Monday, October 4, 2010

விடிவின் இன்னுமொரு பரிமாணம்!

Monday, October 4, 2010
இற்றைக்கு சுமார் ஒரு வருட காலத்துக்கு முன்னர் தலை நகரில் நடமாடுவதென்பது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடமாடுவதற்கு ஒப்பானது. எந்த நேரத்தில் எந்த இடத்தில் என்ன மாதிரியான குண்டு வெடிக்கும் என்ற பீதி மக்களை ஆட்கொண்டிருந்த காலம் அது. தலை நகரில் மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் எந்தப் பாகத்தையும் இந்தப் பீதி விட்டுவைக்கவில்லை. குறிப்பாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நடமாடும்போது ஒன்றில் கால்களை இழக்க நேரிடும் நிலை அல்லது உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையே காணப்பட்டது.

சுமார் மூன்று தசாப்தங்கள் நீடித்த இந் நிலையை முற்றாக மாற்றி மக்கள் இன்று எந்தப் பீதியுமின்றி பருத்தித் துறை முதல் தேவேந்திர முனை வரையான முழு இலங்கைத் தீவிலும் சுதந்திரமாகவும் உயிருக்கான உத்தரவாதத்துடனும் நடமாடக் கூடிய நிலையை மிகக் குறுகிய காலத்துக்குள் வெற்றிகரமாகத் தோற்றுவித்து இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து நிற்கும் உதாரண புருஷரான நம் நாட்டின் தலைவர் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலப் பகுதி இந் நாட்டு வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காலப்பகுதியாகும்.

அத்தோடு மட்டும் நின்று விடவில்லை நமது ஜனாதிபதி அவர்கள் தொடர்ந்து உலகுக்கு ஆச்சரியமூட்டும் பல நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார். அவ்வகையான ஒரு நிகழ்வுதான் அன்மையில் வவுனியா கலாசார மண்டபத்தில் நடந்தேறியது. அதாவது உலகின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கம் என்று வர்ணிக்கப்பட்ட எல்ரீரீஈ இயக்கத்தின் முன்னாள் அங்கத்தவர்களை போர்க் கைதிகளாகப் பிடித்து சித்திரவதைக்குட்படுத்துவதற்கு மாறாக புனர்வாழ்வு நிலையங்களில் அவர்களுக்கு துறைசார் தெழிற் பயிற்சிகளை வழங்கியது மாத்திரமன்றி தொழிற் சந்தையில் இலகுவாக அவர்கள் தொழில் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் சுய தொழில் செய்ய இருப்பவர்களுக்கு இலகு வட்டியுடனான கடனாக இரண்டரை லட்சம் ரூபாக்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு புனர்வாழ்வு நிலையங்களில் தொழிற் பயிற்சி பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சுமார் 403 பேர் கடந்த 30ஆம் திகதி காலை பத்து மணியளவில் வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் அவர்களது பெற்றௌர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவ்வாறான நிகழ்வொன்று இடம்பெற்றது உலகிலேயே இலங்கையில்தான் முதன்முறையாகும்.

இவ்வாறு தம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் எல்ரீரீஈ அங்கத்தவர்கள் பலர் கருத்து வெளியிடுகையில் “தாங்கள் புது மாத்தளனில் வைத்து கைது செய்யப்பட்டபோது இதன் பிறகு எமக்கென்றொரு எதிர்காலமில்லை மரணம்தான் எமது முடிவாக அமையப் போகிறது என்று நினைத்த எமக்கு ஆச்சரியமூட்டும் வகையில் எந்தவிதமான சித்திரவதைகளும் செய்யாமல் சிறைகளில் கூட எம்மை அடைத்து வைக்காது புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைத்து தொழிற் பயிற்சிகள் வழங்கியது மாத்திரமன்றி தொழிற் சந்தையில் இலகுவாக தொழில்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தந்ததுடன் சுய தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு கடன் வழங்கி ஒளிமயமான எதிர்காலமொன்றை எமக்கு ஏற்படுத்த இந்த அரசாங்கத்துக்கு என்றென்றும் நன்றிக்குரியவர்களாக இருக்க நாங்கள் கடமைப்பட்டவர்கள்” என்று தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ குணசேகர பிரதியமைச்சர், விஜிதமுனி சொய்சா ,அரச மற்றும் இராணுவ உயரதிகாரிகள் பெற்றோர்கள் பொது மக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive