Monday, January 17, 2011

கூட்டமைப்பின் சொல் விளையாட்டால் தமிழ் மக்களுக்கு எவ்வித விமோசனமும் இல்லை!
வட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள், உடனான நேர்காணல். நேர் கண்டவர்: சுஐப் எம். காசிம்

Monday, January 17, 2011
பெயர் : அ. வரதராஜப் பெருமாள்
பிறந்த திகதி : 1953 ஜூன் 08
பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
பாடசாலை : கொட்டடி நமசிவாயம் வித்தியாலயம் (ஆண்டு 10 வரை)
க.பொ.த. உயர்தரம் (தனியார் நிறுவனம்)
பதவிகள் : யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்
வடக்கு - கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்
கல்வித்தகைமை : யாழ். பல்கலைக்கழகம் (பொருளியல் சிறப்பு)
அரசியல் விஞ்ஞானம் (M. A) டெல்லி பல்கலைக்கழகம்
L. L. B.(டெல்லி)
பிள்ளைகள் : 3 பெண் பிள்ளைகள்
1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றமை.


கேள்வி:- தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்aர்கள்?

பதில்:- கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக இந்நாட்டை உலுக்கி வந்த கோர யுத்தம் முடிவுக்கு வந்திருப்பது மிக நல்ல விடயம்.

யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட அழிவுகள், சிதைவுகள், சீரழிவுகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக நாம் ஒரு முன்னோக்கிய கால கட்டத்தில் போக வேண்டிய சூழல் இன்றுள்ளது.

புனர்வாழ்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. மக்கள் மத்தியில் பீதியற்ற ஒரு சூழல் உருவாக வேண்டும். ஜனநாயகம் என்பது தேர்தலில் மட்டும் நின்றுவிடாது எல்லா விடயங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். போர் சுனாமி மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் மக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நமது நாட்டு மக்களை மீட்கும் துரித வேலைத்திட்டங்கள் தேவை. ஜனாதிபதியும் அரசாங்கமும் இதற்கு முன்னுரிமை அளித்துச் செயற்பட்டு வருகின்ற போதும் இன்னும் வேகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

ஆளுங்கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே ஒரு ஜனநாயக பூர்வமான, நாகரீக பூர்வமான ஓர் அச்சமற்ற உறவு வளர்ச்சியடைய வேண்டும். அரசியல் நாகரீகம் மேலோங்கியுள்ள ஒரு நாடு என்ற வகையில் ஒரு மனப்பக்குவம், அரசியல் முதிர்ச்சி ஆகியவை நமக்கிடையில் வளர்ந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இவை படிப்படியாக மாறும் என்றே நான் நம்புகின்றேன்.

கேள்வி:- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கொலைகள், கொள்ளைகள், கடத்தல் என்பவற்றை நீங்கள் எந்தக் கோணத்தில் பார்க்கின்aர்கள்?

பதில்:- இவை மக்கள் மத்தியில் பயபீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. இவற்றை நீக்க வேண்டிய முதற் பொறுப்பு அரசுக்கு உண்டு. குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி மக்களுக்கு ஒரு பயம் ஏற்படாத வண்ணம் கருமங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்தச் சம்பவங்களை வெளியில் கொண்டு வரக்கூடிய பொறிமுறை அரசாங்கத்திடமே இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சம்பவங்களை தொகுத்து பார்க்கும் போது வெறுமனே அரசியலற்றது என்று சொல்வதற்கில்லை. தனிப்பட்ட கொலைகள், கொள்ளைகள் நடந்திருக்கும் அதேவேளை அரசியலும் ஏதோ வகையில் கலந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அங்கு இடம்பெறும் சம்பவங்களை தனிப்பட்ட மோதல்களின் விளைவுகள் என்று கூறுவது சரியானதல்ல. இது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் கூற்றுமல்ல. ஏனெனில் அங்கு வாழும் மக்களுக்கு நடைபெறும் விடயங்கள் தெரியும். மக்கள் மத்தியில் பயப்பீதியை அதிகரிப்பதில் ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. மக்களுக்கு அதிகரிப்பதில் நம்பிக்கை வழங்க வேண்டிய அரசியல்வாதிகள் பயப்பீதியை ஏற்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர். 30 வருடங்களாக யுத்த வெறியர்களுக்குப் பயந்து பயந்து வாழ்ந்த மக்களுக்கு இப்போது இடம்பெறும் சம்பவங்கள் இன்னும் பாதிப்பையே ஏற்படுத்துகின்றது. மீண்டும் பழைய நிலை வந்து விடுமோ என்ற அச்ச உணர்வும் அவர்களிடம் உள்ளது. எனவே இந்த நிலையை மாற்றுவதற்கு அனைவரும் உதவ வேண்டும்.

கேள்வி:- மீள்குடியேற்றம் தொடர்பாக?

பதில்:- யுத்தத்தினால் சுமார் 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். எல்லாமே அழிந்தன. அனைத்தையும் இழந்தனர். மாற்று உடுப்புக்களின்றியே அகதி முகாம்களுக்கு வந்தனர். தற்போது 90 சதவீதமானவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு சென்றுள்ளனர். ஜனாதிபதியும் அரசாங்கமும் இந்த மக்களை மீள்குடியேற்றும் விடயத்தில் அக்கறை காட்டி வருவது வரவேற்கத்தக்கதே. எனினும் அங்கு குடியேறியுள்ள மக்களுக்கு போதிய உதவிகள் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமூகத்தொண்டு நிறுவனங்களின் கடந்தகால நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளபோதும் தற்போதைய சூழலில் அவர்களை அங்கு அனுமதிப்பதால் நஷ்டம் ஏற்படாது. ஏனெனில் புலிகள் அங்கு இல்லை. எனவே தொண்டு நிறுவனங்களை சில கட்டுப்பாடுகளுடன் பணிபுரிய அனுமதித்தால் மக்கள் இன்னும் நன்மை பெறுவர்.

கேள்வி:- தமிழ்க் கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு பற்றி நீங்கள் கருதுவது என்ன?

பதில்:- ஜனநாயக அரசியலில் இருக்கும் ஒரு கட்சி அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டுமென வலியுறுத்துவது சரியல்ல. ஜனநாயக அம்சங்களில் பலமான எதிர்க்கட்சியும் அவசியமான விடயம். அதற்காக எதிர்க்கட்சிகள் வெறுமனே எதிர்ப்பு அரசியல் நடத்துவதும் மக்களுக்கு நல்லதல்ல. இந்த வகையில் ஒரு சமநிலையை எதிர்க்கட்சிகள் கையாள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கம் மேற்கொள்ளும் புனர்வாழ்வு, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதாக அறிவித்துள்ளனர். அதற்கான சமிக்ஞைகளையும் காட்டியுள்ளனர். இதற்கான நல்லெண்ணத்தைக் காட்டும் வகையில் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் வாக்களிப்பிலும் பங்குபற்றவில்லை. இது இக்கட்சியின் நிலைப்பாடு. ஆனால் இதற்குப் பெயர்தானா ஒத்துழைப்பு. இவ்வாறான ஒத்துழைப்பை எதிர்பார்த்தா அரசு இருக்கிறது. அபிவிருத்தி, புனர்வாழ்வு நடவடிக்கைகளை எதிர்ப்பதென்று ஒன்றில்லை. புலிகள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுத்தனர். ஆனால் தமிழ்க் கூட்மைப்புக்கு அவ்வாறு முடியுமா? அபிப்பிராயத்தை மட்டும்தான் அவர்களால் கூற முடியும். கூறவும் வேண்டும். ஆளுங்கட்சி தனக்கிருக்கும் வருமானம், வளங்களுக்கு ஏற்றவகையில் தான் அபிவிருத்தியை மேற்கொள்ளும். தம் வசமிருக்கும் திட்டங்களை செயல்படுத்தும். அந்தவகையில் தமிழ்க் கூட்மைப்பின் ஒத்துழைப்பு, ஒத்துழைக்காமை என்ற பதங்கள் எனக்குப் புரியவில்லை. எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு என்று சொல்வதன் அர்த்தம் நமக்கு விளங்கவில்லை. இந்த விடயங்களை தமிழ்க்கூட்டமைப்பு விமர்சித்தாலும் அரசுக்கு எந்த வகையிலும் பாதிப்பில்லையே.

கேள்வி:- அவ்வாறெனின் அக்கட்சியினரின் உள்நோக்கம் என்ன?

பதில்:- அவர்களின் உள்நோக்கமும் தெரியவில்லை. அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதுவும் விளங்கவில்லை.

பொதுமக்களுக்கு சொல் விளையாட்டுக்களால் பயன் ஏற்படப்போவதில்லை என்பதே என் எண்ணம்.

கேள்வி:- தமிழ் அரங்கத்தின் செயற்பாடுகள் பற்றி கூறுவீர்களா?

பதில்:- தமிழ் அரங்கம் மிகத் தெளிவான கண்ணோட்டத்திலேயே உருவாக்கப்பட்டது. தமிழ்க் கட்சிகளின் அரங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிகளின் அரங்கமில்லை. அது ஒரு திறந்த முன்னணி. அதிலே அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் பங்கேற்க வேண்டும். தமிழ் அரங்கம் ஓர் அணி. தமிழ்க் கூட்டமைப்பு இன்னொரு அணி என்றில்லை. மொத்தத்தில் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் என்பது ஓர் அணியே இல்லை - தேர்தலுக்கானதுமல்ல. கொள்கை அடிப்படையிலானதுமல்ல. வேறுபாடற்ற கூட்டுமல்ல. அதன் ஒரே நோக்கம் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற உடனடிப் பிரச்சினைகள் தொடர்பாக ஓர் ஒருமித்த சூழலை வெளிப்படுத்தினால் அந்தக் கோரிக்கைக்கு வலுவாகவிருக்கும். அந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் நிலை ஏற்படும். இதற்காகவே இது உருவாக்கப்பட்டது. ஏற்கனவே அரங்கம் 12 விடயங்களை நிரற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக ஆராயும்.

கேள்வி:- தீர்வு தொடர்பாக உங்கள் கட்சி என்ன நிலைப்பாட்டில் உள்ளது?

பதில்:- இந்த நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சரியான உபாயம் சமஷ்டித்தீர்வாக இருந்த போதும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அதற்கு உடனடிச் சாத்தியமில்லை. 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவ்வாறான நிலையொன்று உருவாகியபோதும் அது இடம்பெறாது போய்விட்டது. எனினும் எவ்வாறான தீர்வொன்று தமிழ் பேசும் மக்களுக்கு உதவும் என்பதைத் தீர்மானிக்கும் பிரதான ஒருவராக ஜனாதிபதியே விளங்குகின்றார். அந்த வகையில் அரசு என்ன தீர்வை வைத்திருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது. எனினும் 13வது திருத்தத்தின் அடிப்படையில் தீர்வு சாத்தியம் எனக் கூறப்படுகின்றது.

எல்லோரினதும் விருப்பு, வெறுப்புக்களுக்கு அப்பால் அரசியல் யாப்பில் கடந்த 22 வருடங்களாக இந்நாட்டில் இருக்கின்ற ஒரு விடயமே. ஆனால் அது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அது சரியாகவும் நிறைவேற்றப்படவில்லை. இல்லையென்றால் அதன் அர்த்தம் புரிகின்றதல்லவா?

எந்தத் தீர்வானாலும் இந்த நாட்டிலிருந்துதான் வரவேண்டும். இந்தியாவோ மேற்கத்தேய வல்லரசுகளோ யாரும் எதையும் திணிக்க முற்பட்டாலும் அது வெற்றிகரமாக அமையாது. இந்நாட்டில் அதிகாரப் பகிர்வு என்பது ஒரு சரியான முறையில் முன்னேறிச் செல்லும் அம்சமாக நடக்க வேண்டும் என்றால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தம் வசம் வைத்துள்ள ஜனாதிபதியும் அவரது அமைச்சரவையும் தமக்கு சரியென்று எண்ணுவதை அதனைச் சரியாகவும் முழுமையாகவும் நிறைவேற்ற வேண்டும்.

கேள்வி:- நீங்கள் 13வது திருத்தம் பற்றி முன்னர் விமர்சித்திருந்தீர்களே?

பதில்:- அடிப்படையில் 13வது திருத்தம் ஒரு பிழையான சட்டம். அந்தச் சட்டத்தின் கட்டமைப்பே பிழையானது.

ஜே.ஆர். ஜயவர்தன எந்த நோக்கத்தில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாரோ தெரியாது. ஆனால் அவர் பிழையான முறையில் அதனை அமைத்தார். இந்தியாவின் நெருக்குதலினால் அவசர அவசரமாக தெரிந்து கொண்டே பிழையான ஒன்றை அந்தச் சந்தர்ப்பத்தில் தயாரித்தார். அந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் இன்று நிரந்தரமாக மாறிவிட்டன. வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல ஏனைய மாகாணங்களில் இயங்கும் சபைகள் கூட தமக்கு அதிகாரம் இல்லை என்றுதான் கூறி வருகின்றன. எனவே இந்த மாகாணங்களுக்கு மத்தியில் இருந்து அதிகாரங்களைப் பகிர வேண்டும்.

அபிவிருத்தி, அதிகாரப்பகிர்வு, ஜனநாயக மயமாக்கம் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. அதிகாரப்பகிர்வு நடக்காது உண்மையான ஜனநாயகம் வரப்போவதில்லை. அபிவிருத்தி இடம்பெறாது. அந்தவகையில் அபிவிருத்தியில் முன்னேற்றம் ஏற்பட ஜனநாயகம் மேலோங்க அதிகாரப் பகிர்வு அவசியமாகின்றது. சிங்கள மக்கள் மத்தியில் அதிகாரப் பகிர்வு தொடர்பான விருப்பம் எவ்வளவுக்கு விரிவடைகின்றதோ அதனைப் பொறுத்தே இதில் முன்னேற்றம் காணமுடியும்.

கேள்வி:- யுத்த வெற்றியை நீங்கள் எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கின்aர்கள்?

பதில்:- ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் யுத்தத்தில் வெற்றி கிடைத்துள்ளது. அதற்கு முன்னர் இருந்த எந்த ஒரு அரச தலைவருக்கும் யுத்தத்தின் மூலம் வெற்றிபெற முடியுமென்ற நம்பிக்கை இருக்கவில்லை. அவர்கள் அதற்கு முயற்சிக்கவுமில்லை. அந்தத் துணிவும் இருக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி மஹிந்த துணிகரமாக இறங்கினார். மாவிலாறு விடயத்தில் மக்கள் பாதிப்புக்குள்ளாகியபோதுதான் அவர் இந்த நடவடிக்கையை தீவிரமாக எடுத்தார். மாவிலாறில் ஏற்பட்ட வெற்றியின் மூலம் புலிகளின் பலம், பலவீனத்தை கண்டு கொண்டனர். அதற்கு முன்னர் எல்லோரும் புலிகளை ஓர் அசாத்தியமான, அதீதமான சக்தி என்று நினைத்திருந்தனர். இந்தியா, நோர்வே, மற்றும் ரணில் விக்கிரமசிங்க உட்பட இலங்கைத் தலைவர்கள் புலிகளுடன் பேசி விரக்தி கொண்டவர்கள் தான்.

நாங்கள் உட்பட தமிழ்க்கட்சிகளில் சில புலிகள் பற்றி நன்கு அறிந்திருந்தமையால் அவர்களைப் பற்றி அறிந்திருந்தோம். அவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்ற தீர்க்கமான நிலைப்பாட்டுடன் நாம் இருந்தோம்.

அந்த வகையில் ராஜபக்ஷவின் காலகட்டத்தில் உள்நாட்டில் நிலைமை கனிந்திருந்தது. சர்வதேச ரீதியாகவும் நல்ல நிலை இருந்தது. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சர்வதேச நிலைமைகளை சாவதானமாகக் கையாண்டார். அரச அமைப்பு முழுவதையும் ஒன்றாகக் கொண்டு செல்லும் அவரது திறமையும் யுத்த வெற்றிக்கு இன்னுமொரு காரணம்.

ஒருவன் வெற்றிகரமாக இருக்க வேண்டுமெனின் அவன் முதலில் தன்னைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அடுத்து எதிரியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் புலிகள் இவையிரண்டையும் பற்றி அறியவில்லை. அரசியல் இராஜதந்திரத்தில் ஏற்பட்ட குறைபாடு மட்டுமல்ல உலக நாடுகள் தங்களுக்கு கைகொடுக்கும் என்ற நினைப்புத்தான் அவர்களின் பிழைப்பைக் கெடுத்தது.

கேள்வி:- நாடு கடந்த தமிbழம், புலம் பெயர் தமிழர்களின் எதிர்ப்புக்கோஷங்கள் பற்றி நீங்கள் என்ன கூறப் போகின்aர்கள்?

பதில்:- எட்டு இலட்சம் புலம்பெயர் தமிழர்கள் வாழுகின்றார்கள். இவர்களில் எண்ணூறு பேரே எதிர்ப்பில் ஈடுபடுகின்றனர். முன்னர் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள், புலிகளின் தீவிர அபிமானிகள் மற்றும் ‘சனல் - 4’ வெளியிட்ட காட்சிகளால் பாதிக்கப்பட்டவர்களே இவர்கள். அத்துடன் இவர்களில் சிங்கள எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களும் அடங்குகின்றனர்.

இவர்களின் எதிர்ப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதுவுமே செய்யப்போதில்லை.

எல்லா மக்களும் நித்திரைக்குச் சென்ற பின்னர் இரவு நேரத்தில் இரண்டு பேர் கடைபோட்டிருப்பது போன்றதற்கு ஒப்பானதே நாடு கடந்த தமிbழம். யாராவது ஒருவர், இருவர் வருவார்கள். அவர்களுக்கு வியாபாரம் நடத்தலாம் என்று இவர்கள் எண்ணுவது போன்று புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் வெளிநாடுகளில் பணம் திரட்ட மேற்கொண்ட முயற்சி. இப்போது புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டுவது பெருமளவில் குறைந்துள்ளபோ தும் இன்று ஒரு புதிய இரவுக்கடை திறக்கப்பட் டுள்ளது.

Followers

Blog Archive