Tuesday, July 5, 2011

சில அரசாங்க அதிகாரிகள் தேசிய கீதத்திற்கு உரிய மதிப்பு அளிப்பதில்லை – ஜனாதிபதி!

Tuesday, July 5, 2011
சில அரசாங்க அதிகாரிகள் தேசிய கீதத்திற்கு உரிய மதிப்பளிப்பதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில சிரேஸ்ட அரசாங்க அதிகாரிகளும் சில காவல்துறை உத்தியோகத்தர்களும் தேசிய கீதத்திற்கு உரிய கௌவரம் வழங்குவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர் உரிமை மற்றும் சமூகப் பண்புகளை மேம்படுத்தும் விசேட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக விழுமியங்களும் தேசப்பற்றும் சிறு பராயத்திலேயே பயிற்றப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொலைக்காட்சி ஊடாக மேற்குலக கலாச்சாரத்தை பார்த்து பழகியுள்ள நாம் அதற்கு அடிமையாகி விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சில தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் மொழி உசிதமானதல்ல எனவும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய கீதம் இசைக்கப்படும் போது சில அரசியல்வாதிகள் அதற்கு ஏற்றவாறு நடனமாடுவதாகவும் தாம் அதனை தடுத்து நிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடபகுதி அரசியல் கட்சிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம்!

Tuesday, July 5, 2011
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வடபகுதி அரசியல் கட்சிகளுக்கான சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலைமை நியாயமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அச்சுறுத்தலாக அமையும் என கொஃபே எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

யாழ்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சுதந்திரமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான நிலைமை காணப்படாமை துரதிஸ்டவசமானது என அவர் தெரிவித்தார்.

சில அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாகவும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தின் சொத்துக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதாகவும் கொஃபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய ஒன்பது முறைப்பாடுகள் இதுவரை தமது அமைப்புக்கு கிடைத்துள்ளதாக கொஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கூறியுள்ளார்.

இதில் அனேகமானவை வடமாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தெற்கில் கேகாலை மாவட்டத்திலேயே அதிகளவிலான தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு அறிவித்துள்ளது.

இதேவேளை வடமாகாணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் அமைதியான சூழல் காணப்படுவதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அந்த நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ராசங்க ஹரிஸ்சந்திர கருத்து வெளியிடுகையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய 17 முறைப்பாடுகள் தமது அமைப்பிற்கு கிடைத்துள்ளதாக கூறினார்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இம்முறை தேர்தல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றப் பிரிவுகளில் அமைதி நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் பாதிவாகியுள்ளதெனவும் தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலுடன் தொடர்புடைய சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை சட்ட விரோதமாக காட்சிப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ராசங்க ஹரிஸ்சந்திர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

10 இலட்சம் ரூபா சன்மானம்!

Tuesday, July 5, 2011
மட்டக்களப்பு புத்தூர் பகுதியில் உள்ள அர வங்கியொன்றில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

இதற்கமைய சந்தேகநபர்கள் தொடர்பில் உறுதியான தகவலை வழஙட்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானத்தை வழங்க பொலிஸ் மா அதிபர் என்.கே. இளஙக்கக்கோன் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பிலான தகவல்களை அறிந்தவர்கள் 011 2 32 01 45 அல்லது 011 2 42 21 76 அல்லது 011 2 38 03 80 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தகவல்களை பெற்றுக்கொடுப்போரின் இரகசியத் தன்மையை பாதுகாப்பதாகவும் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

கடந்த மாதம் 30 ஆம் திகதி குறிப்பிட்ட அரச வங்கிக்குள் நுழைந்த ஆயுதமேந்திய சந்தேகநபர்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர்.

Followers

Blog Archive