Tuesday, December 28, 2010

235 பிக்பொக்கட் திருடர்கள் பொலிஸாரால் மடக்கிப்பிடிப்பு சார்க் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றவர் உட்பட முக்கிய கேடிகள் கைது!

Tuesday, December 28, 2010
பண்டிகைக் காலத்தில் திருடர்களின் கைவரிசையும் அதிகரித்துள்ளது. இக்காலப் பகுதியில் 235 ‘பிக்பொக்கட்’ திருடர்கள் கொழும்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்திருட்டுச் சம்பவங்களை வழிநடத்தும் 6 பேரும், திருட்டில் ஈடுபடும் 229 பேரும் கொழும்பு குற்றப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டிகைக் காலத்தில் இவ்வாறு பெருந்தொகையான ‘பிக்பொக்கட்’ திருடர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையெனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சார்க் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஒருவரும் உள்ளடங்குவதாகவும், ஹெரோயின் போதைவஸ்துக்கு அடிமையான அவர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கொழும்பு குற்றப் பிரிவுப் பொலிஸார் கூறுகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 20 நாடோடி (ஜிப்சீஸ்) ஆண், பெண்களும் ‘உள்ளடங்குகின்றனர். இவர்கள் தமது பிள்ளைகளையும் திருட்டுச் சம்பவங்களுக்குப் பழக்கியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

‘பிக்பொக்கட்’ திருடர்களை அவர்களின் உடைநடை, பாவனைகளைக் கொண்டு அடையாளம் காணமுடியாது. மக்களுடன் மக்களாக இணைந்து சென்றே திருட்டுக்களில் ஈடுபடுகின்றனர். சில தனியார் பஸ் நடத்துனர்களும் இவ்வாறான திருட்டுகளுக்கு உதவுகின்றனர். இதில் அவர்களுக்கும் பங்குகள் வழங்கப்படுவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருட்டுக் கும்பல்களின் தலைவர்களான வையா, சுதா, கிரா, மெகா, சாமீ, யுந்தா ஆகியோரே டிசம்பர் 3ம் திகதி முதல் நடத்தப்பட்ட விசேட தேடுதல்களில் பொலிஸா¡ல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய அவர்களின் பணிப்புரைக்கமைய இத்தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

Thursday, December 23, 2010

53 வது பிறந்த நாள் நினைவு தினம் அமரர் றொபேட் தம்பிராசா சுபத்திரன் மத்திய குழு உறுப்பினர்- பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்

Thursday, December 24, 2010
அமரர் தோழர் றொபேட்
தம்பிராசா சுபத்திரன்
(ஈ.பிஆர்.எல்.எவ் மத்திய குழு உறுப்பினர்
முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்)

தேச விடுதலையை நேசித்து

மானிட தர்மத்தை மதித்து நின்றதால்
ஏக பிரதிநிதித்துவத்தின் எதிரியானாய் -

இடர்களின் நடுவேயும்
தஞ்சமென மண்டியிடாது

தலைநிமிர்ந்து நின்று வீர காவியமானாய்
காற்றில் கலந்த போதும்

சாய்ந்துவிட்ட வல்லாதிக்கம் - உன்
கருத்தின் வலிமையை பறைசாற்றி நிற்கின்றது.
இனி நிமிர்ந்தெழும்

நீ உயர்த்திப் பிடித்த மானிட தர்மம்.

கண்டி இந்திய துணை தூதரக அலுவல்களை இலகுபடுத்த நடவடிக்கை.

Thursday, December 23, 2010
கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பணிகளை இலகுவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோபியோ’ (வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினருக் கான அமைப்பு) பிரதிநிதிகள் குழு இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவுடன் கொழும்பில் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்டி துணைத் தூதரகத்திற்கு அலுவல்களுக்காகச் செல்லும் பொது மக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளாகுவதாக ‘கோபியோ’ பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து துணைத் தூதரகத்தின் செயல்பாடுகளை வினைதிறன்மிக்கதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்ததாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ‘தினகரனு’க்குத் தெரிவித்தார். வீசா பெற்றுக்கொள்ள முடியாமலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களிலும் நெருக்கடிகளை எதிர்நோக்குவோரின் பிரச்சினையை ‘கோபியோ’ அமைப்பின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம் காணப்பட்டு ள்ளது.

வீசாவைப் பெறுவதற்கான நியாயமாக காரணம் உள்ளதாக ‘கோபியோ’ பரிந்துரைக்கும் பட்சத்தில் அதனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

Friday, December 17, 2010

அரச அதிகாரிகளின் தீர்மானங்களில் அரசாங்கம் பக்கபலமாக இருக்கும்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

Friday, December 17, 2010
அரச அதிகாரிகள் மேற்கொள்ளும் நியாயமான தீர்மானங்களில் அரசாங்கம் எப்போதும் பக்க பலமாக இருக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்றைய தினம் அரச நிர்வாக அதிகாரிகளின் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, சரியோ பிழையோ நியாயபூர்வமாக அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளின் பின்புலத்தில் முழு அரசாங்கமும் துணை நிற்கும் எனவும் தெரிவித்தார்.

“மக்கள் சேவை மகேசன் சேவை” என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி; வரலாற்றில் பதிவு செய்யப்படும் வகையில் அர்ப்பணிப்புள்ள சேவையை அரச அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் அதுவே நாட்டுக்கும் மக்களுக்குமான சேவையாகும் எனவும் தெரிவித்தார்.
அரச நிர்வாக சேவைக்கு புதிதாக 135 உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், புதிய நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களைக் கையளித்து உரை நிகழ்த்திய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்குச் செல்வதற்கான முதற்படியாக நிர்வாக சேவை உத்தியோகத்தர் பதவி அமைகிறது.

புதிதாக நியமனம் பெறுவோர் பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனைவரை சுதந்திரமாக சென்று பணிபுரியும் வகையில் நாட்டில் சிறந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

இனம், மதம் என்ற பேதங்களைக் கடந்து நாட்டின் சகல மக்களுக்கும் அர்ப்பணிப்புள்ள சேவையை வழங்குவது புதிய உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும்.

பல்வேறு பிரச்சினைகளுடன் கண்ணீரோடு வரும் மக்களை மகிழ்ச்சியோடு செல்லும் வகையில் உங்கள் சேவை அமைய வேண்டும். எனது தந்தையார் அரசியலில் இருந்த காலத்தில் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அரசியல் தலைவர்கள், அரச உயரதிகாரிகள் மக்களை தமது காரில் ஏற்றிச் சென்று சம்பந்தப்பட்டோரை நேரில் பார்த்து உடனடியாகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொடுத்தனர்.
அன்றைய அதிகாரிகள், தலைவர்கள் மக்களுக்கு நெருக்கமாக இருந்து செயற்பட்டனர். மக்கள் சேவைக்கு இது மிக முக்கியமாகும். நீங்களும் மக்களை நெருங்கி அவர்களின் பிரச்சினைகளுக்குக் காலங்கடத்தாமல் தீர்வு பெற்றுக் கொடுப்பது அவசியம். மக்கள் மனதில் பதியக்கூடிய வகையில் உங்கள் சேவை அமைய வேண்டும்.

ஒரு கணிப்பீட்டின் படி 7 மணியும் 45 நிமிடங்களையும் கொண்ட நாளொன்றுக்கான சேவை நேரத்தில் 3 மணி 20 நிமிட சேவைதான் அரச அலுவலகங்களில் இப்போது நடைபெறுகிறது. இது நியாயமானதா என்பதை அரச உத்தியோகத்தர்களே மனதில் கையை வைத்துச் சொல்லட்டும்.

24 மணி நேரமும் மக்கள் சேவையில் தம்மைப் பிணைத்துக் கொண்டு உழைத்த பல அதிகாரிகளையும் இங்கு குறிப்பிட முடியும். சுனாமி வேளையில் மாத்தறை பகுதியில் ‘சோர்ட்ஸ்’ அணிந்து கொண்டு அரச அதிபர்கள் நேர காலம் பாராது நள்ளிரவிலும் செயற்பட்டதை குறிப்பிட விரும்புகிறேன்.

நீங்களும் வரலாற்றுப் பதிவுகளில் இடம் பிடிக்கும் வகையில் சேவை செய்ய வேண்டும். நீங்கள் ஓய்வுபெற்ற பின்னரும் உங்கள் பெயர் மக்கள் மத்தியில் பேசப்பட வேண்டும்.

மக்களுக்காக நீங்கள் எடுக்கும் நியாயமான தீர்மானங்களுக்கு முழு அரசாங்கமும் பக்க பலமாக இருக்கும். உங்களைப் பாதுகாப்பதில் நாம் கடமைப்பட்டுள்ளோம். நாட்டுக்கு உங்களால் கிடைக்க வேண்டிய சேவையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

தேசிய உணர்வு, கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும், தேசிய கீதத்துக்கு கெளரவமளிக்கும் வகையில் செயற்பட வேண்டும். அதற்கு மதிப்பளிக்கத் தெரியாத ஒரு சமூகம் உருவாக இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தேசத்துரோக சக்திகளுக்கு இனிமேல் இடமில்லை-தரைப்படைத் தளபதி!


Friday, December 17, 2010
இலங்கையில் இனிமேல் எந்தவொரு தேசத்துரோக சக்திகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் சர்வதேச ரீதியில் அவை செயற்பட்டாலும் அவைகள் முறியடிக்கப்படும் எனவும் தரைப்படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நேற்று(டிச15) தெரிவித்தார்.

இராணுவ கவச வாகன படையணியின் 55ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு மோதரையிலுள்ள இராணுவ கவச வாகன தலைமையகமான ரொக் ஹவுஸ் முகாமில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

சர்வதேச ரீதியில் எழுப்பப்படும் சவால்களுக்கு முகம் கொடுக்க இலங்கை தயார் நிலையில் இருப்பதாகவும், இராணுவத்தை மேலும் பலப்படுத்தும் முகமாக ரஷ்யாவில் இருந்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கவச வாகனங்கள் இராணுவ கவச வாகன படையணிக்கென இறக்குமதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம், பயங்கரவாத கெடுபிடியில் இருந்து மக்களை மீட்டெடுத்ததை போன்று, தேசத்தின் அபிவிருத்தியிலும் மிக முக்கிய பங்காற்றுவார்கள் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ள அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் இலக்கான ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்ற இராணுவத்தினர் சிறந்த முறையில் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பாதுகாப்பு செயலாளர் கோடாபய ராஜபக்‌ஷ அவர்களின் சிறந்த வழிகாட்டலின் கீழ் எந்தவொரு சவால்களுக்கும் முகம்கொடுக்க இலங்கை இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும், பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்காமல் இருப்பதற்காக வழி காட்டல்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இராணுவத்தை பலப்படுத்துவதன் மூலம் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் சேவையாற்றுவதற்கு கவச படை பிரிவைச் சேர்ந்த படை வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக தெரிவித்துக் கொண்டார்.

Saturday, December 11, 2010

தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இன்றையதினம் சந்திப்பினை மேற்கொண்டன--அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு தமிழ் கட்சிகளுடன் இணையத் தயார் –TNA.!

Saturday, December 11, 2010
தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கம் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளனர். இச்சந்திப்பு இன்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இச்சந்திப்பு சுமுகமாக இடம்பெற்றதாக சந்திப்பில் கலந்துகொண்ட எமது கட்சியின் பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன் தெரிவித்தார். இன்றைய சந்திப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் கூட்டாக செயற்படுவது எனவும் தீர்வு திட்டம் ஒன்றை ஒருமித்து முன்வைப்பதற்கு ஏற்றவகையில் குழு ஒன்றை அமைப்பதற்கும் இன்றைய சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து சந்திப்பதெனவும், பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதெனவும் இன்று உடன்பாடு காணப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இன்றையதினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பினை மேற்கொண்டன.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை ஒரே குரலில் வெளிப்படுத்தும் முகமாக அமைக்கப்பட்ட தமிழ்க் கட்சிகளின் அரங்கமானது கடந்த ஜூன் மாதம் 24ம் திகதி இடம்பெற்ற தமது முதலாவது சந்திப்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இதுதொடர்பாக அழைப்பினை விடுத்திருந்தன. இந்த நிலையில் அவ்வழைப்பினை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அழைப்பிற்கிணங்க கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இன்றைய சந்திப்பு இடம்பெற்றது.

இரு அமைப்புக்களிலும் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்குகொண்ட நிலையில் இன்றைய சந்திப்பானது ஆக்கபூர்வமாக இடம்பெற்றது. குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம் கலந்துரையாடப்பட்டதுடன் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதனடிப்படையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகுறித்து அடுத்தடுத்த கட்டங்களில் இணைந்த கலந்துரையாடல்களை மேற்கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டதுடன் அரசியல் தீர்வு தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு இலகுவாக அதற்கான வரைபினை தயாரிப்பதற்கு ஒரு குழுவினை எதிர்வரும் திங்கட்கிழமை (13) அமைப்பதென்றும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இன்றையதினம் மாலை 3.30 மணியிலிருந்து 5.30 மணி வரை இடம்பெற்ற இம்முதல் சந்திப்பானது மிகவும் சிநேக பூர்வமானதாகவும் அடுத்தகட்ட சந்திப்புக்களுக்கான ஓர் ஆரம்பமாகவும் அமைந்தமை குறித்து பங்குகொண்ட கட்சித் தலைவர்கள் தமது திருப்தியை வெளியிட்டனர்.

இன்றைய கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (ரி.சிறிதரன் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.)
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் எம்.சந்திரகுமார் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா சுரேஷ் பிரேமச்சந்திரன் அப்பாத்துரை விநாயகமூர்த்தி சிவசக்தி ஆனந்தன் பா.அரியநேத்திரன் எம்.சுமந்திரன் பொன்.செல்வராசா எஸ்.வினோநோதாரலிங்கம் மேல்மாகாண சபை உறுப்பினர் குமரகுருபரன் மற்றும் வீ.ஆனந்தசங்கரி எம்.கே.சிவாஜிலிங்கம் த.சித்தார்த்தன் செ.சந்திரஹாசன் அ.இராசமாணிக்கம் ப.உதயராசா ஜீ.சுரேந்திரன் கோபாலகிருஷ்ணன் ஆர்.ராகவன் எஸ்.சதானந்தம் டி.மாணிக்கவாசகர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு தமிழ் கட்சிகளுடன் இணையத் தயார் –TNA.!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது!
தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜனநயாக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் நல்லய்யா குமாரகுருபரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று விசேட உயர் மட்ட கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் நாளாந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிபப்pட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அசரியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்காக ஆறு பேர் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈ.பி.டி.பி. தமிழர் விடுதலைக் கூட்டணி, (ரி.சிறிதரன் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.)
,புளொட், போன்ற 11 கட்சிகள் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதல் தடவையாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த முக்கிய தமிழ் அரசியல் கட்சிகள் தமிழர் பிரச்சினைக்காக ஒன்று சேர்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, December 8, 2010

சார்க் நடவடிக்கைகளுக்கு இலங்கை தொடர்ந்து ஆதரவு - ஜனாதிபதி.

Wednesday, December 8, 2010
சார்க் அமைப்பிற்கும் அதன் நடவடிக்கைகளுக்கும் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் ஆதரவு வழங்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தெற்காசிய நாடுகள் இணைந்து ஆரம்பித்த சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இத்தருணத்தில் தெற்காசிய நாடுகளில் வாழும் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் சார்பிலும், நாட்டு மக்கள் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமையடைகிறேன்.

ஏப்ரல் மாதம் திம்புவில் நடைபெற்ற சார்க் அமைப்பின் வெள்ளிவிழாவில் நான் குறிப்பிட்டதைப் போன்று கடந்த இரண்டு தசாப்தங்களாக சார்க் நாடுகளுக்கிடையிலான பிராந்திய ஒத்துழைப்பு, இணைந்த அடையாளம் என்பனவே தனித்துவமான குறியீடுகள். இது தொடர்ந்தும் வலுப்படுத்தப்படுவது மிகவும் முக்கியமானது.

இதன் மூலம் சார்க் அமைப்பிலுள்ள நாடுகளுக்கிடையிலும், நாட்டு மக்களுக்கிடையிலும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்த முடியும்.

சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதெனில், 1985 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பை அனைவரும் இணைந்து சிறப்பாகக் கட்டிக்காத்து வந்துள்ளோம் என்பதில் நாம் அனைவரும் பெருமிதமடைய வேண்டும்.

இதனைத் தொடர்ந்தும் முன்னெடுத்தாலே அடுத்த சந்ததிக்கும் இணைந்த ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுக்க முடியும்.

தீர்மானங்களை நிறைவேற்றுதல், ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொண்டுவருதல், மக்களின் சுதந்திரமான நடமாட்டம் போன்ற விடயங்களில் எம் முன்னால் காணப்படும் சவால்களை வெற்றி பெறுவதாயின் சில தீர்க்கமான முடிவுகளை நாம் எடுக்கவேண்டும். இவ்வாறான நிலையில் சார்க் அமைப்பிற்கும் அதன் நடவடிக்கைகளுக்கும் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் ஆதரவு வழங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லண்டன் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு ஜனாதிபதிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டனப் பேரணி.

Wednesday, December 8, 2010
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நேற்று மாபெரும் கண்டனப் பேரணியொன்று நடைபெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை அமைப்பாளர் வேல்முருகு தங்கராசா மற்றும் இணைப்பா ளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் யாழ். மாவட்டத்தின் பதினொரு தொகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், கல்வியாளர்கள், சமூக சேவையாளர்கள், இளைஞர்கள், யுவதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக த்தில் உரையாற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை மற்றும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களால் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களைக் கண்டித்தே இப்பேரணி நடைபெற்றது.

நேற்றுக் காலை 10 மணிக்கு யாழ் துரையப்பா விளையாட்டரங்கிலிருந்தும், காலை 9 மணிக்கு பாஷையூர் அந்தோனியார் கோவில் முன்றலிலிருந்தும் ஆரம்பமான இருவேறு பேரணிகள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தன.

ஜனாதிபதியின் உருவப் படங்களைத் தாங்கியவாறும், தேசியக் கொடியைத் தாங்கியவாறும், ஜனாதிபதிக்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களைக் கண்டிக்கும் வாசகங்களை உள்ளடக்கிய சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஊர்வலமாக வந்தனர்.

நாட்டை மீட்ட ஜனாதிபதிக்கு நன்றி” நாடு ஒன்றுபட்டு விட்டது, “பயங்கரவாத புலிகளை முழுமையாக ஒழியுங்கள்”, “ஜனாதிபதியின் துணிச்சலான முடிவும் மக்களின் நல்லாசியால் நாட்டில் பயங்கரவாதம் ஒழிந்தது”, “ஜனாதிபதியின் மக்கள் சேவையைப் பாராட்டுகிறோம்” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் சென்றவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இப்பேரணியால் யாழ் நகரில் சிறிதுநேரம் வாகன நெரிசல்கள் ஏற்பட்டிருந்தன.

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Followers

Blog Archive