
மார்கழி 13 ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் கறைபடிந்த நாள். பிரபாகரனின் ஏகதலைமை ஆசை, வெறி ஈபிஆர்எல்எவ் இயக்கத்தை தடைசெய்துவிடும் முடிவுக்கு புலிகளை தள்ளிய நாள். ஈபிஆர்எல்எவ், ஈரோஸ், ரெலோ ஆகிய அமைப்புக்களுடன் ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற கூட்டமைப்பில் சேர்ந்திருந்து கொண்டே புலிகள் 1986 டிசம்பர் 13 ம் திகதி முன்னிரவில் ஈபிஆர்எல்எவ் ற்கு எதிராக தமது துப்பாக்கிகளை உயர்த்தினர். தமிழ் மக்களின் விடிவிற்காக அர்ப்பண உணர்வோடு உழைத்த பல ஆயிரக்கணக்காகன தோழர்களை கைது செய்து சிறையிலடைத்து சித்திரவதை செய்தனர் பலரை சுட்டுக்கொன்றனர். ஏற்கனவே 1986 முற்பகுதியில் ரெலோ இயக்கத்தை அழித்தொழிக்கும் முயற்சியில் பல ரெலோ அங்கத்தவர்களை உயிரோடு தீயில் கருக்கினர். பின்னர் புளொட் இயக்கத்தை தடைசெய்வதாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுத்தனர். இறுதியாக ஈபிஆர்எல்எவ் மீதான தாக்குதலை தொடுத்தனர் அன்றிலிருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான ஈபிஆர்எல்எவ் தோழர்கள் புலிகளின் அதிகார வெறிக்கு இரையாகி வி;ட்டபோதும் பல ஆயிரக்கணக்கான தோழர்களின் உழைப்பாலும், உதிரத்தாலும் ஸ்தாபிக்கப்பட்ட ஈபிஆர்எல்எவ் இன் மூச்சை நிறுத்தும் புலிகளின் நோக்கம் நிறைவேறவில்லை. ஈபிஆர்எல்எவ் ஐ சிதைத்துவிட புலிகளுக்கு பக்கபலமாக நின்றவர்களதும், மறைமுகமாக உதவிபுரிந்தவர்களதும் கனவு நனவாகவில்லை. அளவில்லாத இன்னல்களுக்கும், வசை மொழிகளுக்கும், இடையூறுகளுக்கும் முகங்கொடுத்தவாறே பல்வேறு முனைகளிலும் ஈபிஆர்எல்எவ் இன் தோழர்கள் தமது பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். வடக்கு கிழக்கிலும், முழு இலங்கையிலும், சர்வதேச நாடுகளிலும் அச்சுறுத்தல்கள், நெருக்குவாரங்களை தாங்கிக்கொண்டும் காழ்ப்புணர்வு கொண்ட சிலரின் விசமப் பிரச்சாரங்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டும் ஈபிஆர்எல்எவ் இன் தோழர்களும், ஆதரவாளர்களும் நண்பர்களும் அதன் இருப்புக்கும், முன்நகர்வுக்கும் உறுதுணையாய் உள்ளனர். எனவே தான் ஈபிஆர்எல்எவ் மக்கள் மத்தியில் இன்றும் தன் அடையாளத்தை தக்கவைத்திருக்கின்றது. புலிகள் சமாதிகட்டிவிட முற்பட்டு 21 வருடங்களின் பின்னரும் தனது அரசியல் பயணத்தை மக்கள் நலனை முன்னிறுத்தி தொடர்கின்றது. தமிழ் பேசும் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளுக்காக, அன்றாட பிரச்சினைகளுக்காக குரல்கொடுத்து வருகின்றது.
எமக்கு தலைமை தாங்கி வழிநடத்தி வந்த எமது மதிப்பிற்கும் பாசத்திற்குமுரிய செயலாளர் நாயகத்தை படுகொலை செய்வதன் மூலம் ஈபிஆர்எல்எவ் இன் செயற்பாடுகளை முடக்கிவிட புலிகள் இரண்டாவது தடவையாக முயன்றனர்.
அவரது படுகொலை செய்தியை கேட்டு நிலைகுலைந்து போன தோழர்கள் அவர் கொண்டிரந்த இலட்சியங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதில் நிலை தடுமாறாது உறுதியோடிருந்தனர்.
எமது தலைமை சக்திகள் என்று நம்பியிருந்த சிலர் மக்களதும், தோழர்களதும், எதிர்காலம் குறித்து அக்கறைப்படாது தமது சொந்த நலன்களை முதன்மைப்படுத்தி ஈபிஆர்எல்எவ் ஐ உருக்குலைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியபோது ஈபிஆர்எல்எவ் இன் உய்வுக்கும், உயர்வுக்கும் உறுதுணையாயிருந்து இடைநடுவில் கைவிடப்பட்ட தோழர்களுக்கு நம்பிக்கையளித்து மக்களின் விடிவிற்காக எம்மை வழிநடத்தி வந்த தோழர்களை நாம் இச்சந்தர்ப்பத்தில் எண்ணிப்பார்க்க வேண்டியவர்களாயுள்ளோம்.
எமது மக்களின் அரசியல் உரிமைக்கும், ஜனநாயக மீட்பிற்குமான போராட்டத்தில் தமது உயிரை அர்ப்பணித்த அனனத்து தோழர்களையம் நினைவிற் கொள்வோம்.
தோழர்களே, புலிகளிடமிருந்து மட்டுமல்ல பல்வேறு முனைகளிலிருந்தும் இன்று நாம் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொண்டு முன்செல்ல தொடர்ந்தும் ஒன்றுபட்டு உழைப்போம்.