Friday, September 9, 2011

இலங்கையின் இறைமையை பாதுகாக்க சீனா ஆதரவு பிரதமர் தி.மு. ஜயரட்னவிடம் உறுதிமொழி!

Friday, September 09, 2011
விரைவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தில் எல்.ரி.ரி.ஈக்கு எதிரான யுத்தத்தின் போது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் இலங்கை ஈடுபட்டதென்று சர்வதேச ரீதியில் விசாரணையொன்றை ஏற்படுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொண்டுவர எவராவது முயற்சி செய்தால் இலங்கையின் இறைமையை பேணிப் பாதுகாப்பதற்கு சீனா தன்னுடைய முழு ஆதரவையும் நல்குமென்று உறுதியளித்துள்ளது.

சீனாவிற்கு சென்றிருந்த பிரதமர் டி.எம். ஜயரத்னவை சந்தித்த போது அந்நாட்டின் முக்கிய தலைவர்களின் ஒருவரான கூ பெங்குவா இவ் உறுதிமொழியை அளித்தார். இலங்கை பிரதமர் சீனாவின் சியாமென் நகரில் நடைபெற்ற சீனாவின் 15 சர்வதேச முதலீட்டு மற்றும் வர்த்தக கண்காட்சியிலும் கலந்து கொண்ட சந்தர்ப்பத்திலேயே சீனாவின் இந்தத் தலைவர் உறுதிமொழியை வழங்கினார்.

இலங்கை தனது தேசிய சுதந்திரத்தையும், இறைமையையும் தன்னுடைய நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கு எடுக்கும் சகல முயற்சிகளுக்கும் சீனா தொடர்ந்தும் உதவி செய்யுமென்று கூ பெங்குவா உறுதியளித்தார்.

சீனா இலங்கை இன்று அபிவிருத்திப் பாதையில் முன்னேறிக்கொண்டிருப்பது குறித்து பெருமை படுகிறதென்றும் அதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் சிறப்புற்று விளங்குகிறதென்றும் கூ பெங்குவா இலங்கை பிரதமரிடம் தெரிவித்ததாக சின்யுவா செய்தி சேவை அறிவித்தது.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் கொண்டுவரப்படும் என்ற தகவலை அறிந்த பின்னரே சீனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கூ பெங்குவா இந்த கருத்தை தெரிவித்தார்.

சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு சர்வதேச உரிமைகளை பேணிப்பாதுகாக்கும் அமைப்பு என்ற வகையில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது நடந்த மனித உரிமை குற்றச் செயல்களை விசாரணை செய்யும் இலங்கையின் உள்ளூர் விசாரணைகள் சரியான முறையில் நடைபெற வில்லையென குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive