Tuesday, October 19, 2010

புலிகளுக்கு ஆயுதக்கொள்வனவு செய்ய முயன்றவர் குற்றவாளியானார்!

Tuesday, October 19, 2010
புலிகளுக்காக ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயற்சித்தமைக்காகக் கைது செய்யப்பட்ட சிங்கப்பூர் பிரஜை ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய 48 வயதான பால்ராஜ் நாயுடு என்ற சிங்கப்பூர்ப் பிரஜை 15 ஆண்டுச் சிறைத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையின் மூலம் குறிப்பிட்ட நபர் உள்ளிட்ட 5 பேர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அமெரிக்காவின் தென் பசுபிக் தீவான குவாமில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்

புலிகளுக்காகக் கைக்குண்டு எறியும் ஆயுதங்கள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள் உட்பட மேலும் பல ஆயுதங்களைக் குறிப்பிட்ட சிங்கப்பூர் பிரஜை கொள்வனவு செய்யத் திட்டமிட்டிருந்தமை அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது

புலிகள் தடை மீதான வழக்கு ஒத்திவைப்பு!

Tuesday, October 19, 2010
புலிகள் மீதான தடை நீட்டிப்பு குறித்து விசாரணை செய்து வரும் தீர்ப்பாய விசாரணையில் பங்கேற்க அனுமதிக்கும் படி உத்தரவிடக் கோரி தமிழக மக்கள் உரிமை கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழக மக்கள் உரிமை கழகம், புலிகள் இயக்கத்தின் அனுதாபி என்ற முறையில் அதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக மக்கள் உரிமை கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய குழு விசாரணை செய்தது.

அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் ரவீந்திரன் நீதிமன்றில் ஆஜராகி கருத்து தெரிவிக்கையில், தடை நீட்டிப்பு குறித்து விசாரித்து வரும் தீர்ப்பாயத்தில் தங்களது தரப்பு கருத்தை மனுவாக தாக்கல் செய்ய தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சார்பாகவோ, அதன் நிர்வாகியோ அல்லது உறுப்பினரோ தவிர மற்ற யாரையும் அனுமதிக்க முடியாது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே தீர்ப்பாய விசாரணையில் மனுதாரர் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்றார்.

விசாரணைக்குப் பின்னர் தமிழக மக்கள் உரிமை கழகம் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Followers

Blog Archive