Wednesday, November 24, 2010

தமிழ் கட்சிகளின் அரங்கம் அமர்வை கொழும்பில் நடத்தியது.

Wednesday, November 24, 2010
கூட்டத்தில் மீள்குடியேற்றம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பன குறித்து ஆராயப்பட்டது. இலங்கை அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்தியாவின் அனுசரணை தொடர்பாகவும் முரண்பட்ட அபிப்பிராயங்கள் நிலவிய போதும் நீண்ட நேர கருத்துப்பரிமாற்றத்தின் பின்னர் முடிவுகள் எட்டப்பட்டன.

ஏற்கனவே தமிழ் கட்சிகளின் அரங்க கூட்டத்தில் பேசப்பட்டதற்கிணங்க இரண்டாவது தடவையாக பதவியேற்றுள்ள ஜனாதிபதியிடம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க கோருவதெனவும், மீள்குடியேறிய மக்கள் அனைவருக்கும் ஒரேசீராக அரசின் உதவிகள் கிடைக்க செய்வது தொடர்பாகவும், இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடுவதுடன் மீள் குடியேற்றம் முற்றுப்பெற்றதாக கருதாமல் அவர்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஏற்ற வழிவகைகளை தொடர்சியாக மேற்கொள்ள வேண்டியிருப்பது தொடர்பாகவும் ஜனாதிபதியை சந்தித்து எடுத்துக் கூறுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அவர்களை சந்தித்து மீள்குடியேற்றம், இனப்பிரச்சினை தீர்வு போன்ற விடயங்களில் இந்தியாவின் ஒத்துழைப்பை கோருவதெனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், பத்மநாபா ஈபிஆர்எல்எவ், ஈபிடிபி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறி ரெலோ, ஈரோஸ், ஆகிய கட்சிகளினதும் ஈழ எதிலியர் மறுவாழ்வு கழகம், மனித உரிமைகள் இல்லம் ஆகிய தொண்டு நிறுவனங்களினதும் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிட்ட வேண்டும், இதற்கு தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை வேண்டும் என்ற அக்கறையுள்ள பொதுமக்களும் இதில கலந்து கொண்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தனர்.

இதனிடையே, தமிழ் கட்சிகளின் அரங்கமானது, எதிர்வரும் 28 ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive