Saturday, September 10, 2011

எந்தவொரு வெளிநாட்டு அழுத்தம் காரணமாகவும் அரசாங்கம் அவசரகால சட்டவிதிகளை நீக்கவில்லை-லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன!

Saturday, September 10, 2011
எந்தவொரு வெளிநாட்டு அழுத்தம் காரணமாகவும் அரசாங்கம் அவசரகால சட்டவிதிகளை நீக்கவில்லை. நாட்டுக்கு தற்போது அவசரகாலச் சட்டம் தேவையில்லை என்று கருதியமையினாலேயே ஜனாதிபதி அதனை நீக்க தீர்மானித்தார்.எமது அரசாங்கம் யுத்த காலத்திலேயே எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் யுத்தத்தை நடத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம் என்று பதில் அமைச்ரவை பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வு என்பவற்றின் காரணமாக அவசரகால சட்டத்தை நீக்கியதாக கூறப்படுகின்றதே? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அமைச்ர் அங்கு மேலும் கூறியதாவது,

யுத்த காலத்தில் எங்களுக்கு எவ்வாறான வெளிநாட்டு அழுத்தங்கள் வந்தன என்று உங்களுக்கு தெரியும். பொருளாதாரத் தடை மற்றும் நிதியுதவி நிறுத்தம் என பல அழுத்தங்கள் வந்தன.

ஆனால் அதுபோன்ற எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணியாத அரசாங்கம் தற்போது அவசரகாலச் சட்டத்தை நீக்கும் விடயத்துக்கும் மட்டும் அடிபணியும் என்று கருதுகின்றீர்களா?

எந்தவொரு வெளிநாட்டு அழுத்தம் காரணமாகவும் அரசாங்கம் அவசரகால சட்டவிதிகளை நீக்கவில்லை. நாட்டுக்கு தற்போது அவசரகாலச் சட்டம் தேவையில்லை என்று கருதியமையினாலேயே ஜனாதிபதி அதனை நீக்க தீர்மானித்தார்.

மேலும் யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்தே அவசரகால சட்டவிதிகளை படிப்படியாக அரசாங்கம் நீக்கிவந்தது. தற்போது முற்றாக நீக்கியுள்ளது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive