Sunday, July 17, 2011

வடக்கு உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்திற்கே வெற்றி வாய்ப்பு: அபிவிருத்தி பணிகளால் மக்கள் ஓரணியில் திரள்வு!

Sunday, July 17, 2011
வடக்கில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு அமோகமான வெற்றிவாய்ப்பு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் வடக்கில் முன்னெடுத்துவரும் பாரிய அபிவிருத்திப் பணிகள் முப்பது வருடங்களாக எவ்விதமான அபிவிருத்தியையும் கண்டிராத அப்பகுதி மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. குறிப்பாக இறுதியுத்தம் நடைபெற்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்கள் தற்போது என்றுமில்லாதவாறு அபிவிருத்தி கண்டு வருகிறது. இதன் காரணமாக வடக்கில் இடம்பெறும் சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆளும்கட்சி அமோக வெற்றிபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்களை சகலவிதமான அடிப்படை வசதிகளுடனும் மீளக்குடியமர்த்திவரும் அரசாங்கம், வடக்கில் கல்வி, சுகாதாரம், மின்சாரம், விவசாயம், மீன்பிடி உட்பட சகல துறைகளையும் அபிவிருத்தி செய்து வருகிறது.

தேர்தலை முன்னிட்டே அரசாங்கம் இவ்வாறு செய்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய சிறுகட்சிகள் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்ற நிலையிலும் மக்கள் அபிவிருத்தியை மேற்கொண்டுவரும் அரசாங்கத்திற்குத் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

ரசாங்க அமைச்சர்கள் பலரும் நேரடியாகத் தமது பகுதிகளுக்கு விஜயம்செய்து தமது தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தீர்வுகளை உடனடியாகவே வழங்கிவருவது இப்பகுதி மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

புலிகள், ஆயுதப் போராட்டம் என்று முப்பது வருடங்களாகத் தமது வாழ்க்கையைத் தொலைத்துநிற்கும் வடபுல மக்களுக்கு அரசாங்கம் இன்று மேற்கொண்டுவரும் அபிவிருத்தியானது யுத்தத்தில் இழந்துபோன அனைத்தையும் மீள வழங்குவதாகவே அமைந்துள்ளது.

இதன் காரணமாக வடபுல தமிழ் மக்கள் அரசாங்கத்தின் ஆளுங்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குத் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். இது வடக்கில் போட்டியிடும் இன்றுமொரு தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பேரிடியாக உள்ளது.

இதனால்தான் தமிழ்க் கூட்டமைப்பினர் மக்களிடையே அனுதாப அலையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்தினர் தம்மை அச்சுறுத்துவதாகவும், பிரசாரத்தில் ஈடுபடும் தமது வேட்பாளர்களை இனம் தெரியாதோர் தாக்குவதாகவும் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் மக்கள் இவர்களது பொய்ப்பிரசாரத்திற்கு சோரம் போவதாக இல்லை. எனவேதான் ஆளுங்கட்சிக்கு வலுவான மக்கள் ஆதரவு இருந்துவருவதாக அவதானிகள் தெரிவித்தனர்.

அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி யாழ்.கிளிநொச்சி விஜயம்:மக்கள் பேரணி கூட்டங்களிலும் பங்கேற்பு!

Sunday, July 17, 2011
அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி யாழ்.கிளிநொச்சி விஜயம்:மக்கள் பேரணி கூட்டங்களிலும் பங்கேற்பு!

வடக்கில் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் மற் றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நாளை 18ஆம் திகதி விஜயம் மேற்கொள்கிறார்.

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய், கோப்பாய், நெல்லியடி பிரதேசங்களில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள மக்கள் பேரணிக் கூட்டங்களில் கலந்து கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

நாளை புனர்வாழ்வு அமைச்சின் விசேட நிகழ்வொன்றில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, 20ஆம் திகதி பரந்தன் ஆஸ்பத்திரியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கிறார்.

அன்றைய தினம் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கிளிநொச்சி சந்தை கட்டடத்தொகுதி ஆகியவற்றுக்கான அடிக்கல்லையும் நடவுள்ளார். இதனைத் தொடர்ந்து கிளிநொச்சியில் நடைபெற விருக்கும் மக்கள் பேரணிக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது இராணுவம் இடையூறு விளைவித்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது!

Sunday, July 17, 2011
தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது இராணுவம் இடையூறு விளைவித்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதென்றும் இராணுவம் பாதுகாப்பு கடமைகளையே மேற்கொண்டு வருவதாகவும் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார். இராணுவத்தினருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே சிலர் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். மூன்று தசாப்தங்களாக போலியான பிரசாரங்களைச் செய்து அரசியல் நடத்திவந்த ஒரு சிலர் தற்போது இராணுவத்துக்கு எதிராக பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர். இவ்வாறான அரசியல் தலைவர்களால் ஆக்கபூர்வமான திட்டங்களை மேற்கொள்ள முடியாத நிலைமையை உணர்ந்துள்ள மக்கள் பெருமளவில் இன்று அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனர். இதனைப் பொறுக்க முடியாத இவர்கள் இராணுவத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்த ஆரம்பித்துள்ளனர். மக்களைத் திசை திருப்பும் நோக்கில் முன்வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும் அவற்றை முற்றாக மறுப்பதாகவும் கட்டளைத் தளபதி மேலும் தெரிவித்தார்.

யாழ். மக்களுக்கு 20 கோடி ரூபா கடன் வழங்கும் திட்டம்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Sunday, July 17, 2011
யாழ். மாவட்ட மக்களின் வாழ்வாதார நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் கடன் வழங்கும் வேலைத் திட்டமொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 19-ம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவிருக்கின்றது.

இதன்போது சுமார் 20 கோடி ரூபா தொகையானது 1280 பேருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீடமைப்புக்காகவும், சுயதொழிலுக்காகவும் தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையான கடன் தொகை வழங்கப்படவுள்ளது.

நிர்மாணத்துறை அதிகார சபை மற்றும் இலங்கை வங்கியின் ஒத்துழைப்போடு மேற்படி கடன் திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Followers

Blog Archive