Saturday, July 17, 2010

அரசாங்கத்திற்குக் கூட்டு ஆலோசனை.

Saturday, July 17, 2010
மலையகப் பெருந்தோட்டங்களில் அரச நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக, தொழிற்சங்க மற்றும் அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்குக் கூட்டு ஆலோசனையொன்றைச் சமர்ப்பிக்கவுள்ளன.

பெருந்தோட்டங்களை அரச நிர்வாகத்தின் கீழ் உள்வாங்கும் வகையில் புதிய கிராம சேவையாளர் பிரிவுகளும் பிரதேச செயலாளர் பிரிவுகளும் முன்மொழியப் பட்டுள்ளதோடு இது தொடர்பான பொதுவான கூட்டறிக்கை இம்மாத இறுதிக்குள் எல்லை மீள் நிர்ணய குழுவுக்குக் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான இறுதி ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி மாலை கொழும்பிலுள்ள �இலங்கை மன்றக் கல்லூரி�யில் நடைபெறுகிறது.

இதில் மலையகத்தில் இயங்கும் சகல அமைப்புகளின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக எல்லை மீள்நிர்ணயம் தொடர்பாக மலையக அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளரான பீ. பீ. தேவராஜ் தெரிவித்தார்.

அரசியல் கருத்தியலுக்கு அப்பால் சமூக நலச் சிந்தனையை நோக்காகக் கொண்டு பொதுவான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துச் செயற்படுத்தி வருவதாகக் கூறிய அவர், மலையகத்தின் முன்னணி அரசியல், தொழிற்சங்க அமைப்புகளும் இது விடயத்தில் பொது உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகக் கூறினார்.

காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்து கிராம சபை கட்டமைப்பிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்ட மலையக சமூகம் இதுவரை காலமும் அரச நிர்வாகத்திலிருந்தும் புறந்தள்ளப்பட்டிருக்கின்றது. தோட்ட அதிகாரியே இந்த மக்களின் நிர்வாகியாக இருந்து வருகிறார்.

எனவே, சமத்துவத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் வகையில், யதார்த்த நிலையினின்று புதிய ஆலோசனைகளை வரைந்துள்ளோம். இதில் இனரீதியான சிந்தனைப் போக்கு கிடையாது. நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையிலேயே இந்த ஆலோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது என்று தெரிவித்த தேவராஜ், நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன் தற்காலிக ஏற்பாடாக கிராம சேவையாளர் பிரிவுகள் பலவற்றைப் புதிதாகப் பிரேரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்போதைய ஏற்பாட்டின்படி 350 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவையாளர் பிரிவொன்றை ஏற்படுத்த வேண்டும். ஆனால், தோட்டங்கள் தற்போது சிறு நகர பிரதேசத்திற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளதால், தோட்டத்திற்கொரு கிராம சேவையாளர் பிரிவை ஏற்படுத்தும் வாய்ப்பு இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைக்கு நுவரெலியாவிலும் கொழும்பு வடக்கிலும், மேலதிக பிரதேச செயலகப் பிரிவுகளைக் கோருவதற்கும் விரிவான ஆய்வுக்குப் பின்னர் சனத்தொகை, நிலத்தொடர்பு முதலான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய ஆலோசனைகள் முன்வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தேவராஜ் மேலும் தெரிவித்தார்.

மீண்டும் இலங்கை வருகிறார் நீல் புஹ்னே.

Saturday, July 17, 2010
இலங்கைக்காக ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியும் மனிதத்துவ இணைப்பாளருமான நீல் புஹ்னே கடந்தவாரம் நியூயோர்க்கிற்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனின் விஷேட செய்தியுடன் இலங்கைக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக ஐ.நா.சபையின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனுக்கு இலங்கை நிலைவரம் பற்றியும் இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலர்களின் நிலைமை பற்றியும் நீல் புஹ்னே எடுத்துக்கூறியிருக்கிறார். 2009ஆம் ஆண்டு ஐ.நா. சபையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் கலந்தாலோசித்திருக்கிறார்கள்.

திருப்பியழைக்கப்பட்ட நீல் புஹ்னே எதற்காக மீண்டும் இலங்கைக்கு செல்கிறார் என பேச்சாளரிடம் கேட்டபோது… இலங்கையில் இப்பொழுது அரசாங்கத்தின் சாதகமானநிலை தென்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள ஐ.நா. பணியாளர்கள் எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் பணிபுரிகிறார்கள். இதனைக் கருத்திற்கொண்டே புஹ்னே மீண்டும் இலங்கை செல்லவுள்ளார் என்று குறிப்பிட்டார்.

மன்னாரில் இலவச மருத்துவ முகாம்.

Saturday, July 17, 2010

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்காக நாற்சதுர சுவிசேஷ சபையின் அனுசரணையில், இலங்கை இராணுவம் - சுகாதார அமைச்சுடன் இணைந்து நடாத்தும் இலவச வைத்திய முகாம் உயிலங்குளம், மல்லாவி, பூனகரி ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றது.

மேலும் 19ஆம் திகதி நெடுங்கேணியிலும், 20ஆம் திகதி ஒட்டிசுட்டானிலும், 22 முதல் 24ஆம் திகதிவரை வரை நட்டான்கண்டலிலும் நடைபெறவுள்ளது. இவ் மருத்துவ முகாமிற்காக விசேட மருத்துவ குழு ஒன்று அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, சுவிஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் நமது நாட்டின் மருந்துவர்களும் கலந்துகொள்வர்.

ஏற்கனவே இவ்வமைப்பினர் தமது மருத்துவ முகாம்களை திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் நடத்தியிருந்தனர். நான்காவது முகாமாக மன்னாரில் இப்பொழுது நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது

Followers

Blog Archive