Saturday, April 16, 2011

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் அரசாங்கம் ஆராய்வு!

Saturday, April 16, 2011

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமித்திருந்த மூவர் கொண்ட நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன் அவ்வறிக்கை தவறானது என்பதுடன் பாரபட்சமானதாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படையில் பல தவறுகளைக் கொண்டுள்ளதென்றும், பல குறைபாடுகள் இருப்பதாகவும், எந்த வகையிலும் உறுதிப்படுத்தாமல் பல தகவல்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாரபட்சமான தகவல்களை பயன்படுத்தியே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை ஐ.நா. சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகவும் தமது தரப்பு விளக்கத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக தெளிவுபடுத்துவதற்கு கலந்துரையாடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Followers

Blog Archive