Thursday, April 22, 2010

ருக்மன் ஐதேகவிலிருந்து விலகுவது குறித்து அறிவிக்கப்படவில்லை : திஸ்ஸ

ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான ருக்மன் சேனாநாயக்க பதவி விலகுவது தொடர்பில் உத்தியோகபூர்வமாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
.தே.கவின் தேசியப்பட்டியலில் ருக்மன் சேனாநாயக்கவின் பெயர் உள்ளடக்கப்படாததையடுத்து அவர் பதவி விலகவுள்ளார் என்ற தகவல் வெளியானது.
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ருக்மன் சேனாநாயக்க பதவி விலகுவது தொடர்பாக பேசப்படுகின்ற போதிலும் உத்தியோகபூர்வமாக கட்சியின் தலைமைத்துவத்துக்கு அறிவிக்கப்படவில்லை என்றார்.
.தே.கட்சியின் உள்ளக வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவலின்படி ருக்மன் சேனாநாயக்க விரைவில் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

20வது பிரதமராக தி.மு பதவிப் பிரமாணம்


THURSDAY, APRIL 22, 2010- இலங்கையின் 20வது பிரதமராக தி. மு. ஜயரட்ன நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று மாலை 6.30 மணியளவில் அலரிமாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதோடு புதிய பிரதமருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இதேவேளை, பிரதமர் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளுமென உத்தியோகபூர்வ வட்டாரங்கள் கூறின.
40 பேரைக் கொண்ட இந்த அமைச்சரவை ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் வரை இருக்குமென சு.க. செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்கிடையில், இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 8.45க்கு ஆரம்பமாகிறது.
இலங்கையின் 20வது பிரதமராக பதவியேற்றுக்கொண்ட டி. எம். ஜயரட்ன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட 225 உறுப்பினர்களும் இன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வர். அதற்கு முன்னதாக சபாநாயகர் தெரிவு இடம்பெறும். சபாநாயகராக தெரிவு செய்யப்படும் உறுப்பினர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இடம்பெறும்.
குழுக்களின் பிரதித் தலைவர், ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு பிரதம கொரடா, அவைத் தலைவர் போன்றோரின் தெரிவுகளும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும். நடந்து முடிந்த பொதுத் தேர்தல்மூலம் ஏழாவது பாராளுமன்றத்துக்கு தெரிவான 196 உறுப்பினர்களும், தேசியப் பட்டியல் மூலம் தெரிவான 29 உறுப்பினர்களுமாக 225 பேரும் இன்று பாராளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளனர்.
குறிப்பாக ஐ.ம.சு.மு., ஐ.தே.க., ஐ.தே.கூ., இ. தமிழரசுக் கட்சி ஆகியவற்றில் புது முகங்களாக சுமார் 70 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8.45க்கு நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர் சபை எதிர்வரும் மே 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படவுள்ளது.

அடைய முடியாத இலக்குகளை அடைய முயலும் த.தே கூட்டமைப்பு

THURSDAY, APRIL 22, 2010
மட்டக்களப்பு வாடி வீட்டில் இடம்பெற்ற கட்சியின் உயர் மட்டக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆற்றிய உரை.
காலங்காலமாக தமிழ் மக்களின் அரசியல் இருப்பின் சொந்தக்காரர்கள் என தங்களை இனங்காட்டிக் கொண்டு காலத்தை கடத்திய வரலாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்குரியது. அன்றும் சரி இன்றும் சரி இக்கூட்டமைப்பினது அரசியல் பிரவேசமானது தமிழ் தேசியத்தின் உருவாக்கமாகவே அமைந்திருந்தது. ஆனால் அது எமது தமிழ் மக்களுக்கு கற்பனைக்குக் கூட எட்டாத ஒன்றாக இருக்கின்றது.
அதனையே இவர்கள் அடைய முயற்சிக்கிறார்கள். போராட்ட காலங்களில் தனித் தமிbழம் என்றார்கள். இன்று வடக்கு கிழக்கு இணைப்பு என்கிறார்கள். இதே போன்று பல அடைய முடியாத இலட்சியங்களுக்காய் காலங் காலமாக குரல் கொடுப்பவர்கள்தான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.
நடந்து முடிந்திருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக நாம் ஓர் விடயத்தினை தெளிவாக புரிந்துகொள்ளலாம். அதாவது தற்போது கூட்டமைப்பின் பிரசாரப் பீரங்கிகளாகச் செயற்படுகின்ற சில தமிழ் ஊடகங்கள் வடக்கு, கிழக்கு இணைப்பினை முதன்மை படுத்தி தமது பிரசாரத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர்களுக்கும் கூட்டமைப்பினருக்கும் நான் ஓர் விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
அதாவது நடந்து முடிந்த தேர்தலை ஓர் பரீட்சார்த்தமான தேர்தலாக நோக்குவோமாயின், அதாவது வடக்கு கிழக்கு இணைப்பிற்கான சர்வசன வாக்கெடுப்பு தேர்தலாக இதனை நோக்குவோமாயின் கூட மொத்தமாக கிழக்கு மாகாணத்திலே பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக 995612 பேர் உள்ளனர். இதில் மட்டக்களப்பில் 333,644 பேரும், திருகோணமலையில் 241,133 பேரும், அம்பாறையில் 420,835 பேரும் இருக்கிறார்கள்.
இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலே 66235 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களையும் திருகோணமலையில் அண்ணளவாக 28892 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் (முழுமையான தேர்தல் முடிவு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) அம்பாறையில் 26895 வாக்குகளை பெற்று ஒரு ஆசனமாக மொத்தமாக ஐந்து ஆசனங்களை பெற்றிருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்திலே மொத்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற மொத்த வாக்குகள் 122022 ஆகும்.
எனவே கிழக்கில் இருக்கின்ற மொத்த தமிழர்களிலே இவர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களை வைத்து ஒப்பிடும் போது கூட தெளிவாக விளங்குகின்றது. வடகிழக்கு இணைப்பு சாத்யமில்லை என்பது வடக்கு கிழக்கு இணைப்பிற்கான ஆணை இதுவென அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் விகிதாசார ரீதியாக ஒப்பிட்டு நோக்குகின்ற போது த. தே. கூட்டமைப்பிற்கு கிடைத்திருக்கின்ற விகிதாசாரம் 12.25 ஆகும்.
எனவே இதனை அனைத்து சமூகமும் தெளிவாக சிந்தித்து பார்க்க வேண்டும். கிழக்கு மாகாணம் வட மாகாணத்தைப் போல் தனியான தமிழ் பிராந்தியம் அல்ல. மாறாக தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என மூவினத்தவர்களும் செறிந்து வாழ்கின்ற மாகாணம் ஆகும். ஆகவே மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற வாக்காளர்கள் தொகை 995612 பேராகும். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருக்கின்ற வாக்குகள் வெறுமனவே 122022 ஆகும். எனவே இந்த விகிதாசார அடிப்படையில் பார்த்தால் கூட அவர்கள் சொல்வதனைப் போன்று வட கிழக்கு இணைப்பிற்கான ஆணை கிடைக்கவில்லை.
இவர்கள் பல நெடுங்காலமாக இவ்வாறாக அடையமுடியாத இலக்குகளை அடைவதற் காக மக்களை பகடைக்காய்களாக பயன் படுத்திய வரலாறுகள் எமக்கு தெரிந்தவை களே. எனவே தற்போது முடிவடைந்திருக் கின்ற தேர்தல் முடிவினை வைத்துக் கொண்டு த.தே கூட்டமைப்பும் அவர்களுக்கு ஊதுகுழலாகச் செயற்படுகின்ற குறிப்பிட்ட சில தமிழ் ஊடகங்களும் வட கிழக்கு இணைப்பு தொடர்பாக கதைப்பதற்கு தகுதி அற்றவர்களே என்பதனை தெளிவாக நான் எடுத்துக் கூறுகின்றேன்.
ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வுகாண வேண்டும் எனக்கூறும் இத் தேசிய கூட்டமைப்பினர், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையே ஏற்காதவர்களாகச் செயற்படுகின்றமை மிகவும் வேதனையளிக் கின்றது. அதாவது வடக்கு கிழக்கு நிர்வாக ரீதியாக பிரிக்கப்படுகின்றது என்கின்ற தீர்ப்பினை வழங்கிய உயர் நீதிமன்ற தீர்ப்பினையே ஏற்காத இக் கூட்டமைப்பு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியிரசின் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வு காண்பது என்பது எவ்வளவு வேடிக்கை என்பதனை அனைத்து அரசியல் ஆர்வலர்களும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்காக கிடைத்திருக்கின்ற குறைந்த பட்ச தீர்வு என்றால் அது மாகாண சபை முறைமைதான். மாகாண சபை முறைமை கிழக்கில் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. இதே போல் வடக்கிலும் ஏற்படுத்தப்படுமாயின் ஓர் தமிழர் முதலமைச்சராக வரமுடியும். எனவே அரசியல் ரீதியில் தமிழர்களின் பலம் ஓங்க இவை வழிவகுக்கும்.
இதான எல்லாம் விட்டு விட்டு வடக்கு கிழக்கு இணைப்புத்தான் இன்று எமது தமிழ் மக்களுக்கான தீர்வு என இக் கூட்டமைப்பினர் கூறுவது ஒருபுறம் வேதனையளித்தாலும், அது இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் நடக்க முடியாத ஒன்றாகும். நான் ஏற்கனவே கூறியது போல கிழக்கில் சர்வசன வாக்கெடுப்பு நடந்தால் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற வாக்குகளின் பிரகாரம் பார்க்கின்ற போது அது நடக்க முடியாத ஒன்றாகும்.
இவர்களது இவ்வாறான பேச்சுக்கள் மூலம் ஒன்று மட்டும் புலனாகின்றது அதாவது தாங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு மக்களின் அரசியல் ஏக பிரதிநிதிகளாக காலங் காலமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களினது எண்ணப்பாடாகும். கிழக்கில் நிலையான அரசியல் தலைமை உருவாவதனை அவர்கள் விரும்பவில்லை என்பது எனது எண்ணப்பாடாகும். இதனூடாக நான் பிரதேசவாதம் பேசவில்லை. காலங்காலமாக எமது மக்களை இவ்வாறாகத்தான் இந்த த. தே. கூட்டமைப்பினர் வழி நடத்தியிருக் கின்றார்கள். இதனை எல்லாம் இனிவரும் காலங்களிலாவது குறிப்பாக எமது கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்து கொள்வார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
எனவே இத் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளுக்கும் அவ் அரசியல் தலைமைகளுக்கும் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இவ்வளவு காலமும் எமது தமிழ் மக்கள் பட்ட அவலங்கள் போதும். இனிவரும் காலங்களிலாவது அவர்கள் நிம்மதியாக வாழ வழி சமைத்துக் கொடுங்கள். ஏலவே 22 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து எதையுமே சாதிக்கவில்லை தற்போது 14 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து ஏதாவது செய்ய முயற்சியுங்கள்.
thinakaran

Followers

Blog Archive