Wednesday, November 24, 2010

தமிழ் கட்சிகளின் அரங்கம் அமர்வை கொழும்பில் நடத்தியது.

Wednesday, November 24, 2010
கூட்டத்தில் மீள்குடியேற்றம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பன குறித்து ஆராயப்பட்டது. இலங்கை அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்தியாவின் அனுசரணை தொடர்பாகவும் முரண்பட்ட அபிப்பிராயங்கள் நிலவிய போதும் நீண்ட நேர கருத்துப்பரிமாற்றத்தின் பின்னர் முடிவுகள் எட்டப்பட்டன.

ஏற்கனவே தமிழ் கட்சிகளின் அரங்க கூட்டத்தில் பேசப்பட்டதற்கிணங்க இரண்டாவது தடவையாக பதவியேற்றுள்ள ஜனாதிபதியிடம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க கோருவதெனவும், மீள்குடியேறிய மக்கள் அனைவருக்கும் ஒரேசீராக அரசின் உதவிகள் கிடைக்க செய்வது தொடர்பாகவும், இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடுவதுடன் மீள் குடியேற்றம் முற்றுப்பெற்றதாக கருதாமல் அவர்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஏற்ற வழிவகைகளை தொடர்சியாக மேற்கொள்ள வேண்டியிருப்பது தொடர்பாகவும் ஜனாதிபதியை சந்தித்து எடுத்துக் கூறுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அவர்களை சந்தித்து மீள்குடியேற்றம், இனப்பிரச்சினை தீர்வு போன்ற விடயங்களில் இந்தியாவின் ஒத்துழைப்பை கோருவதெனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், பத்மநாபா ஈபிஆர்எல்எவ், ஈபிடிபி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறி ரெலோ, ஈரோஸ், ஆகிய கட்சிகளினதும் ஈழ எதிலியர் மறுவாழ்வு கழகம், மனித உரிமைகள் இல்லம் ஆகிய தொண்டு நிறுவனங்களினதும் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிட்ட வேண்டும், இதற்கு தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை வேண்டும் என்ற அக்கறையுள்ள பொதுமக்களும் இதில கலந்து கொண்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தனர்.

இதனிடையே, தமிழ் கட்சிகளின் அரங்கமானது, எதிர்வரும் 28 ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பத்திரிகை அறிக்கை-இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு சரித்திரத்தின் செழுமைமிகு பக்கங்களில் இடம்பெற வேண்டும்-தி.ஸ்ரீதரன்-பொதுச்செயலாளர்-பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.
Wednesday, November 24, 2010
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

பொருளாதார அபிவிருத்தியின் சிகரங்களை தொடுவதற்கான வாக்குறுதியை அவர் மக்களுக்கு அளித்துள்ளார். விமான போக்குவரத்து, சமுத்திரம், மின்சாரம், வர்த்தகம், அறிவு ஆகிய ஐந்து துறைகளிலும் இலங்கை எதிர்காலத்தில் பிரகாசிப்பதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சமாதானம் நிலைநாட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த இலக்குகள் மகிழ்ச்சிகரமானவை. இலங்கையின் சகல இன மக்களுக்கும் தெம்பூட்டுபவை.

எனினும் இலங்கையின் இன சமூகங்களிடையே நிலவும் அரசியல் அதிகாரப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதனூடாகவே இந்த இலக்குகளை எய்த முடியும்.

உலக வரலாற்றில் ஜனநாயகமும், சமூகங்களிடையே சமுத்துவமும் நிலைநாட்டப்பட்ட நாடுகளிலேயே வெற்றிகரமான சமூக பொருளாதார சாதனைகள் நிகழ்ந்துள்ளன.

எனவே இலங்கை அனைத்து இன மக்களினதும் நாடு, பல்லினங்களின் நாடு என்பது உறுதிப்படுத்தப்படுவதும் தனி மனித ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதும் நாம் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கான அடிப்படை நிபந்தனைகளாகும்.

தேசிய வாழ்வினுள் தமிழ், முஸ்லீம் மக்கள் உள்வாங்கப்படும் விதமாக அரசியல் அதிகாரப் பகிர்வு நிகழ வேண்டும்.

இதனை ஜனாதிபதி தனது பதவி காலத்தில் உறுதிப்படுத்தி சரித்திரத்தின் செழுமைமிகு பக்கங்களில் தனது பெயரை பொறிக்க வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம். அதனை மேற்கொள்வதற்குரிய ஆற்றலும், பலமும் அவருக்கு இருக்கிறது.

இலங்கையில் 30 வருடமாக நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது போல் இனப்பபிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை எட்டுவதிலும் ஜனாதிபதி அவர்கள் ஆற்றலுடன் செயற்பட முடியும் என நாம் நம்புகிறோம்.

தி. ஸ்ரீதரன்
பொதுச்செயலாளர்
பத்மநாபா- ஈ.பி.ஆர்.எல்.எப்.

பதவியை இருக்கைகளோடு மட்டுப்படுத்தாதீர்! - செயலர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை!

Wednesday, November 24, 2010
தமது பதவியினை இருக்கைகளோடு மட்டுப்படுத்தாது மக்களுக்குப் பணியாற்றுமாறு ஜனாதிபதி புதிய அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, தமது பதவியினை இருக்கைகளுடன் மட்டுப்படுத்தாது நடைமுறை ரீதியிலும் இதய சுத்தியுடன் மக்களுக்கு பணியாற்றுமாறும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற அர்ப்பணிக்குமாறும் அறிவுரை வழங்கினார்.

அந்தந்த அமைச்சுக்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் பிரச்சினைகள் பற்றிய கடிதங்களுக்குக் கட்டாயம் பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை குறித்த அமைச்சின் செயலாளர் தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண் டார்.

அதேபோன்று இந்த நாட்டின் அரச சேவைகள் பற்றித் தமக்குப் போதியளவு புரிந்துணர்வு இருப்பதாகக் கூறிய ஜனாதிபதி தம்மை எந்தவொரு அதிகாரியாலும் ஏமாற்ற முடியாதெனத் தெரிவித்தார்.

Followers

Blog Archive