Monday, July 18, 2011

அரசாங்கம்-த.தே.கூ.பேச்சுவார்த்தை போகாத இடத்துக்கு ஆளுக்கு ஆள் வழி காட்டுகிறார்களா? ஆபத்து தமிழர்களின் அரசியற் கோரிக்கைகளுக்கே!முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!:-பகுதி-4.

Monday, July 18, 2011
ததேகூக்காரர்கள் உண்மையில் இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் அரசியற் சூழ்நிலைகளை ஆண்டுநிற்கும் உள்நாட்டு வெளிநாட்டுக் காரணிகள் அனைத்தையும் தமது கணக்கில் சரியாக எடுத்துக் கொண்டு அரசுடனான பேச்சுவார்த்தை மூலம் ஓர் அரசியற் தீர்வினை எப்படியாயினும் நடைமுறைக்குக் கொண்டு வ்நதுவிட வேண்டும் என்ற இலக்கினை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தைக் களத்தில் செயற்பட வேண்டும். அதன்மூலம் -

காரிய ஆற்றல் கொண்ட ஒரு மாகாண ஆட்சியை வடக்கு கிழக்கில் செயற்பட வைக்க வேண்டும்
வடக்கு கிழக்கில் மாகாண ஆட்சியின் கீழான சிவில் நிர்வாகங்களை முறையாக ஆக்கி அவை திறம்பட மக்கள் சேவைகளை ஆற்றும் நிலையை ஏற்படுத்த வேண்டும்,
யுத்தத்தால் சிதைந்து போன எமது மக்களின் சமூக பொருளாதார வாழ்வை மீளக் கட்டியெழுப்பி மக்கள் பட்ட துன்ப துயரங்களிலிருந்து விடுபட்டு அவர்கள் உடலாலும் மனதாலும் மீண்டும் வலிமை பெறும் நிலை ஏற்படுவதற்கான அடிப்படைகளை ஆக்க வேண்டும்,

யுத்தத்தால் சீரழிக்கப்பட்டுப் போய்க்கிடக்கும் எமது வடக்கு கிழக்கு தேசத்தின் பொருளாதாரம், சமூகசேவை மற்றும் நிர்வாக உட்கட்டுமானங்களை எல்லாம் அதிவிரைவாகக் கட்டியெழுப்பும் ஆட்சி யொன்று மாகாண மட்டத்தில் செயற்பட வகை செய்ய வேண்டும்,
எமது வடக்கு கிழக்கு தேசத்தில் மீண்டும் விவசாயமும் மீன்பிடியும் கால்நடை வளர்ப்புகளும் செழிப்புற வைக்கும் மாகாண ஆட்சி ஒன்று செயற்பட வேண்டும்,
எமது தேசத்தில் புதிய காலத்துடன் தொடர்பான தொழில் வளர்ச்சிகள் மற்றும் சேவைத்துறை வளர்ச்சிகளை எழுச்சி பெற வகை செய்யும் மாகாணத் தலைமையொன்று அரசியல் அதிகாரத்தடன் செயற்பட வேண்டும்
எமது தேசத்தில் சட்டம், ஒழுங்கு, நீதி, மானுட உரிமைகள், தனிமனித அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகியவற்றை நிலை நாட்டுவதில் காத்திரமான பங்கைச் செலுத்துகின்ற மாகாண மக்களாட்சியை நிலைநாட்ட வேண்டும்;.

இந்த இலக்குகளை அடையும் வகையான ஏற்பாடுகளே இன்றைய இலங்கைத் தமிழ் மக்களின்
அபிலாஷைகளிற் பிரதானமானவைகளாகும்- இவற்றை சமாதானமான முறையில் அடைவதற்காகவே அரசுடனான சந்திப்புகளும் பேச்சுவார்த்தைகளும் பயன்பட வேண்டும்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதென்பது ஒரு குறிப்பிட்ட கட்சியின் அல்லது சில கட்சிகளுக்கு மட்டுமே உரிய அரசியல் வேலைத்திட்டமல்ல. மாறாக அந்தத்தீர்வை வேண்டி நிற்கும் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அது ஒரு சமூக அரசியல் இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

அந்த இயக்கத்தை முன்னெடுக்கும் கடமையையும் தலைமைப் பொறுப்பையும் தற்போது தமிழ் மக்கள் ஜனநாயக பூர்வமாகவும் சட்ட ப+ர்வமாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரிடமே பிரதானமாக ஒப்படைத்திருக்கிறார்கள்.

மக்களின் பிரதிநிதிகள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பொது அபிலாஷைகள் தொடர்பாக எப்போதும் அக்கறையோடிருக்க வேண்டும். ஆனால் அதற்காக பொதுமக்களிற் சிலரோ அல்லது தமது ஆதரவாளர்களிற் சிலரோ தமது நியாயமான முயற்சிகளுக்கோ, சரியான அரசியல் முன்னெடுப்புகளுக்கோ தடைக்கட்டை போடுபவர்களாக செயற்படுவதை அனுமதிப்பது ஒரு பொறுப்பான அரசியல் சமூகத் தலைமைக்கு அழகுமல்ல சரியுமல்ல.

தலைவர்கள் தமது முன்னெடுப்புகளும் முயற்சிகளும் நியாயமானவை முறையானவை மக்களின் பொது நலன்களுக்கு அவசியமானவை என்று தாம் கண்டு துணிந்தால், அதன்பின்னர் அவை தொடர்பாக பொது மக்கள் மத்தியிலோ தமது ஆதரவாளர்கள் மத்தியிலோ குழப்பம் ஏதும் நிலவும் இடத்து அவர்களுக்கு தமது அரசியல் பொருளாதார நிலைப்பாடுகள் பற்றியும் தமது முயற்சிகள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்பாகவும் பகிரங்கமாகத் துணிந்து தெளிவுபடுத்தி தமது ஆதரவாளர்களையும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் தம்மோடு துணையாக அணைத்துச் செல்லல் வேண்டும் - வழி நடத்திச் செல்லல் வேண்டும்.

ததேகூவினர் அரசுடன் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தையின் முறைகள் மற்றும் வகைகளை அவதானிக்கின்ற போதும், அவை தொடர்பாக முன்னுக்குப்பின் முரணாக விடுக்கும் அறிக்கைகளை நோக்குகின்ற பொழுதும் அவர்கள் இலங்கைத் தமிழர்களின் இன்றைய அரசியல் பொருளாதார சமூக காலவர்த்தமான நியதிகள் நியாயங்களைக் கணக்கிலெடுத்து அவசியமானதும் அவசரமானதுமான அரசியற் தீர்வைக் காண்பதில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

மாறாக,

தங்களுக்குள் ஒருவரையொருவர் வெட்டியோடும் போக்கைக் கொண்டிருப்பது தெரிகிறது.
வெளிநாடுகளில் இருக்கும் தமிழீழத் தீவிரவாதிகளையும் உள்நாட்டில் இருக்கும் அரச எதிர்ப்புவாதிகளையும் திருப்திப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டுவதே தெரிகிறது.
அரசியற் தீர்வொன்றை எட்டுவதில் காட்டப்படும் அக்கறையை விட அதிகமாக இந்த பேச்சுவாத்தைக் களம் மூலம் வெவ்வேறு வகையான தனிப்பட்ட அரசியல் பொருளாதார லாபங்களில் அக்கறை காட்டுகிறார்கள் என்று கூறப்படுவதை, அப்படியல்ல என்று மறுப்பதற்கான நியாயங்களை ததேகூகாரர்கள் தருவதாக இல்லை.

தமிழர்கள் பூரண திருப்தியோடு இரு கரம் நீட்டி ஏற்றுக் கொள்ளக் கூடிய ஓர் அரசியற் தீர்வை மஹிந்த சிந்தனையாளர்கள் தாமாக முன்வந்து மனமுவந்து அங்கீகரிப்பதற்குத் தயாராக இல்லை என்று கண்டு பிடிப்பதற்கு பெரிய கற்றறிவும் நீண்ட பட்டறிவும் அவசியமில்லை.

அதை மீண்டும் மீண்டும் குழறிக் குழறிச் சொல்வதற்கு ஒரு கெட்டித்தனமும் தேவையில்லை. மக்கள் தமது பொன்னான வாக்குகளை நேரம் மினக்கெட்டு போட்டு தலைவர்களை தெரிவு செய்தது இந்தப் புழுத்துப்போன புண்ணாக்கு அறிக்கைகளை விடுவதற்காகவா?

தமிழர்கள் பூரண திருப்தியோடு ஏற்கக் கூடியதோர் அரசியற் தீர்வை மஹிந்த சிந்தனையாளர்கள் தாமாக மனமுவந்து முன்வந்து தரத் தயாராக இருப்பார்களேயானால் இந்தப் பேச்சுவாத்தை சுற்றுக்கள் எவையும் அவசியமற்றவை அல்லவா!

மஹிந்த சிந்தனையாளர்களுக்கும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்குமிடையில் பெரியதோர் இடைவெளி இருப்பதால்தானே அவை தொடர்பான அரசியற் பேச்சுவார்த்தைகள் அவசியமாகின்றன! அதனாற்தானே இந்திய அரசு இலங்கை அதிபருக்கு அரசியல் தீர்வு பற்றி சொல்ல வேண்டியேற்படுகிறது. இந்தச் சூழலின் விளைவாகத்தானே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அரசியற் தீர்வ தொடர்பாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை அவசியமாக்கியுள்ளது.

அரசியற் தீர்வுக்காக பேச்சுவார்த்தை என்னும் நடைமுறையைக் கடைப்பிடிப்பது அரசியல் விஞ்ஞானத்தில் காலம் காலமாக இருந்து வரும் ஒரு பிரதானமான பாகம். சர்வதேச அனுபவங்களினூடாக இந்த நடைமுறையை பிரயோகிப்பது தொடர்பில் பல கோட்பாடுகளும் தேற்றங்களும் விருத்தி செய்யப்பட்டுள்ளன.

பேச்சுவார்த்தை என்பது பல நடைமுறை நுட்பங்கள் நிறைந்த ஒரு கலை.

கருத்துக்கள் – நிலைப்பாடுகளின் வேறுபாடுகளைக் கொண்டவர்களிடையே நடைமுறைச் சாத்தியமான பொதுக் கருத்துக்களை – பொது நிலைப்பாடுகளைச் சித்தி பெறச் செய்வதற்கான சமரசங்களை நிலைநாட்டும் சமாதானமான முறையே பேச்சுவார்த்தை.

பேச்சுவார்த்தை என்னும் வழிமுறையைக் கடைப்பிடிப்பதில் ரகசியங்களும் பரகசியங்களும் உள்ளடங்கியிருக்கின்றன.

ஒரு பேச்சுவார்த்தையில் எந்தளவுக்கு ரகசியங்கள் பேணப்பட வேண்டும்.
எந்தெந்த விடயங்களில் எந்தெந்த அளவுக்கு மேல் ரகசியம் கட்டாயமாக்கப்படக் கூடாது,
எந்த அளவுக்கு பரகசியம் தவிர்க்க முடியாதது என்பன
என்ன விடயங்கள் பேசப்படுகின்றன,
யார் தொடர்பாகப் பேசப்படுகின்றன.
யார்யாருக்கிடையில் பேசப்படுகின்றன.
என்பவற்றோடெல்லாம் சம்பந்தப்பட்டவையாகும்.

தனிப்பட்ட வியாபாரிகள் தங்களுக்கிடையில் பேரம் பேசுவதில் ரகசியங்கள் பேணப்படலாம். அது அவசியமாகவும் இருக்கலாம். அது தனிப்பட்ட இரு பகுதியினரின் லாப நட்டங்களோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகும். ஆனால் பொது மக்களின் பொது விவகாரங்களில் வேறுபாடுகளினிடையே ஒற்றுமைகளைச் சாதிப்பதற்கென நடைபெறும் பேச்சுவார்த்தைகளின்; போது ரகசியம் என்பது அதற்கு மிகவும் அவசியமான குறைந்த பட்ச எல்லைக்கு மேல் பேணப்பட்டால் அந்த ரகசியம் பேணலானது பேச்சுவார்த்தை மூலம் அடையப்படவென முயற்சிக்கும் இலக்குகளுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்;.

அரச பிரதிநிதிகளும் ததேகூவினரும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் எட்டுத் தடவைகள் சந்தித்த போதும் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்ற கேள்விகளுக்கு அவை ரகசியங்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் சந்திப்புக்கள் முடிந்த ஒவ்வொரு கட்டத்திலும் இரு பகுதியினரும் வெளியிட்ட கருத்துக்களை உற்று நோக்கி ஆய்பவர்களுக்கு இங்கு நடந்து முடிந்த சுற்று சந்திப்புகளில் எதுவும் பேசப்படவில்லை என்பது பரகசியமாக உள்ளது.

அரசால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட அத்தனை தமிழ் இளைஞர்களினதும் பெயர்பட்டியலை அரசிடமிருந்து எடுக்காமல் விடமாட்டோம் என பகிரங்க சவால் விட்டார்கள். ஆனால் எட்டுத் தரம் சுற்றியும் ஒரு துண்டு பட்டியலையும் பெற்றதாக இல்லை.

ஆறு சுற்று சந்திப்புக்களுக்குப் பின்னர் ஐம்பத்திரண்டு கோரிக்கைகளை ததேகூவினர் அரசிடம் முன்வைத்திருப்பதாக ஊடகங்களில் கசிந்தன. அதில் எத்தனை அரசால் ஏற்கப்பட்டது எத்தனை அரசால் முற்றாக நிராகரிக்கப்பட்டது, எத்தனை விடயங்களில் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் காண வாய்ப்புக்கள் உள்ளன என அடையாளம் காணப்பட்டது என்றால் எதுவுமே நடக்கவில்லை.

ஐம்பத்திரண்டு கோரிக்கைகளை பேப்பரில் அச்சடித்து ரகசியமாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கு ஒரு கடித உறையும் ஜனாதிபதி அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வர ஒரு ஆளும் போதுமே. இதற்காகவா ஐந்து தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதிகள் ஆறு தடவைகள் சுற்றிச் சுற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்!

பின்னர் பன்னிரண்டு அம்சத் திட்டம் ஒன்றை அரசாங்கம் எட்டாவது சுற்றில் முன்வைக்கவுள்ளது என்றார் ததேகூவின் சட்டப் பேச்சாளர்.

எட்டாவது சுற்றில் எதுவுமே தரவில்லை என்று சொல்லிக் கொண்டு கைவீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு என வீடு நோக்கி விட்டார்கள்.

2010 நவம்பரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கேட்டதால் 2011 ஜூன் வரை அரசாங்க பிரதிநிதிகளும் ததேகூ பிரதிநிதிகளும் எட்டுத் தடவைகள் சந்தித்தார்கள்.

2011 ஜூனில் இந்திய உயர் அதிகாரிகளான சிவசங்கர் மேனன் மற்றும் நிருபமாராவ் ஆகியோர் இலங்கை விஜயம் செய்து ஜனாதிபதியைச் சந்தித்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி அரசியற் தீர்வைக் காணும் கடமையை பாராளுமன்ற தெரிவுக் கமிட்டியொன்றிடம் விட்டுவிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளதன் மூலம் ததேகூவுடன் அரசியற் தீர்வுக்காக நடக்கும் சந்திப்புக்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கான முத்தாய்பபை வெளியிட்டுள்ளார் என்றே கருத வேண்டியுள்ளது.

ஆக மொத்தத்தில் புலியில்லா யுகத்தில் அரசு மற்றும் தமிழர் பிரதிநிதிகளுக்கு இடையே முதலாவது கட்டமாக எட்டுச் சுற்றுக்களாக நடந்த சந்திப்புக்கள் அரசியற் பேச்சுவார்த்தையென எதுவும் இல்லாமலே இந்தப் படக் காட்சி முற்றும் என முடிந்து விட்டதாகவே கொள்ள வேண்டியுள்ளது.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடர் சுற்று இனி எப்போது என்பது மிக விரைவில் பலராலும் எதிர்பார்க்கப்படவுள்ளது.

அரசியல் விவகாரங்கள் தொடர்பாக அரசுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கம் இடையே சந்திப்புக்கள் தொடர்ந்து இருப்பது அவசியமாகும்.

சந்திப்புக்களின் போது உடன்பாடான விடயங்கள் எவையெவை என்பதுவும், நிலைப்பாடுகள் ரீதியாக இடைவெளிகள் கொண்ட விடயங்கள் எவையெவை என்பதுவும், முரண்பாடாக உள்ள விடயங்கள் எவையெவை என்பதுவும
திட்டவட்டமாக அடையாளம் காணப்பட வேண்டும்.

ஒரு பேச்சுவார்த்தை செயன்முறையை வெற்றிகரமாக்குவதற்கு அப்பேச்சுவார்த்தையின் முதற்கட்டத்திலேயே வேறுபாடான விடயங்களையோ அல்லது முரண்பாடான விடயங்களையோ அந்தப் பேச்சுவார்த்தை தொடரின் நிகழ்ச்சி நிரலில் முன்னுரிமை கொண்டவையாக ஆக்கக் கூடாது,

எனவே முதலில், பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இருபகுதியினரும் என்னென்ன விடயங்களிலெல்லாம் உடன்பாடாக உள்ளனரோ அந்த விடயங்கள் அனைத்தையும் தெளிவாக அடையாளம் கண்டு அவற்றை முறையாக நிரல்படுத்தி ஓர் உடன்பாட்டு வரைவாக ஆக்க வேண்டும்.

அடுத்து, நிலைப்பாட்டுரீதியாக இடைவெளிகள் கொண்ட விடயங்கள் தொடர்பாக முதலில் அரச பிரதிநிதிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று சமரசங்கள் காணப்படல் வேண்டும். புரிந்துணர்வும் நம்பிக்கைகளும் விட்டுக் கொடுப்புகளும் இல்லாமல் சமரசம் காண முடியாது.

அதன்பின்னர், இருபகுதியினரிடையேயும் முரண்பாடானதாக உள்ள – அதாவது மிகவும் சிக்கலானதும் இணக்கம் காண்பதற்கு சிரமமானதுமான - விடயங்களில் எந்த விடயங்கள் உடனடிக்கட்டாயமாக உடன்பாடு காணப்பட்டு நடைமுறையில் நிறைவேற்றுவதற்கு அவசியமானவை என்று அடையாளம் கண்டு அவை தொடர்பாக முடிந்தளவு இணக்கம் காண முயல வேண்டும்.

ஏனைய முரண்பாடான விடயங்களை பேச்சுவார்த்தைகளுக்காகக் காலம் தள்ளிப் பின்போட்டுவிட்டு உடன்பாடு கண்ட விடயங்களை முடிந்த அளவு விரைவாக நடைமுறைக்குக் கொண்டு வருவதே ஒரு பேச்சுவார்த்தையை காரியசித்தியுடையதாக ஆக்கும் அணுகுமுறையாகும்..

ஒரு சில முரண்பாடுகளுக்காக அதுவும் உடன்பாடான விடயங்களை நடைமுறைப்படுத்தவதற்கு தடையாக இல்லாத விடயங்களுக்கு, அவை கொள்கைரீதியில் எவ்வளவுதான் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பினும், அவற்றுக்கு உடனடி முக்கியத்துவம் கொடுத்து உடன்பாடான விடயங்கள் அத்தனையையும் நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக இருப்பதென்பது பொறுப்பு வாய்ந்த சமூக அரசியற் தலைமைக்கு இழுக்காகும்.

அந்த முரண்பாடான விடயங்களுக்குத் தீர்வு காணும் முயற்சிகளை அக்கறையற்றவைகளாக புறந்தள்ளிவிட வேண்டியதில்லை. மாறாக அவற்றை பின்னொரு கட்டத்தில் உருவாகும் பேச்சவார்த்தைக் களங்களில் பார்த்துக் கொள்ளலாம் என முனைவதே விவேகமாகும்.

சமூகங்கள் இயங்கும் வரை - சமூகங்கங்களுக்கிடையில் உறவுகள் இருக்கும் வரை அரசியலும் இயங்கும். ஒரு ஆட்சித் தலைவரோடு அவர் ஆளும் தேசமும் முடிவதில்லை – அதே ஆட்சி;த் தலைவர் கூட தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டோடு மாறாது இருப்பார் என்றும் இல்லை.

அதேபோல ஒரு தடவை மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளே எப்போதும் அந்த மக்கள் சமூகத்தின் தலைவர்களாக இருப்பார்கள் என்றும் இல்லை. மாற்றம் ஒன்றே மாறாது என்பது இயற்கை. அதிலும் ஜனநாயகத்தில் அரசியல் மாற்றங்கள் மிகக் குறுகிய காலங்களிலேயே நிகழுகின்றன என்ற புரிதலோடு தமிழ் சமூகத்தின் இன்றைய தலைவர்கள் தங்கள் தலைமைக் காலகட்டத்தில் தம்மால் முடிந்த அளவுக்கு இந்த தமிழ் சமூகம் அனுபவிப்பதற்கு வகையாக ஒரு முற்போக்கான முன்னேற்றங்களை அடையும் நிலையை நிகழ்த்திக்காட்ட வேண்டும். இதற்காகவே இந்தக் கட்சிகளும், கூட்டங்களும், தேர்தல்களும், பதவிகளும், அரசியற் சந்திப்புகளும் எனக் கொள்ள வேண்டும்.

இத் தொடர் இங்கே முற்றுப் பெறுகிறது
சுபம்
நன்றி
வணக்கம்

இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்பட முடியாது–சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

Monday, July 18, 2011
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட முடியாது என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என நீதிமன்றின் தலைவர் சாங் ஹியூங் சொங் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விதிமுறைகளுக்கு புறம்பாக செயற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த ரோம் பிரகடனத்தில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் கைச்சாத்திடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் பரிந்துரையின்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் விசாரணை நடத்தப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சில நாடுகள் பிரகடனத்தில் கைச்சாத்திடாத காரணத்தினால் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்று குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

Monday, July 18, 2011
புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்று குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் சிலாபத்தைச் சேர்ந்த ஒருவரை கண்டி குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபம் கொக்கட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த அந்தனீஸ் செபஸ்தியன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

Followers

Blog Archive