
Friday, August 5, 2011
செனல்4 ஆவணப்படம் குறித்து விசாரணை நடத்தப்படும் என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் அண்மையில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட ஆவணப்படம் தொடர்பில் விசாரணை நடத்தி இறுதி அறிக்கையில் அந்தத் தகவல்களை உள்ளடக்குவது என தீர்மானித்துள்ளது.
இந்த ஆவணப்படம் தொடர்பில் ஆய்வு நடத்தும் விசேட நிபுணர்கள் பற்றிய தகவல்கள் அம்பலப்படுத்தப்பட மாட்டாது என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
செனல்4 ஊடகத்தினால் கடந்த முறை வெளியிடப்பட்ட ஆவணப்படத்தை ஆய்வு செய்த நிபுணருக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டதாகவும் அதனால் இம்முறை நிபுணரின் பெயரை வெளியிடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய ஆவணப்படத்தை நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள் எனவும், அதனை விசாரணை செய்து இறுதி அறிக்கையில் தரவுகள் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Friday, August 5, 2011
வடக்கில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினேய் நான்டி தெரிவித்துள்ளார்.
எனினும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவது தொடர்பில் பல்வேறு சவால்கள் நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்கு நான்டி விஜயம் செய்துள்ளார். யுத்தத்தின் பின்னர் பிரதேச மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை அவர் நேரில் கேட்டறிந்து கொண்டார்.
அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்கனை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Friday, August 5, 2011
இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரியும் தற்போதைய வெளிநாட்டு இராஜதந்திரியுமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது சுவிட்ஸர்லாந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையில் இராஜதந்திர ரீதியில் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாதென ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் ரீ.பீ.மடுவேகெதர தெரிவித்துள்ளார்.
ஜெர்மனிக்கான இலங்கையின் பதில் தூதுவராக செயற்பட்டு வரும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது சுவிட்ஸர்லாந்தின் பொது நிர்வாக அமைச்சில் யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
புலிகள் இயக்கத்துடனான யுத்தம் நிறைவுக்கு வந்தப் பின்னர் ஜெகத் டயஸ் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அதன் பின்னர் ஜெனர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்துக்கான பதில் தூதுவராக செயற்பட்டு வருகின்றார்.
ஜெகத் டயஸ் இராஜதந்திர மட்டத்தில் தொழிற்படுவதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் ரீ.பீ.மடுவேகெதர பீபீசியிடம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது 57வது படைபிரிவிற்கு கட்டளையிடும் அதிகாரியாகக் கடமையாற்றி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், யுத்தக் குற்றம் புரிந்தார் என சுவிட்ஸர்லாந்தின் தொலைக்காட்சி சேவையொன்று அண்மையில் காணொளி ஒளிபரப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.