Wednesday, August 18, 2010

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக இந்தியா கவலைகொள்ள வேண்டிய அவசியமில்லை:பீஜிங்கில் ஜி.எல். பீரிஸ் அறிவிப்பு.

August ,19, 2010
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணம் தொடர்பாகவோ அன்றி அந்தத் துறைமுகம் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுமா என்பது தொடர்பாகவோ கரிசனை கொள்ளவேண்டிய தேவை இந்தியாவிற்கு இல்லை என்று சிறிலங்காவினது வெளி விவகார அமைச்சர் பேராரியர் ஜி.எல் பீரிஸ் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அறிவித்திருக்கிறார்.

அதிகாரபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு சீனா சென்றிருக்கும் அமைசர் பீரிஸ் அங்கு இந்தியாவினைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

சிறிலங்காவின் தென்முனையில் அப்பாந்தோட்டைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் துறைமுகாமானது போர்சார்ந்த அல்லது இராணுவத் தேவைகளுக்காக ஒருபோதும் பயன்படுத்தப்படமாட்டாது. அது தனித்துவமாக வர்த்தகம்சார் செயற்பாடுகளுக்காகவே உபயோகிக்கப்படும்.

உள்ளகத் துறைமுகத்தினை அதாவது கடற்பரப்புக்குள் இல்லாமல் நிலப்பரப்புக்குள் துறைமுகத்தினை அமைத்திருக்கும் ஒரேயொரு ஆசிய நாடு சிறிலங்காதான்.

துறைமுகம் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை பகுதியினைக் குறித்த சில தரப்புகள் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதாக அராசங்கத்தின் இராசதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

சீனாவின் நிதியுதவியுடன் இந்தத் துறைமுகம் அமைக்கப்பட்டு வருவது மற்றும் நிர்மாண பணிகளில் சீனப் பொறியியலாளர்களும் பணியாளர்களும் ஈடுபட்டிருப்பது தொடர்பில் அண்மையில் பாராளுமன்ற விவாதத்தின் போது கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

சீனாவின் காலணித்துவ நாடாக சிறிலங்கா மாறுவதற்கு அரசாங்கம் வழிசெய்கிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜெயசேகர பாராளுமன்றில் குற்றம் சுமத்தியிருந்தார்.

"அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணம் தொடர்பாகவோ அன்றி அந்தத் துறைமுகம் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுமா என்பது தொடர்பாகவோ கவலை கொள்ளவேண்டிய தேவை இந்தியாவிற்கு இல்லை.

இந்தத் துறைமுக நிர்மாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா இந்தியாவையே முதலில் கோரியிருந்தபோதும் இந்தியா அதனை ஏற்றுக்கொள்ள மறுத்ததுதான் வரலாறு" என பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதிலளித்தபோது அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார அமைச்சரும் அதிபர் ராஜபக்சவின் சகோதருமான பசில் ராஜபக்ச, அதிபரின் செயலாளர் வீரதுங்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழு இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்டு கடந்த 15ம் நாள் இந்தியாவிற்குப் புறப்படவிருந்தனர்.

ஆனால் தற்போது இந்த விஜயம் 24ம் திகதிக்குப் பிற்போடப்பட்டிருக்கிறது.

சிறிலங்காவில் இந்திய தனது முதலீடுகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த உயர்மட்டக் குழுவின் இந்திய விஜயம் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.

அம்பாந்தோட்டைப் பகுதியில் சீனா முன்னெடுத்துவரும் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான குழப்பங்களும் சந்தேகங்களும் நிலவிவருகின்ற இந்த வேளையில் இந்தக் குழுவினது இந்திய விஜயம் அமைகிறது.

பசில் ராஜபக்சவின் தலைமையிலான குழு 24ம் நாளன்று மாலை புதுடில்லி நோக்கிப் பயணமாகிறது. இந்தியாவின் பல்வேறுபட்ட மாநிலத் தலைவர்களையும் இவர்கள் 24ம் மற்றும் 25ம் நாட்களில் சந்தித்து உரையாடவுள்ளார்கள்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive