Thursday, April 8, 2010

THURSDAY, APRIL 08, 2010


நாடாளுமன்றத் தேர்தலில் 51-55 வீத வாக்குப்பதிவு

இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலில் 51 முதல் 55 வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்தது.
அந்நிலையத்தின் இணைப்பாளர் ஹஜ்மிர் சற்றுமுன்னர் இத்தகவலை எமக்கு உறுதிப்படுத்தினார்.
ஏனைய கண்காணிப்பு நிலையங்களின் தகவலின் படி 55 வீதத்துக்கும் குறைவான வாக்குப்பதிவுகளே இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளன.
நாடாளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு 22 மாவட்டங்களில் 7620 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். பதிவு செய்யப்பட்ட 336 கட்சிகளும் 301 சுயேட்சை கட்சிகளும் தேர்தல் களத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் அமைதியான முறையில் தேர்தல்

வன்னித் தேர்தல் தொகுதியில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் இன்று தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் 26 சதவீதமான மக்கள் வாக்களித்திருக்கும் அதேவேளை, இடம்பெயர்ந்த மக்கள் 52 வீதமான வாக்களிப்பினை செலுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
வன்னித் தேர்தல் தொகுதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் இன்று குறிப்பிட்டார்

யாழ் மாவட்டத்தில் மந்தகதியில் வாக்களிப்பு

யாழ் மாவட்டத்தில் தேர்தல் வாக்களிப்பு வீதம் மந்தகதியில் இடம்பெற்றுவருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் 11 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றிருப்பதாகவும் தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நண்பகல் கடந்துவிட்ட நிலையிலும் கூட வாக்களிப்பில் சுறுசுறுப்பு காணப்படவில்லை எனவும் யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன

புத்தளத்தில் 33 வீதமான வாக்குப்பதிவு


புத்தளம் மாவட்டத்தில் இதுவரையில் 33 வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளது.
அசம்பாவிதங்கள் ஏதுமின்றி தேர்தல் அமைதியான முறையில் இடபெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
.

யாழ் மாவட்டத்தில் 15 சதவீத வாக்குப்பதிவு


யாழ் மாவட்டத்தில் 15 சதவீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றிருப்பதாக யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையக அலுவலகச் செய்திகள் தெரிவித்துள்ளன.
தற்போது வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்படும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதுடன், பாதுகாப்பு ஏற்பாட்டுடன் நிலையத்திற்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச்செல்லப்படவிருப்பதாகவும் உதவித் தேர்தல் ஆணையக அலுவலகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, இன்று மாலை 6 மணியளவில் தபால்மூல வாக்களிப்புக்கள் எண்ணப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
.

ஜனாதிபதி அம்பாந்தோட்டையில் வாக்களித்தார்



2010 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை ஆரம்பமாகியுள்ளன.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது வாக்கினை அம்பாந்தோட்டை டி.ஏ ராஜபக்ஷ மகா வித்தியாலயத்தில் பதிவு செய்ததாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது

நேரகாலத்தோடு வாக்களியுங்கள்

THURSDAY, APRIL 08, 2010
நேரகாலத்துடன் வாக்குச்சாவடிக ளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இறுதிநேர நெருக்கடிகளைத் தவிர்க்கவும் அமைதியான தேர்தலை உறுதி செய்யவும் வாக்காளர்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று ஆணையாளர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
வாக்காளர்கள் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையையும் ஆளடையாள த்தை நிரூபிக்கும் அடையாள அட்டையையும் தம்முடன் வாக் குச்சாவடிக்கு எடுத்துச்செல்ல வேண் டும். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபித்து வாக்குச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
குளறுபடிகள், குழப்பங்கள் ஏற்பட்டதாக புகார் கிடைக்கும் பட்சத் தில் குறித்த வாக்குச்சாவடியில் மேற்கொண்ட வாக்கெடுப்பு ரத்துச் செய்யப்படுமென்றும் ஆணையாளர் எச்சரித்துள்ளார்
.

196 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு இன்று தேர்தல்

THURSDAY, APRIL 08, 2010
ஏழாவது பாராளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. 196 உறுப்பினர்களை நேரடியாகத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 7620 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பாக போட்டியிடுகின்றனர். சுமார் 30 வருடங்களின் பின்னர் முதன் முறையாக 22 மாவட்டங்களிலும் அமைதியான சூழ்நிலையில் ஒரே நேரத்தில் நடைபெறுகின்ற பொதுத் தேர்தல் இதுவாகும்.
இதன்படி, நாடுபூராவும் அமைக்கப்பட்டுள்ள 11,875 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை வாக்களிப்புகள் நடைபெறுகின்றன.
இம்முறை தேர்தலில் 36 அரசியல் கட்சிகளும் 301 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மிகக் கூடுதலாக திகாமடுல்ல மாவட்டத்தில் 18 அரசியல் கட்சிகளும், 48 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. ஒரு கோடி 40 இலட்சத்து 88 ஆயிரம் பேர் இன்று தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர்.
சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் தேர்தலை நடத்துவதற்காக சகல ஒழுங்குகளையும் தேர்தல் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் முன்னெடுத்து ள்ளன. தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் நேற்று (7) பூர்த்தி செய்யப்பட்டிருந்ததோடு தேர்தல் கடமையில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்களும் பொலிஸாரும் நேற்று (7) கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர்.
மாவட்ட செயலகங்களுக்கு சமுகமளித்திருந்த வாக்களிப்பு நிலையங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள், உதவியாளர்கள், அரசாங்க ஊழியர்கள் ஆகியோருக்கு தேர்தல் தொடர்பாக அறிவூட்டும் கூட்டங்கள் நேற்று (7) காலை நடைபெற்றன. அதன் பின்னர் கச்சேரிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. வாக்களிப்பு நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த சகல உத்தியோகத்தர்களும் நேற்று (7) தமக்கு ஒதுக்கப்பட்ட நிலையங்களுக்கு பிரசன்னமாகியிருந்தனர்.
தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காத அரசாங்க ஊழியர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள வாக்காளர்களுக்காக 28 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு அவர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ். சுதாகரன் கூறினார்.
வாக்களிப்பு 4.00 மணிக்கு நிறைவடைந்த பின்னர் சகல வாக்குப் பெட்டிகளும் பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்கு தனியான வாக்கு எண்ணும் நிலையங்களும் இடம்பெயர்ந்தவர்களின் வாக்குகளை எண்ணுவதற்காக தனியான வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 1,387 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.
வெள்ளம் அல்லது அனர்த்தங்கள் ஏற்பட்டால் வாக்குப் பெட்டிகளை எடுத்து வருவதற்காக படகுகளை தயார் நிலையில் வைக்குமாறு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களை வந்தடைந்தவுடன் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இரவு 10.00 மணிக்குப் பின் முதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. நள்ளிரவுக்குப் பின்னர் தொகுதி மட்டத்திலான முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
தொகுதி மட்டத்திலான வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் வெற்றிபெற்ற கட்சிகள் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் எண்ணப்படும். நாளை பிற்பகலாகும் போது விருப்பு வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடியவர்களுக்கே தேர்தலில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கும் அடையாளத்தை உறுதி செய்து வாக்களிக்க முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். வாக்களிப்பு நிலையத்தில் இருந்து 500 மீற்றர் தூரம் வரையான பகுதி வாக்கெடுப்பு நிலையப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் தேவையின்றி நடமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏதும் வாக்களிப்பு நிலையத்தில் முறைகேடுகள் இடம்பெற்றால் குறித்த வாக்கெடுப்பு நிலையத்தின் வாக்களிப்புகள் இடைநிறுத்தப்படும் என தேர்தல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இங்கு மோசடிகள், அச்சுறுத்தல்கள் என்பன நடந்திருப்பது உறுதியானால் அங்கு அளிக்கப்பட்ட வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் - சிங்கள புத்தாண்டிற்கு முன் புதிய பாராளுமன்றத்தின் அமைச்சர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாராளுமன்றம் 22ம் திகதி கூட உள்ளது.

Followers

Blog Archive