Sunday, May 8, 2011

ஐ.நா. செயலாளரின் நிபுணர் குழு கலைப்பு;இரகசியங்களை வெளியிடத் தடை!

Sunday, May 8, 2011
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்கவென ஐ.நா. செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கலைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தருஷ்மன் தலைமையிலான மூவர் அடங்கிய நிபுணர் குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் கடந்த வருடம் நியமித்திருந்தார். இக்குழு பல வழிகளில் சாட்சியங்களைப் பெற்று இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்களை 192 பக்க அறிக்கையாக தயாரித்து அண்மையில் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளித்ததோடு, அவர் அதனை அம்பலப்படுத்தியிருந்தார்.

அவ்வாறான நிலையில் நிபுணர் குழுவின் செயற்பாடுகள் முற்றுப்பெற்றுள்ளதால் நேற்று ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் அதனைக் கலைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நிபுணர் குழுவிடம் சாட்சியளித்தவர்களின் இரகசியத் தன்மை எதிர்வரும் இருபது வருடங்களுக்கு பேணப்பட வேண்டுமென நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விதிக்கப்பட்டுள்ளது.

ஐநா அறிக்கை - இந்திய உயர்மட்டக் குழு வெள்ளியில் இலங்கை வருகை!

Sunday, May 8, 2011
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் இறுதிக் கட்ட யுத்தம் குறித்து ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஆராய இந்தியாவின் உயர்மட்டக் குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரவுள்ள குழுவில் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட சிலர் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழு ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதுடன் பான் கீ மூன் நிபுணர் குழுவை அடிப்படையாக வைத்து இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்வரும் 16ம் திகதி இந்தியா செல்லவுள்ளதுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Followers

Blog Archive