Friday, December 17, 2010

அரச அதிகாரிகளின் தீர்மானங்களில் அரசாங்கம் பக்கபலமாக இருக்கும்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

Friday, December 17, 2010
அரச அதிகாரிகள் மேற்கொள்ளும் நியாயமான தீர்மானங்களில் அரசாங்கம் எப்போதும் பக்க பலமாக இருக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்றைய தினம் அரச நிர்வாக அதிகாரிகளின் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, சரியோ பிழையோ நியாயபூர்வமாக அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளின் பின்புலத்தில் முழு அரசாங்கமும் துணை நிற்கும் எனவும் தெரிவித்தார்.

“மக்கள் சேவை மகேசன் சேவை” என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி; வரலாற்றில் பதிவு செய்யப்படும் வகையில் அர்ப்பணிப்புள்ள சேவையை அரச அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் அதுவே நாட்டுக்கும் மக்களுக்குமான சேவையாகும் எனவும் தெரிவித்தார்.
அரச நிர்வாக சேவைக்கு புதிதாக 135 உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், புதிய நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களைக் கையளித்து உரை நிகழ்த்திய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்குச் செல்வதற்கான முதற்படியாக நிர்வாக சேவை உத்தியோகத்தர் பதவி அமைகிறது.

புதிதாக நியமனம் பெறுவோர் பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனைவரை சுதந்திரமாக சென்று பணிபுரியும் வகையில் நாட்டில் சிறந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

இனம், மதம் என்ற பேதங்களைக் கடந்து நாட்டின் சகல மக்களுக்கும் அர்ப்பணிப்புள்ள சேவையை வழங்குவது புதிய உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும்.

பல்வேறு பிரச்சினைகளுடன் கண்ணீரோடு வரும் மக்களை மகிழ்ச்சியோடு செல்லும் வகையில் உங்கள் சேவை அமைய வேண்டும். எனது தந்தையார் அரசியலில் இருந்த காலத்தில் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அரசியல் தலைவர்கள், அரச உயரதிகாரிகள் மக்களை தமது காரில் ஏற்றிச் சென்று சம்பந்தப்பட்டோரை நேரில் பார்த்து உடனடியாகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொடுத்தனர்.
அன்றைய அதிகாரிகள், தலைவர்கள் மக்களுக்கு நெருக்கமாக இருந்து செயற்பட்டனர். மக்கள் சேவைக்கு இது மிக முக்கியமாகும். நீங்களும் மக்களை நெருங்கி அவர்களின் பிரச்சினைகளுக்குக் காலங்கடத்தாமல் தீர்வு பெற்றுக் கொடுப்பது அவசியம். மக்கள் மனதில் பதியக்கூடிய வகையில் உங்கள் சேவை அமைய வேண்டும்.

ஒரு கணிப்பீட்டின் படி 7 மணியும் 45 நிமிடங்களையும் கொண்ட நாளொன்றுக்கான சேவை நேரத்தில் 3 மணி 20 நிமிட சேவைதான் அரச அலுவலகங்களில் இப்போது நடைபெறுகிறது. இது நியாயமானதா என்பதை அரச உத்தியோகத்தர்களே மனதில் கையை வைத்துச் சொல்லட்டும்.

24 மணி நேரமும் மக்கள் சேவையில் தம்மைப் பிணைத்துக் கொண்டு உழைத்த பல அதிகாரிகளையும் இங்கு குறிப்பிட முடியும். சுனாமி வேளையில் மாத்தறை பகுதியில் ‘சோர்ட்ஸ்’ அணிந்து கொண்டு அரச அதிபர்கள் நேர காலம் பாராது நள்ளிரவிலும் செயற்பட்டதை குறிப்பிட விரும்புகிறேன்.

நீங்களும் வரலாற்றுப் பதிவுகளில் இடம் பிடிக்கும் வகையில் சேவை செய்ய வேண்டும். நீங்கள் ஓய்வுபெற்ற பின்னரும் உங்கள் பெயர் மக்கள் மத்தியில் பேசப்பட வேண்டும்.

மக்களுக்காக நீங்கள் எடுக்கும் நியாயமான தீர்மானங்களுக்கு முழு அரசாங்கமும் பக்க பலமாக இருக்கும். உங்களைப் பாதுகாப்பதில் நாம் கடமைப்பட்டுள்ளோம். நாட்டுக்கு உங்களால் கிடைக்க வேண்டிய சேவையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

தேசிய உணர்வு, கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும், தேசிய கீதத்துக்கு கெளரவமளிக்கும் வகையில் செயற்பட வேண்டும். அதற்கு மதிப்பளிக்கத் தெரியாத ஒரு சமூகம் உருவாக இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தேசத்துரோக சக்திகளுக்கு இனிமேல் இடமில்லை-தரைப்படைத் தளபதி!


Friday, December 17, 2010
இலங்கையில் இனிமேல் எந்தவொரு தேசத்துரோக சக்திகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் சர்வதேச ரீதியில் அவை செயற்பட்டாலும் அவைகள் முறியடிக்கப்படும் எனவும் தரைப்படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நேற்று(டிச15) தெரிவித்தார்.

இராணுவ கவச வாகன படையணியின் 55ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு மோதரையிலுள்ள இராணுவ கவச வாகன தலைமையகமான ரொக் ஹவுஸ் முகாமில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

சர்வதேச ரீதியில் எழுப்பப்படும் சவால்களுக்கு முகம் கொடுக்க இலங்கை தயார் நிலையில் இருப்பதாகவும், இராணுவத்தை மேலும் பலப்படுத்தும் முகமாக ரஷ்யாவில் இருந்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கவச வாகனங்கள் இராணுவ கவச வாகன படையணிக்கென இறக்குமதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம், பயங்கரவாத கெடுபிடியில் இருந்து மக்களை மீட்டெடுத்ததை போன்று, தேசத்தின் அபிவிருத்தியிலும் மிக முக்கிய பங்காற்றுவார்கள் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ள அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் இலக்கான ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்ற இராணுவத்தினர் சிறந்த முறையில் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பாதுகாப்பு செயலாளர் கோடாபய ராஜபக்‌ஷ அவர்களின் சிறந்த வழிகாட்டலின் கீழ் எந்தவொரு சவால்களுக்கும் முகம்கொடுக்க இலங்கை இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும், பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்காமல் இருப்பதற்காக வழி காட்டல்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இராணுவத்தை பலப்படுத்துவதன் மூலம் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் சேவையாற்றுவதற்கு கவச படை பிரிவைச் சேர்ந்த படை வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக தெரிவித்துக் கொண்டார்.

Followers

Blog Archive