Sunday, September 12, 2010

தமிழ் கட்சிகளின் அரங்கம் 3 கோரிக்கை வலியுறுத்து!

Sunday, September 12, 2010
தமிழ் கட்சிகளின் அரங்கம் திகதி - 11.09.2010 இடம் - புளொட் காரியாலயம், கொழும்பு இக்கூட்டத்தில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

1. மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட வன்னி மக்கள் சொல்லொண வேதனைகளை அனுபவித்து இழப்புக்களைச் சந்தித்து பல தடவைகள் இடம்பெயர்ந்து தற்போது மீளக் குடியேறி வரும் சூழ்நிலையில் வன்னிப் பிரதேசத்தின் சில பகுதிகளில் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற விடாமல் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பதோடு வேறு இடங்களில் குடியேறும்படி நிர்ப்பந்திப்பதை நிறுத்த வேண்டுமென்று அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

அகதிகளான மக்கள் அனைவரும் அவரவரது சொந்த இடங்களிலேயே மீளக் குடியேறுவதற்கான ஏற்பாடுகளையும், உதவிகளையும் அரசாங்கம் முழுமையாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

2. மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திரு.சகாயமணி கடத்தப்பட்டு காணாமற்போய் மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும், அவர் மீட்கப்படாத நிலையில், அவரது குடும்பம் மிகவும் ஆழ்ந்த வேதனையில் இருப்பதையிட்டு அரங்கம் கவலை கொண்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் சட்டபூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து அவரை மீட்க வேண்டுமென்று இவ்அரங்கம் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறான கடத்தல் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாத நிலைமையை உறுதிப்படுத்த வேண்டுமென அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம்.

3. கிழக்கு மாகாணத்தில் கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வது தொடர்பாக கிழக்கு மாகாண சபையால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவுகளை தமிழ் கட்சிகளின் அரங்கம் ஆதரிப்பதோடு அவற்றையே எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழு முடிவாக செயற்படுத்த வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

பெயர், கட்சி, கையொப்பம்

வீ. ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணி ஏ.கைலேஸ்வரராஜா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அ.இராசமாணிக்கம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செ. சந்திரகாசன் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் ப. உதயராசா சிறீ தமிழீழ விடுதலை இயக்கம் தி. ஸ்ரீதரன் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ம.க.சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு த. சித்தார்த்தன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்  

இக்கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் ஏ.கைலேஸ்வரராஜா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அ.இராசமாணிக்கம், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கம் ப.உதயராசா, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் செயலர் தி. ஸ்ரீதரன், முன்னாள் வடகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலர் ம.க.சிவாஜிலிங்கம், புளொட் தலைவர் த. சித்தார்த்தன் ஆகியோரும் மேற்படி கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மக்கள் விருப்புடன் நாட்டை கட்டியெழுப்புகிறேன்.

Sunday, September 12, 2010
மக்களிளை மகிழ்ச்சிப்படுத்தி அவர்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றி நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். மக்களின் அவசியத்தை புரிந்து கொண்டு நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீத்தாவாக்கை பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதியை இன்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். மகிழ்ச்சியான மக்கள் இல்லாவிடின் நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாதென ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து இன்று காலை 18 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

Sunday, September 12, 2010
மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து இன்று காலை 18 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுள் பெண்ணொருவரும் அடங்குவர். தேசிய சிறைக்கைதிகள் வாரத்தையொட்டி இறுதிநாளான இன்று இவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டார தெரிவித்ததார்.

கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகள் சீனாவிற்கு விஜயம்.

Sunday, September 12, 2010
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகள் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ, கடற்படை மற்றும் வான் படை உயரதிகாரிகளும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தலைமையிலான உயர் மட்ட இராஜதந்திரிகள் குழு ஒரு வார காலம் தங்கியிருந்து சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளல் தொடர்பில் இந்த விஜயத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

புலிகளுக்கு எதிராக யுத்தம் நடைபெற்ற காலத்தில் இலங்கைக்கு அதிகளவு இராணுவத் தளவாடங்களை சீனா வழங்கியிரந்தமை குறிப்பிடத்தக்கது.

Followers

Blog Archive