Wednesday, November 10, 2010

ஜனாதிபதி ஆணைக்குழு மன்னாரில் விசாரணை நடத்துமா?

Wednesday, November 10, 2010
கற்றுக்கொண்டுள்ள பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மன்னார் மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மன்னார் மாவட்டத்தில் நடைபெறவேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டி, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையினால் அனுப்பப்பட்டிருந்த கடிதம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யுத்தம் முடிவுற்றுள்ள நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்டிருக்கும் விசாரணைகளில் பொது மக்கள் கண்ணீர் மல்கச் சாட்சியம் அளித்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா, மட்டக்களப்பு, கொழும்பு எனப் பல பாகங்களிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள்மூலம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் மன்னார் மாவட்டத்தில் இதுவரை ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெறவில்லையெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் ஆயரினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை சாதகமாகப் பரிசீலிக்கப்படுமென ஆணைக்குழு அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இல்லம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கில் வாக்காளர் பதிவு நிறைவுறும் நிலையில்.

Wednesday, November 10, 2010
முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் பெரும்பாலும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 90 வீதமான வாக்காளர் பதிவுகள் இதுவரை பூர்த்தியடைந்துள்ளதாக முல்லைத்தீவு - கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ எஸ் கருணாநிதி எமக்குத் தெரிவித்தார்.

வவுனியாவில் முகாம்களில் தங்கியுள்ள வாக்காளர்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் கிராம உத்தியோகத்தர்களூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார்.

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்குத் தடை.

Wednesday, November 10, 2010
தரக்குறைவான மருந்து வகைகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்ற த்தில் தெரிவித்தார்.

தரக்குறைவான மருந்துகளை ஏற்கனவே இறக்குமதி செய்து விநியோகித்திருந்தவர்க ளிடமிருந்து நஷ்ட ஈடுகளையும் சுகாதார அமைச்சு அறவிடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் கூடியது.

வழமையான சபை நடவடிக்கைகளின் பின்னர் வாய்மொழி மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐ. தே. க. எம். பி. தயாசிறி ஜயசேக்கர சுகாதார அமைச்சரிடம் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டெண்டர் மூலம் மருந்து வகைகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் முதலில் தரமான மருந்து வகைகளை மாதிரிகளாக காண்பி த்து இறக்குமதி செய்து விநியோகிக்கும் போது தரக்குறைவான மருந்து வகைகளை விநியோகித்தும் உள்ளன.

இதனால் இந் நிறுவனங்களிடமிருந்து ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக நஷ்ட ஈடுகளை அறவிட்டும் உள்ளோம். அத்துடன் தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்வது இனியும் கண்டுபிடிக்க ப்பட்டால் உடனடியாக அந்த நிறுவனங்கள் தடை செய்யப்படும் என்றார்.

அத்துடன் தரக்குறைவான மருந்து வகைகளை இறக்குமதி செய்யும் விடயத்தில் டெண்டர் சபையின் அதிகாரிகள் எவரேனும் செயற்பட்டிருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டால் அந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார பிரதியமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்ட 12,030 பேர் கைது.

Wednesday, November 10, 2010
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 27 நாட்களாக நடத்தப்பட்ட பாரிய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 12,030 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

கடந்த மாதம் 13ம் திகதி முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 27 நாட்களாக நடத்தப்பட்ட இந்த சுற்றிவளைப்பு தேடுதலின்போது போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பான 12,500 சம்பவங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட இந்த பாரிய சுற்றிவளைப்பு தேடுதலின்போது 10, 306 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஹெரோயின், கஞ்சா, பாபுல், போதை தரும் லேகியங்கள் மற்றும் அபின்போன்ற பல்வேறு வகையான போதைப் பொருட்களையே பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆயிரக் கணக்கான பொலிஸார் அடங்கிய, பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் விஷேட பொலிஸ் தேடுதல் பிரிவினர் ஆகியோர் இணைந்து இந்த பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ‘போதை ஒழிப்பு, திட்டத்தின் பிரகாரம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஹெரோயினுடன் தொடர்புடைய 3275 சம்பவங்கள் தொடர்பாகவும், கஞ்சாவுடன் தொடர்புடைய 7596 சம்பவங்கள் தொடர்பாகவும் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கல்கிஸ்ஸையிலுள்ள படோவிட்ட, கிரேண்ட் பாஸிலுள்ள கிம்புலாஎல, பொரல்லையிலுள்ள மகஸின் வீதி, பண்டாரநாயக்க வீதி, ஒபேசேகரபுர மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களிலேயே விஷேட பொலிஸ் குழுக்கள் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர் என்றார். போதைப் பொருள் பாவனையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கும் வரை இந்த பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுப்பர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Followers

Blog Archive