Saturday, October 29, 2011

வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணி; ஜப்பான் நிதியுதவி!

Saturday, October 29, 2011
வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் மேலதிக நிதியுதவி அளிக்கவுள்ளது. டீ. ஏ. எஸ். எச். எனும் கண்ணிவெடி அகற்றும் அரசசார்பற்ற நிறுவனத்தின் ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இந்நிதியுதவி தொடர்பாக ஜப்பான் தூதரகத்துக்கும், டீ. ஏ. எஸ். எச். நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்த மொன்று எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது.

வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முக்கியத்துவத்தை அறிந்தே நிதியுதவி வழங்கவிருப்பதாக ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.

அதேநேரம், வடபகுதியில் முன்னெ டுக்கப்படும் மீளிணைவு மற்றும் நல்லிணக்கப் பணிகளுக்கு 122 மில்லியன் ஜப்பான் யென்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளது.

குடியகல்வுக்கான சர்வதேச நிறுவனத்தில் ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்பட வுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அபிவிருத்தி ஏற்பட்டுள்ள இவ்வேளையில் போதைவஸ்துக்களும் ஒழிக்கப்படும்!

Saturday, October 29, 2011
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆளுமைத்திறனின் மூலம் நாட்டை எதிர்நோக்கியிருந்த இரண்டு பாரிய அச்சுறுத்தல் கள் வெற்றிகரமான முறையில் முறியடிக்கப்பட்டன. நம்நாட்டில் பயங்கரவாதிகள் பொருள் அழிவையும் மனித உயிர் அழிவையும் ஏற்ப டுத்தி அன்று நாட்டின் தேசிய பொருளாதாரத்தை சீர்குலைத்து வந்தனர்.

2005ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ என்ற மண்வாசனையுடைய தென்னி லங்கையில் தோன்றிய உதயசூரியனை இந்நாட்டு மக்கள் ஜனாதிபதி என்ற நாட்டின் மிக உயர் பதவியில் அமர்த்திய போது, அவருக்கு நாட்டு மக்களை துன்புறுத்திவரும் பயங்கரவாதத்தை பூண்டோடு அழி த்துவிடுவதுடன் நாட்டின் தேசிய பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற ஆணையை மக்கள் விடுத்தனர்.

இவ்விரு பாரிய பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட சாதனை வீரரான ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ முதலில் தாம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பத ற்கு சரியாக ஓராண்டுக்கு முன்னர் சுனாமி ஏற்படுத்திய பேரலையினால் சீர்குலைந்து போன மக்களின் வாழ்க்கையை சீரமைக்கும் பணியையும், அவர்களின் இருப்பிடங்களையும் அப்பிரதேசத்தில் உள்ள ஆஸ்பத்திரி கள், பாடசாலைகளையும் மிகக்குறுகிய காலத்திற்குள் மீள் நிர்மாணம் செய்யும் பணியையும் வெற்றிகரமான முறையில் நிறைவேற்றினார்.

அடுத்தபடியாக ஜனாதிபதி அவர்கள் நேரடியாக எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதி களுக்கு எதிராக அவர் யுத்தத்தை தன்னிச்சையாக ஆரம்பிக்கவும் இல்லை. பேச்சுவார்த்தைகளின் மூலம் சமாதானத்தீர்வை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்கள் பல சந்தர்ப்பங்களில் எல்.ரி.ரி.ஈ. பிரதிநிதிகளுடன் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் உள்ளடங்கிய தூதுக்குழுவி னரை வெளிநாட்டில் சந்தித்து சமரச பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப் பதற்கும் முயற்சிகளை எடுத்தார்.

எல்.ரி.ரி.ஈயினர் போலி காரணங்களை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை உதறித்தள்ளிவிட்டு, கலந்துரையாடல் மேசையில் இருந்து வெளியேற வும் செய்தனர். இவ்விதம் ஜனாதிபதி நீட்டிய நேசக்கரத்தை உதறித்த ள்ளி விட்டு எங்களுக்கு பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையில்லை. ஆயு தப் போராட்டத்தின் மூலம் எங்கள் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள் வோம் என்ற அகங்காரப் போக்கில் எல்.ரி.ரி.ஈ. தலைமைத்துவம் நடந்து கொண்டது.

இதனால், வேறுவழியின்றி மனவேதனையுடன் எல்.ரி.ரி.ஈயை யுத்த முனை யில் சந்திக்க வேண்டுமென்று சிந்தித்துக் கொண்டிருந்த காலகட்டத்தி லேயே, எல்.ரி.ரி.ஈ. அரசாங்கப் படைகளை ஏளனம் செய்யக்கூடிய வகை யில் மாவிலாறு வான்கதவை மூடி, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்க எத்தனித்தது. இந்தக் கொடுமையை தாங்க முடியாது அரசாங்கம், எல்.ரி.ரி.ஈயுடன் மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்து 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியன்று எல்.ரி.ரி.ஈ.யை அடக்கியது.

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய சாதனையை ஏற்படுத்திய ஜனாதிபதி, அதையடுத்து தன்னுடைய சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை 2010ம் ஆண்டில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி வாகை சூடிய பின்னர் ஆரம்பித்தார். ஜனாதிபதியின் அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்படுத்திய சாதனைகளை நாம் இன்று நாட்டின் நாலா பக்கங்களிலும் தோன்றியிருக்கும் மேம் பாலங்கள், பாலங்கள், நெடுஞ்சாலைகள், புதிய கட்டிடங்களைப் பார்த்து புரிந்து கொள்ள முடியும்.

இன்று அபிவிருத்திப் பணிகளை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருந்தா லும் அரசாங்கம் பாதாள உலக கோஷ்டிகளையும், ஆயுத கலாசாரத்தை ஒழித்தல், போதைவஸ்து வர்த்தகத்தையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருதல் போன்ற பணிகள் நிறைவேற்ற முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

நிலைமை மோசமடைவதை புரிந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள் சகல கலா வல்லவராக விளங்கும் சாதனை வீரரான பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவிடம் பயங்கரவாதிகளை அடக்குவதற்கு தமக்கு உதவி செய்தது போன்று பாதாள உலகக் கோஷ்டிகளையும் ஆயுதக் கலாசாரத்தையும், போதை வஸ்துக்களையும் நாட்டில் ஒழித்துக் கட்டு மாறு கேட்டுக் கொண்டார்.

இராமபிரான் இட்ட ஆணையை தம்பி இலக்குமணன் ஏற்றுக் கொண்டது போன்று, பாதுகாப்புச் செயலாளர் இப்போது பாதாள உலகக் கோஷ்டியி னரை அடக்குதல், போதைவஸ்து வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைத் தல், ஆயுதக் கலாசாரத்தை அழித்தொழித்தல் போன்ற பணிகளை படிப் படியாக இப்போது வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

பாதுகாப்பு செயலாளர் சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு அளித்த பேட் டியொன்றில், ஏற்கனவே பொலிஸார் நாடெங்கிலும் உள்ள பாதாள உலக கோஷ்டியினரை மடக்கிக் பிடித்து அவர்களிடம் உள்ள ஆயுதங் களை பறிமுதல் செய்யும் பணியை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறார் கள் என்று சொன்னார். இப்பணிகளுக்கு உதவி செய்வதற்காக பொலி ஸாருக்கு இராணுவத்தினரும், கடற்படையினரும், விமானப்படையின ரும், தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள்.

பாதுகாப்பு செயலாளர் எடுத்த இந்த செயற்பாடுகளால் கடந்த சில நாட் களில் பெருமளவு பெறுமதியுடைய ஹெரோயின் போதை வஸ்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு பொறுப்பானவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கென விசேட பயிற்சி பெற்றவர்களை தாம் சேவையில் ஈடுபடுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

பாதுகாப்பு செயலாளரின் சீரான தலைமைத்துவத்தின் கீழ் விரைவில் நாட்டில் பாதாள உலக கோஷ்டிகள் ஒழிக்கப்பட்டும் சட்டவிரோதமான சகல ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டும் போதைவஸ்து வியா பாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தும் இந்நாட்டை மக்கள் அச்சுறுத்தல்கள் இன்றி நிம்மதியாக வாழும் ஒரு அமைதியான நாடாக மாறுவதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது.

Wednesday, October 19, 2011

ஜி.எஸ்.பி பிளஸ் 2013 வரை நீடிப்பு!

19th of October 2011
2010 ஆண்டு இறுதி முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டிருந்த ஐக்கிய அமெரிக்காவின் ஜி.எஸ்.பி சலுகைத் திட்டம் 2013 ஆம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வர்த்த மற்றும் முதலீட்டு அமைச்சின் கீழுள்ள வர்த்தகத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜி.எஸ்.பி. பிளஸ் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளதனை வரவேற்பதாக தெரிவித்துள்ள வர்த்தகத் திணைக்களம் இதற்கான அங்கீகாரம் வழங்கும் பிரேரணையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விரைவில் கையொப்பமிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்க முயற்சி-இரா துரைரட்ணம் (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.) .

19th of October 2011
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் நடவடிக்கையினை உடனடியாக நிறுத்துமாறு கோரி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னத்தினால் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறை கடந்த 3 வருடங்களாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் 20 மாணவர்கள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு தற்போது மொத்தமாக 58 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

ஒவ்வொரு வருடத்திலும் சித்த மருத்துவத்துறைக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 20 மாணவர்களை தேர்வு செய்கிறது. இப்படியிருக்க கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இந்த சித்த மருத்துவத்துறையை இணைப்பதற்கு ஏற்பாடுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக நடைபெற்று வருவதாக அறிகிறேன்.

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரம் மிக்க அதிகாரி மாணவர்களின் எண்ணிக்கை போதாது என்ற காரணத்தைக் காட்டி இந்த சித்த மருத்துப் துறையினை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது பொருத்தமானதல்ல என கிழக்கு மாகாண கல்வி மான்களும் சித்தமருத்துவத்துறை சார்ந்தவர்களும் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2007ஆம்ஆண்டில் சித்த மருத்துவத்துறையில் 5 வருட மாணவர் தொகுதிகளிலும் 45பேரே கல்வி கற்றுள்ளனர். அது மட்டுமல்ல 2011ஆம் ஆண்டு கற்கை முடித்து வெளியாகவுள்ள சித்த மருத்துவ பட்டதாரிகள் தொகுதியில் மொத்தமாக 6 மாணவர்களே உள்ளனர். அத்துடன் 21ஆவது சித்த மருத்துவ மாணவர் தொகுதியில் 3 பேரே கற்கை முடித்து பட்டம் பெற்றுள்ளனர். இவ்வாறான நிலையிலும் யாழ் சித்த மருத்துவ பீடம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அப்படியிருக்க கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 3 வருட மாணவர் தொகுதிகளிலும் 58 மாணவர்கள் உள்ளனர். இவ்வாறான நிலையில் எவ்வாறு மாணவர்களின் எண்ணிக்கை போதாது என காரணம் கூறமுடியும்.

கிழக்கு மாகாணத்துக்கென இருக்கும் ஒரு கொடை போன்ற சித்த மருத்துவத் துறையினை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்க முயற்சிப்பது தவறான செயற்பாடாக அமையும்.

கிழக்கு மாகாணத்துக்குள்ள பாரம்பரிய மருத்துவத்துறைக்கான ஒரேயொரு பீடமாக திகழ்வது கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவப் பீடமாகும்.

கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவத் துறையில் ஆங்கில மொழிமூலம் நடைபெற்று வருகின்ற கற்கை நெறியின் மூலம் பல்வேறு மேம்பாடுகள் சித்த மருத்துவத்துறைக்கு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. கற்கைத்துறை கொழும்புக்கு மாற்றப்படுவதனால் திறமை மிக்க பலர் பாதிக்கப்படுவதற்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.

Monday, October 10, 2011

நிபந்தனை இல்லாமல் ஆதரவு வழங்க முடியாது ரணிலிடம் உறுதியாக மனோ கணேசன் தெரிவிப்பு!

Monday, October 10, 2011
கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான எமது கட்சியின் ஆதரவை நிபந்தனையில்லாமல் வழங்க முடியாது. கடந்த பத்து வருடங்களாக கொழும்பு மாநகரசபையிலும் மேல்மாகாணசபையிலும் பாராளுமன்றத்திலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் வழங்கியதைப்போன்ற நிபந்தனையற்ற ஆதரவை இனிமேலும் தொடர முடியாது. தலைநகர தமிழ் மக்கள் தங்களது நலனை முன்னிறுத்தும் பேரம் பேசும் சக்தியை எங்களுக்குத் தந்துள்ளார்கள். இதுவே கொழும்பு மாநகரத்திலும் தெகிவளை-கல்கிசையிலும் கொலொன்னாவையிலும் தமிழ் மக்கள் எங்களுக்கு தந்துள்ள ஆணையாகும். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி 24 ஆசனங்களை பெற்றுள்ளது. ஆளுங்கட்சி 16 ஆசனங்களை பெற்றுள்ளது. ஜேவிபியின் 1 ஆசனத்தை தவிர்த்து, முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்கள் உட்பட அரசு ஆதரவு குழுக்கள் 6 ஆசனங்களை பெற்றுள்ளன. எனவே அரசாங்கம் 22 ஆசனங்களை தன்வசம் கொண்டுள்ளது. மாநகரசபையில் 53 உறுப்பினர்களில் பெரும்பான்மை பலமான 27 ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் 6 ஆசனங்கள் எந்த கட்சிக்கும் தேவைப்படுகின்றன. அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற முறையில் ஐதேக நிர்வாகத்தை ஏற்படுத்தினாலும் மாநகரசபையை சீராக கொண்டு செல்வதற்கு பெரும்பான்மை பலம் தேவைப்படுகின்றது. இச்சூழ்நிலையில்; எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, ஜயலத் ஜயவர்தன ஆகியோருடன் இன்று (10-10-2001) மாலை நடைப்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது,

நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் தெரிவித்த கருத்துகளை இன்றும் நாளையும் நடைபெறவுள்ள கட்சியின் தலைமைக்குழுக் கூட்டத்தில் நாம் விரிவாக ஆராய்வோம். அவசியப்படுமனால் எமது கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர்கள் மேலதிக பேச்சுவார்த்தைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் நடத்துவார்கள். மக்கள் எமக்கு தந்துள்ள ஆணைக்கு இசைவாக உரிய முடிவுகளை எமது கட்சி எடுக்கும். ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களித்து எங்கள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்திய மக்களுக்கு எங்களது நடவடிக்கைகள் மூலமாகவே நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் இந்திய வெளியுறவுச் செயலர் சந்திப்பு!

Monday, October 10, 2011
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மாத்தாய் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கில் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

Friday, October 7, 2011

புதிய உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் நியமனக்கடிதங்களை கையளித்தனர்!

Friday, October 7, 2011
புதிதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்களாகவும், தூதுவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ள நால்வர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இன்று தங்கள் நியமனக் கடிதங்களைக் கையளித்தனர்.

இலங்கைக்கான நியூஸிலாந்தின் புதிய உயர்ஸ்தானிராக எவ்ரில் ஹெண்டர்சனும், மலேஷியாவின் புதிய உயர்ஸ்தானிகராக அஸ்மி நஸவுந்தின் ஆகியோர் தங்கள் நியமனக் கடிதங்களை இன்று கையளித்தனர்.

இலங்கைக்கான துருக்கி நாட்டின் புதிய தூதுவராக புரக் அக்பார் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஜோர்ஜியாவின் புதிய தூதுவராக சுரப் கட்ஷ்விலி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளின் நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இலங்கை மீனவர்கள் விடுதலை!

Friday, October 7, 2011
இந்தியாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மீன்பிடி நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.

தேவேந்திரமுனை, மிரிஸ்ஸ, சிலாபம், பேருவளை பிரதேசங்களை சேர்ந்த இந்த கடந்த ஜூலை மாதம் 25 ஆம் 26 ஆம் திகதிகளில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக நாட்டில் இருந்து சென்றிருந்தனர்.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, இந்திய அதிகாரிகளினால் அவர்களை கைதுசெய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டுள்ள இந்த மீனவர்கள் தற்போது, இந்தியாவின் மகாபோதி மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Thursday, October 6, 2011

பாராளுமன்றத்தில் இன்று சரஸ்வதி!

Thursday, October 6, 2011
நவராத்திரியின் இறுதி நாளான இன்று புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணக்களத்துடன் இணைந்து பாராளுமன்றத்தில் இன்று சரஸ்வதி பூஜையை நடத்தியது.

இந்தப் பூஜையில் பிரதி சபாநாயகர், சிரேஷ்ட அமைச்சர் ஜோன் அமரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அஸ்வர், அப்பாத்துரை விநாயக மூர்த்தி; உட்பட சில எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கலைநிகழ்வொன்றும் இடம்பெற்றது.

திருமலை விபத்தில் 13 படைவீரர்கள் காயம்: ஒருவர் மரணம்!.

Thursday, October 6, 2011
திருகோணமலை, பூநகர் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 13 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

திருகோணமலை, திஸ்ஸ கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற பயிற்சி ஒன்றில் கலந்து கொண்ட இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று பூநகர் பிரதேசம் வழியாகச் சென்று கொணடிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றுடன் மோதியதையடுத்தே ஒருவர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த 14 இராணுவ வீரர்களும். சேருநுவர, கந்தளாய் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வருகிறார்!

Thursday, October 6, 2011
இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாத்தாய் நாளை இலங்கை வரவுள்ளார்.
இலங்கை வரும் இவர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் இங்கு தங்கியிருப்பார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய இலங்கை மீனவர்களில் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக இடம்பெறும் பேச்சு வார்தையில் கலந்துகொள்வதன் பொருட்டே அவர் இலங்கை வருகிறார்.
இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாத்தாயுடன் இந்திய தூதுக்குழுவினரும் இலங்கை வருகின்றனர்.

இதனிடையே, இவர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இலங்கையில் தற்போதைய நிலவரங்கள் குறித்து ரஞ்சன் மாத்தாயுடன் கலந்துரையாடப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.

Tuesday, October 4, 2011

கண்டியில் விமான நிலையம் நிர்மாணிக்க தீர்மானம் - ஜனாதிபதி!

Tuesday, October 4, 2011
கண்டியில் புதிதாக விமான நிலையமொன்று நிர்மாணிக்கப் படவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கான கட்டுமாணப் பணிகள் குண்டசாலை அல்லது கண்டியில் ஆரம்பிக்கப்படும் என்பதுடன் இதற்கென ஏற்கனவே சுமார் நூறு ஏக்கர் நிலப்பகுதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்டியிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அமைக்கப்பட்டால் கொழும்பிலிருந்து கண்டிக்கு விமானம் மூலம் செல்ல முடியும்.

இவ்வாறான நிலை ஏற்படுத்தப்படுமானால் மக்கள் எவ்வித களைப்புமின்றி பயணம் செய்ய முடியும். இதற்கென ஒரு திட்டத்தையும் வகுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிறீன் கார்ட் விசாவிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் இணையத்தில்!

Tuesday, October 4, 2011
2013 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் குடிபெயர்வதற்கான கிறீன் கார்ட் விசாவிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் இணையத்தளத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படுமென கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் சட்ட ரீதியாக குடிபெயர்வதற்காக கிறீன் கார்ட் விசா வருடந்தோறும் குலுக்கல் முறையில் சுமார் 50ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கமையவே இம்முறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரிகள் www.dvlottery.state.gov என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களை பதிவு செய்துகொள்ளமுடியும். மேலும், ஆங்கிலம், சிங்களம், தமிழ்மொழி மூலமான அறிவுறுத்தல்களுக்கு இலங்கைக்கான அமெரிக்கதூதரகத்தின் இணையத்தளத்தில் http://srilanka.usembassy.gov/visas/diversity-visa-lottery-program.html என்ற முகவரியினூடாக பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதற்கான பதிவுகட்டணம் முற்றிலும் இலவசமாகும். பதிவுகளை மேற்கொள்வதற்கான இறுதித்திகதி 05/11/2011 என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற இந்நடைமுறையில், குறைந்த அளவில் அமெரிக்காவிற்கான குடியேற்ற எண்ணிக்கையைக் கொண்டே நாடுகளுக்கே வருடாந்தம் இது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Monday, October 3, 2011

தேர்தல் விதிமுறைகளை மீறிய 125 பேர் இதுவரை கைது!

Monday, October 3, 2011
எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரையில் தேர்தல் விதிமுறைகளை மீறிச்செயல்பட்டமை தொடர்பில் 94 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் 125பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது:

50 பொலிஸ் நிலையங்களின் ஊடாகவே 94 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறைப்பாடுகளில் 57 தேர்தல் சட்டங்களை மீறி சுவரொட்டி ஒட்டப்பட்டவையாகும். ஏனையவை சாதாரண சிறு சிறு சம்பவங்களாகும்.

கடந்த கால தேர்தல் வன்முறைகளோடு ஒப்பிடுகையில் இம்முறை பாரிய அளவு அது குறைவடைந்துள்ளது. ஆனால் சில கட்சிகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக பாரிய தேர்தல் வன்முறைகள் இடம்பெறுவதாக கூறுகின்றன. அதில் எவ்வித உண்மைத் தன்மையும் கிடையாது.

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலொன்றுக்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சகல கட்சிகளும் தத்தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதற்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கெதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம். எனவே சகல கட்சிகளும் எம்மோடு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைப்பு!

Monday, October 3, 2011
இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைப்பு!

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பத்து மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படைத்தலைமையகம் அறிவித்துள்ளது.

இம் மீனவர்களை சர்வதேசக் கடற் பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படைஅதிகாரிகளிடம் கையளிக்கப் பட்டு இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றில் காங்கேசன்துறைக்கு அழைத்துவரப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Saturday, October 1, 2011

சர்வதேச நீதிமன்றங்களில் இலங்கைக்கு எதிராக எத்தனை வழக்குகளை தொடுத்தாலும் அவை அத்தனையையும் எதிர்கொள்ள இலங்கை ஒரு போதும் அஞ்சப்போவதில்லை!

Saturday, October 1, 2011
சர்வதேச நீதிமன்றங்களில் இலங்கைக்கு எதிராக எத்தனை வழக்குகளை தொடுத்தாலும் அவை அத்தனையையும் எதிர்கொள்ள இலங்கை ஒரு போதும் அஞ்சப்போவதில்லை. மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு தேவையான அனைத்துச் சட்ட உதவிகளையும் பாதுகாப்பையும் அரசாங்கம் வழங்கும் என்று முன்னாள் சட்ட மா அதிபரும் அமைச்சரவை ஆலோசகருமான மொஹான் பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக வழக்கு தொடரும் நாடுகளுக்கு நாமும் நல்ல பாடங்களை புகட்டுவோம். விரைவில் “அந்நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல் சம்பவங்களை அதே சர்வதேச நீதிமன்றில் முன்வைத்து வழக்கு தொடருவோம் என்று அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மொஹான் பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.

பிரித்தானியாவில் இருந்து மேலும் பல இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்!

Saturday, October 1, 2011
பிரித்தானியாவில் இருந்து மேலும் பல இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 44 பேரும் நேற்று முன்தினம் 50 பேரும் இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர்.

இந்த நிலையில் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் ருக்கோன், லிவர்பூல் வீதி போன்ற இடங்களில் எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் நடத்திய தேடுதலின் போது இலங்கையர்கள் பலர் சட்ட விரோதமாக விசா முடிவடைந்த நிலையில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரித்தானிய குடியுரிமை சட்டத்தை மீறினர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களும் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி-எஸ்.புஷ்பவனம் (துக்ளக்)

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவருக்கு கருணை காட்ட வேண்டும் என்ற பிரசாரம், தொலைக்காட்சிகள் உதவியுடன் நடைபெறுகிறது. சாதாரணமாக ‘தமிழ் உணர்வாளர்கள்’ என்று அறியப்படுபவர்கள், தற்போது ‘மனித நேயக் காவலர்களாக’ அவதாரம் எடுத்துள்ளனர். இந்நிலையில், அந்த படுகொலையைப் பற்றிய சில விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யாழ்ப்பாண மேயர் கொலை வழக்கில் பிரபாகரன் சார்பாக வாதாடிய வக்கீல் எஸ்.நடராஜன், டெஸோ தலைவர் சிறி.சபாரத்தினம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் எம்.பி., E.P.R.L.F. ஜார்ஜ், P.L.O.T.E. வாசுதேவன், E.P.R.L.F. பத்மனாபா, கிருபன், யோக சங்கரி மற்றும் நால்வர் தவிர, ரஞ்சன் விஜயரத்னே, பிரேமதாசா, லக்ஷ்மண் கதிர்காமர், காமினி திசநாயகே, நீலம் திருச்செல்வன், அருணாசலம் தங்கதுரை, சாம் தம்பிமுத்து, சரோஜினி யோகேஸ்வரன், யாழ்ப்பாண மேயர்.... என்று பலர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்கள். தவிர விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மாத்தையா, கிட்டு உட்பட பலரும் கொல்லப்பட்டனர். இவர்களெல்லாம் யார்? இவர்களுக்கு எது பொதுவானது?

பிரபாகரனுக்குப் பிடிக்காத, அவருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்கள் என்ற காரணத்திற்காக இவர்கள் எல்லோரும் ‘துரோகி’ பட்டம் சூட்டப்பட்டனர். ஈவு இரக்கமின்றி, கோழைத்தனமாக, மனித நேயம் துளியும் இன்றி கொலை செய்யப்பட்டனர். இவர்களில் சிலரிடம் அவர்களின் விருந்தோம்பலை ஏற்றுக் கொண்டார்கள் விடுதலைப் புலிகள். நிராயுதபாணியாக இருந்தவர்களை ஒருவித விசாரணையுமின்றி விடுதலைப் புலிகள் கொன்ற பல தமிழர்களில் சிலர்தான் இவர்கள். (ரஞ்சன், காமினி, பிரேமதாஸா போன்றோர் சிங்களவர்கள்.)

பல தமிழ்க் குடும்பங்களிலிருந்து சிறுவர்களைக் கடத்திச் சென்று, கோழைத்தனமாக அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, இலங்கை ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையாக்கினார்கள் விடுதலைப் புலிகள். பிரபாகரன் கொல்லப்பட்டதும் இக்குடும்பங்கள் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடின. இதுதான் விடுதலைப் புலிகளின் லட்சணம். இப்படிப்பட்டவர்கள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையாக விசாரிக்கப்பட்டனர். அவர்களுக்கு 10 வக்கீல்களை இந்திய அரசு அமைத்துக் கொடுத்தது. அந்த வக்கீல்களுக்கு ஃபீஸும் இந்திய அரசே வழங்கியது. 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 251 குற்றச்சாட்டுகள் பதிவாகின.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே 112 மனுக்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்தனர். எல்லாவற்றையும் பரிசீலித்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1993 மே 5– ல் பிராஸிகியூஷன் தனது தரப்பு வாதத்தைத் தொடங்கியது. 1994 ஜனவரி 19–ல் விசாரணை ஆரம்பமானது. ஆயிரத்திற்கும் மேலான ஆவணங்கள், சாட்சியங்கள் பரிசீலிக்கப்பட்டன. சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை 28.1.98 அன்று வழங்கியது;

மேல்முறையீட்டில் உச்சநீதி மன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு 11.5.1999 அன்று பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை. நளினியின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்றவர்கள் ஏற்கெனவே சிறையில் கழித்த காலத்தை தண்டனைக் காலமாகக் கருதி, விடுவிக்கப்பட்டனர். தமிழக ஆளுநர் நளினியின் கருணை மனுவை ஏற்று, அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். மற்றவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஆனால், பிரபாகரனால் துளிக்கூட மனித நேயம் இன்றி கொடூரமாகக் கொல்லப்பட்ட எண்ணற்ற தமிழர்களின் மரணத்தைப் பற்றி, மறந்தும் வாய் திறக்காத இந்த ‘மனித நேயக் காவலர்கள்’, இவ்வளவு முறையாக நடந்து நிறைவு பெற்ற வழக்கில் கொடுக்கப்பட்ட தண்டனையை, ‘மனித நேயமற்ற செயல்’ என்று கூறுவதும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரசாரம் செய்வதும் வேடிக்கை; வேதனை.

சிலர் பொய்ப் பிரசாரத்தின் உச்சத்திற்கே சென்று, “அந்த மூவரும் ‘அப்பாவிகள்’, சும்மா ஒரு பாட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக மரண தண்டனையா” என்று பேசுகிறார்கள்.

சில தினப் பத்திரிகைகளும் இப்பிரசாரத்திற்கு இடமளிக்கின்றன. ‘அப்பாவி’ என்று சொல்லப்படும் பேரறிவாளன், முருகன், சாந்தன் என்பவர்களின் பங்கு ராஜீவ் காந்தி படுகொலையில் என்ன என்பதை, கீழ்கண்ட குறிப்புகளின் மூலம் வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

அறிவு (எ) பேரறிவாளன்:

பிரபலமான விடுதலைப் புலி ஆதரவாளரின் மகன். பொது இடங்களில் கடை பரப்பி, கேசட், வீடியோ கேசட், பிரசுரங்கள், புத்தகங்களை விற்பனை செய்து, மற்றும் விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிக் கொடுப்பவர். விடுதலைப் புலித் தலைவர் பேபி சுப்ரமணியத்துடன் கள்ளத்தனமாக யாழ்ப்பாணம் சென்று 1990 மே முதல் நவம்பர் வரை தங்கியுள்ளார். அவர் விடுதலைப் புலிகளுடன் இருக்கும் வீடியோ படங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் உள்ளன. ராஜீவ் காந்தியைக் கொல்வதுதான் திட்டம் என்பது தெரிந்தே முழு மூச்சாக விடுதலைப்புலி சிவராசனுக்கு உதவினார் பேரறிவாளன்.

பஜாஜ் மோட்டார் சைக்கிளை இவர் பெயரில் சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தது, ஒயர்லஸ் செட்டுக்கு வேண்டிய பேட்டரியை வாங்கிக் கொடுத்தது, மனித வெடிகுண்டு தனுவின் உடம்பில் கட்டிய வெடிகுண்டை இயக்க, கோல்டன் பவர் பேட்டரியை வாங்கிக் கொடுத்தது எல்லாம் இவர்தான். படுகொலை நடந்த பின் செய்தித் தொடர்பு வேலையைச் செய்தவரும் இந்தப் பேரறிவாளன்தான். விடுதலைப் புலிகளின் மறைவிடத்திலிருந்து தூர்தர்ஷன் செய்திகளைப் பதிவு செய்து, யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவது இவருடைய முக்கிய வேலையாக இருந்தது. சுபா சுந்தரம் ஸ்டூடியோவிற்கு அடிக்கடி சென்று செய்திகளைப் பரிமாறிக் கொண்டு, திட்டம் தீட்டும் வேலையில் ஈடுபட்டார் இவர். முருகன் அவ்வப்போது இவர் வீட்டில் தங்குவார்.

முருகன்:

இவர் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர். இந்தப் படுகொலையை நடத்துவதற்காகவே, சிவராசன் தலைமையில் கோடியக்கரையில் வந்து இறங்கிய 9 பேர்களில் இவர் ஒருவர். வயர்லெஸ் செட் தொடர்பு, சிவராசனுக்குப் பல வகைகளிலும் உதவுவது, பணம் பட்டுவாடா செய்வது ஆகியவை இவரது பொறுப்புக்கள். நளினியைச் சந்தித்து அவர் மீது இவர் காதல் வயப்பட்டதால், பொட்டு அம்மன் இவரை யாழ்ப்பாணத்திற்குத் திரும்ப உத்தரவிட்டார். படகுக்காக கோடியக்கரையில் சில நாட்கள் காத்திருந்தார். அந்த நாட்களில் நளினியின் ஒத்துழைப்பு சிவராசன் குழுவுக்குக் கிடைப்பது வெகுவாகக் குறையத் தொடங்கவே, நளினியின் ஒத்துழைப்பு வேண்டுமென்றால், முருகன் இங்கு இருப்பது அவசியம் என்று கருதி, சிவராசன், முருகனைத் திரும்ப அழைத்தார்.

முருகன், யாழ்ப்பாணம் செல்லும் முன், இயக்கத்தின் முக்கியமான கடிதங்கள், ஆயுதங்கள், புத்தகங்கள் மற்றும் வரவு செலவுக் கணக்குகளை கோடியக்கரை சண்முகத்திடம் கொடுத்து, பத்திரமாக வைத்துக் கொள்ளச் சொன்னார். அதை சண்முகம் கடற்கரை மணலில் புதைத்து வைத்தார். சண்முகம் கைதானவுடன் அவை அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்தன; முருகனின் முழுப் பங்கும் வெளியானது.

இந்து மாஸ்டர் எனப்படும் முருகன்தான் நளினியை மூளைச் சலவை செய்து, ராஜீவ் காந்தி கொல்லப்பட வேண்டியவரே, அதற்காக எதையும் செய்யலாம் என்ற நிலைக்கு நளினியைக் கொண்டு வந்தவர்.

மே 7, 1991 அன்று வி.பி.சிங் கூட்டத்தில் நடந்த படுகொலைக்கான ஒத்திகையில் பேரறிவாளன், ஃபோட்டோ கிராபர் ஹரிபாபு, நளினி, சிவராசனுடன் முருகனும் பங்கேற்றார்.

முருகனின் மடிப்பாக்கம் வீட்டிலிருந்து வயர்லெஸ் செட்டுகளும், சங்கேத மொழிக்குறிப்பும் கைப்பற்றப்பட்டன. இவர் பிடிபட்டவுடன், சயனைட் சாப்பிட முயன்றார். அது தடுக்கப்பட்டு கைதானார்.

சாந்தன்:

சின்ன சாந்தன் என்கிற சுதேந்திர ராஜா, சிவராசனின் உதவியாளர். இவரும் விடுதலைப் புலிகளின் உளவுத் துறையைச் சேர்ந்தவர். சிவராசனுடன் மே 2–ல் சென்னைக்கு வந்து, அவருடன் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் தங்கியவர். ஃபோட்டோ கிராபர் ஹரிபாபுவுடனும் 1 வாரம் தங்கினார்.

மே 1– ஆம் தேதி சிவராசன் தலைமையிலான குழுவுடன் கோடியக்கரைக்கு வந்தார். சிவரூபன் போன்ற விடுதலைப் புலிகளை வேதாரண்யத்திலிருந்து திருச்சிக்கு அழைத்துச் சென்றவர் இவர். சிவராசனின் கூட்டாளிகளுக்குத் தகவல்களை எடுத்துச் செல்வது, பணப் பட்டுவாடா செய்வது, சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்வது, ஒரு மறைவிடத்திலிருந்து மற்றொரு மறைவிடத்திற்கு ரகசியமாக நபர்களை அழைத்துக் கொண்டு போவது போன்றவை இவரது வேலை.

1988–ல் அமைதிப் படையினரால் யாழ்ப்பாணத்தில் பிடிபட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவர் இவர். 1990 பிப்ரவரியில் சிவராசன் பண உதவி செய்ய, சென்னை எம்.ஐ.இ.டி. கல்லூரியில் சேர்ந்தார். பத்மநாபா கொலையில் இவருடைய பங்கு முக்கியமானது. ஜக்கரியா காலனியில் EPRLF உடன் பழகி அவர்களது நம்பிக்கையைப் பெற்று, பத்மநாபாவின் நடவடிக்கைகளை கண்காணித்து, சிவராசனிடம் அவ்வப்போது சொல்லி, பத்மநாபா மற்றும் 7பேர் படுகொலை செய்யப்பட ஏற்பாடு செய்தவர்.

1991 ஏப்.28 அன்று சிவராசனுடன் பொட்டு அம்மனைச் சந்தித்தபோது, ராஜீவ் காந்தி படுகொலைத் திட்டம் பற்றி இவரிடம் விளக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர்தான் கொலை செய்யப்பட வேண்டிய இடம் என்று முதலில் சிவராசன் இவருக்குத்தான் சொன்னார். அதன்பின் ஏற்பாடுகள் இவருடையது. மரகதம் சந்திசேகரின் மகன் மூலம், ரூ.5 லட்சம் தேர்தல் நிதி கொடுத்து, மாலை போட அனுமதி வாங்கியதும் இவர்தான். படுகொலைக்குப் பிறகு, சிவராசன், நளினி, சுபாவுடன் ஆட்டோவில் ஏறி டிரைவர் அருகே உட்கார்ந்து சென்னைக்கு வந்தார். கத்திப்பாராவில் இறங்கிக் கொண்டார். சிவராசன் தப்பிக்க சிவராசனுக்கும், திருச்சி சாந்தனுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார். இதுதான் இவர்களுடைய பூர்வோத்ரம்.

இவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டவை. ராஜீவ் காந்தி கொலைச்சதியில் முக்கியப் பங்கு வகித்ததால்தான், இவர்களுக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

‘ராஜீவ் காந்தி உயிரோடிருந்தால் இவர்களை மன்னித்திருப்பார்’ என்கிறார் கருணாநிதி. இந்தப் பிதற்றலை துக்ளக் ஆசிரியர் சிறப்பாக நையாண்டி செய்திருந்தார். ராஜீவ் காந்தி உயிரோடு இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை நினைவு படுத்திப் பார்ப்போம். அவரது தாயார் 31 அக்.1984 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அப்படுகொலையில் சம்பந்தப்பட்ட சத்வந்த் சிங்குக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. அவருக்குத் தூக்கு வேண்டாம் என்று ராஜீவ் காந்தி சொல்லவில்லை! சத்வந்த் சிங் தூக்கிலிடப்பட்டார்.

சரி, ராஜீவ் காந்தியுடன் இறந்த மற்றவர்களின் குடும்பங்களுக்கு என்ன நீதி? ஒரு கொலை செய்யப்பட்டாலே, இறந்தவர்களின் குடும்ப வேதனையைக் காண்பிக்கும் தொலைக்காட்சிகள், இந்த 17 பேரின் குடும்பங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி ஏன் விவாதிக்கக் கூடாது? குண்டு வெடிப்பின்போது சுற்றி நிற்கும் பல அப்பாவிகளும் இறந்து போவார்கள் என்று, தெரிந்தே செய்யப்பட்ட தீவிரவாதச் செயல் இது.

இதில் பலியானவர்கள்

1. பி.கே.குப்தா, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அலுவலர்,
2. பி.கே. எஸ்.முகமது இக்பால், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.,
3. ராஜ குரு, பல்லாவரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர்,
4. சி.எட்வர்ட் ஜோசப், சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்,
5. வி.எத்திராஜுலு, குன்றத்தூர் காவல்நிலைய எஸ்.ஐ.,
6. எஸ்.முருகன், சோமங்கலம் காவல்நிலைய கான்ஸ்டபிள்,
7. ஆர்.ரவிச்சந்திரன் (எஸ்.பி.சி.ஐ.டி. கமாண்டோ கான்ஸ்டபிள்),
8. தர்மன், காஞ்சிபுரம் ஸ்பெஷல் பிராஞ்ச் கான்ஸ்டபிள்,
9. திருமதி. சந்திரா, காஞ்சிபுரம் கான்ஸ்டபிள்,
10. திருமதி. லதா கண்ணன், அரக்கோணம்,
11. செல்வி. கோகில வாணி (லதா கண்ணனின் மகள்),
12. திருமதி. சந்தானு பேகம், திருமுல்லைவாயில்,
13. டரியல்பீட்டர் (கொலைக்குழு) திருமங்கலம், சென்னை,
14. செல்வி.சரோஜாதேவி, ஸ்ரீபெரும்புதூர்,
15. முனுசாமி (முன்னாள் எம்.எல்.சி., சென்னை),
16. தனு (விடுதலைப் புலி),
17. ஹரிபாபு (கொலைக் குழுவின் ஃபோட்டோ கிராபர், சென்னை)

இவர்களில் கொலைக் குழுவினரைத் தவிர மற்றவர்கள் உயிருடனோ, ஆவியாகவோ திரும்பி வந்தால், இந்த மூவரையும் மன்னித்து விடுவார்களா? அவர்களின் குடும்பங்கள்தான் மன்னிக்குமா?

மிகவும் பாராட்டப்பட்ட தீவிர புலனாய்வுக்குப் பின் 6 வருடங்கள் வழக்கு நடந்து, இரு தரப்பினருக்கும் அதன் பிறகே அனைத்து வாய்ப்புகளையும் வழங்கி, சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அதை மறுபரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், இந்த மூவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பிறகு கருணை மனு கவர்னரால் தகுந்த காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. மற்றொரு கருணை மனு ஜனாதிபதியால் தகுந்த காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இவ்வளவு நடந்த பிறகும் ‘இவர்களுக்கு தூக்குத் தண்டனை கூடாது; காலம் கடந்து விட்டது. இதற்கு சட்டத்தில் இடம் இல்லை’ என்று கூறுவதை மனசாட்சி உள்ளவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

எஸ்.புஷ்பவனம் (துக்ளக்.Saturday, October 1, 2011

Followers

Blog Archive