Sunday, November 13, 2011

முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவதாசன் அவர்கள் இன்று மறைவு!

Sunday, November 13, 2011
பழம் பெரும் தொழில் சங்கவாதியும், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும், இடதுசாரி சிந்தனை போக்காளரும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி,(EPRLF) ஆகியவற்றில் அங்கத்தவராக இருந்தவருமான சிவதாசன் அவர்கள் இன்று மறைவுற்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.

முன்னாள் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவருமான தோழர் எஸ்.சிவதாசன் அவர்கள் இன்று மாலை தனது 77வது வயதில் இயற்கை எய்தினார். அவர் 50 வருட கால அரசியல் வரலாற்றைக் கொண்டவர் என்பதுடன் மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற சிறந்த மொழி பெயர்ப்பாளருமாவார்.

தனது மாணவப் பருவத்திலேயே இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டவர் என்பதுடன் வடக்கு கிழக்கில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் போராட்டங்களில் பங்குபற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறைக்கும் சென்றவர்.

சிவதாசன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்த காலத்தில் தொழிற் சங்கப் பணிகளில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றியவர். இலங்கைத் தொழிற் சங்க சம்மேளனத்தின் பிரதிநிதியாக இலங்கைப் போக்குவரத்துச் சபை தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலை ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனம் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை போன்றவற்றில் தொழிற்சங்கங்களைக் கட்டியெழுப்பியதுடன் அந்த அமைப்புகளின் தொழிற்சங்க உரிமைகளுக்காகவும் தொழிலாளர்களது நலன்களுக்காகவும் அயராது போராடியவர்.

இவற்றிற்கும் மேலாக இலங்கைத் தொழில் நீதிமன்றத்தில் இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதியாக இருந்து தொழில் நீதிமன்றங்களில் வாதாடி தொழிலாளர்களுக்கு பல வெற்றிகளை ஈட்டிக் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றிய காலத்தில் அப்போதைய பிரபல அரசியல் தலைவர்களாக விளங்கிய தோழர்களான டொக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க பீற்றர் கெனமன் கே.பி.சில்வா போன்றோருடனும் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டதின் பின்னர் தோழர் என்.சண்முகதாஸனுடன் இணைந்து பணியாற்றிய சமயம் தோழர்களான பிரேம்லால் குமாரசிறி எஸ்.டி.பண்டாரநாயக்க போன்றவர்களுடனும் இணைந்து பணியாற்றினார்.

அதேசமயம் வடபகுதியில் சகலரது நன்மதிப்பைப் பெற்றிருந்த ஆசிரியர் மு.கார்த்திகேசன் தோழர் வி.ஏ.கந்தசாமி ஆகியோருடனும் இணைந்து பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வழிநடாத்தியவருமாவார்.

சிவதாசன் (EPRLF) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்து செயற்பட்டபோது 1986ம் ஆண்டில் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டு மிகவும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் நீண்ட காலமாகத் சிறை வைக்கப்பட்டிருந்தார். புலிகளது பிடியிலிருந்து தப்பி வந்த அவர் தனது நெருக்கமான சகாக்களுடன் பல கிராமங்களில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு புலிகளது ஜனநாயக மறுப்புக்கு எதிராகவும் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் மக்களை அணி திரட்டுவதில் தனது உயிரையும் துச்சமென மதித்துச் செயற்பட்டவர்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையின் மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டு வடக்குக் கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவதிலும் தமிழ் பேசும் மக்களின் இறுதித் தீர்வுக்கு இந்தியாவின் உதவியும் ஒத்தாசையும் அவசியம் என்பதையும் உணர்ந்து செயலாற்றியவர் என்பதுடன் தோழர் பத்மநாபாவின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவராகவும் இருந்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இரு தடவைகள் தேர்வு செய்யப்பட்டதுடன் அக்கட்சியின் முக்கியஸதர்களில் ஒருவராகவும் இருந்து மக்கள் பணியாற்றியவர். பின்னர் பனை அபிவிருத்திச் சபையின் தலைவராகவுமிருந்து சபையின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். இக்காலகட்டத்தில் கொழும்பில் அவரது வாகனத்தை இலக்கு வைத்து புலிகளால் 2006.08.09 அன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பில் படுகாயமடைந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.

மீண்டுமொரு போருக்கு தயாராக வெளிநாடுகளிலுள்ள புலிகள் முனைப்பு!

Sunday, November 13, 2011
மாலைதீவில் சார்க் மாநாட் டில் பங்கேற்க வந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைக்காட்சி நிருபருக்கு அளித்துள்ள பேட்டியில் முதல்வர் ஜெ. இலங்கைக்கு வரட்டும் அங்கு என்ன நடக் கிறது என்ற பணிகளை அவர் பார்க்கட்டும் அவரை வரவேற் கிறோம் என்றார்.

மேலும் அவர் அளித் துள்ள பேட்டியில்; புலிகள் மற்றும் இவரது ஆதர வாளர்கள் வெளி நாடுகளில் பணம் வசூலித்து வருவதாகவும், மேலும் ஒரு போருக்கு தயாராக இருப்ப தாகவும் இது குறித்து எங்களிடம் சரண் அடைந்துள்ள புலிகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. புலிகளின் அச்சுறுத்தல் இருக் கத்தான் செய்கிறது. புலிகள் மீண்டும் உயிர்ப்பித்து விடுவார்களோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது. நாங்கள் கண் காணித்து தான் வருகிறோம்.

தமிழர்கள் குடியமர்த்துதல் தொடர்பாக இந்தியா மற்றும் உலக நாடுகள் வந்து பார்த்துக் கொள்ளலாம். ஜெ, வை வர வேற்பீர்களா என்று கேட்டதற்கு தாராளமாக அவர் வரட்டும், அவரை வரவேற்கிறோம். இங்கு என்ன நடக்கிறது என்பதை அவரே நேரில் தெரிந்து கொள்ளட்டும் என்றார்.

இலங்கை சீனா உறவின் காரணமாக இந்திய உறவில் பாதிப்பு வருமா என்று கேட்ட போது, இந்தியா எங்களின் தொப்புள் கொடி உறவு என்றார். இந்தியா எங்களுடைய உறவினர், சீனா எங்களுடைய நண்பர் இவ்வாறு கூறி முடித்துக் கொண்டார்.

Followers

Blog Archive