Thursday, April 8, 2010

196 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு இன்று தேர்தல்

THURSDAY, APRIL 08, 2010
ஏழாவது பாராளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. 196 உறுப்பினர்களை நேரடியாகத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 7620 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பாக போட்டியிடுகின்றனர். சுமார் 30 வருடங்களின் பின்னர் முதன் முறையாக 22 மாவட்டங்களிலும் அமைதியான சூழ்நிலையில் ஒரே நேரத்தில் நடைபெறுகின்ற பொதுத் தேர்தல் இதுவாகும்.
இதன்படி, நாடுபூராவும் அமைக்கப்பட்டுள்ள 11,875 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை வாக்களிப்புகள் நடைபெறுகின்றன.
இம்முறை தேர்தலில் 36 அரசியல் கட்சிகளும் 301 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மிகக் கூடுதலாக திகாமடுல்ல மாவட்டத்தில் 18 அரசியல் கட்சிகளும், 48 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. ஒரு கோடி 40 இலட்சத்து 88 ஆயிரம் பேர் இன்று தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர்.
சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் தேர்தலை நடத்துவதற்காக சகல ஒழுங்குகளையும் தேர்தல் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் முன்னெடுத்து ள்ளன. தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் நேற்று (7) பூர்த்தி செய்யப்பட்டிருந்ததோடு தேர்தல் கடமையில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்களும் பொலிஸாரும் நேற்று (7) கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர்.
மாவட்ட செயலகங்களுக்கு சமுகமளித்திருந்த வாக்களிப்பு நிலையங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள், உதவியாளர்கள், அரசாங்க ஊழியர்கள் ஆகியோருக்கு தேர்தல் தொடர்பாக அறிவூட்டும் கூட்டங்கள் நேற்று (7) காலை நடைபெற்றன. அதன் பின்னர் கச்சேரிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. வாக்களிப்பு நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த சகல உத்தியோகத்தர்களும் நேற்று (7) தமக்கு ஒதுக்கப்பட்ட நிலையங்களுக்கு பிரசன்னமாகியிருந்தனர்.
தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காத அரசாங்க ஊழியர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள வாக்காளர்களுக்காக 28 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு அவர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ். சுதாகரன் கூறினார்.
வாக்களிப்பு 4.00 மணிக்கு நிறைவடைந்த பின்னர் சகல வாக்குப் பெட்டிகளும் பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்கு தனியான வாக்கு எண்ணும் நிலையங்களும் இடம்பெயர்ந்தவர்களின் வாக்குகளை எண்ணுவதற்காக தனியான வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 1,387 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.
வெள்ளம் அல்லது அனர்த்தங்கள் ஏற்பட்டால் வாக்குப் பெட்டிகளை எடுத்து வருவதற்காக படகுகளை தயார் நிலையில் வைக்குமாறு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களை வந்தடைந்தவுடன் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இரவு 10.00 மணிக்குப் பின் முதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. நள்ளிரவுக்குப் பின்னர் தொகுதி மட்டத்திலான முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
தொகுதி மட்டத்திலான வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் வெற்றிபெற்ற கட்சிகள் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் எண்ணப்படும். நாளை பிற்பகலாகும் போது விருப்பு வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடியவர்களுக்கே தேர்தலில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கும் அடையாளத்தை உறுதி செய்து வாக்களிக்க முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். வாக்களிப்பு நிலையத்தில் இருந்து 500 மீற்றர் தூரம் வரையான பகுதி வாக்கெடுப்பு நிலையப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் தேவையின்றி நடமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏதும் வாக்களிப்பு நிலையத்தில் முறைகேடுகள் இடம்பெற்றால் குறித்த வாக்கெடுப்பு நிலையத்தின் வாக்களிப்புகள் இடைநிறுத்தப்படும் என தேர்தல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இங்கு மோசடிகள், அச்சுறுத்தல்கள் என்பன நடந்திருப்பது உறுதியானால் அங்கு அளிக்கப்பட்ட வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் - சிங்கள புத்தாண்டிற்கு முன் புதிய பாராளுமன்றத்தின் அமைச்சர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாராளுமன்றம் 22ம் திகதி கூட உள்ளது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive