Thursday, September 30, 2010

சரத் பொன்சேகாவுக்கு 30 மாதக் கடூழியச் சிறை

Thursday, September 30, 2010
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கீகரித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பின் மூலம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 30 மாதக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதியின் சிபாரிசு அடங்கிய ஆவணம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

இராணுவ நீதிமன்றத்தின் நியமனம் மற்றும் தண்டனைகளை உறுதிப்படுத்தும் அதிகாரம் ஆகியவற்றைக் கொண்டவரும் முப்படைத் தளபதியுமான ஜனாதிபதியால் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு செப்டெம்பர் 29 ஆம் திகதி - அதாவது நேற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்புக்கு விசேட அதிகாரசபை வேண்டுமென்கிறார் விமல்.

Thursday, September 30, 2010
கொழும்பு நகரை விசேட அதிகார சபையின்கீழ் கொண்டுவரவேண்டுமென பொறியியல் சேவை, வீடமைப்பு, மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிக்கிறார்.

கொழும்பில் நேற்று, தேசிய நிர்மாண சேவைகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விருது வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்று தனது வெற்றிகளைவிட தோல்விகளுக்கு உரிமைகோரும் நிறுவனமாகக் கொழும்பு மாநகரசபை உள்ளது என்பதைக் கவலையுடன் கூறவேண்டுமென அமைச்சர் சொன்னார்.

"இன்று நாட்டின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானமெடுக்கும் நிலையில், தலை நகர் தொடர்பாக விசேட தீர்மானத்தை எடுக்கவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. எனவே கொழும்பு நகரை விசேட அதிகார சபையின்கீழ் கொண்டுவந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென நான் கருதுகிறேன்." என அமைச்சர் விமல் வீரவன்ச அங்கு கூறினார்.

இதன்மூலம் பல வருடங்களாக சிரமங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்குத் தீர்வு கிடைக்குமென்றும் வறிய மக்களுக்குச் சிறந்த வீடமைப்புத் திட்டங்களை அல்லது மாடிவீட்டுத் திட்டங்களை அமைத்துக் கொடுக்க முடியுமெனவும் அவர் சொன்னார்

கடவுச் சீட்டைப் பெறுவது சுலபமாகிறது.

Thursday, September 30, 2010
எம்(M) மற்றும் என் (N) தொடரிலான கடவுச் சீட்டு உரிமையாளர்கள் புதிதாகக் கடவுச் சீட்டினைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை இலகுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தில் இலகுவான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகக் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா குறிப்பிட்டார்.

நாளைய தினம் புதிய விண்ணப்பப் படிவம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விண்ணப்பப் படிவத்தை நிரப்புவது இலகுவானதாகுமென்றும் அதனை உறுதிப்படுத்தத் தரகர்களின் பின்னால் அலையத் தேவையில்லையெனவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் கூறினார்.

புதிய விண்ணப்பப் படிவத்தை சமாதான நீதவான் அல்லது சட்டத்தரணி ஆகியோர் உறுதிப்படுத்துவது அவசியமில்லை எனவும் விண்ணப்பதாரியின் பெயர், பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம், கையொப்பம் மற்றும் புதிதாகப் பிடிக்கப்பட்ட புகைப்படம் என்பன மாத்திரமே போதுமானதாகும்.

எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் கடவுச் சீட்டுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதற்கும் அவற்றை உறுதிப்படுத்துவதற்கும் சுமார் 300 ரூபா வரை தரகர்களினால் அறவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய விண்ணப்பப் படிவம் ஒரேயொரு தாளில் அச்சிடப்பட்டுள்ளதால் அவற்றைக் கள்ஞ்சியப்படுத்துவதும் சுலபமாக இருக்குமெனக் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா குறிப்பிட்டார்.

வடகிழக்கில் எதிர்பார்த்த பொருளாதாரப் பிரதிபலன் இல்லையாம்.

Thursday, September 30, 2010
வடகிழக்குப் பிரதேசங்களில் எதிர்பார்த்த பொருளாதாரப் பிரதிபலன்கள் உரிய முறையில் கிடைக்கவில்லையெனக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்றுக் கூடிய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொருளியல் நிபுணர் கலாநிதி சமன் கெலேகம சாட்சியமளிக்கையிலேயே இந்தக் கருத்தை வெளியிட்டார்.

வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் பொருளாதார அனுகூலங்களைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கத்தின் ஒட்டுமொத்தச் செயற்பாடுகளும் வலுவற்றதாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டார்.

கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சியிலும் அரசாங்கம் செயலிழந்துள்ளது என்றும் அவ்வாறு இடம்பெற்ற காலத்தில் ஜனாதிபதி அரசியல் அமைப்பு மற்றும் நிறைவேற்றதிகாரம் என்பவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவது இலகுவான காரியமாக அமையவில்லை எனவும் கலாநிதி சமன் கெலேகம கூறினார்.

இதன்மூலம் போர்நிறுத்தம் செயலிழந்தமையை அவதானிக்கமுடிந்ததாக அவர் ஆணைக்குழுவின் முன்னர் சுட்டிக்காட்டினார்.

Followers

Blog Archive