Wednesday, August 18, 2010

இந்தியாவின் அரச உயர் அதிகாரி ஒருவர் அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கை வருகின்றார் என்று இந்திய வெளியுறவு அமைச்சுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.

August ,19, 2010
இந்தியாவின் அரச உயர் அதிகாரி ஒருவர் அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கை வருகின்றார் என்று இந்திய வெளியுறவு அமைச்சுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். அவர் இன்று சென்னையில் தமிழ் நாடு முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்தார். இச்சந்திப்பைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுடன் பேசியபோதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அவர் நேரில் பார்வை இடுவார். ஈழத் தமிழர் விவகாரம் குறித்தும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் குறித்தும் இலங்கைத் தரப்பினருடன் அவர் பேச்சு நடத்துவார். யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு இந்தியா உதவி செய்ய தயாராகவே உள்ளது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு அப்பால் அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.அவர்களின் வாழ்வாதாரங்களையும் முன்னேற்ற வேண்டும். எப்படி எல்லாம் வடக்கு, கிழக்கு மாகாண மக்களை முன்னேற்ற முடியுமோ அப்படியெல்லாம் முன்னேற்ற வேண்டும்.

வடக்கு கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுப்போம் என்று உறுதிமொழி வழங்கி உள்ளோம். 1000 வீடுகளுடன் எமது திட்டத்தை விரைவில் ஆரம்பிப்போம். யாழ்ப்பாண மக்களின் நலனை உத்தேசித்து யாழ்.குடா நாட்டில் இவ்வருட இறுதிக்குள் துணைத் தூதரகம் ஒன்றையும் அமைக்க உள்ளோம்.
தெரிவித்துள்ளார்.

வன்னியில் ராணுவத்தினருக்கான தங்குமிடங்களே அமைக்கப்பட்டு வருகின்றன குடியேற்றங்கள் அல்ல என்கிறார் கோத்தாபய.

August ,19, 2010
யுத்த காலத்தில் புலிகள் பொதுமக்களின் சாதாரண ஆடைகளை அணிந்து தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதனால் பொதுமக்களையும் புலிகளையும் பிரித்து அறிவதில் சிக்கல் நிலைமை காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த சில தரப்பினர் யுத்த காலத்தில் தற்பாதுகாப்பிற்காக ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், குறித்த குழுக்களின் ஆயுதங்கள் தற்போது களையப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

-------------------------------------------------------------------------------------
வன்னியில் ராணுவத்தினருக்கான தங்குமிடங்களே அமைக்கப்பட்டு வருகின்றன – குடியேற்றங்கள் அல்ல என்கிறார் கோத்தாபய:‐
யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழர் பூர்வீகமான வன்னியில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை மறுத்துள்ள இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ வன்னியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கான தங்குமிடங்களே அங்கு அமைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அணைக்குழவினால் மேற்கொள்ளப்பட்ட இன்றைய விசாரணையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இப்படி கூறினார்.

சர்வதேச கற்கைகளுக்கான கதிர்காமர் நிலையத்தில் இன்று நடைபெற்ற இந்த விசாரணையின் போது இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு செயலளார் கோத்தபாய ராஜபக்ஸ சாட்சியமளித்தார்.

இங்கு சாட்சியமளித்த பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்ததாவது :‐

புலிகள் மிகவும் சக்திவாயந்த போராட்ட அமைப்பு என்பதை நாம் முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்களிடம் இராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளும் இருந்தன.

நாம் மிகவும் எளிதான அல்லது சுலபமான அமைப்பை வெற்றிகொள்ளவில்லை. மிகவும் சக்கதிமிக்க பலம் வாய்ந்த 30 ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகளைக் கொண்ட அமைப்பையே வெற்றிக்கொண்டுள்ளோம்.

நடைபெற்று முடிந்த யுத்தத்தில் புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் காணப்பட்ட பாரியளவிலான ஆயுதங்கள் விமானம், பீரங்கி உட்பட பலவும் அழிக்கப்பட்டுள்ளது.

இலங்கை படைத்தரப்பிலே 6 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், சுமார் 30 ஆயிரம் பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

ஆகவே இவ்வாறான அழிவை ஏற்படுத்திய புலிகளுக்கு எவ்வளவு இழப்பு நேர்ந்திருக்கும் என யாரும் கதைப்பதில்லை. மாறாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மற்றம் கொல்லப்பட்ட மக்கள் குறித்தே அதிகமாக பேசப்படுகின்றது என்றும் கூறினார்.

இதன் போது வன்னியிலே சிங்கள குடியேற்றங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் வன்னியிலே சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை எனவும், அங்கு கடமையில் ஈபட்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கான தங்குமிட வசதிகளே ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக இந்தியா கவலைகொள்ள வேண்டிய அவசியமில்லை:பீஜிங்கில் ஜி.எல். பீரிஸ் அறிவிப்பு.

August ,19, 2010
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணம் தொடர்பாகவோ அன்றி அந்தத் துறைமுகம் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுமா என்பது தொடர்பாகவோ கரிசனை கொள்ளவேண்டிய தேவை இந்தியாவிற்கு இல்லை என்று சிறிலங்காவினது வெளி விவகார அமைச்சர் பேராரியர் ஜி.எல் பீரிஸ் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அறிவித்திருக்கிறார்.

அதிகாரபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு சீனா சென்றிருக்கும் அமைசர் பீரிஸ் அங்கு இந்தியாவினைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

சிறிலங்காவின் தென்முனையில் அப்பாந்தோட்டைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் துறைமுகாமானது போர்சார்ந்த அல்லது இராணுவத் தேவைகளுக்காக ஒருபோதும் பயன்படுத்தப்படமாட்டாது. அது தனித்துவமாக வர்த்தகம்சார் செயற்பாடுகளுக்காகவே உபயோகிக்கப்படும்.

உள்ளகத் துறைமுகத்தினை அதாவது கடற்பரப்புக்குள் இல்லாமல் நிலப்பரப்புக்குள் துறைமுகத்தினை அமைத்திருக்கும் ஒரேயொரு ஆசிய நாடு சிறிலங்காதான்.

துறைமுகம் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை பகுதியினைக் குறித்த சில தரப்புகள் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதாக அராசங்கத்தின் இராசதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

சீனாவின் நிதியுதவியுடன் இந்தத் துறைமுகம் அமைக்கப்பட்டு வருவது மற்றும் நிர்மாண பணிகளில் சீனப் பொறியியலாளர்களும் பணியாளர்களும் ஈடுபட்டிருப்பது தொடர்பில் அண்மையில் பாராளுமன்ற விவாதத்தின் போது கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

சீனாவின் காலணித்துவ நாடாக சிறிலங்கா மாறுவதற்கு அரசாங்கம் வழிசெய்கிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜெயசேகர பாராளுமன்றில் குற்றம் சுமத்தியிருந்தார்.

"அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணம் தொடர்பாகவோ அன்றி அந்தத் துறைமுகம் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுமா என்பது தொடர்பாகவோ கவலை கொள்ளவேண்டிய தேவை இந்தியாவிற்கு இல்லை.

இந்தத் துறைமுக நிர்மாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா இந்தியாவையே முதலில் கோரியிருந்தபோதும் இந்தியா அதனை ஏற்றுக்கொள்ள மறுத்ததுதான் வரலாறு" என பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதிலளித்தபோது அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார அமைச்சரும் அதிபர் ராஜபக்சவின் சகோதருமான பசில் ராஜபக்ச, அதிபரின் செயலாளர் வீரதுங்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழு இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்டு கடந்த 15ம் நாள் இந்தியாவிற்குப் புறப்படவிருந்தனர்.

ஆனால் தற்போது இந்த விஜயம் 24ம் திகதிக்குப் பிற்போடப்பட்டிருக்கிறது.

சிறிலங்காவில் இந்திய தனது முதலீடுகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த உயர்மட்டக் குழுவின் இந்திய விஜயம் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.

அம்பாந்தோட்டைப் பகுதியில் சீனா முன்னெடுத்துவரும் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான குழப்பங்களும் சந்தேகங்களும் நிலவிவருகின்ற இந்த வேளையில் இந்தக் குழுவினது இந்திய விஜயம் அமைகிறது.

பசில் ராஜபக்சவின் தலைமையிலான குழு 24ம் நாளன்று மாலை புதுடில்லி நோக்கிப் பயணமாகிறது. இந்தியாவின் பல்வேறுபட்ட மாநிலத் தலைவர்களையும் இவர்கள் 24ம் மற்றும் 25ம் நாட்களில் சந்தித்து உரையாடவுள்ளார்கள்.

வீடமைப்புத் திட்டங்களுக்குக் காணி விபரம் திரட்டப்படுகிறது.

Wednesday, August 18, 2010
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான சகல காணிகளினதும் விபரங்களைத் திரட்டும் நடவடிக்கையை அதிகார சபை ஆரம்பித்துள்ளது.

வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் வீடமைப்புத் திட்டங்களை நிர்மாணிப்பதற்காக இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

காணிகளின் சகல விபரங்களையும் திரட்டும் நடவடிக்கைகள் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் குறுகிய காலத்திற்குள் காணிகளின் பட்டியலொன்றைச் சரியான முறையில் தயாரித்துக்கொள்ளக் காணி நடவடிக்கைக் குழு ஒழுங்குகளை மேற்கொள்ளும்.

இந்த நடவடிக்கையின்போது கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா, கண்டி, ஆகிய மாவட்டங்கள் சம்பந்தமாக விசேட கவனம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இம்மாவட்டங்களில் குறைந்த பட்சம் 500 ஏக்கர் அளவிலான காணி விபரங்கள் திரட்டப்பட்டு, வீடில்லாத குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்குத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

வடபகுதி மாணவருக்கு இலவச கல்விச் சுற்றுலா.

Wednesday, August 18, 2010
வடபகுதிப் பாடசாலை மாணவர்களை இலவசக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டமொன்றை வட மாகாண சபை ஆரம்பித்துள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 500 பாடசாலை மாணவர்கள் இவ்வாறு வெளி மாவட்டங்களுக்கான இலவசச் சுற்றுலாவுக்கெனத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதன் முதற் கட்டமாகக் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 250 மாணவர்களும் 20 ஆசிரியர்களும் நாளை தமது சுற்றுலாவை ஆரம்பிக்கவுள்ளனர்.

தரம் 8 முதல் க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்கும் மாணவர்கள் இதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கு 16 இலட்சம் ரூபா நிதியையும் வட மாகாண சபை ஒதுக்கியுள்ளது.

இலவச சுற்றுலாத் திட்டத்தின் கீழ் சுமார் எட்டு நாட்களுக்குக் குறிப்பிட்ட மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

சுற்றுலாவின் போது மாணவர்கள் பாராளுமன்றம், நூதனசாலை, உயர் கல்லூரிகள், அநுராதபுரம், காலி, மாத்தறை, கதிர்காமம், கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

Followers

Blog Archive