Tuesday, July 26, 2011

குற்றங்கள் செய்தவர்களைப் பழிவாங்க முனைவதால் இனியும் தொடரும் அழிவுகளுக்கு முடிவேயிருக்காது-முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!
Tuesday, July 26, 2011
கடந்த காலத்தில் அரச படைகள் என்ன செய்தன. அதனால் தமிழர்கள் எவ்வளவு இழப்புக்களுக்கு உள்ளானார்கள், எவ்வாறான துன்பங்களுக்கெல்லாம் உள்ளாக்கப்பட்டார்கள் என அசைபோட்டு அசைபோட்டு தமிழர்கள் மத்தியில் ஆத்திரமூட்டல்களையும் பழிவாங்கும் உணர்ச்சிகளையும் தூண்டுவதில் ஈடுபட்டிருப்போர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அரச இராணுவமாக இருந்தாலென்ன அல்லது புலி இராணுவமாக இருந்தாலென்ன யுத்தப்பிரபுக்களால் இனவெறியும் கொலைவெறியும் ஊட்டப்பட்ட இராணுவ வீரர்கள் யுத்தகளத்தில் பைத்தியக்காரர்களாக அல்லாமல் வேறென்னவாக இருந்திருப்பார்கள்.
ஒரு புறம் சிங்கள வெறி ஏற்றப்பட்ட படைகள், மறுபுறம் தமிழ் வெறி ஏற்றப்பட்ட படைகள். இந்த இரண்டு படைகளுமே யுத்தகளத்தில் மக்களைப் பற்றிக் கவலைப்;படவில்லை. முழுக்க முழுக்க சிங்களவர்களை மட்டுமே கொண்ட இலங்கை இராணுவம் நடந்து கொண்ட விதத்துக்கு எந்தவகையிலும் குறையாமலே முழுக்க முழுக்க தமிழர்களை மட்டுமே கொண்ட, தமிழர்களின் விடிவுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட புலிகளும் தமது சுயநலத்துக்காக யுத்தகளத்தில் அகப்பட்டுப் போன தமிழ் மக்கள் மீது தமது கொலைவெறியைத் தீர்த்தனர் என்பதே உண்மை.

கரணம் தப்பினால் மரணம் என தனது எதிரிப்படைகள் பற்றிய பயத்தோடு முன்னேறுகிற எந்த இராணுவமாக இருந்தாலும் அல்லது எதிரிப்படைகளிடமிருந்து தான் தப்பினாற் போதுமென தற்காப்புக்காக திணறிக் கொண்டிருக்கிற எந்த இராணுவமாக இருந்தாலும் அவை மக்களைப் பற்றியோ சர்வதேச யுத்ததர்மங்கள் பற்றியோ கவலைப்படப் போவதில்லை.
1989ம் ஆண்டு 60000க்கு மேற்பட்ட ஜேவிபி இளைஞர்களையும் அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் என்று சந்தேகப் பட்டோரையும் மூன்றே மாதத்தில் கொன்றொழித்ததுவும் இதே சிறிலங்கா இராணுவமும் பொலிஸ_ம்தான். அப்போது இந்த புலிப்பிரமுகர்கள் யாரும் மனித மீறல் யுத்தக்குற்றம் போன்ற எதனையும் எழுப்பவில்லையே. மாறாக அப்போது அரசுக்குத் தலைமை வகித்த ஜனாதிபதி பிரேமதாசாவுடன் புலிகள் தேன்நிலவல்லவா கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது எத்தனை நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்கள் தென்னிலங்கை நகரங்களில் ரயர்களில் கொழுவி விடப்பட்டு கொழுத்தப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கானவர்கள் தொகை தொகையாகச் சுட்டுக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள். ஜேவிபியின் தலைவர் ரோஹண விஜேவீராவும் உயிரோடு பிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு பின்னர் கனத்தை மயானத்தில் உயிரோடு தகனம் செய்யப்பட்டார் என்றே தகவல்கள் கூறுகின்றன.

அவர்கள் எல்லாம் சிங்களவர்கள் என்பதாலா, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் சர்வதேச அரங்கில் கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை, அதைப்பற்றி தமிழர்கள் எந்தவித கவலையோ அக்கறையோ கொள்ளவில்லை. அவையும் மானிட இனத்துக்கு எதிரான குற்றங்கள்தானே! தனக்கு வந்தால்த்தானா தலையிடியும் காய்ச்சலும் வலிக்கும்!
நாங்கள் உலகத்துக்குப் பொதுவான நீதிநியாயங்களை எமது வசதி கருதி புறக்கணித்து இருந்தால் எமது சமூகத்துக்கான நீதிநியாயங்களும் உலகத்தாரால் அவரவரது வசதிக்கேற்றபடி புறக்கணிக்கப்படும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்பதன் அர்த்தம் என்ன! நல்லார் ஒருவரும் இலரேல் அந்த சமூகத்தவருக்கு மழையே கிடைக்காது என்பதுதானே!

நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்” என்பதன் அர்த்தமென்ன! வெறும் புல்லுகள் மட்டுமே இருக்குமாயின் அந்த புல்லுகலுள்ள பாத்திகளுக்கு எந்த வாய்க்காலாலும் நீர் வழிந்தோடி புசிய எவரும் விட மாட்டார் என்பதுதாளே! எனவே எல்லார்க்கும் பொதுவான நீதி நியாயங்களின் நியதிகளைப் புறக்கணித்து சுயவசதிக்கேற்றவாறு வக்காலத்து வாங்கும் புத்திஜுவிகளைக் கொண்ட சமூகத்துகக்கு அதற்கு அவசியமானபோது நீதிநியாயம் கிடைக்க யாரும் துணை நிற்க மாட்டார்கள் என்பதையே இந்தப் பொன்மொழிகளில் இருந்து புதரிந்து கொள்ள வேண்டும்.

1986ம் ஆண்டு மேமாதம் சிறீ சபாரத்தினம் உட்பட முன்னூறுக்கும் மேற்பட்ட ரெலோ உறுப்பினர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்களே! பல இளைஞர்கள் சந்தி சந்தியாக வைத்து மக்கள் முன்னிலையில் உயிரோடு எரிக்கப்பட்டார்களே! அப்படிக் கொலை செய்தவர்கள், அதற்குத்துணையாக நின்றவர்கள் எனப் பலர் இப்போது மேலைத் தேய நாடுகளில் வசதியாக வாழுகிறார்களே! அவர்களைத் தேடிப் பிடித்து சர்வதேசக் குற்றவாளிக்; கூண்டிலே நிறுத்த வேண்டும் என யாரும் குரலெழுப்பவில்லை. அப்போது கொலை செய்யப்பட்டவர்களெல்லாம் ரெலோ உறுப்பினர்கள் என்பதாலா அவர்களது உயிர்களுக்கு மதிப்பில்லை? ஆல்லது அந்தக் கொடூரங்களைச் செய்தவர்கள் தமிழ்ப் புலிகள் என்பதால் அந்தக் கொலைகள் சர்வதேசத்துக்கு நீதியான கொலைகளாகி விட்டனவா?
1986ம் ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வடக்கிலும் கிழக்கிலும்; பல நூற்றுக்கணக்கான ஈபிஆர்எல்எவ் தோழர்களைக் தைது செய்த புலிகள் அவர்களை அவர்களது பெற்றோர் மற்றும் சதோதரங்களின் முன்னால் வைத்து வெட்டிக் கொலைகள் செய்தார்கள், கட்டி வைத்து சுட்டுக் கொலைகள் செய்தார்கள்! மரங்களில் தலை சிதற அடித்துக் கொலைகள் செய்தார்கள், வாகனங்களில் கட்டி றோட்டு றோட்டாக இழுத்துச் சென்று அந்தத் தோழர்களின் சதைகள் நசிந்து கிழி;ந்து பிஞ்சு துண்டு துண்டாக வீதிகளில் கொட்டக் கொட்டக் கொலைகள் செய்தார்களே! அதெல்லாம் என்ன மானுட இனத்துக்கு நன்மை செய்வதற்காக தமிழ் மாவீரர்கள் நடாத்திய சர்வதேச சாகசங்களா!

1987ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கந்தன் கருணை இல்லத்தில் புலிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த ஏனைய இயக்கங்களின் அறுபத்து மூன்று உறுப்பினர்களை அடைத்த கூண்டுக்குள்ளேயே வைத்து புலிகளின் தலைவர்கள் சில வினாடிக்குள் சுட்டுப் பொசுக்கி பெற்றோரும் காணா வகையில் எங்கேயோ புதைத்தார்களோ! அந்தப் புதைகுழிகளை இன்று யார் தேடிக் காட்டுவார்! அதுவும் சர்வதேச சட்டங்களின்படி மானுட இன விரோத குற்றம்தானே!

1990ல் இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய சில நாட்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் புலிகளால்; பிடிக்கப்பட்டு மிகக் கொடூரமாக சித்திரவதைகள் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்களே அதுவும் சர்வதேச சட்டங்களின்படி மானிட இனத்துக்கு எதிரான குற்றங்களே! அந்தக் குற்றங்கள் திறந்ததொரு நீதி விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டு உரிய நீதிமன்றங்களின் முன்னால் கொண்டு வரப்பட வேண்டும் என்று இன்று வரையிலும் எந்தவொரு மனித உரிமைக்காரர்களாலும் எழுப்பப்படவில்லையே! ஏன் அந்தத் தமிழர்கள் வடக்;கு கிழக்கு மாகாண சபைக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் ஆதரவாக இருந்தார்கள் என்பதனால் அவர்கள் கொல்லப்பட வேண்டிய மானுட விரோதிகளா?

1990ம் ஆண்டு ஜூன் மாதம் 19ந் திகதி தோழர் பத்மநாபாவும் அவரோடு அங்கிருந்த தோழர் கிருபாகரன், தோழர் யோகசங்கரி, தோழர் கமலன் என பதின்மூன்று பேரை அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் அரச அதிகாரிகளின் அனுசரணையுடன் சென்னை நகரத்தில் வைத்து ஒரு சில நிமிட நேரங்களுக்குள் படுகொலை செய்தார்களே! அந்தக் கொலைகள் என்ன யுத்தகள சண்டையிலேயா நடைபெற்றன. ஆயுதமற்று இன்னொரு நாட்டில் இருக்கையில்த்தானே கொலை செய்யப்பட்டார்கள். அந்தக் கொலைகளின் நேரடிக் காட்சிகள் படம் பிடிக்கப்படவில்லை என்பதாலா அவை சர்வதேச குற்றங்களாகவில்லை!
மேலே கூறப்பட்டுள்ள குற்றங்களை நிகழ்த்திய சர்வதேசக் குற்றவாளிகள் பலர் இன்னமும் மேலைத்தேய நாடுகளில் அகதி அந்தஸ்த்து பெற்று சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே! அவர்களை சர்வதேச பொலிஸ் அமைப்பானது பட்டியலிட்டு எந்தநாட்டில் இருந்தாலும் கைது செய்து சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும் என்று இதுவரை எந்த மனித உரிமைக்காரரும் கேட்கவில்லையா! ஏன்?

1990ம் ஆண்டு ஒரேநாளில் ஒன்றரை இலட்சம் முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். அவர்களுடைய உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. போரின் எந்தவொரு பக்கத்தாரும் ஒரு மக்கள் சமூகத்தை அந்த மக்களின் விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக அவர்களது வாழும் இடங்களிலிருந்து வெளியேற்றுவது சர்வதேச சட்டப்படி மானுட இனத்துக்கு விரோதமான சர்வதேசக் குற்றமே!. இங்கு முஸ்லிம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதுமல்ல அவர்களது அசையும் அசையாச் சொத்துக்களெல்லாம் புலிகளால் சூறையாடப்பட்டன. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதாலா இந்த மாபெரும் மானுடக் கொடூரம் பற்றி மனித உரிமைக்காரர்கள் அவற்றைத் தெரிந்தும் தெரியாதது போல இருந்து விட்டார்கள்!

நீதி என்பதை தமிழனுக்கு ஒன்றாகவும் சிங்களவனுக்கு ஒன்றாகவும் கொள்வது மானுட நாகரீகமாகாது. சிறி லங்கா அரசையும் சிங்கள இனவாதிகளையும் குற்றம் சாட்டும் நாம் தமிழர்கள் மத்தியில் இருந்த சக்திகள் என்ன செய்தன என்பதிலும் நீதியான நியாயங்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நீதி என்பது பிரபஞ்சமயமானது. அது எங்கும் எப்போதும் ஒரு தளத்தையே கொண்டதாகும். அது இன மத தேச எல்லைகளைக் கடந்த ஒன்றாகும். மனித சமூகத்தின் நீதியானது மானுட நாகரீக வளர்ச்சியின் உயர்ந்த விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்; சிறி லங்கா அரச படைகள் .சிங்கள இனத்தின் நலனுக்காக நடந்து கொண்டது போலவே புலிகள் தமிழர்களின் நலன்களுக்காக நடந்து கொண்டார்கள் என்ற நியாயத்தை எந்தத் தமிழராவது கொண்டிருப்பாராயின் அந்த வகையானோர் சிறி லங்கா அரச படைகள் மீது குற்றம் சாட்டும்
எல்லாத் தகைமையையும் இழந்து விடுவார்கள்.

வரலாற்றில் நடந்தவை தொடர்பாக “ஆல்” போட்டு அசை போடுவது சரியான ஒரு வரலாற்று ஆய்வு முறைக்கு உரியதல்ல என்பது வரலாற்று ஆசிரியர்களிடம் உள்ள பொதுவான கருத்து. இருப்பினும் இங்கு ஒரு புரிந்துணர்வின் தேவைக்காக கடந்து போய்விட்ட யுத்தம் தொடர்பாக மறுபக்கமாக ஒரு விடயத்தை :”ஆல்” போட்டுக் கற்பனை செய்து நீங்களே என்ன நடந்திருக்கும் என்றும் அது தொடர்பாகப் பார்க்கையில் புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் எவ்வளவு தூரம் மானுட நீதி நியாயங்களுக்கு உட்பட்டவர்கள் எனபதையும் சிந்தித்துப் பாருங்கள்.

அதாவது, நடந்த யுத்தத்தின் முடிவில் புலிகளின் இராணுவம் அரச படைகளை விரட்டியடித்து வடக்கு கிழக்கு மாகாணங்களின்; எல்லையோரமாக உள்ள அநுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களையும் புலிகள் கைப்பற்றியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
• அப்படிப்பட்ட ஒரு சூழலில் புலிகளின் பிடிக்குள் அகப்பட்டிருக்கக் கூடிய ஒரு அரச படை வீரனாவது உயிரோடு விடப்பட்டிருப்பானா! இன்றைக்கு பார்க்கையில் சிறி லங்கா பரடையினரிடம் சரணடைந்த பதினோராயிரம் புலிப் போராளிகள் மீண்டும் சாதாரண சமூக மனிதர்களாக வாழ்வதற்கான தொழிற் பயிற்சிகள் மற்றும் நம்பிக்கைகள் அளிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறி லங்கா அரச படைகள் புலிகளைத் தொட்டால் 40000 இராணுவத்தினர் பிணமாக தென்னிலங்கைக்கு சவப்பெட்டிகளில் அனுப்பப்படுவார்கள் என்று பிரகடனம் செய்தவர்கள்தானே புலிகள்.
அவ்வாறு புலிகளால் கைப்பற்றப்படும் பிரதேசத்தில் எந்தச் சிங்களவரையாவது அல்லது முஸ்லிம் மகனையாவது இருக்கவிட்டிருப்பார்களா! அல்லது அந்தப் பகுதிகளில் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களுடன் நேசமாக இருந்திருக்கக் கூடிய தமிழர் எவரையாவது கூட விட்டு வைத்திருப்பார்களா! எத்தனை பேரை உயிரோடு விட்டிருப்பார்கள்! அந்தச் சிங்களவர்களின் மற்றும் முஸ்லிம்களின் எந்தவொரு சிறு உடைமையையாவது எடுத்துச் செல்ல விட்டிருப்பார்களா!

அப்படிச் சிந்தித்துப் பார்த்தீர்களானால் ஒரு சட்டபூர்வமான அரச படைக்கும் ஒரு பாசிச வெறி பிடித்த பயங்கரவாதக் குழுவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தமிழர்களால் புரிந்து கொள்ள முடியும் அந்த அடிப்படையிலேயே எமது எதிர்காலம் குறித்து எமக்கு முன்னால் உள்ள உண்மையான அவசியமான சமூகக் கடமைகள் என்னென்ன உள்ளன என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

புலிகளின் ஆட்சியின் கீழ் அடக்கி ஒடுக்கப்பட்டு நடுங்கிப் போயிருந்த ஒரு பாதிரியாரை ஒரு வருடத்துக்கு முன்னர் நான் சந்தித்தேன். அவர் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆரம்ப காலங்களில் கட்சி பேதம் குழு பேதங்களுக்கு அப்பால் நின்று ஒரு உற்சாகம் தரும் மனிதராக – ஆசானாக இருந்தவர் அவரை நான் கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் சந்தித்த போது சொன்னேன் :”தந்தையே! நாம் ஒவ்வொருவரும் இனி கடந்த காலம் பற்றிய எல்லாவற்றையும் மறந்து விட்டு மன்னித்து விட்டு எதிர்காலத்துக்கானவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்றேன். உடனே அவர் “வரதர்! நாங்கள் இவங்களை (புலிகளை) மன்னிக்க வேண்டும். ஆனால் இவங்கள் செய்ததுகளை மறக்க ஏலாது” என்று கண்ணில் நீர் ததும்ப கூறினார். அவரது நெஞ்சு எவ்வளவு கனத்துப் போயிருந்தது என்பதை என்னால் உணர முடிந்தது.

இப்போது நான் கூறுவது என்னவென்றால், கடந்த யுத்தத்தில் நடந்து முடிந்த குற்றங்களை – அவை எவரால் செய்யப்பட்டிருந்தாலும் அவற்றை – எம்மால் மறக்க முடியாவிட்டாலும் குற்றம் புரிந்தவர்கள் அனைவரையும் மன்னித்துவிட்டு முன்னேற்றகரமான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கைகளோடு நடைபோட வேண்டும் – நடை போடமுடியும். குற்றங்கள் செய்தவர்களைப் பழிவாங்க முனைவதால் இனியும் தொடரும் அழிவுகளுக்கு முடிவேயிருக்காது. மாறாக அவற்றை மன்னிப்பதன் மூலம் அந்தக் குற்றங்களை இழைத்தவர்களின் மனச்சாட்சிகளை நாம் எழுச்சி கொள்ள வைத்து அழிவுகாரர்களை மக்கள் சமூகங்களுக்கான ஆக்கபூர்வமானவர்களாக ஆக்க வேண்டும்.

புலிகள் செய்த யுத்தக் குற்றங்களையும் மானுட இனத்துக்கு எதிரான சர்வதேச குற்றங்களையும் எப்படி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்காரர்கள் மன்னித்தார்களோ! எப்படி அவற்றை ரெலோ உறுப்பினர்கள் புளொட் உறுப்பினர்கள் ஈ என் டி எல் எவ் உறுப்பினர்கள், ஈ பி டி பி உறுப்பினர்கள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர்கள் மறந்தார்களோ மன்னித்தார்களோ! எப்படி முஸ்லிம் மக்கள் மன்னித்து விட்டார்களோ! அவை போலவே இன்று அனைத்துத் தமிழ் மக்களும் கடந்து போன யுத்தத்தில் நடந்தவற்றைத் தோண்டி கிண்டி கிளறி பரிசோதனைகள் செய்யும் எண்ணங்களை நிறுத்திவிட்டு அந்தக் குற்றங்கள் இழைத்தவர்களை மனத்துணிவோடு மன்னித்துவிடவேண்டும்.
இன்iறைக்கு தமிழர் சமூகத்துக்கு – ஏன் இலங்கை மக்கசள் அனைவருக்கும் தேவைப்படுவது –
• ஜனநாயக அரசியற் பண்பாடு;,
• சுயகௌரவமான வாழ்வு,
• சுதந்திரங்கள் நிறைந்த சூழல்,
• சமத்துவமான சமூக நீதிகள்,
• சகோதரத்துவமான இனமத உறவுகள்;,
• செழிப்பான சமூக பொருளாதார முன்னேற்றம்
இந்த ஆக்கபூர்வமான இலக்குகளை ஏந்தியபடி ஈழத்தமிழ் மக்கள் முன்னோக்கி நடைபோட வேண்டும். என்பதை எமது விருப்பமாகக் கொள்ள வேண்டும்.
அதை நோக்கி நாம் எல்லோரும் நம்பிக்கையோடு செயற்பட வேண்டும்.

இப்படிக்கு
உங்கள் அன்புத் தோழன்
அ.வரதராஜப்பெருமாள்

Followers

Blog Archive