Wednesday, December 8, 2010

சார்க் நடவடிக்கைகளுக்கு இலங்கை தொடர்ந்து ஆதரவு - ஜனாதிபதி.

Wednesday, December 8, 2010
சார்க் அமைப்பிற்கும் அதன் நடவடிக்கைகளுக்கும் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் ஆதரவு வழங்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தெற்காசிய நாடுகள் இணைந்து ஆரம்பித்த சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இத்தருணத்தில் தெற்காசிய நாடுகளில் வாழும் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் சார்பிலும், நாட்டு மக்கள் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமையடைகிறேன்.

ஏப்ரல் மாதம் திம்புவில் நடைபெற்ற சார்க் அமைப்பின் வெள்ளிவிழாவில் நான் குறிப்பிட்டதைப் போன்று கடந்த இரண்டு தசாப்தங்களாக சார்க் நாடுகளுக்கிடையிலான பிராந்திய ஒத்துழைப்பு, இணைந்த அடையாளம் என்பனவே தனித்துவமான குறியீடுகள். இது தொடர்ந்தும் வலுப்படுத்தப்படுவது மிகவும் முக்கியமானது.

இதன் மூலம் சார்க் அமைப்பிலுள்ள நாடுகளுக்கிடையிலும், நாட்டு மக்களுக்கிடையிலும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்த முடியும்.

சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதெனில், 1985 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பை அனைவரும் இணைந்து சிறப்பாகக் கட்டிக்காத்து வந்துள்ளோம் என்பதில் நாம் அனைவரும் பெருமிதமடைய வேண்டும்.

இதனைத் தொடர்ந்தும் முன்னெடுத்தாலே அடுத்த சந்ததிக்கும் இணைந்த ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுக்க முடியும்.

தீர்மானங்களை நிறைவேற்றுதல், ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொண்டுவருதல், மக்களின் சுதந்திரமான நடமாட்டம் போன்ற விடயங்களில் எம் முன்னால் காணப்படும் சவால்களை வெற்றி பெறுவதாயின் சில தீர்க்கமான முடிவுகளை நாம் எடுக்கவேண்டும். இவ்வாறான நிலையில் சார்க் அமைப்பிற்கும் அதன் நடவடிக்கைகளுக்கும் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் ஆதரவு வழங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive