Saturday, November 19, 2011

நவம்பர் 19 தோழர் பத்மநாபா அறுபதாவது பிறந்த தினம்!

Saturday, November 19, 2011
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் பெருமைக்குரிய செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் பிறந்ததினம் இன்றாகும். தோழர் பத்மநாபாவும் பன்னிரண்டு தோழர்களும் தமிழக மண்ணில் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூர்ந்த ராஜீவ்காந்தி அவர்கள் தனது தாயார் இந்திரா காந்தி அவர்களும் தோழர் பத்மநாபா அவர்களும் ஒரே தினத்தில்தான் பிறந்தவர்கள். ஒரே விதமான இலட்சியங்களுக்காக போராடி மரணித்தவர்கள் என தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரம் சர்வதேச சகோதரத்துவம் நவ காலனித்துவத்துக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை வரிந்து கொண்டவர் அவர். இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் சமூகங்களிடையே சகோதரத்துவத்துக்காகவும் சமூக மாற்றத்துக்காகவும் உழைத்தவர் அவர். சகல விதமான அடிமைத்தனங்களையும் அவர் எதிர்த்தவர். நீதியான சமூக அமைப்பை பாரபட்சமற்ற சமூக அமைப்பை அவர் வேண்டி நின்றவர்.

இந்த உயரிய இலட்சியங்களுக்காக 70 களின் முற்பகுதியில் இருந்து 1990ல் அவர் புலிகளினால் படுகொலை செய்யப்படும் வரை அல்லும் பகலும் அயராது உழைத்தவர். முப்பத்தொன்பது வருடங்களில் இந்த உலகில் வாழக்கிடைத்த சந்தர்ப்பத்தில் 20 வருடங்களை தனது சமூகத்திற்காக மானிடத்தின் விடிவிற்காக அர்ப்பணித்திருந்தவர்.

எமது சமூகத்தில் எமது நாட்டில் பல்லாயிரக்கணக்கான இளந்தலைமுறையினர் அகாலமாக புலிகளினால் படுகொலை செய்யப்பட்டதைப் போன்றே அவரும் படுகொலை செய்யப்பட்டார். ஒரு விடயத்தை இங்கு நாம் ஊன்றி கவனிக்க வேண்டும். சமூக நீதி தொடர்பான அக்கறையும் ஆவேசமும் கொண்ட இளந்தலைமுறையொன்று கடந்துவந்த கால் நூற்றாண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பல்வேறு சமூக விடுதலை இயக்கங்களைச் சார்ந்தவர்களாகவும் மனித உரிமை அமைப்புக்களைச் சார்ந்தவர்களாகவும் அகிம்சை சகிப்புத்தன்மை என்பவற்றில் நம்பிக்கைக் கொண்ட தலைவர்களாகவும் தீர்க்கதரிசனமும் ஆளுமையும் கொண்ட புத்திஜீவிகளாகவும் சாதாரண சராசரி மாந்தர்களாகவும் இருந்திருக்கிறார்கள்..

எத்தகைய பெரிய ஆற்றல் அழிக்கப்பட்டிருக்கிறது என ஆழமாக சிந்தித்தோமேயானால் எமக்கு பேரதிர்ச்சி ஏற்படும். இதில் தமிழர்கள் மாத்திரமல்ல சிங்களவர்கள் முஸ்லீம்களும் அடக்கம்.

தோழர் பத்மநாபா தேசிய ஒடுக்கு முறைகளில் இருந்து இலங்கையின் சகல இன மக்களிடையேயும் பரந்த ஐக்கியத்தையும் சர்வதேச அளவில் சுதந்திரம் ஜனநாயகம் சமூக சமத்துவம் ஆகியவற்றுக்காக போராடும் மக்களுடன் நாம் கரம் கோர்த்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இடையறாது வலியுறுத்தி வந்தவர்.

புலிகள் இந்தச் சமூகத்தில் ஆக் கப்பூர்வமான வழிகளில் சிந்தித்த அத்தனை தலைவர்களையும் போராட்டக்காரர்களையும் கடந்த இரண்டு தசாப்தங்களில் படுகொலை செய்திருக்கிறார்கள். அதன் விளைவு பாரிய வெற்றிடமொன்று எம் சமூகத்தில் உருவாகியுள்ளது.

வடக்கு கிழக்கில் அரசியல் உரிமைகளுக்காக போராடிய சமூகம் இன்று அன்றாட உணவுக்கு திண்டாட வேண்டிய நிலைக்கும் மரங்களின் கீழ் வாழவேண்டிய நிலைக்கும் உறவுகளை உடமைகளை இழந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறதென்றால் அதற்குப் பிரதான முதன்மையான காரணம் புலிகளின் பாசிச நடவடிக்கைகளே என்றால் அது மிகையல்ல.

1987இல் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் ஒரு அதிகாரப்பகிர்வு கட்டமைப்பு உருவாக்கப்படுவதில் தோழர் பத்மநாபா தனது பங்களிப்பை வழங்கியிருந்தார். இன்றைய அவலங்களில் இருந்து பார்க்கையில் அது எத்தகைய தீர்க்கதரிசனமிக்க நடவடிக்கை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

நடைமுறை ரீதியாக தாக்கமானதாக சமூகத்துக்கான தனது பங்களிப்பை செய்ய வேண்டுமென்று கருதியவர் தோழர் பத்மநாபா. ஜனநாயகம் பரந்து பட்ட ஐக்கியம் என்பவற்றை எப்போதும் அவர் மனதிலிருத்தி செயற்பட்டார்.

எளிமையும் அர்ப்பணமும் கொண்ட அவர் போன்ற தலைவர்கள் எமது சமூகத்தில் இன்று காண்பது அரிது. சில மனிதர்களை வரலாறு உருவாக்குகிறது. அவர்கள் ஏனையோரைவிட தீர்க்கதரிசனமிக்கவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் துன்பங்களையும் இன்னல்களையும் ஏன் உயிரை இழக்கும் நிலையைகூட சந்தித்திருக்கிறார்கள். அந்த வகையில் காந்தியடிகளுக்கு என்ன நேர்ந்ததோ மார்ட்டின் லூதருக்கு என்ன நேர்ந்ததோ சேகுவேராவுக்கு என்ன நேர்ந்ததோ அன்னை இந்திராகாந்திக்கு என்ன நேர்ந்ததோ அதுவே தோழர் பத்மநாபாவுக்கும் நேர்ந்தது.

தோழர் பத்மநாபாவின் மறைவு குறித்து புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் விடுத்த இரங்கல் செய்தியில் எனது தாயார் இந்திராகாந்தியும் பத்மநாபாவும் ஒரே தினத்திலேயே (நவம்பர் 19) பிறந்திருக்கிறார்கள். ஒரேவிதமான இலட்சியங்களுக்காக போராடி ஒரே விதமாகவே மரணத்தை சந்தித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

தோழர் பத்மநாபா எமக்கு விட்டுச் சென்ற ஜனநாயகம் ஐக்கியம் சமூக சமத்துவம் ஆகிய உயர்ந்த சமூக விழுமியங்களை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.
(பத்மநாபா EPRLF) தோழர்கள்.சென்னை.

No comments:

Post a Comment

Followers

Blog Archive