Friday, April 20, 2012

சுஷ்மா சுவராஜுக்கு அலரிமாளிகையில் விருந்து; இந்திய குழு மலையகத்திற்கும் விஜயம்!


இந்திய மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் அலரி மாளிகையில்  விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று இந்திய எதிர்க்கட்சி தலைவர் இந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இதன்போது இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அஷோக் கே காந்தா, வெளிவிவகார அமைச்சர் பேராசி்ரியர் ஜீ.எல்.பீரிஸ்,  ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இதேவேளை இந்திய வம்சாவளி மக்களை சந்திக்கும் வகையில் இந்திய  நாடாளுமன்ற உறுப்பினர் குழு இன்று மதியம் ஹட்டன் நகரை சென்றடைந்தது. பெருந்தோட்ட தொழலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்களை சந்தித்து அவர்களது குறைபாடுகளையும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டறிந்து கொண்டனர்.

தமக்கு இந்திய அரசு தொடர்ந்தும் உதவிகளை வழங்கவேண்டுமென மக்கள் இதன்போது கோரிக்கை முன்வைத்ததாக இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சுதர்ஷன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
Friday, April, 20, 2012

பலவந்தமாக பணம் பெற்ற மூன்று பொலிஸ் கான்ஸ்ரபில்கள் கைது!

தம்பதியினரிடமிருந்து பலவந்தமாக 20 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்ட மூன்று பொலிஸ் கான்ஸ்ரபில்கன் மிரிஹாண விசேட பொலிஸ் விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற திடலுக்கருகில் கார் ஒன்றுக்குள் இருந்த தம்பதியினரிடமிருந்து குறித்த கான்ஸ்ரபில்கள் பணத்தை பலவந்தமாக பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் மிரிஹாணா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு கான்ஸ்ரபில்களும் ஹோமாகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு கான்ஸ்ரபிலும் அடங்குகின்றனர்.

பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளுப்பட்ட விசாரணைகளின்போது சந்தேகநபர்களான மூன்று பொலிஸ் கான்ஸ்ரபில்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Followers

Blog Archive