Tuesday, September 27, 2011

வழக்கு விசாரணைக்கு என்னிடம் உரிய ஆவணங்கள் உள்ளன- சவேந்திரசில்வா!

Tuesday, September 27, 2011
தன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணையின் போது சமர்ப்பிப்பதற்கு தன்னிடம் உரிய ஆவணங்கள் உள்ளதாக சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நீதிமன்றத்தில் என்மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் பின்னணியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரனே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கொள்வனவு செய்தது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கும் இருந்த தொடர்புகள் குறித்தான ஆவணங்கள் வெள்ளிமுள்ளிவாய்க்கால் பகுதியில் கிடைத்துள்ளது. விசாரணையின் போது இந்த ஆவணங்களை சமர்ப்பிக்கவுள்ளேன்.

இதேவேளை, தான் வீட்டில் இல்லாத நேரமே தனக்கு நீதிமன்ற அழைப்பாணை கிடைக்கப்பெற்றதாகவும் இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தெரியப்படுத் தியுள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் அரசியல் பயங்கரவாதம் இன்னும் ஒழிக்கப்படவில்லை: புலிகளின் அரசியல் பயங்கரவாதம் இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை-குணதாச அமரசேகர!.

Tuesday, September 27, 2011
பிரபாகரனின் அரசியல் பயங்கரவாதம் இன்னும் ஒழிக்கப்படவில்லை. புலிகளின் அரசியல் பயங்கரவாதம் இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. எனவே, தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் இராணுவத்தைப் பலப்படுத்த வேவண்டுமே தவிர, எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது. குறிப்பாக, வடக்குகிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை இன்னும் பல ஆண்டுகளுக்கு உஷார்நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

எனவே, சர்வதேசமோ தமிழ் அரசியல் கட்சிகளோ கூறுவது போன்று, இராணுவ முகாம்களை வடக்கு கிழக்கிலிருந்து அகற்றிவிட முடியாது. இவ்வாறு கூறுவது, மீண்டும் பயங்கரவாதிகளுக்கு இடமளிப்பதற்காகவே தவிர வேறு ஒன்றும் கிடையாது என்றும் இவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில், புலிகளின் ஆயுதப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள போதிலும் பிரபாகரனின் அரசியல் பயங்கரவாதம் இன்னும் ஒழிக்கப்படவில்லை. இதனை ஒழிப்பதாயின் பரந்தளவிலான நடவடிக்கைகள் அவசியம். இன்று உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச அளவிலும் புலிகளின் அரசியல் பயங்கரவாதம் தீவிரமடைந்துள்ளது. இதனை முற்றாக ஒழித்துக்கட்டினால் மாத்திரமே புலிப் பயங்கரவாதம் முற்றாக அழிந்ததாக கருதமுடியும்.

இன்று இலங்கை முன் உள்ள சவாலும் அதுதான். புலிகள் சர்வதேச அளவிலும் உள்நாட்டு அரசியலிலும் தமிழீழத்தை நோக்கிய பயணத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனை தோல்வியடையச் செய்யவேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் படையினரை வெளியேற்றுவது என்பது நாட்டிற்கு பாரிய அச்சுறுத்தலான விடயமாகும்.

புலிகளின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோநாக்கில் உள்நாட்டில் உலாவும் தமிழ் அரசியல் கட்சிகளின் தேவையற்ற பிரசாரங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

Saturday, September 24, 2011

ஜெனிவாவில் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களுடன் சமரசிங்க தொடர்ந்து சந்திப்பு!

Saturday, September 24, 2011
ஜெனிவாவில் தங்கியுள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் தூதுவருமான மஹிந்த சமரசிங்க தொடர்ந்து மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களையும் நிரந்தர பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றார்.

எதிர்வரும் 30 ஆம் திகதிவரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் சமரசிங்க அதுவரை ஜெனிவாவில் தங்கியிருந்து முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் கூட்டத் தொடரில் பங்கெடுத்த இலங்கைத் தூதுக்குழுவினர் கடந்த 16 ஆம் திகதி நாடு திரும்பியிருந்தனர். எனினும் மீண்டும் கடந்த 21 ஆம் திகதி புதன்கிழமை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவா பயணமானார்.

இந்நிலையில் ஜெனிவாவில் இருந்தவாறு கேசரிக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சமரசிங்க எதிர்வரும் 30 ஆம் திகதிவரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. அதுவரை நான் ஜெனிவாவில் தங்கியிருந்து பல முக்கியஸ்தர்களுடன் சந்திப்புக்களை நடத்திவருகின்றேன்.

மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களையும் நிரந்தர பிரதிநிதிகளையும் அடிக்கடி சந்தித்து இலங்கையின் முன்னேற்ற நிலைமை தொடர்பில் தெளிவாக விளக்கி வருவதுடன் இலங்கை தொடர்பான போலிக் குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளித்துவருகின்றேன் என்று கூறினார். _

சர்வதேசம் யுத்தக் குற்றச்சாட்டுகளை சோடிக்கிறது – ஜனாதிபதி!

Saturday, September 24, 2011
புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர், சர்வதேசம் இலங்கை மீது யுத்தக்குற்றச்சாட்டுகளை சோடித்துள்ளதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 66 வருடாந்த மாநாட்டில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பிலான முழுமையான விசாரணையை நடத்த, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்துகிறது.

இந்த நிலையில், இது தொடர்பில் தமக்கு ஆதரவாக இருக்கும்படி, ஜனாதிபதி சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

30 ஆண்டுகளாக நிலவிய யுத்தம் நிறைவடைந்துள்ளது.

தற்போது இலங்iயில் அனைத்து பகுதிகளிலும் அனைத்து மக்களும் சமாதானமாக அச்சமின்றி வாழ்கின்றனர்.

புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், தற்போது ஐக்கியமானதும், வினைத்திறன் கூடியதுமான நாட்டை கட்டியெழுப்பு முயற்சிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து 30 மாதங்கள் ஆகின்றன.

தற்போது 95 சதவீதமான இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.

நாடு சிறந்த வாழ்க்கைச் சூழலை கொண்டுள்ளது.

இந்த நிலையில், வடக்கில் குறைந்த எண்ணிக்கையான இராணுவத் தரப்பினரே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எமது நண்பர்களான சர்வதேசம், எங்களை இறைமை மிக்க நாடாக செயற்பட ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

Wednesday, September 21, 2011

இருதரப்புப் பேச்சும் மூடுமந்திரமாக இருக்கக் கூடாது-தி. ஸ்ரீதரன் பொதுச் செயலாளர் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.!

Wednesday, September 21, 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கம் நடத்தும் பேச்சுவார்த்தையானது வெளிப்படையாக இருக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு எதை முன்வைக்கிறது. அரசு என்ன சொல்கிறது என்பது மக்களுக்குத் தெரியப்படுத்துவதனூடாகவே இது பற்றிய விவாதங்கள்> கருத்துகள் மக்கள் மத்தியிலிருந்து வர முடியும். தமது தலைவிதியை மூடு மந்திரமாக யாரும் தீர்மானிப்பதை அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களாக இருந்தாலும் ஜனநாயக சமூகங்களில் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு தெரிவிக்கிறார் ஈ.பி.ஆர். எல். எப். பத்மநாபா அணியின் பொதுச் செயலாளரான தி. ஸ்ரீதரன்

இது தொடர்பில் அவர் இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை வருமாறு

கிறீஸ் பூத பீதி நிலை இன்னும் ஓய்ந்துவிடவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக பீதியூட்டம் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டவண்ணமே உள்ளன.இதைப்பற்றி தமிழ் முஸ்லீம் அரசியற்கட்சிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் பரவலாக குரலெழுப்பியும் இந்தப் பீதியூட்டும் சம்பவங்கள் தொடரத்தான் செய்கின்றன.

இதற்கிடையே அனுராதபுரத்தில் முஸ்லீம்களின் தர்கா மீது நடத்தப்பட்டத் தாக்குதல் மத நம்பிக்கைகள் மீதான அச்சுறுத்தல் என்பன தொடரச் செய்கின்றன.மிருகங்களை பலியிடுவது தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துவரும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய மூத்த அரசில் தலைவரான அலவி மௌலானவையே சினமூட்டியுள்ளது.

இத்தகைய குணங்குறிகள் இன முரண்பாடுகளை மோசமடையச் செய்து விரும்பத்தகாத நிகழ்வுகளை நோக்கி இட்டுச்செல்லலாம். இத்தகைய போக்குகள் முளையிலேயே கிள்ளியெறியப்படல் வேண்டும். இதற்கெதிராக அரசு இதயசுத்தியுடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இதற்கிடையே அரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளன. ஆனால் என்ன பேசப்படுகிறது என்பதை இரு தரப்பும் வெளிப்படுத்துவதாயில்லை. முன்னர் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் அவ்வாறுதான் மக்களுக்கு தெரியாத நிலை இருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதை முன்வைக்கிறது, அரசு என்ன சொல்கிறது என்பது மக்களுக்குத் தெரியப்படுத்துவதனூடாகவே இது பற்றிய விவாதங்கள் கருத்துக்கள் மக்கள் மத்தியிலிருந்து வர முடியும்.தமது தலைவிதியை மூடு மந்திரமாக யாரும் தீர்மானிப்பதை அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களாக இருந்தாலும் ஜனநாயக சமூகங்களில் ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே யோசனைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவது தலைமைத்துவங்களின் கடமைப்பாடாகும்.
தி. ஸ்ரீதரன்
பொதுச் செயலாளர்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.

ஜனாதிபதி மஹிந்த கிளின்டன் சந்தித்து பேச்சுவார்த்தை!

Wednesday, September 21, 2011
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் இடையில் நியூயோர்க்கில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது எவ்வாறான விடயங்கள் குறித்து பேசப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. மனித உரிமை மீறல், மீள் குடியேற்றம் மற்றும் நிலக்கண்ணி வெடி அகழ்வு போன்ற விடயங்கள் குறித்து பேசப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன.

சர்வதேச ரீயான சவால்களை எதிர்நோக்குவதற்கு உலகத் தலைவர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் கிளின்டன் க்ளோபல் இனிடேடிவ் போரம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட காலத்தில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளதுடன், அமைப்பின் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, September 20, 2011

இலங்கை இந்திய கடற்படையினர் கூட்டுப் பயிற்சி திருமலையில் ஆரம்பம்!

Tuesday, September 20, 2011
பல பாதுகாப்பு பொறிமுறைகளை மையப்படுத்திய கூட்டுப் போர் பயிற்சிகளில் இலங்கை இந்திய கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இப்பயிற்சிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளதுடன் இந்தியாவி ன் 6 போர்க் கப்பல்கள் இலங்கையின் கிழ க்கு கடற்பரப்பிற்கு வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான அனைத்து தாக்குதல் படகுகள் போர்க் கப்பல்கள் மற்றும் விசேட ரோந்துப் படகுகள் மேற்படி கூட்டுப் பயிற்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய கடற்படையின் கிழக்கு கடல் பாதுகாப்பு மையத்தின் கட்டளை தளபதி ரியல் அட்மிரல் பிஸ்ட் மேற்படி கூட்டுப் பயிற்சிகளை வழி நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கடற்படை பேச்சாளர் தொடர்ந்தும் கூறுகையில், இந்திய மற்றும் இலங்கை கடற்படையினர் நேற்று முதல் தொடர்ந்தும் ஐந்து நாட்களாக கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர். இப் பயிற்சிகள் திருகோணமலை கடற்பரப்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கு முன்னரும் இந்திய கடற்படையுடன் இலங்கை கடற்படையினர் கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்ட போதிலும் தற்போது நடைபெறும் பயிற்சியானது சற்றுக் கடினமானதுடன் பரந்தளவிலானதாகும்.

ஆயுதம் மற்றும் இராணுவப் பயிற்சி, புலனாய்வு பயிற்சிகள் கூட்டு ரோந்து நடவடிக்கைகள், தாக்குதல் நடவடிக்கைகள், ஆழ்கடல் மற்றும் கடலடிப் பாதுகாப்பு பொறிமுறைகள் என்பன தொடர்பாக பாரிய பயிற்சிகள் நடைபெற உள்ளது. இக் கூட்டுப் பயிற்சிகளில் கலந்து கொள்ளும் இரு நாட்டின் வீரர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது கூற முடியாது எனக் கூறினார்.

நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று கிளின்டன் சூழலியல் மன்றத்தின் அமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்!

Tuesday, September 20, 2011
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக சென்ற ஜனாதிபதி நேற்று மாலை நிவ்யோர்க் நகரை அடைந்துள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி மற்றும் அவரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரை, ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி பாலித்த கொஹொன மற்றும் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமர்வின் பொது சபை அரச தலைவர்களின் உரைகள் எதிர்வரும் 22 ம் திகதி தொடக்கம் ஆரம்பமாகின்றன

நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று கிளின்டன் சூழலியல் மன்றத்தின் அமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனால் உலகப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி, அதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பல நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 66 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரில் பங்கேற்கும் பொருட்டு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு நியூயோர்க் சென்றிருந்தனர்.

நியூயோர்க்கை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித்த கோஹன உள்ளிட்ட குழுவினர் வரவேற்றுள்ளனர்.

தாரூஸ்மான் அறிக்கையை மனித உரிமைகள் கவுன்ஸிலில் சமர்ப்பிக்கக் கூடாது என ஒன்பது நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன!

Tuesday, September 20, 2011
நிகழ்ச்சி நிரலுக்குப் புறம்பாக தாரூஸ்மான் அறிக்கையை மனித உரிமைகள் கவுன்ஸிலில் சமர்ப்பிக்கக் கூடாது என ஒன்பது நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ரஸ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

குறித்த அறிக்கை திடீரென மனித உரிமை கவுன்ஸிலில் முன்வைக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த நாடுகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மாலைதீவு, பங்களாதேஸ், அல்ஜீரியா, கியூபா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் தாரூஸ்மான் அறிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எனினும், இந்த நடவடிக்கையில் இந்தியா இணைந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Friday, September 16, 2011

இலங்கைக்கு எதிரான எந்தவொரு பிரேரணையையும் தடுப்பதற்கு நடவடிக்கை!

Friday, September 16, 2011
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் எந்தவொரு பிரேரணையும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிடுகின்றார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டு இன்று மீண்டும் நாடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் இந்தக் கருத்தினைக் கூறினார்.

மனித உரிமைகள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய 46 உறுப்பு நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்வதற்காகவும் இலங்கை பிரதிநிதிகள் குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவனீதம்பிள்ளையை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நிபுணர் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்கக் கூடாது என்பதே அநேகமானோரின் நிலைப்பாடு - மஹிந்த சமரசிங்க!

Friday, September 16, 2011
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கபட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டையே அநேகமான நாடுகள் கொண்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிக்கின்றார்.

ஒருதலைப் பட்சமாக உறுதிசெய்யப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழு இன்று காலை நாடு திரும்பிய பின்னர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த கருத்தினைக் கூறினார்.

இந்த விடயம் குறித்து பிராந்திய அமைப்புக்களையும் தெளிவுபடுத்தியுள்ளதாக குறிப்பிட்ட மனித உரிமைகள் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர், மனித உரிமைகள் தொடர்பில் கேள்விகளையும், விளக்கங்களையும் சமரப்பிப்பதற்கான வாய்ப்பையும் அந்த அமைப்புக்களுக்கு வழங்கியிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று தரூஸ்மான் அறிக்கையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் ஜெனீவாவிற்கு அனுப்பி வைத்த சந்தரப்பத்தில் அந்த அறிக்கையானது மனித உரிமைகள் பேரவையின் வேண்டுகோளுக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை எடுத்துக் காட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலேசனை வழங்குவதற்காக மாத்திரமே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகும் எனவும், இதனால் தவறான முன்மாதிரியை செயற்படுத்த வேண்டாமென மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவான தகவலொன்றை வழங்கியதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உள்ள பெரும்பாலானோர் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர் என்பதை தெளிவாக கூறமுடியும் என்றும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே அடுத்த வாரம் மீண்டும் தாம் ஜெனீவா செல்வதற்கு எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க மேலும் குறிப்பிட்டார்.

Thursday, September 15, 2011

ஐ.நா. அறிக்கைக்கு எதிர் நடவடிக்கை!

Thursday, September 15, 2011
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ள, இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு அறிக்கைக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

இந்த அறிக்கையை எதிராக செயற்படுமாறு, பல்வேறு நாடுகள் இலங்கை அரசாங்கத்தினால் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஜெனீவாவில் தங்கியுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடனான குழு, இது தொடர்பிலான பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 14, 2011

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர்:தருஸ்மன் அறிக்கையை விவாதத்துக்கு எடுக்க இலங்கை எதிர்ப்பு!

Wednesday, September 14, 2011
ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கூட்டத்தொடரில் சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும், இவ்வறிக்கை ஐக்கிய நாடுகளின் நடைமுறைத் தேவைக்கு ஏற்புடைய வகையில் உத்தியோகபூர்வ ஆவணம் அல்ல என்பதனால் அதனை அங்கு விவாதிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் தனக்குத் தனிப்பட்ட முறையில் ஆலோசனை கூறுவதற்காக உத்தி யோகபற்றற்ற முறையில் நியமித்த குழுவினால் தயாரிக்கப்பட்டதே இந்த தருஸ்மன் அறிக்கை என்று சுட்டிக் காட்டியிருக்கும் பேராசிரியர் பீரிஸ், ஏதாவது ஒரு காரணத்துக்காக அந்தப் பேரவையில் தருஸ்மன் அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் எதிர்காலத்தில் ஏனைய நாடுகளையும் இந்த செயற்பாடு பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தருஸ்மன் அறிக்கையின் தற்போதைய நிலைப்பாடு பற்றி விளக்கமளித்த அமைச்சர் பீரிஸ், தானும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் இதுபற்றிய சட்டபூர்வமான நிலையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவியான உருகுவேயைச் சேர்ந்த லோரா டியூபி லசரியிடம் எடுத்துரைத்திருக்கிறோம் என்று கூறினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொண்ட 29 நாடுகளின் பிரதிநிதிகளையும் அமைச்சர்கள் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து விளக்கமளித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையின் பிரதியொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவி நவநீதம் பிள்ளைக்கு அனுப்புவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் தீர்மானித்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் சிலர் கூறினர் என்று குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தானும், அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் கடுமையாக வலியுறுத்திக் கூறியதாகவும் கூறினார்.

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, தனிப்பட்ட ரீதியில் சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்கால ஐ.நா. செயற்பாடுகளையும், அதில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கும் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறும் ஒழுக்கக் குறைபாடுகள் குறித்து தானும், அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, மைத்திரிபால சிறிசேன, அநுர பிரியதர்ஷன யாப்பா, பாராளுமன்ற உறுப்பினர் சஜின்.டி.வாஸ் குணவர்த்தன, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தமாரா குணநாயகம் உள்ளிட்ட குழுவினர் 10ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை மற்றும் நியூயோர்க்கில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்திலும் சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருப்பதற்கு எதிராகப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவு ள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Tuesday, September 13, 2011

ரொபட் பிளேக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்!

Tuesday, September 13, 2011
இலங்கை சென்றடைந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபர்ட் ஓ பிளெக், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ரொபர்ட் ஓ பிளெக் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று காலை கொழும்பு சென்றடைந்தமைக் குறிப்பிடத்தக்கது.

இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் குறித்த விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஒ பிளக், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியளவில் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் என ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் முன்கூட்டிய தீர்ப்புக்களை வழங்காது, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதன் குறைநிறைகள் பற்றி சர்வதேச சமூகம் விமர்சிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

வடக்கில் இராணுவ மயமாக்கல் இடம்பெறுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களைப் போன்றே வடக்கிலும் இராணுவ முகாம்கள் காணப்படுவதாகவும், அவை பாதுகாப்பு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளன எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டு;ள்ளார்.

ரொபர்ட் பிளக் இன்று(13.9.2011)யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.

சிவில் அமைப்பு பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித வீரதுங்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகும் என இலங்கைப் பிரதிநிதிகள், ரொபர்ட் ஓ பிளக்கிடம் தெரிவித்துள்ளனர்.

Monday, September 12, 2011

சிறைக்கைதிகள் தின நிகழ்வுகள் இன்று மாத்தறையில்!

Monday, September 12, 2011
சர்வதேச சிறைச்சாலைகள் தினம், இலங்கையில் 11ஆவது தடவையாக இன்று கொண்டாடப்படுகிறது. நாடு பூராகவும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகள் தினத்தின் பிரதான வைபவம் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் நாடு முழுவதிலுமுள்ள சிறைக்கைதிகளால் நிர்மாணிக்கப்பட்ட பொருட்களைக் கொண்ட கண்காட்சியொன்று மூன்று தினங்கள் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 66ம் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார்!

Monday, September 12, 2011
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 66ம் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 23ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி விசேட உரையாற்றுவார் எனக் குறிப்பிடப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 65ம் பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 13ம் திகதி உத்தியோகபூர்வமாக முடிவுறுத்தப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 66ம் பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயோர்க்கில் எதிர்வரும் 13ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி எதிர்வரும் 18ம் திகதி அமெரிக்காவைச் சென்றடைவார் என இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுச் சபைக் கூட்டத்திற்கு சமாந்திரமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பல நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைமைப் பொறுப்பிற்கு கட்டாரைச் சேர்ந்த நாசீ அப்துல்அசீஸ் அல் நாசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அல் நாசர் மிக நீண்ட காலகமாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான கட்டாரின் நிரந்தரப் பிரதிநிதியாக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, September 10, 2011

எந்தவொரு வெளிநாட்டு அழுத்தம் காரணமாகவும் அரசாங்கம் அவசரகால சட்டவிதிகளை நீக்கவில்லை-லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன!

Saturday, September 10, 2011
எந்தவொரு வெளிநாட்டு அழுத்தம் காரணமாகவும் அரசாங்கம் அவசரகால சட்டவிதிகளை நீக்கவில்லை. நாட்டுக்கு தற்போது அவசரகாலச் சட்டம் தேவையில்லை என்று கருதியமையினாலேயே ஜனாதிபதி அதனை நீக்க தீர்மானித்தார்.எமது அரசாங்கம் யுத்த காலத்திலேயே எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் யுத்தத்தை நடத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம் என்று பதில் அமைச்ரவை பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வு என்பவற்றின் காரணமாக அவசரகால சட்டத்தை நீக்கியதாக கூறப்படுகின்றதே? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அமைச்ர் அங்கு மேலும் கூறியதாவது,

யுத்த காலத்தில் எங்களுக்கு எவ்வாறான வெளிநாட்டு அழுத்தங்கள் வந்தன என்று உங்களுக்கு தெரியும். பொருளாதாரத் தடை மற்றும் நிதியுதவி நிறுத்தம் என பல அழுத்தங்கள் வந்தன.

ஆனால் அதுபோன்ற எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணியாத அரசாங்கம் தற்போது அவசரகாலச் சட்டத்தை நீக்கும் விடயத்துக்கும் மட்டும் அடிபணியும் என்று கருதுகின்றீர்களா?

எந்தவொரு வெளிநாட்டு அழுத்தம் காரணமாகவும் அரசாங்கம் அவசரகால சட்டவிதிகளை நீக்கவில்லை. நாட்டுக்கு தற்போது அவசரகாலச் சட்டம் தேவையில்லை என்று கருதியமையினாலேயே ஜனாதிபதி அதனை நீக்க தீர்மானித்தார்.

மேலும் யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்தே அவசரகால சட்டவிதிகளை படிப்படியாக அரசாங்கம் நீக்கிவந்தது. தற்போது முற்றாக நீக்கியுள்ளது.

எல் சல்வடோருடன் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்திக்கொள்ளப்படும் - அரசாங்கம்!

Saturday, September 10, 2011
மத்திய அமெரிக்க நாடான எல் சலவடோருடன் இராஜதந்திர ரீதியான உறவுகள் ஏற்படுத்திக்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

எல் சல்வடோருடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முன்வைத்த யோசனைத் திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக எல்சல்வடோருக்கும் இலங்கைக்கும் இடையில் வர்த்தகத் தொடர்புகள் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கோப்பி, பதப்படுத்தப்பட்ட உணவு, தைக்கப்பட்ட ஆடைகள், தங்கம் மற்றும் எதனோல் போன்ற பொருட்களை எல் சல்வடோர் ஏற்றுமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியான நன்மைகளை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரக்கறிவகைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை எல்சல்வடோருக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

Friday, September 9, 2011

அரசாங்கத்தின் நல்லிணக்க முன்னெடுப்பு:அமெரிக்க செனட்டின் ஆதரவைப்பெற முயற்சி!

Friday, September 09, 2011
அமெரிக்காவில் வாழும் இலங்கை மக்கள் தங்கள் நாட்டில் நடைபெறும் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அமெரிக்க செனட் சபையின் அங்கத்தவர்கள் ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்கவுள்ளார்கள்.

அமெரிக்காவில் இலங்கை தூதுவராக இருக்கும் ஜாலிய விக்கிரமசூரியவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அங்கு வாழும் இலங்கை மக்கள் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு இப்போது புனர்வாழ்வளித்து வருவதுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டை இப்போது பாரிய ரீதியில் அபிவிருத்தி செய்கின்றது என்ற உண்மையை அமெரிக்காவின் செனட் சபை அங்கத்தவர்களுக்கு எடுத்துரைப்பதென்று முடிவெடுத்துள்ளார்கள்.

இலங்கைத்தூதுவர் அமெரிக்காவில் உள்ள இலங்கையர்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களை லொஸ் ஏஞ்சல்சில் உள்ள இலங்கையின் இணைத்தூதரகத்தில் சந்தித்து உரையாற்றினார்.

இப்போது அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்த ஜாலிய விக்கிரமசூரிய, இலங்கை மக்கள் அமெரிக்காவின் வாக்குரிமை பெற்றவர்கள் என்ற முறையில் அந்நாட்டின் காங்கிரஸ் சபையின் அங்கத்தவர்களை இந்தக் கருத்தை வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

இலங்கைத் தூதுவர் அமெரிக்காவில் வாழும் முன்னணி தமிழ் சமூகங்களின் பிரதிநிதிகளை சந்தித்து இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார். தற்போது நாடு அரசியல் மற்றும் பொருளாதார துறையில் முன்னேற்றமடைந்திருப்பதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 2009 மே மாதத்தில் எல்.ரி.ரி.ஈ இயக்கம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அப்பிரதேசங்களில் வாழும் மக்கள் வலுவூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவற்றுக்கு செவிமடுத்த தமிழ் சமூகம் அரசாங்கம் மேற்கொள்ளும் நற்பணிகளை வரவேற்பதாக கூறியது. வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக வருடாந்தம் இலங்கை அரசாங்கம் ஒரு பில்லியன் டொலர்களை செலவிட்டு வருகிறதென்று தெரிவித்த இலங்கை தூதுவர் இப்போது புதிய வீடுகள், ஆஸ்பத்திரிகள், பாடசாலைகள், வீதிகள், நீர்விநியோகத் திட்டங்கள், பாலங்கள், ரயில் பாதைகள், நீர்ப்பாசன குளங்கள் என்பன மீள் நிர்மாணம் செய்யப்பட்டு வருவதாககவும் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்த காலத்தில் சுமார் 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். இப்போது அவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும் புதிய வாழ்வாதாரங்களை ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் நிதி உதவிகளை வழங்கி வருகின்றது.

இடம்பெயர்ந்த 3 இலட்சம் பேரில் ஒரு சிறு தொகையைத் தவிர அனைவரும் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். வடபகுதியில் எல்.ரி.ரி.ஈ. தரையில் புதைத்த 5 இலட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் கண்ணிவெடிகள் அகற்றப்படுவதாகவும் தெரிவித்த ஜாலிய விக்கிரமசூரிய, இன்று நாட்டில் விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை வளர்ச்சியடைவதாகவும் வடக்கில் 2010ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 21சதவீதத்தை எட்டியிருக்கிறதென்றும் கூறினார்.

இந்த சந்திப்பின் போது தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பல பிரதிநிதிகள் தாங்கள் இலங்கையில் வந்து வர்த்தக முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு விருப்பம் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த தூதுவர், அவர்கள் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் பூரண ஆதரவளிக்கும் என்று கூறினார்.

இலங்கை அரசாங்கம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எல்.ரி.ரி.ஈ சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தும் இருக்கிறது.

இத்துடன் அரசாங்கம் 11ஆயிரத்து 600 எல்.ரி.ரி.ஈ.யினருக்கு பொது மன்னிப்பை அளித்திருக்கிறதென்று தெரிவித்த இலங்கை தூதுவர், வேறொரு நாட்டில் பயங்கரவாதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டார். இந்நிகழ்வில் சுமார் 30 பெளத்த பிக்குமாருக்கு தானமும் வழங்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள இலங்கை மக்கள் இன, மத பேதமின்றி கலந்து கொண்டார்கள்.

இலங்கையின் இறைமையை பாதுகாக்க சீனா ஆதரவு பிரதமர் தி.மு. ஜயரட்னவிடம் உறுதிமொழி!

Friday, September 09, 2011
விரைவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தில் எல்.ரி.ரி.ஈக்கு எதிரான யுத்தத்தின் போது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் இலங்கை ஈடுபட்டதென்று சர்வதேச ரீதியில் விசாரணையொன்றை ஏற்படுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொண்டுவர எவராவது முயற்சி செய்தால் இலங்கையின் இறைமையை பேணிப் பாதுகாப்பதற்கு சீனா தன்னுடைய முழு ஆதரவையும் நல்குமென்று உறுதியளித்துள்ளது.

சீனாவிற்கு சென்றிருந்த பிரதமர் டி.எம். ஜயரத்னவை சந்தித்த போது அந்நாட்டின் முக்கிய தலைவர்களின் ஒருவரான கூ பெங்குவா இவ் உறுதிமொழியை அளித்தார். இலங்கை பிரதமர் சீனாவின் சியாமென் நகரில் நடைபெற்ற சீனாவின் 15 சர்வதேச முதலீட்டு மற்றும் வர்த்தக கண்காட்சியிலும் கலந்து கொண்ட சந்தர்ப்பத்திலேயே சீனாவின் இந்தத் தலைவர் உறுதிமொழியை வழங்கினார்.

இலங்கை தனது தேசிய சுதந்திரத்தையும், இறைமையையும் தன்னுடைய நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கு எடுக்கும் சகல முயற்சிகளுக்கும் சீனா தொடர்ந்தும் உதவி செய்யுமென்று கூ பெங்குவா உறுதியளித்தார்.

சீனா இலங்கை இன்று அபிவிருத்திப் பாதையில் முன்னேறிக்கொண்டிருப்பது குறித்து பெருமை படுகிறதென்றும் அதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் சிறப்புற்று விளங்குகிறதென்றும் கூ பெங்குவா இலங்கை பிரதமரிடம் தெரிவித்ததாக சின்யுவா செய்தி சேவை அறிவித்தது.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் கொண்டுவரப்படும் என்ற தகவலை அறிந்த பின்னரே சீனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கூ பெங்குவா இந்த கருத்தை தெரிவித்தார்.

சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு சர்வதேச உரிமைகளை பேணிப்பாதுகாக்கும் அமைப்பு என்ற வகையில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது நடந்த மனித உரிமை குற்றச் செயல்களை விசாரணை செய்யும் இலங்கையின் உள்ளூர் விசாரணைகள் சரியான முறையில் நடைபெற வில்லையென குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, September 7, 2011

டெல்லி தாக்குதலுக்கு ஜனாதிபதி ஆழ்ந்த அனுதாபம்!

Wednesday, September 07, 2011
டெ‌ல்‌லி உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அருகே இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

இந்த தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டோர் தொடர்பிலும் தமது கவலையை வெளியிட்டுள்ளதாகவும் இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் இதுவரையில் 10 பே‌ர் ப‌லியா‌கி உ‌ள்ளதோடு 60 க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் படுகாய‌ம் அடை‌ந்து‌ள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யங்கரவாதம் தலைதூக்குவதை தடுக்க பயங்கரவாத தடைச்சட்டத்தில் புதிய சட்டங்கள் அமுல்ப் படுத்தப்படும் - நிமால் சிறிபால!

Wednesday, September 07, 2011
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டாலும் பயங்கரவாதம் தலைதூக்குவதை தடுக்க பயங்கரவாத தடைச்சட்டத்தில் புதிய சட்டங்களை அமுல்ப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பு முக்கியமானது இதனால் சில சட்டங்களை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் அரசாங்கம் புதிதாக சட்டங்களை உருவாக்கும்.

கிறீஸ் பூதங்கள் என்பது, விடுதலைப்புலிகளுக்கு உதவுவதற்காகவும் இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களை தடுத்து நிறுவத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரமாகும். மக்களின் அச்சத்தை போக்க காவற்துறையினரும், முப்படையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் சட்ட ரீதியான உரிமையுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏனைய காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியோருக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கவும்:ஜனாதிபதி பணிப்பு!

Wednesday, September 07, 2011
அக்குரஸ்ஸ கல்வி வலயத்தின் பாடசாலையைச் சேர்ந்த பத்து வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியோருக்கு அதிகபட்ச சமானதும் மிகக் கடுமையானதுமான தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று சபையில் தெரிவித்தார். எதிர்காலத்தில் இவ்வாறான குற்றச் செயல்கள் இடம் பெறாத வண்ணம் கல்வி அமைச்சும் இலங்கை சட்டத்துறையும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. புத்திக்க பத்திரண.

அக்குரஸ்ஸ கல்வி வலயத்தின் ஜெலிஜ்ஜவல பாடசாலையைச் சேர்ந்த 10 வயதே நிரம்பிய சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் பந்துல குணவர்தன இங்கு மேலும் விளக்குகையில், குறித்த பாடசாலையின் பரீட்சை மண்டபத்தை துப்புரவு செய்ய வருகை தந்த 10 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு மேற் கொண்டமையானது துரதிஷ்டவசமானது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் இணைந்ததாக இரண்டு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் அறியக் கிடைத்ததையடுத்து அது ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு பாரபட்சமற்ற வகையில் அதிகபட்சமானதும் மிகக் கடுமையானதுமான தண்டனையைப் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இதன்படி தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.

அத்துடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் கல்வி அமைச்சும் இலங்கை சட்டத்துறையும் கடுமையான நடவடிக்கைகளைப் பின்பற்றும் என்றார்.

ஆயுள் தண்டனை பெற்ற நளினி வேலூர் சிறைக்கு திடீர் மாற்றம்!

Wednesday, September 7, 2011
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, புழல் சிறையில் இருந்து இன்று காலை வேலூர் சிறைக்கு திடீரென மாற்றப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, அங்கு போதுமான பாதுகாப்பு இல்லை என கருதி கடந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இதனால், புழல் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையில்தான் உள்ளனர். அவர்களுக்கு வரும் 9-ம் தேதி (நாளை மறுநாள்) தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கிடையே, தங்களது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து மூவரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளனர். மூன்று பேருக்கும் தண்டனையை நிறைவேற்ற, 8 வாரத்துக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

அவர்கள் மூவருக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதே நேரத்தில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், புழல் சிறையில் இருந்த நளினி, இன்று காலை திடீரென வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

காலை 8 மணியளவில் நளினியை பலத்த பாதுகாப்புடன் போலீசார் வேனில் வேலூர் சிறைக்கு கொண்டு சென்றனர். இதனால், காலை முதல் புழல் சிறை பரபரப்பாக காணப்பட்டது. வேலூர் மகளிர் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நளினியை வேலூருக்கு திடீரென மாற்றியதற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

Followers

Blog Archive