Sunday, April 25, 2010

ஜெர்மன் மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கையின் பதில் தூதுவர் கலந்துரையாடல்


SUNDAY APRIL 25, 2010
ஜெர்மன் மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கையின் பதில் தூதுவரும், vaanniசமரின்பூத்57வது படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கிச் சென்றவருமான மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் அவர்களுக்கும் சுவிஸிலுள்ள தமிழ் சிங்கள மக்களுக்குமிடையிலான கலந்துரையாடல்நேற்றையதினம் சூரிச் மாநகரில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ,ஈ.பி.டி.பி,ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமிழ் சிங்களப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலை ஆரம்பித்துக் கருத்துரைத்த மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ், வன்னிப் போரின் போது தம்மால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்து விளக்கியதுடன். புலிகள் இயக்கம் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டுள்ள போதிலும் புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள புலி ஆதரவாளர்கள் நாடு கடந்த தமிழீழம், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று கூறிக்கொண்டு இறந்த புலிகளுக்கு உயிர் கொடுக்கலாமென்று கனவு காண்கின்றனர். இவ்வாறானவர்களின் எண்ணம் ஒருபோதுமே நிறைவு பெறாது என்று தெரிவித்தார். அத்துடன் நாடு கடந்த தமிழீழம், வட்டுக்கோட்டை தீர்மானம் என்று கூறிக் கொண்டு மக்களைக் குழப்பும் விதத்திலும் மக்களின் அவலத்தில் குளிர்காயும் செயற்பாடுகளிலும் ஈடுபடும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் தொடர்பிலான தகவல்களை எமக்கோ அல்லது தூதுவராலயக பிரதிநிதிகளுக்கோ அன்றில் உங்கள் அருகிலுள்ள நீங்கள் சார்ந்த சுவிஸ் ஜேர்மன் நாடுகளின் பொலீசாருக்கோ தெரிவிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையில் கடத்தப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெயாந்;த நிலையில் காணாமற் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட தகவல்களை அறிய விரும்புவோர் என்னிடம் நேரடியாகவே அவர்கள் குறித்த தகவல்களை தரும்பட்சத்தில் அதுபற்றி உரிய கவனம் செலுத்தி அறிந்து அவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் புலிகளால் பலாக்காரமாகவும், சிறுவர் போராளிகளாகவும் இணைக்கப்பட்ட யாவரையும் முடிந்தவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு தெரிந்தவர்கள் எவரும் இவ்வாறான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் அதுகுறித்து உரியவிபரம் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அத்தகையவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென உத்தரவாதம் தருகிறேன் என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இக்கலந்துரையாடலின் போது தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும், தீர்வினைப் பெற்றுக் கொள்ள எவ்வாறான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளலாம் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி சார்பில் மகேந்திரன், ராஜ்மோகன், பரந்தாமன், ஜோசெப், மற்றும் நேசன், ஈசன் போன்றவர்களும் இக்கலந்துரையாடலில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன்போது கருத்துரைத்த ஈ.பி.டி.பி சார்பில் கலந்து கொண்ட மகேந்திரன், அன்று புலிகளுக்காக பிரச்சாரம் செய்து அவர்களுக்காவே நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததுடன் மற்றும் அரசுடன் நெருங்கி செயற்பட்டு வரும் தமிழ் அமைச்சரைப் புலிகளுடன் சேர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்த பலரும்.. உதாரணமாக கனடாவின் வர்த்தக சங்கங்கள் போன்றோர் தற்போது ஜனாதிபதி ராஜபக்சவுடன் இணைந்து தாம் அரசுக்கு ஆதரவானவர்கள் என்று காட்டிக் கொண்டு அரசுடன் நெருங்கி செயற்பட்டு வருகின்றனர். இதுவரை காலமும் அரசுடன் இணைந்து செயலாற்றி வந்த எம்மையே இந்நடவடிக்கைகள் கேள்விக்குறியாக்கியுள்ளன என்று தெரிவித்தார்.
இது குறித்து கருத்துரைத்த மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ், இது தொடர்பில் தாங்கள் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும், குறித்த வர்த்தகர்கள் உண்மையாகவே மனம் விரும்பி, உண்மையில் மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு மக்களுக்காக சேவையாற்ற முன்வருவார்களாயின் நாம் அவர்களை அங்கீகரிக்க வேண்டுமென்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கருத்துரைத்த பாசல் நேசன், புலிகள் என்று கூறி எவரையும் ஒதுக்கிவிடக் கூடாதென்றும், யாராவது மனமுவந்து அரசுடன் இணைந்து செயற்பட முன்வரும் பட்சத்தில் அவர்களையும் இணைத்துக் கொண்டு பணிகளைச் செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டதுடன், உதாரணமாக கனகரத்தினம் எம்பியை அரசு இணைத்து செயற்படுவது போன்றதே இந்நடவடிக்கையும் என்று சுட்டிக் காட்டினார்.
இதனைத் தொடர்ந்து ஈ.பி.டி.பி மகேந்திரன் மேலும் கருத்துரைக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் உரியவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றங்கள் செய்யப்பட வேண்டுமென்றும் தெரிவித்ததுடன், இவ்விடயம் தொடர்பிலான பல்வேறு கருத்துக்களையும் முன்வைத்தார். இது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் குறிப்பிட்டார்.
கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த மற்றொருவர் கருத்துரைக்கையில், ஜீரிவி தீபம் போன்ற ஊடகங்கள் தற்போது புலிசார்பான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஊடகங்களை ஏன் தடை செய்யக் கூடாதென்று? கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த மேஜர் ஜெனரல், அவர்கள் புலிகளுக்காகத் தான் செயற்படுகிறார்கள் என்கிற விடயம் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் பட்சத்தில் நாம் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வோம். தவிர ஆதாரமில்லாத பட்சத்தில் இவ்விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதென்பது மிகவும் கடினமான விடயமாகும் என்று தெரிவித்தார். ஈ.பி.டி.பியின் ராஜ்மோகன் கருத்துரைக்கையில், கீரிமலையில் உள்ள பாதுகாப்பு தரப்பினரின் கடல்கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும். யாழ். வர்த்தகர்களுக்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ்விடயம் தொடர்பிலும் தான் கூடிய கவனம் செலுத்துவதாக மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தினை நிறைவுசெய்யுமுன் தனது கருத்தினை வெளியிட்ட மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் அவர்கள், வெளிநாடுகளில் தொடர்ந்தும் சிலர் புலிகளுக்கு உயிரூட்டுவதாக எண்ணி தங்கள் அறிவீனமான செயற்பாடுகளை தொடர்கின்றனர். அவர்களுக்கு உண்மை நிலைமைகளை தெளிவுபடுத்தி அவர்களையும் சமூக அக்கறையுடனான செயற்பாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுவரை காலமும் எம்மோடு இணைந்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் செயற்படும் அனைவருக்கும் எனது நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ_க்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது. மற்றும் மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ், தம் வருகையை நினைவுபடுத்தும் விதமாக தமிழ்ப் பாடப் புத்தங்கள் சிலவற்றையும் கையளித்தார். இதனைத் தமிழ் மக்கள் சார்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் ராஜன் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மேற்படி கலந்துரையாடல் சுமுகமாக நிறைவுபெற்றது..!!!

மாறுபட்ட கருத்துகளுடைய தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தையில்.

SUNDAY APRIL 25, 2010
தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை மற்றும் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் வடக்கு கிழக்கில் வெவ்வேறு கருத்துகளுடைய பிரதான கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தைகளுக்கான சமிக்ஞைகள் உருவாகியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்க் கட்சிகளுக்கிடையே ஒற்றுமை அவசியப்படுவதாக தமிழ் பேசும் மக்களிடையே கருத்துகள் நிலவி வருகின்றன. இதனால் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும்பொருட்டு மாறுபட்ட கருத்துகளுடைய தமிழ்க் கட்சிகளின் தலைமைத்துவங்கள் எதிர்வரும் வாரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜி.எல்.பீரிஸ் பூட்டான் விஜயம்

SUNDAY APRIL 25, 2010
புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.எல்.பீரிஸ் 7 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பூட்டான் செல்லவுள்ளார்.
இவர் நாளைய தினம் பூட்டான் செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பூட்டானில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அங்கு செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரோமேஷ் ஜயசிங்க மற்றும் இலங்கைக்கான சார்க் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் பூட்டான் செல்கின்றனர்.
ஜி.எல்.பீரிஸ் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவரது முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஆறுமுகன் தொண்டமான் இன்று அல்லது நாளை அமைச்சர் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தகவல்

SUNDAY APRIL 25, 2010 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஆறுமுகன் தொண்டமான் எம். பி இன்று அல்லது நாளை அமைச்சுப் பதவி ஏற்கவுள்ளாரெனத் தெரியவருவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் இது தொடர்பில் இன்னமும் முடிவுகள் எட்டப்படவில்லையெனக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த அமைச்சரவையில் வகித்த அமைச்சுப் பொறுப்புகள் இந்தமுறை எவருக்கும் மீள வழங்கப்படாததால்,இளைஞர் வலுவூட்டல், சமூக பொருளாதார அமைச்சைப் பெறுவது சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆறுமுகன் தொண்டமான் எம். பிக்குக் கால் நடை அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்ட போதிலும் அதனை அவர் ஏற்கவில்லையெனத் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

Followers

Blog Archive