Tuesday, July 5, 2011

வடபகுதி அரசியல் கட்சிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம்!

Tuesday, July 5, 2011
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வடபகுதி அரசியல் கட்சிகளுக்கான சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலைமை நியாயமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அச்சுறுத்தலாக அமையும் என கொஃபே எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

யாழ்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சுதந்திரமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான நிலைமை காணப்படாமை துரதிஸ்டவசமானது என அவர் தெரிவித்தார்.

சில அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாகவும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தின் சொத்துக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதாகவும் கொஃபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய ஒன்பது முறைப்பாடுகள் இதுவரை தமது அமைப்புக்கு கிடைத்துள்ளதாக கொஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கூறியுள்ளார்.

இதில் அனேகமானவை வடமாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தெற்கில் கேகாலை மாவட்டத்திலேயே அதிகளவிலான தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு அறிவித்துள்ளது.

இதேவேளை வடமாகாணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் அமைதியான சூழல் காணப்படுவதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அந்த நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ராசங்க ஹரிஸ்சந்திர கருத்து வெளியிடுகையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய 17 முறைப்பாடுகள் தமது அமைப்பிற்கு கிடைத்துள்ளதாக கூறினார்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இம்முறை தேர்தல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றப் பிரிவுகளில் அமைதி நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் பாதிவாகியுள்ளதெனவும் தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலுடன் தொடர்புடைய சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை சட்ட விரோதமாக காட்சிப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ராசங்க ஹரிஸ்சந்திர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive