Wednesday, November 10, 2010

ஜனாதிபதி ஆணைக்குழு மன்னாரில் விசாரணை நடத்துமா?

Wednesday, November 10, 2010
கற்றுக்கொண்டுள்ள பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மன்னார் மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மன்னார் மாவட்டத்தில் நடைபெறவேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டி, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையினால் அனுப்பப்பட்டிருந்த கடிதம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யுத்தம் முடிவுற்றுள்ள நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்டிருக்கும் விசாரணைகளில் பொது மக்கள் கண்ணீர் மல்கச் சாட்சியம் அளித்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா, மட்டக்களப்பு, கொழும்பு எனப் பல பாகங்களிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள்மூலம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் மன்னார் மாவட்டத்தில் இதுவரை ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெறவில்லையெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் ஆயரினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை சாதகமாகப் பரிசீலிக்கப்படுமென ஆணைக்குழு அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இல்லம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive