Sunday, October 10, 2010

அரசாங்கத்திற்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளில் இடைவெளி-–முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள் அவர்கள்.

Sunday, October 10, 2010
அரசாங்கத்திற்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளில் இடைவெளி காணப்படுவதாக வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களுக்கான சகல தேவைகளையும் அரசாங்கத்தினால் பூர்த்தி செய்ய முடியாது எனவும் அதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் சிவில் மக்களுக்கும் இடையில் காணப்படும் பிணைப்பை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது காரியாலயங்களில் பிரபாகரனின் படத்தை வைத்திருந்ததாகவும் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்க உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் வடக்கு மாகாணசபைக்கான தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து தாம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரப்பகிர்வு குறித்து கூடுதல் கவனம் செலுத்துவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தியின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

எனினும், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி அதிகாரத்தை பகிர்வதன் மூலமே முழுமையான அபிவிருத்தி இலக்குகளை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரம் பகிரப்படாமல் மக்களின் ஜனநாயக விருப்பங்களை நிறைவேற்ற முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஜனாதிபதியின் தற்போதைய நிலைப்பாட்டில் மாற்றம் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

18 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வரையறுக்கப்படாத காலத்திற்கு ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக லக்பிம பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதியின் படம் தொடர்பான விஷமத்தனமான கருத்துக்கு அரசாங்கம் கண்டனம்.

Sunday, October 10, 2010
நியூயோர்க்கில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 65 ஆவது பொதுச் சபை மாநாட்டில் கலந்து சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்பதியினார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தம்பதியினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள விஷமத்தனமான விமர்சனங்கள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவார் வெளியிட்டுள்ள அறிக்கையில்-
சர்வதேச மாநாடுகளின் நடைமுறைகள் பற்றித் தெரியாத சில ஊடகங்கள் பொது மக்களை பிழையாக வழிநடத்தும் நோக்கில் இவ்வாறான தவறான செய்திகளை வெளியிட்டுள்ளமை கவலைக்குரியது.

ஐ.நா. மாநாடுகளில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி வரவேற்று உபசரிப்பது வழமையான ஒரு சம்பிரதாயமாகும்
இம்முறை இச்சந்திப்பு நியூ+யோர்க்கில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க இயற்கை நூதன சாலையில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போதுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பாரியாருடன் அமெரிக்க ஜனாதிபதியையூம் அவரது பாரியாரையூம் சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கைக்கும் அமெரிக்காவூக்கும் இடையில் நெடுக்கால நட்புறவூ நிலைக்கின்றது. வா;த்தக ரீதியிலான நெருங்கிய தொடர்பும் உள்ளது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தொடர்பில் பிழையான செய்திகள் பரப்பப்படுவது கவலைக்குரியது.
வெளிநாட்டுத் தலைவர்களின் தூதுக் குழுவில் உள்ள எந்த படப்பிடிப்பாளாருக்கும் இந்த இடத்தில் படம் எடுக்க அனுமதியில்லை. அங்குள்ள உத்தியோகபூர்வ படப்பிடிப்பாளரே அதற்கான பணியில் ஈடுபடுத்தப்படுவர். அவரிடமிருந்தே ஜனாதிபதியின் படமும் கிடைத்துள்ளது. இது இணையத்தளங்களிலும் வெளியானது.

தமது தீருகுதாளங்களை சர்வதேசம் புரிந்துகொள்ளும் என்பதால் இப்படம் தொடர்பில் பிழையான தகவல்களை எந்த ஊடகமும் ஆங்கில மொழியில் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலைநாட்டில் சீரற்ற காலநிலை நீடிக்கிறது.

Sunday, October 10, 2010
மத்திய மலைநாட்டில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அடைமழை பெய்கின்றது.

இதன் காரணமான கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து, அதன் வான்கதவுகள் இரண்டு நேற்று திறக்கப்பட்டு இன்று மூடப்பட்டுள்ளது. கெனியன் மற்றும் லக்ஷபான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்து திறந்துவிடப்பட்டுள்ளன.

அத்துடன், ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளின் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. பொகவந்தலாவை, நோர்வூட், சாஞ்சிமலை ஆகிய பகுதி ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

மேலும் மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் அடிக்கடி மின் துண்டிப்பும் இடம்பெற்று வருகின்றது.

Followers

Blog Archive