Wednesday, April 14, 2010

தமிழ்-சிங்கள பாரம்பரியங்கள் இரண்டறக் கலந்த புத்தாண்டு

Wednesday, April 14, 2010
குயில்கள் கூவும் சத்தங்களுடன், பூத்துக் குலுங்கும் மரங்களின் மீது பறவைகளின் கீச்சிடும் சத்தங்களுடன் சித்திரை வசந்த காலம் உதயமாகிறது. இந்த வசந்த காலத்துடன் இன ஒற்றுமையை வலியுறுத்தும் தமிழ், சிங்கள புத்தாண்டு ஆரம்பமாகிறது.

முப்பது வருட காலம் யுத்த சூழ்நிலையினால் மக்களுக்கு ஏற்பட்டிருந்த துன்ப, துயர அனுபவங்கள், கஷ்டங்கள் நீங்கிய நிலையில் சமாதானமும், அமைதியும் கொண்ட சூழ்நிலையில் 2010ஆம் ஆண்டு புதுவருடம் பிறந்துள்ளது.

பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டு எமது நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் சாந்தியும், சமாதானமும் நிறைந்த ஆண்டாகிறது. அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது.

இந்து, பெளத்த மத பாரம்பரிய கலாசார கொண்டாட்டமாக இலங்கையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் காணப்படுகின்றன. இவ்விரு சமூகமும் புரிந்துணர்வு, ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து இதனைக் கொண்டாடுகின்றன. இரு சமூகங்களுக்கிடையிலும் வித்தியாசமான பாரம்பரிய கலாசார நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இந்துக்கள் மருத்து நீர் வைத்து முழுகி, பொங்கிப் படைத்து, புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபட்டு, முதியோரை வணங்கி ஆசிர்வாதம் பெறுவர். கைவிசேடம் வழங்கி, வர்த்தக கொடுக்கல், வாங்கல் செய்து குடும்பத்தினர் ஒன்றிணைந்து உண்டு மகிழ்ந்து கொண்டாடுவர்.

இதுபோல சிங்கள மக்களும் புத்தாண்டு உணவுண்பதில் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கின்றனர். நல்ல நேரம் பார்த்து அடுப்பேற்றி சமைத்து, உணவுண்பர். தலைக்கு சுப நேரத்தில் வயதில் மூத்த ஒருவர் மூலம் அல்லது மதகுரு ஒருவர் மூலம் எண்ணெய் தேய்ப்பர்.

உற்றார், உறவினருக்கு பலகாரங்கள் பரிமாறி, பட்டாசு கொளுத்தி, கணக்குத் தொடங்கி வைத்து செய்யும் தொழிலினை ஆரம்பித்து கொண்டாடுகின்றனர். இதற்கு ஏற்ற வகையில் வர்த்தக வங்கிகள் கொடுக்கல், வாங்கல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றன.

இரு சமூகங்களும் புதுவருடத்தில் உறவினர் வீடுகளுக்கு சென்று குசலம் விசாரித்து, பலகாரம் உண்டு, தேநீர் அருந்தி மகிழ்வுறும் நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

புதுவருடத்துடன் கிராமங்களில் விளையாட்டுகள் ஆரம்பிக்கின்றன. இளைஞர்கள், யுவதிகள் ஒன்றிணைந்து இந்த வசந்தகால புதுவருட கலாசார நிகழ்வில் பங்கேற்பர். முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இவை சமாதானத்திற்கும், ஒற்றுமைக்கும் வழிகோலுகின்றன.

மாட்டு வண்டி சவாரி, பட்டம் விடுதல், மரதன் ஓட்டம், சைக்கிள் ஒட்டம் ஊஞ்சலாட்டம், சடுகுடு, போர்த் தேங்காய் அடித்தல், கொம்புடைத்தல், கும்மியடித்தல், ரபான் அடித்தல், சவுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், பல்லாங்குழி விளையாடுதல், தலையணைச் சண்டை, முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், விநோத உடை, ஓட்டப் போட்டிகள் ஆகியன நடத்தப்படுகின்றன.

வருடா வருடம் புதுவருடம் பிறக்கும், நம் வாழ்வில் எத்தனையோ கொண்டாட்டங்கள் வரும். ஆனால் ஒவ்வொரு புத்தாண்டிலும் சலித்துப் போகாமல் பழைய கொண்டாட்டங்களிலேயே மீண்டும் மீண்டும் ஈடுபட்டு மகிழ்ச்சியையே பெறுகின்றனர்.

கடந்த 30 வருடமாக எமது இலங்கை மக்கள் ஈடுசெய்ய முடியாத இழப்புகளை சந்தித்துள்ளனர். விலைமதிக்க முடியாத உயிர்களையும், சொத்துக்களையும் இழந்துள்ளனர். இனியும் இழக்க முடியாது. இழக்க ஒன்றுமேயில்லை. கொடிய யுத்தம் முடிவுபெற்றுள்ளது. புதிய சுகவாழ்வுக்கான காலம் உதயமாகியுள்ளது. சகல இன மக்களிடத்தும் வாழ்வில் புது விடியல் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் ஒற்றுமையுடன் ஒன்றிணையும் காலம் தோன்றியுள்ளது. புது வருடப் பிறப்பில் புத்தாடைகளை மட்டுமல்ல, புது உறவுகளையும் பெறுவோம்.

30 வருட யுத்தத்தின் பின் ஏற்பட்டுள்ள இந்தச் சூழல் அற்புதமானது. மீண்டும பழைய ஒற்றுமைக்கு சென்று இனங்கள் ஒன்றிணைந்து இப் புது வருடத்தினை கொண்டாட வேண்டும்.

Followers

Blog Archive