Monday, June 27, 2011

மொழி உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - உத்தியோகபூர்வ மொழி ஆணைக்குழு!

Monday, June 27, 2011
மொழி உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தியோகபூர்வ மொழி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசாங்க நிறுவனங்கள் திணைக்களங்கள் மற்றும் பொது இடங்களில் தேசிய மொழிக் கொள்கை அமுல்படுத்தப்படாவிட்டால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தின் நான்காம் சரத்தின் அடிப்படையில் எந்தவொரு தனிப்பட்ட நபரோ அல்லது நிறுவனமோ மொழி உரிமை மீறப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்க நிறுவனங்கள் திணைக்களங்களில் ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள தரவுகளை எவ்வித சிக்கலும் இன்றி வாசிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென உத்தியோகபூர்வ மொழி ஆணைக்குழுவின் செயலாளர் சீ.ஜே. ரெனிபுர தெரிவித்துள்ளார்.

மொழி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மொழி உரிமையை உறுதிப்படுத்தாத அரசாங்க நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு மொழி உரிமையை உறுதிப்படுத்த தவறுவோருக்கு எதிராக ஆயிரம் ரூபா அபராதமும், மூன்று மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

நாட்டுக்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்கள் குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டும்-பெசில் ராஜபக்ஷ!

Monday, June 27, 2011
நாட்டுக்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்கள் தொடர்பில் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில உள்நாட்டு வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்ச்சியாக நாட்டுக்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்தாருக்கு எதிராக குற்றப் பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்வதற்கு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் முனைப்பு காட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலிருந்து புலிப் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற விடுதலைப் புலி உறுப்பினர்களும், வெளிநாட்டுச் சக்திகளும் இணைந்து சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கக் கூடிய வகையிலான பல்வேறு திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள், யுத்தக் குற்றங்கள், தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை என பல்வேறு விடயங்கள் குறித்து குரல் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை என்றால் என்ன என கிராம மக்கள் கேட்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலணித்துவ ஆட்சியாளர்கள் நாடுகளில் தலையீடு செய்தனைப் போன்று மீண்டும் வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்யத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் இந்தச் சக்திகளின் தலையீட்டினால் பாரிய ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நாட்டிலும் நாட்டுக்கு வெளியேயும் என்ன நடக்கின்றது என்பது குறித்து மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டொலர்களுக்காகவும், யூரோக்ககளுக்காகவும் சிலர் இலங்கையில் குரல் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பின் காலிமுகத்திடலில் சீனா ஆடம்பர துறைமுக நகர் ஒன்றை அமைக்கவுள்ளது!

Monday, June 27, 2011
கொழும்பின் காலிமுகத்திடலில் சீனா ஆடம்பர துறைமுக நகர் ஒன்றை அமைக்கவுள்ளது. இதற்காக 500 ஏக்கர் கடல் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதன் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு 700 மில்லியன் டொலர்கள் வருமானமாக கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த மூதலீட்டை மேற்கொள்ளும் நிறுவனத்தின் பெயர் இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே சீனாவின் சி.ஏ.டி.ஐ.சி என்ற விமான உற்பத்தியாளர் நிறுவனம், காலி முகத்திடலில் 10 ஏக்கர் காணிப் பரப்பில் ஆரம்பர ஹோட்டல் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுத்து வருகிறது.

அத்துடன் பல சீன நிறுவனங்கள், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஏனைய இடங்களில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளன.

இதேவேளை காலிமுகத்திடலில் ஆடம்பர ஹோட்டலுக்கான காணி, 99 வருட குத்தகை அடிப்படையிலேயே சீன நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. _

Followers

Blog Archive