Saturday, September 24, 2011

ஜெனிவாவில் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களுடன் சமரசிங்க தொடர்ந்து சந்திப்பு!

Saturday, September 24, 2011
ஜெனிவாவில் தங்கியுள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் தூதுவருமான மஹிந்த சமரசிங்க தொடர்ந்து மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களையும் நிரந்தர பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றார்.

எதிர்வரும் 30 ஆம் திகதிவரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் சமரசிங்க அதுவரை ஜெனிவாவில் தங்கியிருந்து முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் கூட்டத் தொடரில் பங்கெடுத்த இலங்கைத் தூதுக்குழுவினர் கடந்த 16 ஆம் திகதி நாடு திரும்பியிருந்தனர். எனினும் மீண்டும் கடந்த 21 ஆம் திகதி புதன்கிழமை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவா பயணமானார்.

இந்நிலையில் ஜெனிவாவில் இருந்தவாறு கேசரிக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சமரசிங்க எதிர்வரும் 30 ஆம் திகதிவரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. அதுவரை நான் ஜெனிவாவில் தங்கியிருந்து பல முக்கியஸ்தர்களுடன் சந்திப்புக்களை நடத்திவருகின்றேன்.

மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களையும் நிரந்தர பிரதிநிதிகளையும் அடிக்கடி சந்தித்து இலங்கையின் முன்னேற்ற நிலைமை தொடர்பில் தெளிவாக விளக்கி வருவதுடன் இலங்கை தொடர்பான போலிக் குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளித்துவருகின்றேன் என்று கூறினார். _

No comments:

Post a Comment

Followers

Blog Archive