Sunday, August 8, 2010

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (சாகரன்) (பகுதி 2)

Sunday, August 8, 2010
இதனை கனக்கச்சிதமாக செய்து முடித்தனர் புலிகள். ஆமாம் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்து முன்னோக்கி பலமாக நகரத் தொடங்கியிருந்த ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈரோஸ் ஆகிய மூன்று இயங்கங்களின் ஈழத் தேசிய விடுதலை முன்னணி (ENLF) இல் திடீரென ஒருநாள் தானும் இணைந்து செயற்படப் போவதாக அறிவித்து இணைந்து கொண்டது புலிகள் அமைப்பு. தந்திரோபாய ரீதியில் முற்போக்குச் சிந்தனை கொண்ட இளைஞர்கள் பலரை தன்னகத்தே கொண்ட புளொட் அமைப்பை ஐக்கிய முன்னணிக்குள் இணைத்தல் மூலம் புலிகளைத் தனிமைப்படுத்தி பலவீனப் படுத்தலாம் என்பதில் தோற்றுப்போனது ENLF. ஆனால் முந்திக் கொண்ட புலிகள் ஐக்கிய முன்னணியில் இணைந்தது மட்டும் அல்லாமல், ஐக்கிய முன்னணியை இல்லாமல் செய்யும் செயற்பாட்டையே தமது பிரதான செயற்பாடாக கொண்டு செயற்பட்டனர். ஏற்கனவே உடன்பாட்டிற்கு வந்திருந்த பொதுவான செயற்பாட்டிற்கான முடிவுகளை (பொது நிதி, பொதுவான பிரச்சாரம், பொதுவான தாக்குதல் போன்றவை இவற்றில் சில) முதலில் இல்லாமல் செய்தனர். இதற்கு ஐக்கியத்தை பலமாக்க ஐக்கிய முன்னணியிற்குள் கடைப்பிடித்து வந்த ஜனநாயக மத்தியத்துவத்திற்கு பதிலான ஏகோபித்த முடிவு என்ற வகையிலான செயற்பாட்டை புலிகள் தமது 'வீற்ரோ' பவர் ஐ பாவித்து சிதைத்தது வந்தனர்.

கூடவே ஐக்கிய முன்னணியிற்குள் இருந்த சகோதர அமைப்பு போராளிகளை அவ் அமைப்புக்களுடன் பேசிக்கொண்டும், கை கோர்த்துக் கொண்டும் முரண்பாடுகளை தாமே செயற்கையாக உருவாக்கி அவற்றைப் பேசித்தீர்க்;காமல் சகோதரப் படுகொலை செய்யத் தொடங்கினர். இது வன்னியில் ஈபிஆர்எல்எவ் இன் ரீகனில் மாத்தையாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டு, யாழ்பாணத்தில் ஈபிஆர்எல்எவ் இன் அமீன் என பிரகடனப்படுத்தாத சகோதரப் படுகொலைகள் கிட்டுவினால் தொடர் பரிணாமம் அடைந்து ரெலோ என்ற அமைப்பின் மீது பிரகடனப்படுத்திய சகோதர யுத்தத்துடன் அகோர நிலையை அடைந்தது. இது ஏற்கனவே புலியாக வாழ விரும்பிய பாலகுமாரை அவர் தம் இயக்கத்திடம் கூடக் கேட்காமலே பிரபாகரன் காலடியில் விழுந்து சேவகம் செய்ய வைத்தது. இறுதியில் 1986 டிசம்பர் மாதம் ஈபிஆர்எல்எவ் உடன் ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்கள் யாவற்றினதும் செயற்பாட்டை முழுமையாக தடை செய்து இலங்கை அரசின் விருப்பை நிறைவேற்றி ஈழவிடுதலைப் போராட்டத்தை இல்லாமல் செய்வதற்குரிய அத்திவாரத்தை உறுதியாகப் போட்டது புலிகள் அமைப்பு. எதனை ஏகாதிபத்தியங்களின் அடிவருடி ஐதேக கட்சி விரும்பியதோ அதற்கு செயல் வடிவம் கொடுத்து பெயர் வாங்கிக் கொண்டது தமிழீழ விடுதலைப் புலிகள். இதன் மூலம் புலிகள் தமது ஏகபோகத்தையும் நிறுவி விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதச் செயற்பாடு என்ற வடிவத்திற்குள் கொண்டு வந்து ஒரு மாபியா கும்பலாக வடிவெடுத்தது. இதன் தொடர்ச்சியாக பாசிச அமைப்பாக பரிணாமம் அடைந்து முள்ளிவாய்காலுடன் அடிமைப்பட்டு, சரணாகதியடைந்து, தனக்கு தானே மரணசாசனத்தை எழுதிக் கொண்டது.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் 1986 ம் ஆண்டு ரெலோ இயக்கத்தின் மீது புலிகள் போர் தொடுத்து தமது ஸ்தாபன மயப்படுத்தபட்ட சகோதரப் படுகொலை யுத்தத்ததை ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து ரெலோவின் தலைவர் சிறீ சபாரத்தினம் மே 06 ம் நாள் கொல்லப்பட்டார்;. இவ் நிகழ்வே ஆயுதம் தாங்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழக்க வைப்பதற்கு பிரதான காரணமாக அமைந்து. அதுவரைக்கும் தம் பிள்ளைகளை ஏதாவது ஒரு விடுதலை அமைப்பில் இணைந்து செயற்படுதலை பெருமையுடன் ஏற்று வந்த தமிழ் பேசும் சமூகம் மெதுவாக தம் பிள்ளைகளை இதில் இருந்து கழட்டிவிடும் செயற்பாட்டில் ஈடுபடத் தொடங்கினர். அன்று முடிவுக்கு வந்தது ஆயுதம் தாங்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஏறுமுகம். இதன்பின்பு நடைபெற்றவை எல்லாம் ஈழவிடுதலைப் போராட்டத்தின் இறங்கு முகச் செயற்பாடுகளே.

2009 ஆண்டு மே திற்கான தனது அழிவிற்கு 1986 மே மாதம் பிள்ளையார் சுழியை பகிரங்கமாக புலி தனக்கு தானே போட்டுக் கொண்டது. 1986 மே மாதம் ஆரம்பித்து தொடர்ந்த 23 வருடங்களிலான புலிகளின் யுத்தம் பல ஆயிரம் பொதுமக்களையும் (தமிழ், முஸ்லீம், சிங்களவர்) மாற்றுக் கருத்தாளர்களையும், தமது இயக்கத்திற்குள் இருந்த மாத்தையா, கருணா போன்றவர்களின் அணிகளையும் வகை தொகையில்லாமல் கொன்று குவித்தது புலிகள் அமைப்பு. இதற்கு பிரபாகரன், அவர்களின் குழுவினரின் வழி நடத்தல், சிந்தனையே காரணமாக இருந்து. மேலும் வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், உள்ளநாட்டு அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் என்று யாரையும் கொல்லுவதில் விடவில்லை. இறுதியில் தன்னை மட்டும் காத்துக் கொள்ள 2009 மே மாதம் முள்ளிவாய்காலில் பாரிய மனித அவலத்தை ஏற்படுத்த பொதுமக்களைப் பொறிக்குள் தள்ளி இறுதியில் முழம்தாள் இட்டு தானும் சரணாகதியடைந்து தானே அழிந்து கொண்டது. இந்த இறுதி மனிதப் பேரவலம் தன்னை எவ் வழியிலாவது காப்பாற்றும் என்று வழமைபோல் பொது மக்களைப் பொறிக்குள் சிக்க வைத்த பாசிசம் இம்முறை தோற்றுப் போனது. ஏகாதிபத்தியங்கள் புலித் தலைமையைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றன. இம்முறை இலங்கை அரசின் ஏகாதிபதியத்திற்கு எதிரான உறுதியான கூட்டு வெற்றி பெற்றது. புலிகளும், அவர்களின் இருப்பை விரும்பிய ஏகாதிபத்திய சக்திகளும் தோற்றுப் போயின.

1980 களிலேயே புலிகள் வெல்லும் என்பதைவிட புலிகள் கொல்லும் என்பதை புலிகளின் தலைவர்கள் பலரும், புலி உறுப்பினர் பலரும் அறிந்தே இருந்தனர். இதனை ஏனைய விடுதலை அமைப்பு போராளிகளுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவர்களும் உணர்ந்தே இருந்தனர். 1990 களில் ஏன் ஏனைய விடுதலை அமைப்புக்களில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சம்மந்தர் உட்பட பல பிற்போக்கு, காட்டிக் கொடுக்கும் தலைவர்களும் உணர்ந்திருந்தும் சேவகம் செய்யக் காத்திருந்தனர். இது புலிகளுக்கு கொடி பிடித்த புலிப்பினாமிகளுக்கும் தெரியும். உருத்திரகுமாரன் முதல் கேபி வரை யாவருக்கும் தெரியும். இதுவே புலிகளை நோக்கி இவர்களை நகர்த்தி கொடி, ஆலவட்டங்களை பிடிக்க வைத்தது. இந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்களும் புலியளவில் காரணமானவர்களே.

பிரபாகரன் வெல்வானோ தெரியாது, ஆனால் பிரபாகரன் கொல்வான் என்பதை பற்குணத்தில் ஆரம்பித்து கருணாவரையும், அமிர்தலிங்கம் இருந்து சம்மந்தர் வரைக்கும், பாலகுமார் தொடக்கம் சுரேஸ் பிரேமச்சந்திரன் வரைக்கும், பத்மநாபா முதல் வரதராஜப்பெருமாள் வரைக்கும், ஹமீத் முதல் ஹக்கீம் வரைக்கும், மதவாச்சி அப்புகாமி தொடக்கம் அம்பாறை சிறியானி வரைக்கும், தொண்டமான் முதல் மனோகணேசன் வரைக்கும் கருணாநிதி முதல் வைகோ வரைக்கும் வாஜ்பேயி முதல் சோனியா காந்திவரையும் பருத்தித்துறை பொன்னம்மா முதல் அம்பாறை சட்டநாதர் போடியார் வரைக்கும் யாவரும் அறிந்தே இருந்திருக்கின்றார்கள். இந்தனை புலிகள் எப்போதும் தமக்கு பெருமையாகவும், சாதகமாகவும் பயன்படுத்தி வந்தனர். புலிகளால் ஏற்படுத்தப்பட்ட இந்த மரணப் பிராந்திக்கு பலர் பயந்து அடி பணிந்தனர். இதனை தமது பிழைப்புகளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்ற நாற்காலிகளை நிரப்பிப் கொண்டனர். மிகச் சிலர் தொடர்ந்தும் விடாப்பிடியாக புலிகளின் மக்கள் விரோத செயற்பாட்டிற்கு எதிராக போராடி வந்தனர். உயிர்த் தியாகம் செய்தனர். இன்றும், இன்னமும் போராடிக் கொண்டு இருக்கின்றனர்.

பிரபாகரன் வெல்வானோ தெரியாது, ஆனால் பிரபாகரன் கொல்வான் என்பதை அறிந்திருந்த பலரும் வாய்பொத்தி, வாயுடன் கூடவே எல்லாவற்றையும் பொத்தி மௌனித்து இருந்தார்கள். இதுவே இறுதியில் முள்ளிவாய்காலில் மரணித்த பொதுமக்களுக்கு ஏற்பட்ட நிலமைகளுக்கு காரணமாக அமைந்திருக்கின்றது. ஆனால் இதுதான் நடைபெறப் போகின்றது என்பதை பலரும் 25 வருடங்களுக்கு முன்பே தெரியும். இதனை பல இடங்களிலும் பல சந்தர்ப்பத்தில் எழுத்திலும், பேச்சிலும், செயற்பாட்டிலும் சொல்லியே வந்திருந்திருக்கிறார்கள். மனிதனுக்கும், மிருகத்திற்கும் உள்ள வித்தியாசம் மனிதன் பகுத்தறிவு உள்ளவன். மிருகங்கள் பகுத்தறிவற்றவை. ஆனால் ஈழவிடுதலைப் போராட்டத்தின் பிழையான போக்கை பொது மக்களும் பகுத்தறிந்து பார்த்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. தற்போது ஒரு வகையான பகுத்தறிவினால் மிருகங்கள் கூட சுனாமி போன்றவற்றை பகுந்துணர்ந்து தம்மை தற்காத்துக் கொள்கின்றன. இவ்விடயத்தில் மக்களைவிட மிருகங்கள் சிறப்பான நிலையில் இருக்கின்றன. ஆனால் ஈழ விடுதலைப் போராட்டத்தின் போக்கை பகுத்தறிவு செய்து பார்ப்பதில் பெரும்பான்மையான தமிழ் பேசும் பொது மக்கள் தோற்றே இருக்கின்றன என்பது கசப்பான உண்மை.
(தொடரும்.....)

ஐ.தே.கவில் இணைய பொன்சேகா தீர்மானம்,

Sunday, August 8, 2010
சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணையத் தீர்மானித் துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி புதிய சிஹல உறுமைய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்புக் கட்சித் தலைவர் கூட்டத்தின்போது இந்த யோச னையை முன்வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் சகல கட்சித்தலைவர்களினதும் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதன் பின்னர் இறுதித்தீர்மானம் எடுக்கப் படுமென அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை இந்தச் செய்தி தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா இது வரையில் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.

அமெரிக்க உயர் அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை விஜயம் - 22ஆம் திகதிவரை இங்கு தங்கியிருப்பார்கள்.

Sunday, August 8, 2010
அமெரிக்காவின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 40 அதிகாரிகள் எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரியவருகிறது. இந்த அமெரிக்கப்படையினர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர் என தூதரக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள வென உயர் அதிகாரிகள் 40 பேர் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.

இவர்களில் இராணுவம், கடற் படை மற்றும் விமானப்படை ஆகிய பாதுகாப்பு தரப்பினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இதேவேளை இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்தப் பணிகளுக்காக அமெரிக்கா 581 மில்லியன் ரூபாயை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக அமெரிக்கா வழங்கியுள்ளது. இதனைத்தவிர மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உதவிகளை வழங்கவுள்ளதாக இலங் கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (சாகரன்) (பகுதி 1)

Sunday, August 8, 2010
புலி வெல்லும் என்பதைவிட அது கொல்லும் என்பதை பலரும் உணர்ந்திருந்தனர். இதனாலேவே நிலத்திலும் புலத்திலும் பலர் அவர்களை ஆதரிப்பது போல் பாசாங்கு காட்டி வந்தனர், சிலர் துணிந்து புலிகளின் மக்கள் விரோத பாசிச செயற்பாட்டிற்கு எதிராக விடாப்பிடியாக 30 வருடங்களுக்கு மேலாக போராடி வந்தனர், பல தியாகங்களையும் செய்தனர். புலிகளை எதிர்ப்பவர்களுக்கும் ஆதரவழிப்பவர்களுக்கு ஒன்று பொதுவானது அதுதான் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட மரணப்பயம். புலிகளின் குறி எதிலும் தவறலாம். ஆனால் தான் கொல்ல வேண்டும் என நினைப்பவர் இமயத்தில் இருந்தால் என்ன, இங்கிலாந்தில் இருந்தால் என்ன, இலுப்பைக் குளத்தில் இருந்தாலென்ன, குழாய் கிணற்றிற்குள் ஒளித்திருந்தாலும், பிரமிட்டிற்குள் மறைந்து இருந்தாலும் ஏன் வேறு ஒரு கிரகத்தில் மறைந்து குடியிருந்தாலும் குறி தப்பாது வெறியுடன் கொல்வர்;. இதற்கு அவர்கள் கற்பிணி வேடம் என்ன, கருமாதி வீட்டில் பிணமாகவென்ன, விருந்தோம்பல் வேடமென்ன, சிறுவர், சிறுமி என வேடமிட்டு யாரையும் பலயெடுக்கவும் பலிகொடுக்கவும் தயாராக இருந்தனர். இவை எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட நிகழ்வு மே 18 இல் நிகழ்ந்தது என்றால் மிகையாகாது.

பிரபாகரனைவிட இராணுவ அறிவில் பலம் பொருந்திய கருணா கூட அரச படைகளின் பாதுகாப்பில் முழுவதுமாக இருந்தாலும் மே 18 இற்கு பிறகுதான் புலிகளின் எல்லைக்குள் பிரவேசித்தார். அரசியல் சாணக்கியரும், போரட்டத்தில் பல வருட அனுபவமுள்ள வரதராஜப்பெருமாள் தனது மக்களை நேரடியாகச் சந்திக்கலாம் என்று தீர்மானித்த நாள் மே 18 அன்றுதான். புலிகளின் பல பொறிகளில் தப்பி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களை பொது இடங்களில் சந்திக்கலாம் என தீர்மானித்த நாள் மே 18. சம்மந்தர் முதல் மாவை வரை புலிகளின் பாதை பிழையானது என நழுவின மீன் போல் கதைக்கலாம் என்று முடிவெடுத்த நாள் மே 18. இலங்கை அமைச்சர்களும் அவர் தம் மனைவியரும் வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களுக்கு தொண்டு செய்வதற்காக, நாடா வெட்டப் புறப்படலாம் என தீர்மானித்த நாள் மே 18. 'துவக்குடன் எந்த அறுவானும் போராட்டம் என்று இனி வந்தால் முறத்தல் அடித்து விரட்டுவோம்' என்று வீரத்தாயாக தமிழ்த் தாய் வன்னியில் மாறிய நாள் மே 18. யாழ் நாக விகாரையும், நயினா தீவு நாகதீப விகாரையையும் இனித் தரிசிக்கலாம் என்று அடிமட்ட பௌத்தன் முடிவெடுத்த நாள். யாழ் பொம்மை வெளியில் உள்ள தமது பள்ளி வாசலை சென்று பார்வையிடலாம் என்று முஸ்லீம் சகோதரர்கள் முடிவெடுத்த நாள். ஏன் கொழும்பில் மட்டும் முதலீடு செய்த தமது சொத்துக்களை சென்று பார்வையிடலாம் என்று புலிகளின் ஆதரவாளர்கள் முடிவு எடுத்த நாளும் இதே மே 18 தான்.

ஏன் கூவ மறந்த குயில்களும், ஆடலை நிறுத்திய மணில்களும் பாடவும் ஆடவும் ஆரம்பித்த நாள். பூக்க, காய்க மறுக்கப்பட்ட செடிகளும், மரங்களும் பூக்கவும் காய்கவும் அனுமதிக்கப்பட்ட நாள். வடக்கிலிருந்து தெற்கிற்கு, கிழக்கிலிருந்து வடக்கிற்கும், மேற்கிற்கும் சுதந்திரமாக செல்லலாம் என தமிழ் மக்கள் தீர்மானித்த நாள்.

தமிழர் தலைவர் கலைஞர் புலிகளை முழுமையாக விமர்சித்து அறிக்கைகள் விடலாம் என முடிவு செய்த நாள்.

புலம் பெயர் நாடுகளில் புலிச் சண்டியர்களின் மிரட்டல்களுக்கு பயப்படாமல் வியாபார ஸ்தலங்களை பூட்ட மறுக்கலாம் என தீர்மானித்த நாள். புலிகளின் வலிந்த ஊர்க் கோலங்களுக்கு செல்வதில்லை என மக்கள் தீர்மானித்த நாள். புலம் பெயர் நாடுகளில் புலிகளின் முதலீட்டாளர்கள் புலிகளின் பணத்தை எவ்வளவும், எவ்வாறும் சுருட்டலாம் இனி வன்னிக்கு அழைத்து விரட்ட யாரும் இல்லை என 'தைரியமாக' முடிவெடுத்து திடீர் மில்லியனராக மாறிய நாள். புலம் பெயர் நாடுகளில் வங்கி கணக்கு மூலம் மாதப்படி வழங்கி வந்த பலர் 'ளவழி pயலஅநவெ' அடித்த நாள்.

எங்களுக்கு அப்பவே தெரியும் இவ்வாறு நடக்கும் என புலிகளின் புகழ்பாடிய அரசியல் ஆய்வாளர்கள் குத்துக்கறணம் அடித்த நாள். ஒலிபரப்பில் புலி புராணம் பாடத் தேவையில்வையென முடிவெடுத்து டக்ளஸை பேட்டியெடுக்கலாம் என முடிவு செய்த நாள்.

புலிகளுக்கு சரத் பொன்சேகா உட்பட கேபி, உருத்திரகுமார், நெடியவன் என பலர் தலைவர்கள் தேசியத் தலைவர்களாக பிரகடனப்படுத்திய நாள். சுரேஸ், சேரன் வகையறாக்களின்; புலித் தலைமை ஆசைகள் நிராசையான தினம். ஆனால் தொடர்ந்தும் வேறு எவ் வழியில் பிழைப்பை தொடர்ந்து நடத்தலாம் என சிந்திக் தூண்டிய நாள்.

இவையெல்லாம் எவ்வாறு நடந்தன என்ற சற்று பார்ப்போம்.....

1970 களில் தனி நபர்களாகவும், தொடர்ந்த தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பு வடிவங்கள் ஊடாகவும் ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முனைப்பு பெற்றது. தமிழ் இளைஞர் பேரவை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆள்திரட்டும், வாக்குகள் திரட்டும் ஒரு அமைப்பாக தமக்குள் முழுமையாக கட்டுப்பட்டு செயற்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பை மீறி அதிலிருந்து பிரிந்து சென்ற பலர் பல்வேறு ஈழவிடுதலை அமைப்புக்களை உருவாக்கி செயற்படத் தொடங்கினர். இவ் அமைப்புக்கள் 1970 களின் பிற்பகுதிகளில் ஆயுதப் போராட்ட அமைப்புகளாக வளர்ச்சி பெற்றன. இதனைத் தொடர்ந்து 1980 களின் ஆரம்ப பகுதியில் பலம் மிக்க ஆயுத அமைப்புக்களாக ஊதிப் பெருத்தன, பெருக்க வைக்கப்பட்டன. இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், வர்க்க விடுதலைக்கான முதற் கட்டமாக சுயநிர்ணய உரிமைக்கான சகதேசிய விடுதலைப் போராட்டம் என்ற இரு பிரிவான வித்தியாசமான பரிணாமத்தில் விடுதலை அமைப்புக்கள் உருவாகி இருந்தன. தேசிய விடுதலைப் போராட்ட அமைப்புகளுடையே ஐக்கிய முன்னணிக்கான தேவையை விடுதலை அமைப்புக்களும், பொதுமக்களும் வேண்டி நின்றனர்.

1984 களில் இதன் அடிப்படையில் ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈரோஸ் ஆகிய மூன்று விடுதலை அமைப்புக்கள் இணைந்து ஈழத் தேசிய விடுதலை முன்னணி (நுNடுகு) தோற்றம் பெற்றது. இதனை உருவாக்குவதில் தோழர் பத்மநாபாவின் பங்களிப்பு மகத்தானதாக அமைந்து. இந்த பரிணாம வளர்ச்சியை அவதானித்த அன்றய ஐதேக இலங்கை அரசும், ஏகாதிபத்தியமும் ஈழவிடுதலை அமைப்புகளின் ஐக்கியம் ஈழவிடுதலைப் போராட்டத்தின் வெற்றியை நிச்சயப்படுத்தும் காரணியாக அமையப் போகின்றது என்பதை நன்கே புரிந்திருந்தனர். இடதுசாரி நிலப்பாட்டுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பு செயற்பாட்டுடன் ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்ற ஐக்கிய முன்னணி தனது செயற்பாடுகளை முனைப்புடன் செயற்படுத்தத் தொடங்கியது. இதனால் ஏகாதிபத்தியத்தின் ஆலோசனையுடன் இவ் ஐக்கிய முன்னணியை இல்லாமல் செய்தல் என்ற பிரதான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பட்டனர் ஐதேக அரசாங்கத்தினர். இதனை அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி பாராளுமன்றத்திலும், ஜேஆர் ஜெயவர்த்தன பல கூட்டங்களிலும் பேசியிருந்தனர். 'இயங்கங்களுடையே முரண்பாட்டை ஏற்படுத்துவேன்'. 'பகைமையை வளர்ப்பேன்'. 'அவர்களை மோதவிடுவேன்' 'இதன் மூலம் அவர்களை தனிமைப்படுத்துவேன்.' பலவீனப்படுத்துவேன்.' 'பின்பு இல்லாமல் செய்வேன்' என்று பேசித் திரிந்தனர்.
(தொடரும்....)

மீள் குடியேற்றப்பட்ட மக்கள் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதில் சிக்கல் நிலைமைஅமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ.

Sunday, August 8, 2010
மீள் குடியேற்றப்பட்ட மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நீர் வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மீள் குடியேற்றப்பட்ட மக்களில் 90 வீதமானவர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆண்டின் பெரும் பகுதியில் வரட்சியான காலநிலை காணப்படுவதனால் நீர்ப்பாசன வசதிகள் மிகவும் இன்றியமையாதது.

எனினும் மீள் குடியேற்ற மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த போதியளவு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு தேவையான கிணறு வசதிகளை விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Followers

Blog Archive