Tuesday, December 13, 2011

பிரச்சினையில் லாபம் தேட சிலர் முயற்சி - ஜனாதிபதி!

Tuesday, December 13, 2011
நாட்டில் பிரச்சினை உச்ச நிலையை அடையும் போது, அதில் லாபம் தேடும் சில குழுக்கள் இருப்பதாக, ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தவும், அதன் மூலம் சுய இலாபம் தேடிக்கொள்ளவும், சில குழுக்கள் செயற்பட்டுக் கொண்டே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இலங்கை வந்துள்ள ஹொங்கொங் பௌத்த பிரதிநிதிகள் சிலர் இன்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.

ஜீ.எல். பீரிஸ், பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் கட்டார் பிரதமர் சந்திப்பு!

Tuesday, December 13, 2011
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கட்டார் நாட்டின் பிரதமர் ஷேக் ஹமாட் பின் ஜாஸிம் பின் ஜபர் அல்தானி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் சர்வதேச நாணய ஒத்துழைப்பு தொடர்பான சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோரை இன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

மேலும் வர்த்தக பிரமுகர்களையும் கட்டார் பிரதமர் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்ப்புக்களின் போது இருதரப்பு பொருளாதாரதொடர்புகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

Monday, November 21, 2011

பாராளுமன்றத்தின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிப்பு!

Monday, November 21, 2011
2012 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் 1.50 மணியளவில் நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் பாராளுமன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு பல மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றுக்குச் செல்லும் வீதிகளில் ஆயுதம் தரித்த விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன் தியவன்னா ஓயவில் ரோந்துச் சேவையில் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் பலர் கைது!

Monday, November 21, 2011
இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் இருந்து 25 மைல் தூரத்தில் உள்ள இந்திய கடல் பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதன்போது ரோந்து பணியில் வந்த இந்திய கடற்படையினர் இவர்களை கைது செய்து கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அத்துடன் இவர்களது இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது!

Monday, November 21, 2011
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்தின்இ இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் பிற்பகல் 1.50க்கு சமர்பிக்கப்பட உள்ளது. இது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் 7வது வரவு செலவுத் திட்டமாகும். நிதியமைச்சர் என்ற முறையில்இ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்பிக்க உள்ளார்.

சமர்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தின் படி அடுத்து ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவுகள் ஒரு லட்சத்துஇ 28 ஆயிரத்துஇ 426 கோடியே 44 லட்சத்து 71 ஆயிரமாகும்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில்இ பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுஇ பொருளாதார அபிவிருத்தி அமைச்சுஇ பெருந்தெருக்கள் உள்ளிட்ட அமைச்சுக்களுக்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Saturday, November 19, 2011

நவம்பர் 19 தோழர் பத்மநாபா அறுபதாவது பிறந்த தினம்!

Saturday, November 19, 2011
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் பெருமைக்குரிய செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் பிறந்ததினம் இன்றாகும். தோழர் பத்மநாபாவும் பன்னிரண்டு தோழர்களும் தமிழக மண்ணில் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூர்ந்த ராஜீவ்காந்தி அவர்கள் தனது தாயார் இந்திரா காந்தி அவர்களும் தோழர் பத்மநாபா அவர்களும் ஒரே தினத்தில்தான் பிறந்தவர்கள். ஒரே விதமான இலட்சியங்களுக்காக போராடி மரணித்தவர்கள் என தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரம் சர்வதேச சகோதரத்துவம் நவ காலனித்துவத்துக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை வரிந்து கொண்டவர் அவர். இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் சமூகங்களிடையே சகோதரத்துவத்துக்காகவும் சமூக மாற்றத்துக்காகவும் உழைத்தவர் அவர். சகல விதமான அடிமைத்தனங்களையும் அவர் எதிர்த்தவர். நீதியான சமூக அமைப்பை பாரபட்சமற்ற சமூக அமைப்பை அவர் வேண்டி நின்றவர்.

இந்த உயரிய இலட்சியங்களுக்காக 70 களின் முற்பகுதியில் இருந்து 1990ல் அவர் புலிகளினால் படுகொலை செய்யப்படும் வரை அல்லும் பகலும் அயராது உழைத்தவர். முப்பத்தொன்பது வருடங்களில் இந்த உலகில் வாழக்கிடைத்த சந்தர்ப்பத்தில் 20 வருடங்களை தனது சமூகத்திற்காக மானிடத்தின் விடிவிற்காக அர்ப்பணித்திருந்தவர்.

எமது சமூகத்தில் எமது நாட்டில் பல்லாயிரக்கணக்கான இளந்தலைமுறையினர் அகாலமாக புலிகளினால் படுகொலை செய்யப்பட்டதைப் போன்றே அவரும் படுகொலை செய்யப்பட்டார். ஒரு விடயத்தை இங்கு நாம் ஊன்றி கவனிக்க வேண்டும். சமூக நீதி தொடர்பான அக்கறையும் ஆவேசமும் கொண்ட இளந்தலைமுறையொன்று கடந்துவந்த கால் நூற்றாண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பல்வேறு சமூக விடுதலை இயக்கங்களைச் சார்ந்தவர்களாகவும் மனித உரிமை அமைப்புக்களைச் சார்ந்தவர்களாகவும் அகிம்சை சகிப்புத்தன்மை என்பவற்றில் நம்பிக்கைக் கொண்ட தலைவர்களாகவும் தீர்க்கதரிசனமும் ஆளுமையும் கொண்ட புத்திஜீவிகளாகவும் சாதாரண சராசரி மாந்தர்களாகவும் இருந்திருக்கிறார்கள்..

எத்தகைய பெரிய ஆற்றல் அழிக்கப்பட்டிருக்கிறது என ஆழமாக சிந்தித்தோமேயானால் எமக்கு பேரதிர்ச்சி ஏற்படும். இதில் தமிழர்கள் மாத்திரமல்ல சிங்களவர்கள் முஸ்லீம்களும் அடக்கம்.

தோழர் பத்மநாபா தேசிய ஒடுக்கு முறைகளில் இருந்து இலங்கையின் சகல இன மக்களிடையேயும் பரந்த ஐக்கியத்தையும் சர்வதேச அளவில் சுதந்திரம் ஜனநாயகம் சமூக சமத்துவம் ஆகியவற்றுக்காக போராடும் மக்களுடன் நாம் கரம் கோர்த்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இடையறாது வலியுறுத்தி வந்தவர்.

புலிகள் இந்தச் சமூகத்தில் ஆக் கப்பூர்வமான வழிகளில் சிந்தித்த அத்தனை தலைவர்களையும் போராட்டக்காரர்களையும் கடந்த இரண்டு தசாப்தங்களில் படுகொலை செய்திருக்கிறார்கள். அதன் விளைவு பாரிய வெற்றிடமொன்று எம் சமூகத்தில் உருவாகியுள்ளது.

வடக்கு கிழக்கில் அரசியல் உரிமைகளுக்காக போராடிய சமூகம் இன்று அன்றாட உணவுக்கு திண்டாட வேண்டிய நிலைக்கும் மரங்களின் கீழ் வாழவேண்டிய நிலைக்கும் உறவுகளை உடமைகளை இழந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறதென்றால் அதற்குப் பிரதான முதன்மையான காரணம் புலிகளின் பாசிச நடவடிக்கைகளே என்றால் அது மிகையல்ல.

1987இல் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் ஒரு அதிகாரப்பகிர்வு கட்டமைப்பு உருவாக்கப்படுவதில் தோழர் பத்மநாபா தனது பங்களிப்பை வழங்கியிருந்தார். இன்றைய அவலங்களில் இருந்து பார்க்கையில் அது எத்தகைய தீர்க்கதரிசனமிக்க நடவடிக்கை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

நடைமுறை ரீதியாக தாக்கமானதாக சமூகத்துக்கான தனது பங்களிப்பை செய்ய வேண்டுமென்று கருதியவர் தோழர் பத்மநாபா. ஜனநாயகம் பரந்து பட்ட ஐக்கியம் என்பவற்றை எப்போதும் அவர் மனதிலிருத்தி செயற்பட்டார்.

எளிமையும் அர்ப்பணமும் கொண்ட அவர் போன்ற தலைவர்கள் எமது சமூகத்தில் இன்று காண்பது அரிது. சில மனிதர்களை வரலாறு உருவாக்குகிறது. அவர்கள் ஏனையோரைவிட தீர்க்கதரிசனமிக்கவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் துன்பங்களையும் இன்னல்களையும் ஏன் உயிரை இழக்கும் நிலையைகூட சந்தித்திருக்கிறார்கள். அந்த வகையில் காந்தியடிகளுக்கு என்ன நேர்ந்ததோ மார்ட்டின் லூதருக்கு என்ன நேர்ந்ததோ சேகுவேராவுக்கு என்ன நேர்ந்ததோ அன்னை இந்திராகாந்திக்கு என்ன நேர்ந்ததோ அதுவே தோழர் பத்மநாபாவுக்கும் நேர்ந்தது.

தோழர் பத்மநாபாவின் மறைவு குறித்து புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் விடுத்த இரங்கல் செய்தியில் எனது தாயார் இந்திராகாந்தியும் பத்மநாபாவும் ஒரே தினத்திலேயே (நவம்பர் 19) பிறந்திருக்கிறார்கள். ஒரேவிதமான இலட்சியங்களுக்காக போராடி ஒரே விதமாகவே மரணத்தை சந்தித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

தோழர் பத்மநாபா எமக்கு விட்டுச் சென்ற ஜனநாயகம் ஐக்கியம் சமூக சமத்துவம் ஆகிய உயர்ந்த சமூக விழுமியங்களை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.
(பத்மநாபா EPRLF) தோழர்கள்.சென்னை.

தோழர் பத்மநாபாவின் அறுபதாவது பிறந்த தினம் – நினைவுக் குறிப்புக்கள்-(சாந்தன்)

Saturday, November 19, 2011
இன்று தோழர் பத்மநாபாவின் அறுபதாவது பிறந்த தினம். தோழர் பத்மநாபா 1951 ம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ம் திகதி பிறந்தார், அவர் பாசிச்டுக்களினால் படுகொலை செய்யப்பட்டபோது அவருக்கு வயது 39 மாத்திரமே. அவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் அவர் சந்தித்த மனிதர்களிடம் அவர் ஏற்படுத்திய தாக்கம், எமது மக்களின் நியாயமான, உரிமைகளுக்காக தீர்க்கதரிசனத்துடன் அவர் வகுத்துக்கொண்ட அணுகுமுறைகள், வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் என்பது படிப்படியாக வெளிச்சத்துக்குவந்து கொண்டிருக்கின்றது.

1950 களில் பிறந்தவர்களுக்கு தெரியும் அன்றைய சூழ்நிலை எவ்வாறு இருந்ததென்பது. தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் குறிப்பாக 60 களில் சத்தியாகிரகப்போராட்டம் பலனற்றுப்போயிருந்தமையும் 70 பதுகளில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டு மரணங்கள் ஏற்படுத்திய தாக்கம், கல்வியில் தரப்படுத்தும் முறை ஏட்படுத்தப்பட்டமை, இவ்வாறான தொடர் சம்பவங்களும் ஒரு விதமான எழுச்சியை அன்றைய இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது.

அப்போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஏதோ விதத்தில் தீவிர வாதத்தை நோக்கி பயணிக்க தொடங்கினர். அவ்வாறான சாதாரண இளைஞர்களில் ஒருவரே தோழர் நாபா. அவர் ஒரு தத்துவ வாதி என்றோ , யுத்தத் தந்திர விற்பன்னர் என்றோ ஒருநாளும் தன்னை காட்டி கொண்டவருமல்ல அவ்வாறான உருவகப்படுத்துதலை விரும்பியவரும் அல்ல அவர்.

ஆனால் அவர் ஒரு வசீகரமும் ஆளுமையும் உள்ள தலைவர் என அவரது எதிரிகளும் ஏற்றுக்கொள்ளுவர். அவரது பலம் அவரது மனித நேயமும், நேர்மையும் அதீத துனிச்சலுமே.

இவ்வாறான சாதாரண இளைஞனாக போராட்டத்தில் பிரவேசித்த தோழர் நபா எமது போராட்டத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பது பற்றி இளைய தலை முறையினர் தெரிந்து கொள்வதற்க்காகவேனும்அவரது அறுபதாவது பிறந்த தினத்தில் சில தகவல்களை பகிர்ந்து கொள்வதே இக்குறிப்பின் நோக்கமாகும்.

தோழர் நாபா முதலில் தமிழ் மாணவர் பேரவையிலும் பின்னர் தமிழ் ஈழ விதலை இயக்கத்திலும் ஒரு முன்னணி செயற்ப்பாட்டளராக இருந்து 1976 இல் மேற்படிப்புக்காக லண்டனுக்கு பெற்றோர்களினால் அனுப்பி வைக்கப்பட்டார்.

லண்டனில் ஈரோஸ் ஸ்தாபகர் தோழர் ரட்னாவை சந்தித்தார். தோழர் ரட்னா பாலஸ்தீனிய இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தார். தோழர் நாபா ரட்னாவை சந்தித்தபோது ஏற்கனவே சங்கர் ராஜி, அருளர் போன்றவர்கள் பாலஸ்தீனம் சென்று திரும்பியிருந்தனர்.

1977 இல் ஈரோசுடன் இணைந்து தோழர்கள் நாபா, ரட்னா, ராஜி, சுரேஷ் உட்பட ஒரு குழு பாலஸ்தீனம் சென்று பயிற்சி பெற்றனர்.

1977 இல் லண்டனில் ஈழமாணவர் பொதுமன்றத்தை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்க்கான ஆயத்தவேலைகளை முடித்துவிட்டு, தோழர் நாபா இந்தியா ஊடாக ஸ்ரீ லங்கா திரும்பினார்.

இலங்கையில் இளைஞர்களுக்கு போலீஸ் கெடுபிடிகள் ஆரம்பித்திருந்த வேளையில், ஓரளவு வசதியுள்ள பெற்றோர்கள் பிள்ளைகளை எப்படியாவது வெளி நாடுகளுக்கு அனுப்பவேண்டும் என்று சிந்திக்க தொடங்கிய காலத்தில், தோழர் நாபாவும் ஏனையோரும், வெளிநாடு, வாய்ப்புக்களை உதறிவிட்டு நாடு திரும்பியிருந்தனர்.

தோழர் நாபா ஸ்ரீ லங்காவில் ஈரோஸ்ஊடாக வெகுஜன அமைப்பு வேலைகளை ஒரு புதிய பரிமாணத்துக்கு எடுத்துச்சென்றார்.

தன்னுடன் முன்னமே இளைஞர் இயக்கத்தில் தொடர்பு கொண்டிருந்த தோழர்கள் வரதன், குணசேகரன், பாலகுமார், சின்ன பாலா, பிரான்சிஸ், சோமு, நல்லையா, குகன், ரவி, கைலாஸ், அங்கயர்க்கண்ணி போன்ற பலரை ஈரோஸ் இயக்கத்துடன் தொடர்பு படுத்திக்கொண்டார். இந்தக்கால கட்டத்தில் தான் கொழும்பில் தோழர் டக்ளசும் ஈரோசுடன் இணைந்து கொண்டார்.

ஈழ மாணவர் பொதுமன்றத்தை ஆரம்பிக்கும் வேலைகள் வடக்கில் முடுக்கி விடப்பட்டது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இணையத்தொடங்கியதுடன் பல வெகுஜனப்போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பல இளம் தலைவர்கள் உருவாகினர். போலீஸ் இராணுவ கெடுபிடிகளும் கூடிக்கொண்டே இருந்தன. சமூக அநீதிகளுக்கு எதிராகவும், சமூகத்தில் நிலவும் ஊழல்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் ஆரம்பித்தன.

சம காலத்தில் 1978 கிழக்குமாகாணத்தில் ஏற்பட்ட புயல் அழிவுகளின் போது வடக்கிலிருந்து சென்ற மாணவர்களுடன் சிரமதான பணிக்காக தோழர் நாபாவும் சென்றிருந்தார். கிழக்கிலும் மாணவர் அமைப்பும், வெகுஜன அமைப்புக்களும் விஸ்தரிக்கப்பட தொடங்கின. EPRLF இன் கிழக்கு மாகான தலைவர்கள் பலர் இந்த கால கட்டத்தில் தான் இணைந்து கொண்டனர்

இதேவேளை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரச்சார வேலைகள் நடைபெற்றதுடன் பல எதிர்ப்பு போராட்டங்களும் இடம்பெற்றன.

இராணுவ வேலை திட்டங்கள் ஆரம்பிப்பதில் பல தடங்கல்கள் ஏற்ப்பட்டன. எனினும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன.

ஈரோஸ் இயக்க தலைமையின் ஜனநாயக மத்தியத்துவம் இன்மையும், வெகுஜன அமைப்புக்களை கட்டுவது தொடர்பான உறுதியான வேலைதிட்டமின்மையும், தலைமையில் நிலவி வந்த குழு வாதமும், மக்கள் இயக்கமாக பரிணாமம் பெறுவதற்கு தடையாகவே இருந்தது.

இந்த பின்னணியில் தான் 1981 ம் ஆண்டு கும்பகோணத்தில்EPRLF இன் அமைப்பாளர் மகாநாடு நடைபெற்றது தோழர் நாபா EPRLF இன் செயலாளர் ஆக தெரிவுசெய்யப்பட்டார் அதன் பின்னர் 1984 ம் ஆண்டு கட்சியின் முதலாவது காங்கிரஸ்நடைபெற்றது அதிலும் அவர் கட்சியின் செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டார்.

1990 இல் கட்சியின் புதிய சூழ்நிலைகளில் வகுக்க வேண்டிய வேலைகள் அரசியல் திட்டங்கள் பற்றியும் முடிவுகள் எடுப்பதற்கு இரண்டாவது காங்கிரஸ் ஜ கூட்டும் ஆரம்ப வேலைகளை தொடங்கியிருந்தார். அப்பொழுதுதான் அவர் பாசிச்டுக்களால் படுகொலை செய்யப்பட்டார்.

தோழர் நாபா தான் பழகுபவர்களுடன் எவ்வாறான மனப்பதிவுகளை ஏற்படுத்தி இருக்கின்றார்?

முக்கியமாக அவர் படுகொலை செய்யப்பட்டபோது, அவர் சந்தித்த, சந்திக்காத அரசியல் தலைவர்கள் என்ன கூறினார்கள்

என்பதையும் முன்னைய பதிவுகளிலிருந்து பார்ப்போம்.


மறைந்த பாரத பிரதமர் திரு ராஜீவ் காந்தி:

என்னுடைய தாயாரும் (திருமதி இந்திரா காந்தியும்) திரு நாபாவும் ஒரே பிறந்த தினங்களை கொண்டவர்கள் இருவருமே உன்னத இலட்சியங்களுக்காக உயிரை தியாகம் செய்தவர்கள் என்றும், கூறியதுடன் அவரை ஒரு சில திங்களுக்கு முன் டெல்கியில் சந்தித்ததை நினைவு கூர்ந்ததுடன் இளமையும், துடிப்பும் உள்ள தனது மக்களுக்கு எவ்வளவோ பணிகள் செய்ய இருந்த ஒருவர் எம்மத்தியில் இல்லாமல் போனமை துர்ப்பாக்கியமே என்றும் குறிப்பிட்டிருந்தார

தோழர் ஏ.நல்லசிவன் CPI(M)

எங்கள் கட்சி அலுவலகத்தில் வைத்து அவரை ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இளம் வயதிலேயே ஒரு தீர்க்கமான சிந்தனையும், நிதானமாக பிரச்சினைகளை எடுத்து வைப்பது என்ற அவரது பாணியும் எங்களைக் கவர்ந்தது. ஒரு புரட்சியாளனுக்குரிய அத்தனை அம்சங்களையும் நிரம்பப் பெற்றவராக திகழ்ந்து வந்தார். இடைவிடாத போராட்ட வாழ்க்கையில், அன்றாடப் பிரச்சினைகளில் சக போராளிகளுக்கு வழிகாட்டியாகவும் விளங்கி, இந்த அமைப்பை உருவாக்கியதில் முன்னணியில் நின்றார் என்பதை அனைவரும் அறிவர்.

அனைத்துப் பிரச்சினைகளையும் சர்வதேச கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்து, இலங்கையில் தமிழர் விடுதலைக்காகப் போராடும் இதர அமைப்புகளுடன் சாத்தியமான அனைத்து வழியிலும் ஒற்றுமையைப் பேணிக்காக்க முயற்சிப்பது, நடைமுறைச் சாத்தியமான ரீதியில் பிரச்சினைகளைப் பரிசீலிப்பது ஆகிய ஆரோக்கியமான அம்சங்களை அவரது பேச்சிலும், நடைமுறையிலும் நம்மால் பார்க்க முடிந்தது.
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் திரு. பத்மநாபா அவர்களுடைய நினைவையொட்டி சிறப்பு மலர் வெளியிடுவது மன ஆறுதலை தருவதாகும். அதற்கு கட்டுரை வழங்குவதும் எனது தவிர்க்க முடியாத கடமையாகும்.

திரு. பத்மநாபாவை ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா உடன்படிக்கைக்கு பிறகுதான் அதிகமாக அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர்தான் தொலைக்காட்சியில் அவரை அடிக்கடி தரிசிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

ராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்படிக்கைப்படி உருவான தமிழ் மாகாணத்திற்கு திரு. பத்மநாபாதான் முதலமைச்சராக வந்திருக்க வேண்டுமென்று பத்திரிகை செய்திகளில் அறிந்து கொண்டேன். ஆனால் திரு. பத்மநாபா பதவிப் பொறுப்பு ஏற்க மறுத்துவிட்டார்.

அது அவருடைய தியாக உணர்வைக் காட்டுகிறது. என்னைப் பெரிதும் கவர்ந்தது. அதன்பின்னர்தான் அவரை அதிகமாக நேசிக்கலானேன்.

Friday, November 18, 2011

சாதனையாளரான இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்!

Friday, November 18, 2011
சாதனை வீரரும் இலங்கை மக்கள் தலைவருமான மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்தின் ஓரா ண்டு நிறைவு விழாவும் ஜனாதிபதி அவர்களின் பிறந்த தினமும் இன்று நாட்டு மக்களால் நன்றி உணர்வுடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஜனாதிபதி அவர்கள் 2005ம் ஆண்டில் ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்ட போது அவரை இரண்டு பாரிய பிரச்சினைகள் எதிர்நோக்கியிருந்தன. ஒன்று சுனாமியினால் ஏற்பட்ட மனித மற்றும் கட்டிடங் களுக்கும், தேசிய பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட அழிவு. இரண்டா வதாக எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதம்.

சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவை ஓரிரு வருடங்களில் ஜனாதிபதி அவ ர்கள் தன்னுடைய ஆளுமைத்திறன் மூலம் வெளிநாடுகளில் இருந் தும், சர்வதேச அமைப்புகளில் இருந்தும் பெற்ற பொருளாதார, தொழி ல்நுட்ப உதவிகளைப் பயன்படுத்தி அழிவினால் சீர்குலைந்து போயி ருந்த நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த ஏழை மக்களின் கண்ணீரை துடைத்து, அவர்களுக்கு புதிய வீடுகளை நிர் மாணித்துக் கொடுத்தும், அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இருந்த சுனாமியினால் தரைமட்டமாகிய பாடசாலைக் கட்டிடங்கள், ஆஸ்பத் திரிகள், அரசாங்கத் திணைக்களங்கள் ஆகியவற்றை மீள் நிர்மாணம் செய்தும், சுனாமியினால் கணவன்மார்களையும், சம்பாதித்து கொடுக் கக்கூடிய இளம் பிள்ளைகளையும் இழந்து அல்லல்பட்டுக் கொண்டி ருந்த அபலைப் பெண்களுக்கும் வாழ்வாதாரங்களை மிகக் குறுகிய காலத்தில் பெற்றுக் கொடுத்தார்.

அடுத்த, எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்தை சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்த முயற்சிகளை எல்.ரி. ரி.ஈ. தலைவர்கள் அகங்காரப் போக்கில் உதறித்தள்ளிய காரணத்தி னால் வேறு வழியின்றி மாவில்லாறு வான் கதவுகளை எல்.ரி.ரி.ஈ. மூடி யதை அடுத்து ஜனாதிபதி அவர்கள் எல்.ரி.ரி.ஈ.யை அடக்குவதற்கான இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்.

மிகக் குறுகிய காலத்தில் எல்.ரி.ரி.ஈ., அதாவது 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியன்று போர் முனையில் அடக்கி, நாட்டு மக்களுக்கு பயங்கரவாதம் என்ற புலிகளின் கொடிய அரக்கனிடம் இருந்து விடுதலையை பெற்றுக் கொடுத்தார்.

இவ்விரு சாதனைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்த ஜனாதிபதி அவர்கள், அதையடுத்து திவிநெகும திட்டத்தின் மூலம் 13லட்சத்து 56ஆயிரத்து 594 வீட்டுத் தோட்ட அலகுகள் மற்றும் 94ஆயிரத்து 11 கால்நடை அலகுகளை ஏற்படுத்தி மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

கமநெகம திட்டத்தின் கீழ் இலங்கையின் நாலாபக்கங்களில் உள்ள 4 ஆயிரத்து 699 கிராமங்களில் சிறிய நீர்ப்பாசன திட்டங்களை பூர்த்தி செய்ததன் மூலம் 7லட்சத்து 14 ஆயிரத்து 438 விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 87ஆயிரத்து 960ஏக்கர் காணிகளுக்கு பயிர்ச்செய்கைக்கான நீர் வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அது போன்று 14ஆயிரத்து 341 வாழ்வாதார திட்டங்களின் கீழ் ஊக்கு விப்பை அளிப்பதன் மூலம் 2லட்சத்து 83ஆயிரத்து 876 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, மக்களின் கூடுதலான வருமானத்திற்கு பங்களிப்பை செய்தார்.

7 ஆயிரத்து 785 கிராமிய மின்சார திட்டங்களை செயற்படுத்தியதன் மூலம் 4லட்சத்து 467 வீடுகளுக்கு மின்சார இணைப்பைப் பெற்றுக் கொடுத்தார். வறியவர்களுக்கான தரமான வீடுகளை திரிய பியஸ திட் டத்தின் கீழ் 18ஆயிரத்து 950 வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தார்.

தரமான வீதி வசதிகளை செய்து கொடுத்து, 7 லட்சம் வீடுகள் பயனடை யக்கூடிய வகையில் கொங்கிaட் சாலைகள், சிறுபாலங்கள் மற்றும் கிராமப்புறங்களில் விவசாய சாலைகளைக் கொண்ட 61ஆயிரத்து 226 திட்டங்களை பூர்த்தி செய்தார்.

சமூக நீர் விநியோகத் திட்டங்களின் கீழ் ஒவ்வொன்றுக்கும் 5ஆயிரம் லீற்றர் கொள்ளளவைக் கொண்ட 2ஆயிரத்து 864 நீர் விநியோகத் திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டன. இதன் மூலம் 5லட்சத்து 4ஆயிர த்து 200 மக்களுக்கு தரமான குடிநீருக்கான அணுகு வழியையும் ஜனாதிபதி அவர்கள் செய்து கொடுத்தார்.

இவற்றை விட நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. துறைமுகங்கள் அபி விருத்தி செய்யப்பட்டன. சுகாதார வசதிகள் அதிகரிக்கப்பட்டு, கடந்த காலத்தில் மூடப்பட்டிருந்த ஆஸ்பத்திரிகள் மீண்டும் நல்ல வசதிகளுடன் திறக்கப்பட்டன.

இவ்விதம் ஜனாதிபதி அவர்கள் தனது சிறந்த ஆளுமைத்திறனைப் பய ன்படுத்தி நாட்டு மக்களுக்கு பொருளாதாரத் துறையில் விடிவை ஏற் படுத்திக் கொடுப்பதில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இனப்பிரச்சினைக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துவதற்கான சகல அரசியல் கட்சிகளும் அங்கத்துவம் வகிக்கும் பாராளுமன்ற தெரிவுக் குழுவிடம் இதற்கான எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வை தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் முடிவை தான் நன்கு பரிசீலனை க்கு எடுத்துக் கொண்ட பின்னர் நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந் தரத் தீர்வை ஏற்படுத்துவேன் என்று ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்துள்ளார்.

இவ்விதம் இந்நாட்டு மக்களுக்காக பல்வகையிலும் அதியுன்னதமான சேவையை செய்துவரும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் இரண் டாவது பதவிக்காலத்தின் ஓராண்டு நிறைவுக்காகவும் பிறந்த தினத்திற் காகவும் நாமும் நாட்டு மக்களுடன் இணைந்து இனிய நல்வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறோம்.

பொன்சேகாவின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்!

Friday, November 18, 2011
பொன்சேகாவின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டமையடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Sunday, November 13, 2011

முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவதாசன் அவர்கள் இன்று மறைவு!

Sunday, November 13, 2011
பழம் பெரும் தொழில் சங்கவாதியும், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும், இடதுசாரி சிந்தனை போக்காளரும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி,(EPRLF) ஆகியவற்றில் அங்கத்தவராக இருந்தவருமான சிவதாசன் அவர்கள் இன்று மறைவுற்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.

முன்னாள் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவருமான தோழர் எஸ்.சிவதாசன் அவர்கள் இன்று மாலை தனது 77வது வயதில் இயற்கை எய்தினார். அவர் 50 வருட கால அரசியல் வரலாற்றைக் கொண்டவர் என்பதுடன் மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற சிறந்த மொழி பெயர்ப்பாளருமாவார்.

தனது மாணவப் பருவத்திலேயே இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டவர் என்பதுடன் வடக்கு கிழக்கில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் போராட்டங்களில் பங்குபற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறைக்கும் சென்றவர்.

சிவதாசன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்த காலத்தில் தொழிற் சங்கப் பணிகளில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றியவர். இலங்கைத் தொழிற் சங்க சம்மேளனத்தின் பிரதிநிதியாக இலங்கைப் போக்குவரத்துச் சபை தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலை ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனம் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை போன்றவற்றில் தொழிற்சங்கங்களைக் கட்டியெழுப்பியதுடன் அந்த அமைப்புகளின் தொழிற்சங்க உரிமைகளுக்காகவும் தொழிலாளர்களது நலன்களுக்காகவும் அயராது போராடியவர்.

இவற்றிற்கும் மேலாக இலங்கைத் தொழில் நீதிமன்றத்தில் இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதியாக இருந்து தொழில் நீதிமன்றங்களில் வாதாடி தொழிலாளர்களுக்கு பல வெற்றிகளை ஈட்டிக் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றிய காலத்தில் அப்போதைய பிரபல அரசியல் தலைவர்களாக விளங்கிய தோழர்களான டொக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க பீற்றர் கெனமன் கே.பி.சில்வா போன்றோருடனும் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டதின் பின்னர் தோழர் என்.சண்முகதாஸனுடன் இணைந்து பணியாற்றிய சமயம் தோழர்களான பிரேம்லால் குமாரசிறி எஸ்.டி.பண்டாரநாயக்க போன்றவர்களுடனும் இணைந்து பணியாற்றினார்.

அதேசமயம் வடபகுதியில் சகலரது நன்மதிப்பைப் பெற்றிருந்த ஆசிரியர் மு.கார்த்திகேசன் தோழர் வி.ஏ.கந்தசாமி ஆகியோருடனும் இணைந்து பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வழிநடாத்தியவருமாவார்.

சிவதாசன் (EPRLF) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்து செயற்பட்டபோது 1986ம் ஆண்டில் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டு மிகவும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் நீண்ட காலமாகத் சிறை வைக்கப்பட்டிருந்தார். புலிகளது பிடியிலிருந்து தப்பி வந்த அவர் தனது நெருக்கமான சகாக்களுடன் பல கிராமங்களில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு புலிகளது ஜனநாயக மறுப்புக்கு எதிராகவும் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் மக்களை அணி திரட்டுவதில் தனது உயிரையும் துச்சமென மதித்துச் செயற்பட்டவர்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையின் மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டு வடக்குக் கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவதிலும் தமிழ் பேசும் மக்களின் இறுதித் தீர்வுக்கு இந்தியாவின் உதவியும் ஒத்தாசையும் அவசியம் என்பதையும் உணர்ந்து செயலாற்றியவர் என்பதுடன் தோழர் பத்மநாபாவின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவராகவும் இருந்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இரு தடவைகள் தேர்வு செய்யப்பட்டதுடன் அக்கட்சியின் முக்கியஸதர்களில் ஒருவராகவும் இருந்து மக்கள் பணியாற்றியவர். பின்னர் பனை அபிவிருத்திச் சபையின் தலைவராகவுமிருந்து சபையின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். இக்காலகட்டத்தில் கொழும்பில் அவரது வாகனத்தை இலக்கு வைத்து புலிகளால் 2006.08.09 அன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பில் படுகாயமடைந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.

மீண்டுமொரு போருக்கு தயாராக வெளிநாடுகளிலுள்ள புலிகள் முனைப்பு!

Sunday, November 13, 2011
மாலைதீவில் சார்க் மாநாட் டில் பங்கேற்க வந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைக்காட்சி நிருபருக்கு அளித்துள்ள பேட்டியில் முதல்வர் ஜெ. இலங்கைக்கு வரட்டும் அங்கு என்ன நடக் கிறது என்ற பணிகளை அவர் பார்க்கட்டும் அவரை வரவேற் கிறோம் என்றார்.

மேலும் அவர் அளித் துள்ள பேட்டியில்; புலிகள் மற்றும் இவரது ஆதர வாளர்கள் வெளி நாடுகளில் பணம் வசூலித்து வருவதாகவும், மேலும் ஒரு போருக்கு தயாராக இருப்ப தாகவும் இது குறித்து எங்களிடம் சரண் அடைந்துள்ள புலிகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. புலிகளின் அச்சுறுத்தல் இருக் கத்தான் செய்கிறது. புலிகள் மீண்டும் உயிர்ப்பித்து விடுவார்களோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது. நாங்கள் கண் காணித்து தான் வருகிறோம்.

தமிழர்கள் குடியமர்த்துதல் தொடர்பாக இந்தியா மற்றும் உலக நாடுகள் வந்து பார்த்துக் கொள்ளலாம். ஜெ, வை வர வேற்பீர்களா என்று கேட்டதற்கு தாராளமாக அவர் வரட்டும், அவரை வரவேற்கிறோம். இங்கு என்ன நடக்கிறது என்பதை அவரே நேரில் தெரிந்து கொள்ளட்டும் என்றார்.

இலங்கை சீனா உறவின் காரணமாக இந்திய உறவில் பாதிப்பு வருமா என்று கேட்ட போது, இந்தியா எங்களின் தொப்புள் கொடி உறவு என்றார். இந்தியா எங்களுடைய உறவினர், சீனா எங்களுடைய நண்பர் இவ்வாறு கூறி முடித்துக் கொண்டார்.

Wednesday, November 9, 2011

வடக்கு கிழக்கில் காணிப் பிரச்சினை தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவித்தல் இடைநிறுத்தம்!

Wednesday, November 9, 2011
காணி திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக விண்ணப்பிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கும் வகையில் காணித் திணைக்களம் பகிரங்க அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டப்ளியூ.எல்.ரஞ்ஜித் சில்வா இடைநிறுத்தல் உத்தரவை பிறப்பித்தார்.

இதன்பிரகாரம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் நீதிமன்றம் இடைநிறுத்தல் உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி மாலைத்தீவில் அடிக்கல் நாட்டி வைப்பு!

Wednesday, November 9, 2011
17வது சார்க் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக மாலைதீவு சென்றுள்ள ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, இன்றைய தினம் அங்கு அமைக்கப்படவுள்ள பாதை ஒன்றுக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார்.

ஜனாதிபதி செய்தி ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

மாலைத்தீவின் அட்தா நகரில் இந்த பாதை நிர்மானிக்கப்படவுள்ளது.

இது இலங்கை அரசாங்கம் நிதி வழங்கியுள்ளது.

4.5 கிலோமீற்றர் நீளமான இந்த பாதைக்கு, 10 மில்லியன் டொலர்களை இலங்கை வழங்கியுள்ளது.

Tuesday, November 8, 2011

தோழர் வி.ஏ. கந்தசாமி -19 வது நினைவு தினம் இன்று:தோழர் வீ.ஏ கந்தசாமி அவர்கள் மறைந்து இன்றுடன் (07.11.2011) 19 வருடங்கள் பூர்த்தியாகின்றது!

Tuesday, November 8, 2011
இலங்கை வட பிரதேச கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக விளங்கியிருந்த, “வீ.ஏ.” என தோழர்களால் அன்பாக அழைக்கப்படும் தோழர் வீ.ஏ கந்தசாமி அவர்கள் மறைந்து இன்றுடன் (07.11.2011) 19 வருடங்கள் பூர்த்தியாகின்றது. தலைசிறந்த இடதுசாரி பேச்சாளர்களுள் ஒருவராக திகழ்ந்திருந்த தோழர் கந்தசாமி அவர்கள் வட-கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் சேவையாற்றியிருந்தமை பலரிற்குத் தெரிந்திராதது.

வலிகாமத்தைச் சேர்ந்த சுதுமலைக் கிராமத்தில் மிக வறிய குடும்பமொன்றில் பிறந்த தோழர் வீ.ஏ கந்தசாமி அவர்கள் குடும்ப வறுமை காரணமாக அய்ந்தாம் வகுப்புடன் பாடசாலைப் படிப்பை முடித்திருந்தார். அதன் பின்னர் சுருட்டுத் தொழிலாளியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த தோழர் கந்தசாமி, அக்காலத்தில் சுருட்டுத் தொழிலாளர்கள் முதலாளிகளால் ஈவிரக்கமற்ற முறையில் சுரண்டப்படுவதனைக் கண்டு அத்தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி பல்வேறு சம்பள உயர்வுப் போராட்டங்களை முன்னெடுத்ததின் மூலம் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கத் தலைவராக பரிணமித்தார்.

இக்கால கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதுமல்லாமல், அக்கட்சியுடன் இணைந்தும் செயலாற்றினார். அச்சமயம் தொழிலாளர்கள் விவசாயிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் என சமூகத்தின் நலிந்த பிரிவினரோடு நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். அதேவேளை கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டதாலும் அவற்றின் மூலம் பெற்ற அனுபவத்தைக் கொண்டும், மார்க்ஸிய – லெனினிஸ புத்தகங்களைக் கற்றதின் மூலமும் சுரண்டலுக்குள்ளான தொழிலாளர்கள் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்கள் எனப் பல்வேறு தரப்பினர்கள் மத்தியில் தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், கிராமம் கிராமமாக அரசியல் வகுப்புக்களையும் நடாத்தினார். அம் மக்கள் மத்தியிலிருந்து பல இளைஞர்களை இனங்கண்டு கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைப்பதிலும் அயராது பாடுபட்டார்.

தோழர் வி.ஏ கந்தசாமி அவர்கள் அரசியல் கருத்துக்களை இலகு தமிழில் அழகுற எடுத்துரைக்கும் பல கவிதைகளையும் கட்டுரைகளையும் கட்சிப் பத்திரிகைகளுக்கு எழுதியது மட்டுமல்லாமல,; தலைசிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சி நிதிக்காக யாழ் நகர மற்றும் றிம்மர் மண்டபங்களில் தோழர் வீ.ஏ.கந்தசாமியின் சொற்பொழிவுகளை கட்டணம் செலுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கேட்கவருவதை அவருடைய சமகால தோழர்கள் இன்றும் நினைவு கூர்வர்.

வடபகுதியில் ஆண்டாண்டு காலமாக நிலவி வந்த தீண்டாமை கொடுமைக்கு எதிராக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தை உருவாக்கி, அதன் தலைமையில், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததில் தோழர் கந்தசாமியும் முக்கிய பங்கு ஆற்றினார். 1966 ஆண்டு ஒக்டோபர் 21 ம் திகதி தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தால் “சாதி அமைப்பு தகரட்டும். சமத்துவ நீதி ஒங்கட்டும்” எனும் கோஷத்துடன் சுன்னாகத்திலிருந்து யாழ்.முற்றவெளி நோக்கி உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட பிரசித்தி பெற்ற ஊர்வலத்தை தலைமை தாங்கி வழிநடத்திய சமயம், தோழர் கந்தசாமி பொலிசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர, அக்கால கட்டத்தில் வடபகுதியில் இடம்பெற்ற தொழிலாள விவசாய ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு சரியான தலைமைத்துவத்தை வழங்கி, அவர்களை வழிநடத்திச் சென்றவர்களுள் தோழர் கந்தசாமியும் ஒருவர்.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீன, ரஷ்யா சார்புக் கருத்துக்கள் பெரும்விவாதத்திற்குள்ளான சமயம், சோவியத் யூனியனின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்றிருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுள் தோழர் வீ.ஏ கந்தசாமியும் ஒருவர். சோவியத் யூனியனில், அக்காலகட்டத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறந்த தத்துவார்த்த வாதியாக திகழ்ந்த சுஸ்லோவ் அவர்களுடன் சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு பற்றி பலமணிநேரம் விவாதத்தில் ஈடுபட்டு இலங்கை திரும்பியிருந்த தோழர் கந்தசாமி சீன சார்பு கருத்துக்களையே தேர்ந்தெடுத்து முன்னெடுத்து வந்தார்.

அவர் சோவியத் நாட்டுக்கு மட்டுமல்லாமல் பின்னர் அப்போது சோசலிச நாடாக விளங்கிய அல்பேனியாவிற்கும், பின்னர் மக்கள் சீனக் குடியரசிற்கும் அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளால் அழைக்கப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சீனாவிற்குச் சென்ற தோழர் கந்தசாமி சீனப்புரட்சியின் நாயகனாக விளங்கிய மாபெரும் தலைவர் மாவோ சேதுங் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது. தலைவர் மாவோ சேதுங்கை நேரில் சந்தித்து கலந்துரையாடிய ஒருசில இலங்கையர்களில் தோழர் கந்தசாமியும் ஒருவர் என்பது நினைவுகூரத்தக்கது.

1980 ம் ஆண்டு நாட்டின் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்ததின் காரணமாக பல்வேறு ஆயுதக்குழுக்கள் தோன்றின. அவற்றில் பல பாசிச தன்மைகொண்டதாகவும், ஜனநாயக மறுப்பையும், மாற்றுக் கருத்துக்களை அடக்கி ஒடுக்குவதாக மட்டுமல்லாமல் இடதுசாரி கருத்துக் கொண்டவர்களை ஆயுதங்களை கொண்டு படுகொலை செய்யும் கலாச்சாரமும் உருவெடுத்திருந்தது. குறிப்பாக புலிகள் இயக்கம், இடதுசாரி பிரமுகர்களையும் தொழிற்சங்க தலைவர்களையும் படுகொலை செய்வதில் முன்னின்று செயற்பட்டது. இக்காலகட்டத்தில் ஈழ மக்கள் புரட்சி கர விடுதலை முன்னணி மட்டும் பொதுவுடமைக் கருத்துக்களை முன்னெடுக்கும் அமைப்பாகவும், இடதுசாரிகளின் கொள்கைகளை அடியொற்றியதாக இருந்தது மட்டுமல்லாமல் சாதாரண கீழ்தட்டு மக்கள் மத்தியில் செயற்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்களை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்கும் நோக்கில் அந்த இயக்கத்தின் அப்போதைய இராணுவத்தளபதியாகவும், தற்போது அமைச்சராகவும் விளங்கும் தோழர் டக்ளஸ் தேவானந்தா, தமது தோழர்களுக்கு அரசியல் வகுப்புக்களை நடாத்த முன்வருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களின் இயக்கப் பாசறைகளில் தங்கியிருந்து அரசியல் வகுப்புக்களை தோழர் கந்தசாமி நடாத்திவந்தார். அவரது அரசியல் வகுப்புக்களில் கலந்து கொண்ட பலர் இன்றும் முன்னணித் தோழர்களாக விளங்குகின்றனர்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கிய தலைவர்களாக விளங்கிய தோழர்கள் பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தோழர் கந்தசாமியின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

1985 ம் ஆண்டின் டிசம்பர் மாத நடுப்பகுதியில் புலிகள் ஈ.பி,ஆர்.எல்.எப் இயக்கத்தை தடை செய்வதாக கூறி அந்த இயக்க உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடாத்திய சமயம் உரும்பிராய் காரியாலயத்தில் தங்கியிருந்த தோழர் கந்தசாமியும் புலிகளின் கைக்குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து மயிரிழையில் உயிர்தப்பினார். அவர் காயமடைந்த போதிலும் மனம் தளராது சக தோழர்களினதும், நண்பர்களினதும் சேமநலன்களை அறிவதிலும், அவர்களது குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் சொல்வதிலும் தனது பெரும்பகுதி நேரத்தை செலவிட்டார்.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டு அதன் மூலம் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபை ஏற்படுத்தப்பட்ட சமயம், தோழர் கந்தசாமி அவர்கள் மீண்டும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்;;பில் இணைந்து மக்களுக்கான வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்துவதிலும், சமாதான சூழலை ஏற்படுத்தும் பொருட்டும் தோழர் பத்மநாபாவுடன் இணைந்து செயலாற்றினார். அக்காலகட்டத்தில் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, மாகாண சபை உறுப்பினர்களுக்கு சிறந்த அரசியல் வழிகாட்டியாக விளங்கினார்.

1989 ம் ஆண்டில் புலிகள் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவுடன் அண்ணன் தம்பி உறவு கொண்டாடியதை தொடர்ந்து, புலிகள் மீண்டும் இலங்கை அரசிடம் ஆயுதங்களைப் பெற்று ஜனநாயக அமைப்புக்களை மீண்டும் அழித்தொழிக்க முற்பட்ட வேளை இந்தியாவிற்குச் சென்ற தோழர் கந்தசாமி 1992 ஆம் ஆண்டு தனது 68 வயதில் மாரடைப்பால் காலமனார். அவரது இறுதிக் கிரியைகள் தமிழ் நாட்டிலுள்ள புழல் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நீண்ட பிரேத ஊர்வலத்துடன் நடைபெற்றது. இறுதிக்கிரியைகளின் போது தமிழ்நாட்டில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்கள், தோழர் எஸ்.சுபத்திரன் (றொபேட்) தலைமையில் உணர்வுப+ர்வமாக அணிவகுப்பு மரியாதையை செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது..

தோழர் கந்தசாமி இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் தமிழ்நாடு, கேரளா, புதுடில்லி, போன்ற இடங்களுக்குச் சென்று, அங்குள்ள பிரபல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.

இத்தனை பெருமைகள் பெற்றிருந்த தோழர் வீ.ஏ.கந்தசாமி அவர்கள் இறக்கும் வரையில்; வங்கிக் கணக்குகள் ஏதுமற்ற ஒரு அரசியல்வாதியாகவே இருந்திருந்தார்.

இலங்கை இடதுசாரி அரசியல் வரலாற்றில் வீ.ஏ. என தோழமையுடன் அழைக்கப்படும் தோழர் கந்தசாமியின் பெயரும் அழியாது இடம்பெறும். இலங்கை அரசியலில் உள்ள இடதுசாரி சிந்தனையுள்ள பல அரசியல் தோழர்களுக்கு தோழர் வீ.ஏ.கந்தசாமி அவர்கள் இன்றும் ஆதார்சபுருஷராக திகழ்ந்து வருகின்றார். இவர்களாலும், இலங்கையிலுள்ள வறிய ஏழை மக்களாலும் தோழர் வீ.ஏ.கந்தசாமி என்றும் நினைவு கூரப்படுவார்.

ஜனாதிபதி இன்று மாலைதீவு பயணம்!

Tuesday, November 8, 2011
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) 17 ஆவது தலைவர்களின் உச்சிமாநாடு மாலைதீவில் எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாக உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சார்க் நாடுகளின் தலைவர்கள் அங்கு பயணமாவதுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று (08) பயணமாகவிருக்கின்றார்.

மாலைதீவு அத்துநகல் 17 ஆவது சார்க் உச்சி மாநாடு எதிர்வரும் 10, 11 ஆம் திகதிகளில் நடை பெறும். சார்க் அமையத்தில் அங்கம் வகிக் கும் நாடுகளின் பல்தரப்பட்ட கூட்டுறவை மேம்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட கட்டிடங்கள் எனும் தொனிப்பொருளில் இந்தமாநாடு இம்றை நடைபெறவிருக்கின்றது.

இந்த மாநாட்டில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, இலங்கை, மாலைத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பர். மாநாட்டின் நிறைவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விற்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக தெவிக்கப்படுகின்றது.

மாலைதீவில் ஆரம்பமாகவிருக்கின்ற சார்க் மாநாட்டிற்கு இலங்கை விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவிருப்பதுடன் வெடிபொருட்களை கண்டறிவதற்காக மோப்ப நாய்களும் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

சார்க் உச்சி மாநாடு நடைபெறும் பிரதான மண்டபம் மற்றும் அமைய நாடுகளின் தலைவர்கள் தங்கியிருக்கின்ற ஹோட்டல்களின் பாதுகாப்பு இலங்கை விசேட அதிரடிப்படையின் நேரடி கண்காணிப்பின் கீழ் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சார்க் உச்சி மாநாடுகளின் 16 ஆவது உச் சிமாநாடு பூட்டானில் 2010 ஆம் ஆண்டும் 15 ஆவது உச்சிமாநாடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விசேட சீருடைகள் வழங்குவது குறித்து கவனம்-காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன்!

Tuesday, November 8, 2011
அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விசேட சீருடைகள் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவினருடன் வேறும் நபர்கள் இணைவதனை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவினருக்கு சீருடைகளை வழங்கும் திட்டம் குறித்து அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காவல்துறை மா அதிபர் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு சீருடைகளை வழங்குவதனால் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நீண்ட நேரத்திற்கு காவல்துறை சீருடையில் கடமையாற்றுவது நடைமுறைச் சாத்தியமற்றது என சுட்டிக்காட்டியுள்ளனர். எவ்வாறெனினும், புதிய சீருடையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Sunday, November 6, 2011

நாட்டின் நற்பெயருக்கு களங்கம்; பாதுகாப்பது நமது பொறுப்பு விசாகா பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி!

Sunday, November 6, 2011
நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாது பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப் பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நவீனத்துவம் என்பது நாட்டுக்குப் பொருத்தமில்லாததைச் செய்வதல்ல. கடந்த கால வரலாற்று மதிப்பீடுகளைப் பாதுகாத்துக் கொண்டு முன் செல்வதே எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வெளிநாட்டுப் பழக்க வழக்கங் கள் நமக்குப் பொருத்தமில்லாதது என தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச அறிஞர்களின் நூல்களைப் போன்றே நமது அறிஞர்களினதும் நூல்கள் நமக்குப் பொக்கிஷங்க ளாக உள்ளன. அவற்றைத் தேடிக் கற்பதில் நமது மாணவ சமுதாயம் முன்னிற்பது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது நாட்டை வெளிநாடு களில் தரங்குறைத்து கூறுவதற்கோ, நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு விசாகா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் கல்லூரி மண்டபத்தில் அதிபர் சந்தமாலி அதுருப்பொல தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சின் செயலாளர், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

விசாகா கல்லூரி கீர்த்தி மிகு வரலாற்றைக் கொண்ட கல்லூரியாகும். கல்வியிலும் விவாதங்களிலும் அனைத்துத் துறைகளிலும் முன்னணியில் நிகழும் நமது நாட்டு சொத்து இது. இக்கல்லூரி கொழும்புக்கு மட்டும் உரித்தானது அல்ல. முழு நாட்டினதும் உரிமைச் சொத்தாகும்.

எனது மாணவ பருவத்தில் நான் கற்ற தேர்ஷ்டன் கல்லூரிக்கும் விசாகா கல்லூரிக்குமிடையில் நடைபெறும் விவாதங்களில் நானும் பங்கேற்றிருக்கின் றேன். அக்காலத்திலேயே இக்கல்லூரி தமது திறமையை வெளிக்காட்டியுள்ளது. இக்காலத்திலும் இப்பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ள பெறுபேறுகள் இந்த நாட்டின் எதிர்காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கையைத் தோற்று விக்கின்றது. 93 வருடம் பழைமை வாய்ந்த இந்த பாடசாலையை ‘கொஸ் மாமா’ என்ற வீரபுருஷர் தனது தாயின் நினைவாக முதலில் நிர்மாணித்து வழங்கினார். அன்றிலிருந்து இந்த கல்லூரி சகல துறைகளிலும் பிரகாசித்து வருகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சென்னை முகப்பேரில் தங்கபாஸ்கரனுக்கு பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள் அஞ்சலி!

Sunday, November 6, 2011
சென்னை முகப்பேரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த எங்கள் தோழன்பாச்சா என்று அனைவராலும் அழைக்கப்டும் தங்கமணி தங்கபாஸ்கரன் இன்று (1.11.2011) தனது சிறுநீரக கோளறு காரணமாக காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியை சென்னை முகப்பேரில் எதிர்வரும் திங்கட்கிழமை(7.11.11) அன்று நடைபெறும்.

யுhழ்ப்பாணம் நெல்லியடியை பிறப்பிடமாக் கொண்ட தோழர் தங்கபாஸ்கரன் நெல்லியடியில் ஈ.பிஆர்.எப் இன் அரசியல் பிரிவில் செயல்பட்டு கட்சிக்காகவும்,மக்களின் நலனுக்காவும் பெரிதும் உழைத்தவர். ஏல்லோருடனும் இன்முகத்துடனும்,அவரது இயல்பான நகச்சுவை உணர்வாலும் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்ரிருந்தார்.ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையை இறைவன் கொடுத்திருப்பார் அந்த வகையில் நகைச்சுவை உணர்வை தங்கபாஸ்கரன் பெற்றிருந்தார்.

புலிகளின் எதேச்சதிகார போக்கு காரணமாக நெல்லியடி மக்களுக்கான பணியினை அவர் தொடர்வதற்கு தடைகள் பல ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் புலிகளின் அச்சுறுத்தலால் தமிழ் நாட்டுக்கு இடம் பெயர்ந்தார்.

தோழர்தங்பாஸ்கரனிடம் இயல்பாகவே பல திறமைகள் புதைந்து கிடந்தன அவற்றை அவர் தமிழகத்தில் வெளிகாட்டினார். 50க்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள் ஒலிநாடாவை வெளியிட்டுள்ளார். சிறந்த மிருந்தங்க கலைஞராகவும் அவர் செயல்பட்டார். வேதா என்ற சினிமா படத்தில் அவர் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

சிறந்த ஒரு தோழன்,கலைஞன,; தான் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்காமல், அவனை அடையாளம் தெரியாமல், ஆக்கியவர்கள் இன்று அடையாம் தெரியாமல் போய்விட்டபோதும்,பல திறமைகளை பெற்றிருந்த தோழனின் இழப்பு என்றும் நமது சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாதது.

இவர் பிரிவால் துயருறும் அவர் குடும்பாத்தாருக்கு எங்கள் மனமார்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் தோழன்,எங்கள் கவலைகளை தனது நகச்சுவை உணர்வு மூலம் பல தடவைகள் மறக்கச் செய்த, அவருக்கு எங்கள் இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலி

(பத்மநாபா EPRLF)

பரகசியமாகிய சரத் பொன்சேகா - சம்பந்தன் இரகசிய ஒப்பந்தம் விக்கிலீக்ஸ் கசியவிட்ட செய்தியால் தர்மசங்கடத்திற்குள் தள்ளப்பட்டுள்ள TNA!

Sunday, November 6, 2011
சரத் பொன்சேகாவுக்கும் சம்பந்தனுக்கும் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருந்ததாக விக்கிலீக்ஸ் புதிய தகவலொன்றை வெளியிட்டு ள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சி களின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட சரத் பொன்சேகா, ‘தமிழ் மக்களுக்கு அனைத்தையும் கொடுப்பதற்கு சரத் பொன்சேகா இணங்கிவிட்டார்.

அதற்கான உடன்படிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் கைச்சாத்திட்டும் விட்டார்” என்பது ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரமாக இருந்தது. இதனை எதிர்க்கட்சிகள் மறுத்து வந்த போதிலும், “விக்கிலீக்ஸ்” தற்போது வெளியிட்டுள்ள இரகசியத் தகவல்கள் இது உண்மை என்பதை உறுதிப்படுத்தி யிருக்கின்றது.

2010ம் ஆண்டு ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் உச்சக்கட்டத்தில் “பொன்சேகா சம்பந்தன் இரகசிய உடன்படிக்கை” என்ற பிரசாரமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும். தேர்தல் கள நிலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இது அமைந்திருந்தது. இது அரசாங்கத்திற்கு சார்பான பிரசாரமாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்குத் தலைமை தாங்கியவர் என்ற முறையில் சரத் பொன்சேகாவுக்கு வாக் களிப்பதா? என்ற கேள்விதான் தமிழர்கள் மத்தியில் முதலில் எழுந்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது.

இருந்த போதிலும் இறுதிக்கட்டத்தில் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பதற்கு இந்த உடன் படிக்கையும் காரணமாக இருந்துள்ளது.

பொன்சேகா கையொப்பமிட்ட இந்த உடன்படிக்கையின் பிரதி ஒன்று சம்பந்தனால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அப்போது வழங்கப்பட்டது.

சரத் பொன்சேகாவுடன் தான் பேச்சுக்களை நடத்தியிருப்பது தொடர்பாக சம்பந்தன் அப்போது பொதுக்கூட்டங்களில் தெரிவித்த போதிலும், சரத் பொன்சேகா கைச்சாத்திட்ட உடன்படிக்கை ஒன்று தன்னிடம் தரப்பட்டி ருப்பதாக பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை.

சம்பந்தனுடன் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நடத்திய சந்திப்பு, 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதென சம்பந்தன் அறிவித்த பின்னர் ஏற்பட்டிருந்த அரசியல் கள நிலைமைகள் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வோஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்த இரகசிய கேபிள் தகவலை விக்கிலீக்ஸ் இப்போது அம்பலமாக்கியுள்ளது.

அதிகளவில் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்கும் அதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கும் சரத் பொன்சேகா இந்த உடன்படிக்கையின் மூலமாக இணக்கம் தெரிவித்திருந்தார்.

சட்டத்தை கையிலெடுக்க யாருக்கும் உரிமையில்லை: தங்கல்லையில் ஜனாதிபதி!

Sunday, November 6, 2011
பொலிஸாரிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய சேவையை கூடியளவு பெற்றுக்கொள்ளவேண்டுமாயின் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு ஏற்படவேண்டும். எதிர்காலத்தில் சட்டத்தை கையிலெடுத்து எவரும் செயற்படுவதற்கு உரிமையில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

240 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தங்காலை பொலிஸ் நிலையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சட்டத்தை செயற்படுத்துவது பொலிஸாரின் பொறுப்பாகும். பொலிஸாருடன் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு பலரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்ககூடாது என்றார்.

Tuesday, November 1, 2011

TNAயின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்!

Tuesday, November 1, 2011
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று சூழ்ச்சிகளை மேற்கொண்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் யாப்பின் 6ம் அத்தியாயத்திற்கு அமைய நாட்டை பிளவுபடுத்தவோ சர்வதேச சூழ்ச்சிகளுக்கு துணைபோகவோ தேசத்துரோக செயல்களில் ஈடுபடவேம் மாட்டோம் என சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு தற்போது அவற்றை மீறி அமெரிக்கா, கனடா சென்று செயற்படுவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
´சர்வதேச அழுத்தம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்புக்கு மத்தியில் எமக்குள்ள சவால்´ என்ற தலைப்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
அரசியல் யாப்பை மீறிச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கான பூரண அதிகாரம் பாராளுமன்ற சபாநாயகருக்கு உண்டு. விசாரணையின் பின் அவர்கள் குற்றமற்றவர்கள் என்றால் விடுவிக்கலாம். இல்லாவிடின் தண்டிக்க வேண்டும்.

இன்று சர்வதேத்துடன் சேர்ந்து யுத்தக் குற்ற விசாரணை வேண்டும் எனக் கோருவது 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்திக் கொள்ளவே. இலங்கை அரசாங்கமும் அதற்கு அடிபணிந்து 13வது திருத்தத்தை அமுல்படுத்துமாயின் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிவய அபாய நிலைமையே ஏற்படும்.

13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக நாட்டை கூறுபோடுவதற்கான முதல்படியை எடுத்துவைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன் பின்னர் லிபியாவில் செய்தது போன்று, கிறிஸ் பூத பீதியின்போது செய்தது போன்று பணத்துக்காக மக்களை ஒன்றுதிரட்டி சிவில் யுத்தம் ஒன்றை ஏற்படுத்த அவர்கள் முயற்சிப்பர்.

அதன் பின்னர் தங்களுடைய பிரிவினவாதக் கொள்கையை நிறைவேற்றிக் கொள்வர். உலக வல்லரசுகளுக்கு அஞ்சாமல் தலைநிமிர்ந்து நின்ற லிபிய தலைவர் கடாபிக்கே மேற்குலகம் மரணம் கொடுத்தது என்றால் எமது நாட்டு மக்கள,; தலைவர்களுக்கு அவ்வாறு செய்வதற்கு அவர்கள் தயங்க மாட்டார்கள் எனவும் கூறினார்.

Saturday, October 29, 2011

வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணி; ஜப்பான் நிதியுதவி!

Saturday, October 29, 2011
வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் மேலதிக நிதியுதவி அளிக்கவுள்ளது. டீ. ஏ. எஸ். எச். எனும் கண்ணிவெடி அகற்றும் அரசசார்பற்ற நிறுவனத்தின் ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இந்நிதியுதவி தொடர்பாக ஜப்பான் தூதரகத்துக்கும், டீ. ஏ. எஸ். எச். நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்த மொன்று எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது.

வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முக்கியத்துவத்தை அறிந்தே நிதியுதவி வழங்கவிருப்பதாக ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.

அதேநேரம், வடபகுதியில் முன்னெ டுக்கப்படும் மீளிணைவு மற்றும் நல்லிணக்கப் பணிகளுக்கு 122 மில்லியன் ஜப்பான் யென்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளது.

குடியகல்வுக்கான சர்வதேச நிறுவனத்தில் ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்பட வுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அபிவிருத்தி ஏற்பட்டுள்ள இவ்வேளையில் போதைவஸ்துக்களும் ஒழிக்கப்படும்!

Saturday, October 29, 2011
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆளுமைத்திறனின் மூலம் நாட்டை எதிர்நோக்கியிருந்த இரண்டு பாரிய அச்சுறுத்தல் கள் வெற்றிகரமான முறையில் முறியடிக்கப்பட்டன. நம்நாட்டில் பயங்கரவாதிகள் பொருள் அழிவையும் மனித உயிர் அழிவையும் ஏற்ப டுத்தி அன்று நாட்டின் தேசிய பொருளாதாரத்தை சீர்குலைத்து வந்தனர்.

2005ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ என்ற மண்வாசனையுடைய தென்னி லங்கையில் தோன்றிய உதயசூரியனை இந்நாட்டு மக்கள் ஜனாதிபதி என்ற நாட்டின் மிக உயர் பதவியில் அமர்த்திய போது, அவருக்கு நாட்டு மக்களை துன்புறுத்திவரும் பயங்கரவாதத்தை பூண்டோடு அழி த்துவிடுவதுடன் நாட்டின் தேசிய பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற ஆணையை மக்கள் விடுத்தனர்.

இவ்விரு பாரிய பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட சாதனை வீரரான ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ முதலில் தாம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பத ற்கு சரியாக ஓராண்டுக்கு முன்னர் சுனாமி ஏற்படுத்திய பேரலையினால் சீர்குலைந்து போன மக்களின் வாழ்க்கையை சீரமைக்கும் பணியையும், அவர்களின் இருப்பிடங்களையும் அப்பிரதேசத்தில் உள்ள ஆஸ்பத்திரி கள், பாடசாலைகளையும் மிகக்குறுகிய காலத்திற்குள் மீள் நிர்மாணம் செய்யும் பணியையும் வெற்றிகரமான முறையில் நிறைவேற்றினார்.

அடுத்தபடியாக ஜனாதிபதி அவர்கள் நேரடியாக எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதி களுக்கு எதிராக அவர் யுத்தத்தை தன்னிச்சையாக ஆரம்பிக்கவும் இல்லை. பேச்சுவார்த்தைகளின் மூலம் சமாதானத்தீர்வை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்கள் பல சந்தர்ப்பங்களில் எல்.ரி.ரி.ஈ. பிரதிநிதிகளுடன் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் உள்ளடங்கிய தூதுக்குழுவி னரை வெளிநாட்டில் சந்தித்து சமரச பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப் பதற்கும் முயற்சிகளை எடுத்தார்.

எல்.ரி.ரி.ஈயினர் போலி காரணங்களை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை உதறித்தள்ளிவிட்டு, கலந்துரையாடல் மேசையில் இருந்து வெளியேற வும் செய்தனர். இவ்விதம் ஜனாதிபதி நீட்டிய நேசக்கரத்தை உதறித்த ள்ளி விட்டு எங்களுக்கு பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையில்லை. ஆயு தப் போராட்டத்தின் மூலம் எங்கள் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள் வோம் என்ற அகங்காரப் போக்கில் எல்.ரி.ரி.ஈ. தலைமைத்துவம் நடந்து கொண்டது.

இதனால், வேறுவழியின்றி மனவேதனையுடன் எல்.ரி.ரி.ஈயை யுத்த முனை யில் சந்திக்க வேண்டுமென்று சிந்தித்துக் கொண்டிருந்த காலகட்டத்தி லேயே, எல்.ரி.ரி.ஈ. அரசாங்கப் படைகளை ஏளனம் செய்யக்கூடிய வகை யில் மாவிலாறு வான்கதவை மூடி, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்க எத்தனித்தது. இந்தக் கொடுமையை தாங்க முடியாது அரசாங்கம், எல்.ரி.ரி.ஈயுடன் மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்து 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியன்று எல்.ரி.ரி.ஈ.யை அடக்கியது.

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய சாதனையை ஏற்படுத்திய ஜனாதிபதி, அதையடுத்து தன்னுடைய சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை 2010ம் ஆண்டில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி வாகை சூடிய பின்னர் ஆரம்பித்தார். ஜனாதிபதியின் அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்படுத்திய சாதனைகளை நாம் இன்று நாட்டின் நாலா பக்கங்களிலும் தோன்றியிருக்கும் மேம் பாலங்கள், பாலங்கள், நெடுஞ்சாலைகள், புதிய கட்டிடங்களைப் பார்த்து புரிந்து கொள்ள முடியும்.

இன்று அபிவிருத்திப் பணிகளை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருந்தா லும் அரசாங்கம் பாதாள உலக கோஷ்டிகளையும், ஆயுத கலாசாரத்தை ஒழித்தல், போதைவஸ்து வர்த்தகத்தையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருதல் போன்ற பணிகள் நிறைவேற்ற முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

நிலைமை மோசமடைவதை புரிந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள் சகல கலா வல்லவராக விளங்கும் சாதனை வீரரான பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவிடம் பயங்கரவாதிகளை அடக்குவதற்கு தமக்கு உதவி செய்தது போன்று பாதாள உலகக் கோஷ்டிகளையும் ஆயுதக் கலாசாரத்தையும், போதை வஸ்துக்களையும் நாட்டில் ஒழித்துக் கட்டு மாறு கேட்டுக் கொண்டார்.

இராமபிரான் இட்ட ஆணையை தம்பி இலக்குமணன் ஏற்றுக் கொண்டது போன்று, பாதுகாப்புச் செயலாளர் இப்போது பாதாள உலகக் கோஷ்டியி னரை அடக்குதல், போதைவஸ்து வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைத் தல், ஆயுதக் கலாசாரத்தை அழித்தொழித்தல் போன்ற பணிகளை படிப் படியாக இப்போது வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

பாதுகாப்பு செயலாளர் சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு அளித்த பேட் டியொன்றில், ஏற்கனவே பொலிஸார் நாடெங்கிலும் உள்ள பாதாள உலக கோஷ்டியினரை மடக்கிக் பிடித்து அவர்களிடம் உள்ள ஆயுதங் களை பறிமுதல் செய்யும் பணியை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறார் கள் என்று சொன்னார். இப்பணிகளுக்கு உதவி செய்வதற்காக பொலி ஸாருக்கு இராணுவத்தினரும், கடற்படையினரும், விமானப்படையின ரும், தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள்.

பாதுகாப்பு செயலாளர் எடுத்த இந்த செயற்பாடுகளால் கடந்த சில நாட் களில் பெருமளவு பெறுமதியுடைய ஹெரோயின் போதை வஸ்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு பொறுப்பானவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கென விசேட பயிற்சி பெற்றவர்களை தாம் சேவையில் ஈடுபடுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

பாதுகாப்பு செயலாளரின் சீரான தலைமைத்துவத்தின் கீழ் விரைவில் நாட்டில் பாதாள உலக கோஷ்டிகள் ஒழிக்கப்பட்டும் சட்டவிரோதமான சகல ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டும் போதைவஸ்து வியா பாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தும் இந்நாட்டை மக்கள் அச்சுறுத்தல்கள் இன்றி நிம்மதியாக வாழும் ஒரு அமைதியான நாடாக மாறுவதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது.

Wednesday, October 19, 2011

ஜி.எஸ்.பி பிளஸ் 2013 வரை நீடிப்பு!

19th of October 2011
2010 ஆண்டு இறுதி முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டிருந்த ஐக்கிய அமெரிக்காவின் ஜி.எஸ்.பி சலுகைத் திட்டம் 2013 ஆம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வர்த்த மற்றும் முதலீட்டு அமைச்சின் கீழுள்ள வர்த்தகத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜி.எஸ்.பி. பிளஸ் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளதனை வரவேற்பதாக தெரிவித்துள்ள வர்த்தகத் திணைக்களம் இதற்கான அங்கீகாரம் வழங்கும் பிரேரணையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விரைவில் கையொப்பமிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்க முயற்சி-இரா துரைரட்ணம் (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.) .

19th of October 2011
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் நடவடிக்கையினை உடனடியாக நிறுத்துமாறு கோரி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னத்தினால் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறை கடந்த 3 வருடங்களாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் 20 மாணவர்கள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு தற்போது மொத்தமாக 58 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

ஒவ்வொரு வருடத்திலும் சித்த மருத்துவத்துறைக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 20 மாணவர்களை தேர்வு செய்கிறது. இப்படியிருக்க கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இந்த சித்த மருத்துவத்துறையை இணைப்பதற்கு ஏற்பாடுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக நடைபெற்று வருவதாக அறிகிறேன்.

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரம் மிக்க அதிகாரி மாணவர்களின் எண்ணிக்கை போதாது என்ற காரணத்தைக் காட்டி இந்த சித்த மருத்துப் துறையினை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது பொருத்தமானதல்ல என கிழக்கு மாகாண கல்வி மான்களும் சித்தமருத்துவத்துறை சார்ந்தவர்களும் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2007ஆம்ஆண்டில் சித்த மருத்துவத்துறையில் 5 வருட மாணவர் தொகுதிகளிலும் 45பேரே கல்வி கற்றுள்ளனர். அது மட்டுமல்ல 2011ஆம் ஆண்டு கற்கை முடித்து வெளியாகவுள்ள சித்த மருத்துவ பட்டதாரிகள் தொகுதியில் மொத்தமாக 6 மாணவர்களே உள்ளனர். அத்துடன் 21ஆவது சித்த மருத்துவ மாணவர் தொகுதியில் 3 பேரே கற்கை முடித்து பட்டம் பெற்றுள்ளனர். இவ்வாறான நிலையிலும் யாழ் சித்த மருத்துவ பீடம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அப்படியிருக்க கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 3 வருட மாணவர் தொகுதிகளிலும் 58 மாணவர்கள் உள்ளனர். இவ்வாறான நிலையில் எவ்வாறு மாணவர்களின் எண்ணிக்கை போதாது என காரணம் கூறமுடியும்.

கிழக்கு மாகாணத்துக்கென இருக்கும் ஒரு கொடை போன்ற சித்த மருத்துவத் துறையினை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்க முயற்சிப்பது தவறான செயற்பாடாக அமையும்.

கிழக்கு மாகாணத்துக்குள்ள பாரம்பரிய மருத்துவத்துறைக்கான ஒரேயொரு பீடமாக திகழ்வது கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவப் பீடமாகும்.

கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவத் துறையில் ஆங்கில மொழிமூலம் நடைபெற்று வருகின்ற கற்கை நெறியின் மூலம் பல்வேறு மேம்பாடுகள் சித்த மருத்துவத்துறைக்கு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. கற்கைத்துறை கொழும்புக்கு மாற்றப்படுவதனால் திறமை மிக்க பலர் பாதிக்கப்படுவதற்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.

Monday, October 10, 2011

நிபந்தனை இல்லாமல் ஆதரவு வழங்க முடியாது ரணிலிடம் உறுதியாக மனோ கணேசன் தெரிவிப்பு!

Monday, October 10, 2011
கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான எமது கட்சியின் ஆதரவை நிபந்தனையில்லாமல் வழங்க முடியாது. கடந்த பத்து வருடங்களாக கொழும்பு மாநகரசபையிலும் மேல்மாகாணசபையிலும் பாராளுமன்றத்திலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் வழங்கியதைப்போன்ற நிபந்தனையற்ற ஆதரவை இனிமேலும் தொடர முடியாது. தலைநகர தமிழ் மக்கள் தங்களது நலனை முன்னிறுத்தும் பேரம் பேசும் சக்தியை எங்களுக்குத் தந்துள்ளார்கள். இதுவே கொழும்பு மாநகரத்திலும் தெகிவளை-கல்கிசையிலும் கொலொன்னாவையிலும் தமிழ் மக்கள் எங்களுக்கு தந்துள்ள ஆணையாகும். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி 24 ஆசனங்களை பெற்றுள்ளது. ஆளுங்கட்சி 16 ஆசனங்களை பெற்றுள்ளது. ஜேவிபியின் 1 ஆசனத்தை தவிர்த்து, முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்கள் உட்பட அரசு ஆதரவு குழுக்கள் 6 ஆசனங்களை பெற்றுள்ளன. எனவே அரசாங்கம் 22 ஆசனங்களை தன்வசம் கொண்டுள்ளது. மாநகரசபையில் 53 உறுப்பினர்களில் பெரும்பான்மை பலமான 27 ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் 6 ஆசனங்கள் எந்த கட்சிக்கும் தேவைப்படுகின்றன. அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற முறையில் ஐதேக நிர்வாகத்தை ஏற்படுத்தினாலும் மாநகரசபையை சீராக கொண்டு செல்வதற்கு பெரும்பான்மை பலம் தேவைப்படுகின்றது. இச்சூழ்நிலையில்; எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, ஜயலத் ஜயவர்தன ஆகியோருடன் இன்று (10-10-2001) மாலை நடைப்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது,

நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் தெரிவித்த கருத்துகளை இன்றும் நாளையும் நடைபெறவுள்ள கட்சியின் தலைமைக்குழுக் கூட்டத்தில் நாம் விரிவாக ஆராய்வோம். அவசியப்படுமனால் எமது கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர்கள் மேலதிக பேச்சுவார்த்தைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் நடத்துவார்கள். மக்கள் எமக்கு தந்துள்ள ஆணைக்கு இசைவாக உரிய முடிவுகளை எமது கட்சி எடுக்கும். ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களித்து எங்கள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்திய மக்களுக்கு எங்களது நடவடிக்கைகள் மூலமாகவே நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் இந்திய வெளியுறவுச் செயலர் சந்திப்பு!

Monday, October 10, 2011
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மாத்தாய் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கில் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

Friday, October 7, 2011

புதிய உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் நியமனக்கடிதங்களை கையளித்தனர்!

Friday, October 7, 2011
புதிதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்களாகவும், தூதுவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ள நால்வர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இன்று தங்கள் நியமனக் கடிதங்களைக் கையளித்தனர்.

இலங்கைக்கான நியூஸிலாந்தின் புதிய உயர்ஸ்தானிராக எவ்ரில் ஹெண்டர்சனும், மலேஷியாவின் புதிய உயர்ஸ்தானிகராக அஸ்மி நஸவுந்தின் ஆகியோர் தங்கள் நியமனக் கடிதங்களை இன்று கையளித்தனர்.

இலங்கைக்கான துருக்கி நாட்டின் புதிய தூதுவராக புரக் அக்பார் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஜோர்ஜியாவின் புதிய தூதுவராக சுரப் கட்ஷ்விலி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளின் நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இலங்கை மீனவர்கள் விடுதலை!

Friday, October 7, 2011
இந்தியாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மீன்பிடி நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.

தேவேந்திரமுனை, மிரிஸ்ஸ, சிலாபம், பேருவளை பிரதேசங்களை சேர்ந்த இந்த கடந்த ஜூலை மாதம் 25 ஆம் 26 ஆம் திகதிகளில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக நாட்டில் இருந்து சென்றிருந்தனர்.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, இந்திய அதிகாரிகளினால் அவர்களை கைதுசெய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டுள்ள இந்த மீனவர்கள் தற்போது, இந்தியாவின் மகாபோதி மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Thursday, October 6, 2011

பாராளுமன்றத்தில் இன்று சரஸ்வதி!

Thursday, October 6, 2011
நவராத்திரியின் இறுதி நாளான இன்று புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணக்களத்துடன் இணைந்து பாராளுமன்றத்தில் இன்று சரஸ்வதி பூஜையை நடத்தியது.

இந்தப் பூஜையில் பிரதி சபாநாயகர், சிரேஷ்ட அமைச்சர் ஜோன் அமரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அஸ்வர், அப்பாத்துரை விநாயக மூர்த்தி; உட்பட சில எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கலைநிகழ்வொன்றும் இடம்பெற்றது.

திருமலை விபத்தில் 13 படைவீரர்கள் காயம்: ஒருவர் மரணம்!.

Thursday, October 6, 2011
திருகோணமலை, பூநகர் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 13 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

திருகோணமலை, திஸ்ஸ கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற பயிற்சி ஒன்றில் கலந்து கொண்ட இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று பூநகர் பிரதேசம் வழியாகச் சென்று கொணடிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றுடன் மோதியதையடுத்தே ஒருவர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த 14 இராணுவ வீரர்களும். சேருநுவர, கந்தளாய் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வருகிறார்!

Thursday, October 6, 2011
இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாத்தாய் நாளை இலங்கை வரவுள்ளார்.
இலங்கை வரும் இவர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் இங்கு தங்கியிருப்பார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய இலங்கை மீனவர்களில் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக இடம்பெறும் பேச்சு வார்தையில் கலந்துகொள்வதன் பொருட்டே அவர் இலங்கை வருகிறார்.
இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாத்தாயுடன் இந்திய தூதுக்குழுவினரும் இலங்கை வருகின்றனர்.

இதனிடையே, இவர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இலங்கையில் தற்போதைய நிலவரங்கள் குறித்து ரஞ்சன் மாத்தாயுடன் கலந்துரையாடப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.

Tuesday, October 4, 2011

கண்டியில் விமான நிலையம் நிர்மாணிக்க தீர்மானம் - ஜனாதிபதி!

Tuesday, October 4, 2011
கண்டியில் புதிதாக விமான நிலையமொன்று நிர்மாணிக்கப் படவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கான கட்டுமாணப் பணிகள் குண்டசாலை அல்லது கண்டியில் ஆரம்பிக்கப்படும் என்பதுடன் இதற்கென ஏற்கனவே சுமார் நூறு ஏக்கர் நிலப்பகுதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்டியிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அமைக்கப்பட்டால் கொழும்பிலிருந்து கண்டிக்கு விமானம் மூலம் செல்ல முடியும்.

இவ்வாறான நிலை ஏற்படுத்தப்படுமானால் மக்கள் எவ்வித களைப்புமின்றி பயணம் செய்ய முடியும். இதற்கென ஒரு திட்டத்தையும் வகுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிறீன் கார்ட் விசாவிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் இணையத்தில்!

Tuesday, October 4, 2011
2013 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் குடிபெயர்வதற்கான கிறீன் கார்ட் விசாவிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் இணையத்தளத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படுமென கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் சட்ட ரீதியாக குடிபெயர்வதற்காக கிறீன் கார்ட் விசா வருடந்தோறும் குலுக்கல் முறையில் சுமார் 50ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கமையவே இம்முறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரிகள் www.dvlottery.state.gov என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களை பதிவு செய்துகொள்ளமுடியும். மேலும், ஆங்கிலம், சிங்களம், தமிழ்மொழி மூலமான அறிவுறுத்தல்களுக்கு இலங்கைக்கான அமெரிக்கதூதரகத்தின் இணையத்தளத்தில் http://srilanka.usembassy.gov/visas/diversity-visa-lottery-program.html என்ற முகவரியினூடாக பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதற்கான பதிவுகட்டணம் முற்றிலும் இலவசமாகும். பதிவுகளை மேற்கொள்வதற்கான இறுதித்திகதி 05/11/2011 என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற இந்நடைமுறையில், குறைந்த அளவில் அமெரிக்காவிற்கான குடியேற்ற எண்ணிக்கையைக் கொண்டே நாடுகளுக்கே வருடாந்தம் இது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Monday, October 3, 2011

தேர்தல் விதிமுறைகளை மீறிய 125 பேர் இதுவரை கைது!

Monday, October 3, 2011
எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரையில் தேர்தல் விதிமுறைகளை மீறிச்செயல்பட்டமை தொடர்பில் 94 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் 125பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது:

50 பொலிஸ் நிலையங்களின் ஊடாகவே 94 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறைப்பாடுகளில் 57 தேர்தல் சட்டங்களை மீறி சுவரொட்டி ஒட்டப்பட்டவையாகும். ஏனையவை சாதாரண சிறு சிறு சம்பவங்களாகும்.

கடந்த கால தேர்தல் வன்முறைகளோடு ஒப்பிடுகையில் இம்முறை பாரிய அளவு அது குறைவடைந்துள்ளது. ஆனால் சில கட்சிகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக பாரிய தேர்தல் வன்முறைகள் இடம்பெறுவதாக கூறுகின்றன. அதில் எவ்வித உண்மைத் தன்மையும் கிடையாது.

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலொன்றுக்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சகல கட்சிகளும் தத்தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதற்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கெதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம். எனவே சகல கட்சிகளும் எம்மோடு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைப்பு!

Monday, October 3, 2011
இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைப்பு!

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பத்து மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படைத்தலைமையகம் அறிவித்துள்ளது.

இம் மீனவர்களை சர்வதேசக் கடற் பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படைஅதிகாரிகளிடம் கையளிக்கப் பட்டு இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றில் காங்கேசன்துறைக்கு அழைத்துவரப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Saturday, October 1, 2011

சர்வதேச நீதிமன்றங்களில் இலங்கைக்கு எதிராக எத்தனை வழக்குகளை தொடுத்தாலும் அவை அத்தனையையும் எதிர்கொள்ள இலங்கை ஒரு போதும் அஞ்சப்போவதில்லை!

Saturday, October 1, 2011
சர்வதேச நீதிமன்றங்களில் இலங்கைக்கு எதிராக எத்தனை வழக்குகளை தொடுத்தாலும் அவை அத்தனையையும் எதிர்கொள்ள இலங்கை ஒரு போதும் அஞ்சப்போவதில்லை. மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு தேவையான அனைத்துச் சட்ட உதவிகளையும் பாதுகாப்பையும் அரசாங்கம் வழங்கும் என்று முன்னாள் சட்ட மா அதிபரும் அமைச்சரவை ஆலோசகருமான மொஹான் பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக வழக்கு தொடரும் நாடுகளுக்கு நாமும் நல்ல பாடங்களை புகட்டுவோம். விரைவில் “அந்நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல் சம்பவங்களை அதே சர்வதேச நீதிமன்றில் முன்வைத்து வழக்கு தொடருவோம் என்று அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மொஹான் பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.

பிரித்தானியாவில் இருந்து மேலும் பல இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்!

Saturday, October 1, 2011
பிரித்தானியாவில் இருந்து மேலும் பல இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 44 பேரும் நேற்று முன்தினம் 50 பேரும் இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர்.

இந்த நிலையில் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் ருக்கோன், லிவர்பூல் வீதி போன்ற இடங்களில் எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் நடத்திய தேடுதலின் போது இலங்கையர்கள் பலர் சட்ட விரோதமாக விசா முடிவடைந்த நிலையில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரித்தானிய குடியுரிமை சட்டத்தை மீறினர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களும் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி-எஸ்.புஷ்பவனம் (துக்ளக்)

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவருக்கு கருணை காட்ட வேண்டும் என்ற பிரசாரம், தொலைக்காட்சிகள் உதவியுடன் நடைபெறுகிறது. சாதாரணமாக ‘தமிழ் உணர்வாளர்கள்’ என்று அறியப்படுபவர்கள், தற்போது ‘மனித நேயக் காவலர்களாக’ அவதாரம் எடுத்துள்ளனர். இந்நிலையில், அந்த படுகொலையைப் பற்றிய சில விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யாழ்ப்பாண மேயர் கொலை வழக்கில் பிரபாகரன் சார்பாக வாதாடிய வக்கீல் எஸ்.நடராஜன், டெஸோ தலைவர் சிறி.சபாரத்தினம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் எம்.பி., E.P.R.L.F. ஜார்ஜ், P.L.O.T.E. வாசுதேவன், E.P.R.L.F. பத்மனாபா, கிருபன், யோக சங்கரி மற்றும் நால்வர் தவிர, ரஞ்சன் விஜயரத்னே, பிரேமதாசா, லக்ஷ்மண் கதிர்காமர், காமினி திசநாயகே, நீலம் திருச்செல்வன், அருணாசலம் தங்கதுரை, சாம் தம்பிமுத்து, சரோஜினி யோகேஸ்வரன், யாழ்ப்பாண மேயர்.... என்று பலர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்கள். தவிர விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மாத்தையா, கிட்டு உட்பட பலரும் கொல்லப்பட்டனர். இவர்களெல்லாம் யார்? இவர்களுக்கு எது பொதுவானது?

பிரபாகரனுக்குப் பிடிக்காத, அவருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்கள் என்ற காரணத்திற்காக இவர்கள் எல்லோரும் ‘துரோகி’ பட்டம் சூட்டப்பட்டனர். ஈவு இரக்கமின்றி, கோழைத்தனமாக, மனித நேயம் துளியும் இன்றி கொலை செய்யப்பட்டனர். இவர்களில் சிலரிடம் அவர்களின் விருந்தோம்பலை ஏற்றுக் கொண்டார்கள் விடுதலைப் புலிகள். நிராயுதபாணியாக இருந்தவர்களை ஒருவித விசாரணையுமின்றி விடுதலைப் புலிகள் கொன்ற பல தமிழர்களில் சிலர்தான் இவர்கள். (ரஞ்சன், காமினி, பிரேமதாஸா போன்றோர் சிங்களவர்கள்.)

பல தமிழ்க் குடும்பங்களிலிருந்து சிறுவர்களைக் கடத்திச் சென்று, கோழைத்தனமாக அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, இலங்கை ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையாக்கினார்கள் விடுதலைப் புலிகள். பிரபாகரன் கொல்லப்பட்டதும் இக்குடும்பங்கள் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடின. இதுதான் விடுதலைப் புலிகளின் லட்சணம். இப்படிப்பட்டவர்கள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையாக விசாரிக்கப்பட்டனர். அவர்களுக்கு 10 வக்கீல்களை இந்திய அரசு அமைத்துக் கொடுத்தது. அந்த வக்கீல்களுக்கு ஃபீஸும் இந்திய அரசே வழங்கியது. 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 251 குற்றச்சாட்டுகள் பதிவாகின.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே 112 மனுக்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்தனர். எல்லாவற்றையும் பரிசீலித்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1993 மே 5– ல் பிராஸிகியூஷன் தனது தரப்பு வாதத்தைத் தொடங்கியது. 1994 ஜனவரி 19–ல் விசாரணை ஆரம்பமானது. ஆயிரத்திற்கும் மேலான ஆவணங்கள், சாட்சியங்கள் பரிசீலிக்கப்பட்டன. சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை 28.1.98 அன்று வழங்கியது;

மேல்முறையீட்டில் உச்சநீதி மன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு 11.5.1999 அன்று பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை. நளினியின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்றவர்கள் ஏற்கெனவே சிறையில் கழித்த காலத்தை தண்டனைக் காலமாகக் கருதி, விடுவிக்கப்பட்டனர். தமிழக ஆளுநர் நளினியின் கருணை மனுவை ஏற்று, அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். மற்றவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஆனால், பிரபாகரனால் துளிக்கூட மனித நேயம் இன்றி கொடூரமாகக் கொல்லப்பட்ட எண்ணற்ற தமிழர்களின் மரணத்தைப் பற்றி, மறந்தும் வாய் திறக்காத இந்த ‘மனித நேயக் காவலர்கள்’, இவ்வளவு முறையாக நடந்து நிறைவு பெற்ற வழக்கில் கொடுக்கப்பட்ட தண்டனையை, ‘மனித நேயமற்ற செயல்’ என்று கூறுவதும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரசாரம் செய்வதும் வேடிக்கை; வேதனை.

சிலர் பொய்ப் பிரசாரத்தின் உச்சத்திற்கே சென்று, “அந்த மூவரும் ‘அப்பாவிகள்’, சும்மா ஒரு பாட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக மரண தண்டனையா” என்று பேசுகிறார்கள்.

சில தினப் பத்திரிகைகளும் இப்பிரசாரத்திற்கு இடமளிக்கின்றன. ‘அப்பாவி’ என்று சொல்லப்படும் பேரறிவாளன், முருகன், சாந்தன் என்பவர்களின் பங்கு ராஜீவ் காந்தி படுகொலையில் என்ன என்பதை, கீழ்கண்ட குறிப்புகளின் மூலம் வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

அறிவு (எ) பேரறிவாளன்:

பிரபலமான விடுதலைப் புலி ஆதரவாளரின் மகன். பொது இடங்களில் கடை பரப்பி, கேசட், வீடியோ கேசட், பிரசுரங்கள், புத்தகங்களை விற்பனை செய்து, மற்றும் விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிக் கொடுப்பவர். விடுதலைப் புலித் தலைவர் பேபி சுப்ரமணியத்துடன் கள்ளத்தனமாக யாழ்ப்பாணம் சென்று 1990 மே முதல் நவம்பர் வரை தங்கியுள்ளார். அவர் விடுதலைப் புலிகளுடன் இருக்கும் வீடியோ படங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் உள்ளன. ராஜீவ் காந்தியைக் கொல்வதுதான் திட்டம் என்பது தெரிந்தே முழு மூச்சாக விடுதலைப்புலி சிவராசனுக்கு உதவினார் பேரறிவாளன்.

பஜாஜ் மோட்டார் சைக்கிளை இவர் பெயரில் சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தது, ஒயர்லஸ் செட்டுக்கு வேண்டிய பேட்டரியை வாங்கிக் கொடுத்தது, மனித வெடிகுண்டு தனுவின் உடம்பில் கட்டிய வெடிகுண்டை இயக்க, கோல்டன் பவர் பேட்டரியை வாங்கிக் கொடுத்தது எல்லாம் இவர்தான். படுகொலை நடந்த பின் செய்தித் தொடர்பு வேலையைச் செய்தவரும் இந்தப் பேரறிவாளன்தான். விடுதலைப் புலிகளின் மறைவிடத்திலிருந்து தூர்தர்ஷன் செய்திகளைப் பதிவு செய்து, யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவது இவருடைய முக்கிய வேலையாக இருந்தது. சுபா சுந்தரம் ஸ்டூடியோவிற்கு அடிக்கடி சென்று செய்திகளைப் பரிமாறிக் கொண்டு, திட்டம் தீட்டும் வேலையில் ஈடுபட்டார் இவர். முருகன் அவ்வப்போது இவர் வீட்டில் தங்குவார்.

முருகன்:

இவர் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர். இந்தப் படுகொலையை நடத்துவதற்காகவே, சிவராசன் தலைமையில் கோடியக்கரையில் வந்து இறங்கிய 9 பேர்களில் இவர் ஒருவர். வயர்லெஸ் செட் தொடர்பு, சிவராசனுக்குப் பல வகைகளிலும் உதவுவது, பணம் பட்டுவாடா செய்வது ஆகியவை இவரது பொறுப்புக்கள். நளினியைச் சந்தித்து அவர் மீது இவர் காதல் வயப்பட்டதால், பொட்டு அம்மன் இவரை யாழ்ப்பாணத்திற்குத் திரும்ப உத்தரவிட்டார். படகுக்காக கோடியக்கரையில் சில நாட்கள் காத்திருந்தார். அந்த நாட்களில் நளினியின் ஒத்துழைப்பு சிவராசன் குழுவுக்குக் கிடைப்பது வெகுவாகக் குறையத் தொடங்கவே, நளினியின் ஒத்துழைப்பு வேண்டுமென்றால், முருகன் இங்கு இருப்பது அவசியம் என்று கருதி, சிவராசன், முருகனைத் திரும்ப அழைத்தார்.

முருகன், யாழ்ப்பாணம் செல்லும் முன், இயக்கத்தின் முக்கியமான கடிதங்கள், ஆயுதங்கள், புத்தகங்கள் மற்றும் வரவு செலவுக் கணக்குகளை கோடியக்கரை சண்முகத்திடம் கொடுத்து, பத்திரமாக வைத்துக் கொள்ளச் சொன்னார். அதை சண்முகம் கடற்கரை மணலில் புதைத்து வைத்தார். சண்முகம் கைதானவுடன் அவை அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்தன; முருகனின் முழுப் பங்கும் வெளியானது.

இந்து மாஸ்டர் எனப்படும் முருகன்தான் நளினியை மூளைச் சலவை செய்து, ராஜீவ் காந்தி கொல்லப்பட வேண்டியவரே, அதற்காக எதையும் செய்யலாம் என்ற நிலைக்கு நளினியைக் கொண்டு வந்தவர்.

மே 7, 1991 அன்று வி.பி.சிங் கூட்டத்தில் நடந்த படுகொலைக்கான ஒத்திகையில் பேரறிவாளன், ஃபோட்டோ கிராபர் ஹரிபாபு, நளினி, சிவராசனுடன் முருகனும் பங்கேற்றார்.

முருகனின் மடிப்பாக்கம் வீட்டிலிருந்து வயர்லெஸ் செட்டுகளும், சங்கேத மொழிக்குறிப்பும் கைப்பற்றப்பட்டன. இவர் பிடிபட்டவுடன், சயனைட் சாப்பிட முயன்றார். அது தடுக்கப்பட்டு கைதானார்.

சாந்தன்:

சின்ன சாந்தன் என்கிற சுதேந்திர ராஜா, சிவராசனின் உதவியாளர். இவரும் விடுதலைப் புலிகளின் உளவுத் துறையைச் சேர்ந்தவர். சிவராசனுடன் மே 2–ல் சென்னைக்கு வந்து, அவருடன் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் தங்கியவர். ஃபோட்டோ கிராபர் ஹரிபாபுவுடனும் 1 வாரம் தங்கினார்.

மே 1– ஆம் தேதி சிவராசன் தலைமையிலான குழுவுடன் கோடியக்கரைக்கு வந்தார். சிவரூபன் போன்ற விடுதலைப் புலிகளை வேதாரண்யத்திலிருந்து திருச்சிக்கு அழைத்துச் சென்றவர் இவர். சிவராசனின் கூட்டாளிகளுக்குத் தகவல்களை எடுத்துச் செல்வது, பணப் பட்டுவாடா செய்வது, சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்வது, ஒரு மறைவிடத்திலிருந்து மற்றொரு மறைவிடத்திற்கு ரகசியமாக நபர்களை அழைத்துக் கொண்டு போவது போன்றவை இவரது வேலை.

1988–ல் அமைதிப் படையினரால் யாழ்ப்பாணத்தில் பிடிபட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவர் இவர். 1990 பிப்ரவரியில் சிவராசன் பண உதவி செய்ய, சென்னை எம்.ஐ.இ.டி. கல்லூரியில் சேர்ந்தார். பத்மநாபா கொலையில் இவருடைய பங்கு முக்கியமானது. ஜக்கரியா காலனியில் EPRLF உடன் பழகி அவர்களது நம்பிக்கையைப் பெற்று, பத்மநாபாவின் நடவடிக்கைகளை கண்காணித்து, சிவராசனிடம் அவ்வப்போது சொல்லி, பத்மநாபா மற்றும் 7பேர் படுகொலை செய்யப்பட ஏற்பாடு செய்தவர்.

1991 ஏப்.28 அன்று சிவராசனுடன் பொட்டு அம்மனைச் சந்தித்தபோது, ராஜீவ் காந்தி படுகொலைத் திட்டம் பற்றி இவரிடம் விளக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர்தான் கொலை செய்யப்பட வேண்டிய இடம் என்று முதலில் சிவராசன் இவருக்குத்தான் சொன்னார். அதன்பின் ஏற்பாடுகள் இவருடையது. மரகதம் சந்திசேகரின் மகன் மூலம், ரூ.5 லட்சம் தேர்தல் நிதி கொடுத்து, மாலை போட அனுமதி வாங்கியதும் இவர்தான். படுகொலைக்குப் பிறகு, சிவராசன், நளினி, சுபாவுடன் ஆட்டோவில் ஏறி டிரைவர் அருகே உட்கார்ந்து சென்னைக்கு வந்தார். கத்திப்பாராவில் இறங்கிக் கொண்டார். சிவராசன் தப்பிக்க சிவராசனுக்கும், திருச்சி சாந்தனுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார். இதுதான் இவர்களுடைய பூர்வோத்ரம்.

இவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டவை. ராஜீவ் காந்தி கொலைச்சதியில் முக்கியப் பங்கு வகித்ததால்தான், இவர்களுக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

‘ராஜீவ் காந்தி உயிரோடிருந்தால் இவர்களை மன்னித்திருப்பார்’ என்கிறார் கருணாநிதி. இந்தப் பிதற்றலை துக்ளக் ஆசிரியர் சிறப்பாக நையாண்டி செய்திருந்தார். ராஜீவ் காந்தி உயிரோடு இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை நினைவு படுத்திப் பார்ப்போம். அவரது தாயார் 31 அக்.1984 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அப்படுகொலையில் சம்பந்தப்பட்ட சத்வந்த் சிங்குக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. அவருக்குத் தூக்கு வேண்டாம் என்று ராஜீவ் காந்தி சொல்லவில்லை! சத்வந்த் சிங் தூக்கிலிடப்பட்டார்.

சரி, ராஜீவ் காந்தியுடன் இறந்த மற்றவர்களின் குடும்பங்களுக்கு என்ன நீதி? ஒரு கொலை செய்யப்பட்டாலே, இறந்தவர்களின் குடும்ப வேதனையைக் காண்பிக்கும் தொலைக்காட்சிகள், இந்த 17 பேரின் குடும்பங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி ஏன் விவாதிக்கக் கூடாது? குண்டு வெடிப்பின்போது சுற்றி நிற்கும் பல அப்பாவிகளும் இறந்து போவார்கள் என்று, தெரிந்தே செய்யப்பட்ட தீவிரவாதச் செயல் இது.

இதில் பலியானவர்கள்

1. பி.கே.குப்தா, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அலுவலர்,
2. பி.கே. எஸ்.முகமது இக்பால், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.,
3. ராஜ குரு, பல்லாவரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர்,
4. சி.எட்வர்ட் ஜோசப், சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்,
5. வி.எத்திராஜுலு, குன்றத்தூர் காவல்நிலைய எஸ்.ஐ.,
6. எஸ்.முருகன், சோமங்கலம் காவல்நிலைய கான்ஸ்டபிள்,
7. ஆர்.ரவிச்சந்திரன் (எஸ்.பி.சி.ஐ.டி. கமாண்டோ கான்ஸ்டபிள்),
8. தர்மன், காஞ்சிபுரம் ஸ்பெஷல் பிராஞ்ச் கான்ஸ்டபிள்,
9. திருமதி. சந்திரா, காஞ்சிபுரம் கான்ஸ்டபிள்,
10. திருமதி. லதா கண்ணன், அரக்கோணம்,
11. செல்வி. கோகில வாணி (லதா கண்ணனின் மகள்),
12. திருமதி. சந்தானு பேகம், திருமுல்லைவாயில்,
13. டரியல்பீட்டர் (கொலைக்குழு) திருமங்கலம், சென்னை,
14. செல்வி.சரோஜாதேவி, ஸ்ரீபெரும்புதூர்,
15. முனுசாமி (முன்னாள் எம்.எல்.சி., சென்னை),
16. தனு (விடுதலைப் புலி),
17. ஹரிபாபு (கொலைக் குழுவின் ஃபோட்டோ கிராபர், சென்னை)

இவர்களில் கொலைக் குழுவினரைத் தவிர மற்றவர்கள் உயிருடனோ, ஆவியாகவோ திரும்பி வந்தால், இந்த மூவரையும் மன்னித்து விடுவார்களா? அவர்களின் குடும்பங்கள்தான் மன்னிக்குமா?

மிகவும் பாராட்டப்பட்ட தீவிர புலனாய்வுக்குப் பின் 6 வருடங்கள் வழக்கு நடந்து, இரு தரப்பினருக்கும் அதன் பிறகே அனைத்து வாய்ப்புகளையும் வழங்கி, சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அதை மறுபரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், இந்த மூவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பிறகு கருணை மனு கவர்னரால் தகுந்த காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. மற்றொரு கருணை மனு ஜனாதிபதியால் தகுந்த காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இவ்வளவு நடந்த பிறகும் ‘இவர்களுக்கு தூக்குத் தண்டனை கூடாது; காலம் கடந்து விட்டது. இதற்கு சட்டத்தில் இடம் இல்லை’ என்று கூறுவதை மனசாட்சி உள்ளவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

எஸ்.புஷ்பவனம் (துக்ளக்.Saturday, October 1, 2011

Followers

Blog Archive