Wednesday, September 7, 2011

ஆயுள் தண்டனை பெற்ற நளினி வேலூர் சிறைக்கு திடீர் மாற்றம்!

Wednesday, September 7, 2011
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, புழல் சிறையில் இருந்து இன்று காலை வேலூர் சிறைக்கு திடீரென மாற்றப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, அங்கு போதுமான பாதுகாப்பு இல்லை என கருதி கடந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இதனால், புழல் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையில்தான் உள்ளனர். அவர்களுக்கு வரும் 9-ம் தேதி (நாளை மறுநாள்) தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கிடையே, தங்களது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து மூவரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளனர். மூன்று பேருக்கும் தண்டனையை நிறைவேற்ற, 8 வாரத்துக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

அவர்கள் மூவருக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதே நேரத்தில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், புழல் சிறையில் இருந்த நளினி, இன்று காலை திடீரென வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

காலை 8 மணியளவில் நளினியை பலத்த பாதுகாப்புடன் போலீசார் வேனில் வேலூர் சிறைக்கு கொண்டு சென்றனர். இதனால், காலை முதல் புழல் சிறை பரபரப்பாக காணப்பட்டது. வேலூர் மகளிர் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நளினியை வேலூருக்கு திடீரென மாற்றியதற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

Followers

Blog Archive