Wednesday, December 8, 2010

லண்டன் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு ஜனாதிபதிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டனப் பேரணி.

Wednesday, December 8, 2010
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நேற்று மாபெரும் கண்டனப் பேரணியொன்று நடைபெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை அமைப்பாளர் வேல்முருகு தங்கராசா மற்றும் இணைப்பா ளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் யாழ். மாவட்டத்தின் பதினொரு தொகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், கல்வியாளர்கள், சமூக சேவையாளர்கள், இளைஞர்கள், யுவதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக த்தில் உரையாற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை மற்றும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களால் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களைக் கண்டித்தே இப்பேரணி நடைபெற்றது.

நேற்றுக் காலை 10 மணிக்கு யாழ் துரையப்பா விளையாட்டரங்கிலிருந்தும், காலை 9 மணிக்கு பாஷையூர் அந்தோனியார் கோவில் முன்றலிலிருந்தும் ஆரம்பமான இருவேறு பேரணிகள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தன.

ஜனாதிபதியின் உருவப் படங்களைத் தாங்கியவாறும், தேசியக் கொடியைத் தாங்கியவாறும், ஜனாதிபதிக்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களைக் கண்டிக்கும் வாசகங்களை உள்ளடக்கிய சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஊர்வலமாக வந்தனர்.

நாட்டை மீட்ட ஜனாதிபதிக்கு நன்றி” நாடு ஒன்றுபட்டு விட்டது, “பயங்கரவாத புலிகளை முழுமையாக ஒழியுங்கள்”, “ஜனாதிபதியின் துணிச்சலான முடிவும் மக்களின் நல்லாசியால் நாட்டில் பயங்கரவாதம் ஒழிந்தது”, “ஜனாதிபதியின் மக்கள் சேவையைப் பாராட்டுகிறோம்” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் சென்றவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இப்பேரணியால் யாழ் நகரில் சிறிதுநேரம் வாகன நெரிசல்கள் ஏற்பட்டிருந்தன.

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive