் பக்கமே அரசு முழுமையான கவனத்தை செலுத்திவருகின்றது.

ஆனால் யுத்த நிலையின்போது புலிகளினால் பாதிக்கப்பட்டு இன்று எதுவும் அற்ற நிலையில் உள்ள ஏனைய இயக்க உறுப்பினர்கள் தொடர்பில் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் நலன் தொடர்பில் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு உதவுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

Sunday, October 03, 2010
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் கூட்டத்த்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாளைய தினம் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார் எனவும் குறிப்பிடப்படுகிறது.

மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி இந்த அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுனர் உள்ளிட்ட முக்கிய அரசாங்க அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டிருப்பதனால் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யுத்தகளத்தில் நடந்தது என்ன? - அரசு சரியாக வெளிப்படுத்தாததால் புலிகள் சாதகமாக்கிக் கொண்டுள்ளனர் - பேராசிரியர் றொகான் சுட்டிக்காட்டு.

Sunday, October 03, 2010
யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச் சாரங்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச பயங்கரவாத தடுப்பு நிபுணர் பேராசிரியர் றொகான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

யுத்த களத்தில் என்ன நேர்ந்ததென்பதனை உலகிற்கு அரசாங்கம் சரியான முறையில் வெளிப் படுத்தத் தவறியுள்ளதாகவும் இதனை தமிழீழ விடுதலைப் புலிகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்து சாதகமான பிரசாரங் களை மேற்கொள்வதற்கு அரசியல் தலை வர்கள் முன்வராமை ஆச்சரியமளிப்பதாக உள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம் பெற்ற சிவிலியன் இழப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் சரியான தகவல்களை வெளியிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் கடமையாற்றிய மருத்து வர்களுடன் நடத்திய செவ்விகளின் அடிப்படை யில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உச்ச பட்ச மாக ஆயிரத்து 400 பொதுமக்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ச்சியாக இயங்கி வரு கிறது அதனை இல்லாதொழிப்பதற்கு நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும். வட அமெரிக் காவில் மட்டும் 42 புலித் தலைவர் கள் இயங்கி வருகின்றனர். புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே அரசாங்கம் தீவிர முனைப்பு காட்டி யது. சர்வதேச வலையமைப்பை முடக்குவது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.

நோர்வேயை மையமாகக் கொண்டு இயங்கிவரும் நெடியவன் இன்னமும் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான பிரசாரங்களை மேற் கொண்டுவருகிறார்.இதேவேளை இலங்கையில் நிரந்தர சமா தானம் ஏற்படுத்தப்பட வேண்டுமானால் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேண வேண்டியது அவசியம்.இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் இன்னமும் தெளிவாக புரிந்து கொள்ள வில்லை என பேராசிரியர் றொகான் குணரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று இலங்கை விஜயம்!

Sunday, October 03, 2010
சீனாவின் என்.ஐ.சீ.எனப்படும் சீன தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று கொழும்பை வந்தடைந்தனர். மட்டக்களப்பு மாவட்டம் கரடிய னாறு பொலிஸ் வளாகத்தில் நிகழ்ந்த டைனமற் கொள்கலன் வெடிப்பு சம்ப வம் தொடர்பில் சந்தேகம் வெளியிட் டுள்ள நிலையில் அது குறித்து நாடளா வியரீதியில் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்வதற்கே இவ்வமைப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கையிலுள்ள ஏனைய சீன நிறுவனங்களின் பாதுகாப்புத் தொடர்பாகவும் இப் புலனாய்வுக் குழு வினர் ஆராயவுள்ளனர் என சீன ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதேவேளை கரடியனாறு வெடிப்புச் சம்பவம் குறித்து ஏற்கெனவே இந்தியா சந்தேகம் தெரிவித்துள்ளமையை சீன ஊடகமான சிங்குவா மேற்கோள்காட்டியுள்ளது.

Thursday, September 30, 2010

சரத் பொன்சேகாவுக்கு 30 மாதக் கடூழியச் சிறை

Thursday, September 30, 2010
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கீகரித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பின் மூலம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 30 மாதக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதியின் சிபாரிசு அடங்கிய ஆவணம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

இராணுவ நீதிமன்றத்தின் நியமனம் மற்றும் தண்டனைகளை உறுதிப்படுத்தும் அதிகாரம் ஆகியவற்றைக் கொண்டவரும் முப்படைத் தளபதியுமான ஜனாதிபதியால் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு செப்டெம்பர் 29 ஆம் திகதி - அதாவது நேற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்புக்கு விசேட அதிகாரசபை வேண்டுமென்கிறார் விமல்.

Thursday, September 30, 2010
கொழும்பு நகரை விசேட அதிகார சபையின்கீழ் கொண்டுவரவேண்டுமென பொறியியல் சேவை, வீடமைப்பு, மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிக்கிறார்.

கொழும்பில் நேற்று, தேசிய நிர்மாண சேவைகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விருது வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்று தனது வெற்றிகளைவிட தோல்விகளுக்கு உரிமைகோரும் நிறுவனமாகக் கொழும்பு மாநகரசபை உள்ளது என்பதைக் கவலையுடன் கூறவேண்டுமென அமைச்சர் சொன்னார்.

"இன்று நாட்டின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானமெடுக்கும் நிலையில், தலை நகர் தொடர்பாக விசேட தீர்மானத்தை எடுக்கவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. எனவே கொழும்பு நகரை விசேட அதிகார சபையின்கீழ் கொண்டுவந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென நான் கருதுகிறேன்." என அமைச்சர் விமல் வீரவன்ச அங்கு கூறினார்.

இதன்மூலம் பல வருடங்களாக சிரமங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்குத் தீர்வு கிடைக்குமென்றும் வறிய மக்களுக்குச் சிறந்த வீடமைப்புத் திட்டங்களை அல்லது மாடிவீட்டுத் திட்டங்களை அமைத்துக் கொடுக்க முடியுமெனவும் அவர் சொன்னார்

கடவுச் சீட்டைப் பெறுவது சுலபமாகிறது.

Thursday, September 30, 2010
எம்(M) மற்றும் என் (N) தொடரிலான கடவுச் சீட்டு உரிமையாளர்கள் புதிதாகக் கடவுச் சீட்டினைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை இலகுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தில் இலகுவான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகக் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா குறிப்பிட்டார்.

நாளைய தினம் புதிய விண்ணப்பப் படிவம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விண்ணப்பப் படிவத்தை நிரப்புவது இலகுவானதாகுமென்றும் அதனை உறுதிப்படுத்தத் தரகர்களின் பின்னால் அலையத் தேவையில்லையெனவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் கூறினார்.

புதிய விண்ணப்பப் படிவத்தை சமாதான நீதவான் அல்லது சட்டத்தரணி ஆகியோர் உறுதிப்படுத்துவது அவசியமில்லை எனவும் விண்ணப்பதாரியின் பெயர், பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம், கையொப்பம் மற்றும் புதிதாகப் பிடிக்கப்பட்ட புகைப்படம் என்பன மாத்திரமே போதுமானதாகும்.

எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் கடவுச் சீட்டுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதற்கும் அவற்றை உறுதிப்படுத்துவதற்கும் சுமார் 300 ரூபா வரை தரகர்களினால் அறவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய விண்ணப்பப் படிவம் ஒரேயொரு தாளில் அச்சிடப்பட்டுள்ளதால் அவற்றைக் கள்ஞ்சியப்படுத்துவதும் சுலபமாக இருக்குமெனக் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா குறிப்பிட்டார்.

Followers

Blog Archive