Thursday, July 7, 2011

அரசாங்கம்-த.தே.கூ.பேச்சுவார்த்தை போகாத இடத்துக்கு ஆளுக்கு ஆள் வழி காட்டுகிறார்களா? ஆபத்து தமிழர்களின் அரசியற் கோரிக்கைகளுக்கே!முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!:-பகுதி-1

Thursday, July 7, 2011
மஹிந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் சம்பந்தர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த ஆறு மாதங்களில் எட்டுத் தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடந்த முடிந்து விட்டன.

பேச்சுவார்த்தைக்கான பேச்சுவார்த்தை,

அடுத்த பேச்சுவார்த்தைக்கான திகதி குறிக்கும் பேச்சுவார்த்தை,

பேச்சுவார்த்தைக்கான விடயங்களை அடுக்கி எழுதும் பேச்சுவார்த்தை

என பேச்சுவார்த்தையைப் பற்றியே அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகளாக சுற்றிச் சுற்றி வாறாக.

படையப்பா பாசையில் சொல்வதானால், கயிறு கயிறா விட்டு அரசியல் விவகாரங்களைக் கடையிறதாகச் சொல்லுறாக.

ஆனால் எந்தக் கயிறையும் போட்டு இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு எனும் வெண்ணெயைக் கடைந்தெடுப்பதில் இவர்களில் எவரும் அக்கறையோடு முன்னேறுவதென்ன ஈடுபடுவதாகக் கூடத் தெரியவில்லை.

மாறாக சிங்களவர்களின் காதில் சிறிலங்கா அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களின் காதிலும்

ஏமாளிகள் என்னும்; பூவைச் சூடி விடுவதற்கான முழு எத்தனிப்புகளோடு செயற்படுகிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

இதில் வெறும் போக்கிலித்தனம் மட்டுமல்ல ஆற்றாமை, அறியாமை, புரியாமை, துணியாமை போன்ற பல பொல்லா ஆமைகளும் உள்ளடங்கியுள்ளன.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த அவர்கள் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுடன்தான் தாம் கலந்தாலோசித்து இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியற் தீர்வு காணப் போவதாகக் கூறினார்.

இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பாராளுமன்றத்தில் தம்மிடம் பெரும்பான்மை பலம் இல்லாததாலேயே தம்மால் பல அரசியற் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் இருப்பதாகவும் கூறினார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்தவின் அணிக்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியதோடு அவரோடு பேச்சுவார்த்தை நடாத்தி ஓர் அரசியற் தீர்வை தமிழ்த் தலைவர்கள் எட்ட வேண்டும் என்னும் ஆர்வத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் கணிசமான எண்ணிக்கையில் பாராளுமன்ற இடங்கள் பெற தமிழர்கள் வாக்களித்தார்கள்.

இலங்கை அரசை ஓர் அரசியற் தீர்வுக்கு முன்வரும்படி எவ்வளவுதான் நெருக்கடி கொடுத்தாலும் புலிகள் அழிக்கப்படாமல் இருக்கும் வரை அதில் எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை என்பதுதான் இந்தியாவின் தீர்மானமாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

அதனால் இலங்கை அரசு புலிகளை அழித்தொழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது இலங்கை அரசை வேறு எந்த நாடும் நெருக்கடிக்கு உள்ளாக்காமல் பார்த்துக் கொண்டது.

அதுமட்டுமல்லாது இந்தியா தன்பங்குக்கு தற்காப்பு இராணுவ உபகரணங்களை இலங்கை அரசுக்கு தாராளமாக வழங்கியதோடு கடற்படை மற்றும் தகவல் உதவிகளையும் வழங்கி இலங்கை அரச படைகளை புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பூரண வெற்றி கொள்ள வைத்தது.

இதுவே இன்று உலகம் புரிந்து கொண்டுள்ள உண்மை.

யுத்த காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிக் கேட்ட போது ஜனாதிபதி மஹிந்த அவர்கள் யுத்தம் முடிவடைந்ததும் உடனடியாக - நிச்சயமாக தான் ஓர் அரசியற் தீர்வை 13வது அரசியல் யாப்பு திருத்தத்தையும் விட உயர்ந்த பட்சமான ஒன்றை முன் வைக்கப் போவதாகக் கூறியிருந்தார்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் கேட்ட போது, தமது இரண்டாவது தடவைக்கான ஜனாதிபதி;த் தேர்தலில் தான் வெற்றி பெற்றதன் பின்னர் நிச்சயமாக ஒற்றையாட்சி இலங்கைக்குள் திட்டவட்டமாக ஓர் அரசியற் தீர்வை தான் முன் வைக்க இருப்பதாகக் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் அவரிடம் அரசியற் தீர்வு பற்றிக் கேட்டபோது அதற்கு அவசியமான மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்கள் பாராளுமன்றத் தேர்தலில் தனக்குக் கிடைத்ததும் இலங்கை மக்கள் அனைவரும் ஏற்கக் கூடியதோர் அரசியற் தீர்வை தேர்தலில் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வகையாக உருவாக்கி நிறைவேற்ற இருப்பதாகக் கூறினார்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமது பங்குக்கு தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வைத் தாங்கள் பெற்றுத் தருவதற்கு வகையாக தமிழ் மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் தமக்கே வாக்களித்து தமது கரங்களைப் பலப்படுத்த வேண்டும் என்று கேட்டார்கள்.

இலங்கை மக்கள் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தும் வகையாக அவருக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆசனங்களை வழங்கினர்.

அதேவேளை வடக்கு கிழக்கு தமிழ் மக்களோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தமக்குரிய பிரதான அரசியற் தலைமையை ஏற்க வேண்டும் என்னும் வகையாக வடக்கு கிழக்கில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பதினேழு தமிழர்களில் பதின்மூன்று பேர் ததேகூவினராக இருக்க வாக்களித்தனர்.

ஆனால்;, 2010 மார்ச்சில் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து பின்னர் மூன்று மாதங்கள் கழிந்த போதிலும் அரசியற் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

அப்போது அரசாங்கம் பகிரங்க அறிக்கைகளைத் தவிர நடைமுறையாக அரசியற் தீர்வுக்கான எந்தவொரு முன்முயற்சியிலும்; ஈடுபடுவதாக இருக்கவில்லை.

அதேவேளை ததேகூ காரர்களும் அரசாங்கத்தைத் திட்டுவதற்கப்பால் - அரசாங்கத்தின் மீது நம்பிக்கையீனங்களை வெளிப்படுத்துவதை விட வேறெதிலும் அக்கறை காட்டவில்லை.

2010ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் திகதி ஜனாதிபதி மஹிந்த அவர்கள் டெல்லிக்கு விஜயம் செய்தார்.

அதற்கு முதல் நாள் அவசர அவசரமாக ததேகூகாரர்களை அழைத்து விருந்தும் கொடுத்து தமிழர்களின் பிரச்சினை பற்றியும் சில நிமிட நேரம் கலந்துரையாடி இனிதாக அவர்களை வீPட்டுக்கு வழியனுப்பி வைத்தார்.

டெல்லி சென்று அவர் மீண்ட பின்னரும் எதுவும் நடக்கவில்லை.

பின்னர் 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஸ்ணா இலங்கைக்கு விஜயம் செய்தார்.

அதற்கு முதல் நாளும் ஜனாதிபதி அவர்கள் அவசர அவசரமாக ததேகூகாரர்களை அழைத்து பழையபடி விருந்தும் கொடுத்து தமிழர் பிரச்சினைகள் பற்றி சில நிமிட நேரங்கள் கலந்துரையாடிவிட்டு அவர்களைஅவர்களது வீPடுகளுக்கு இனிதே வழியனுப்பி வைத்தார்.


இவற்றைத்தான் கடந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது ததேகூக்காரர்கள் தமிழ் மக்கள் தம்மை பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தமிழ் இடங்களில் வெற்றி பெற வைத்தபடியால்த்தான் அரசாங்கம் இறங்கி வந்து தம்மோடு பேச்சுவார்த்தை நடாத்த முன்வந்ததாகவும்,

எனவே உள்ளுராட்சித் தேர்தலிலும் தமக்கே வாக்களித்து அரசுடனான பேச்சுவார்த்தைக்கு தமது கைகளைப் பலப்படுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.

வடக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்டங்களின் தமிழ் மக்களும் ததேகூவினர் மனம் குளிர அவ்வாறே வாக்களித்தனர்.

தமிழ் மக்கள் தமது வாக்குகளால் ததேகூகாரர்களின் அரசியற் கரங்களை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பலப்படுத்தியதால்தான் அரசாங்கம் பேச்சுவார்த்தை அரங்குக்கு இறங்கி வந்ததா?

அதனாற்தான், இந்த பேச்சுவார்த்தைச் சுற்றுச் சந்திப்புகள் நிறைவேறினவா?

அல்லது, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களின் காரணமாகத்தான் கடந்த சந்திப்புச் சுற்றுக்கள் நடந்தேறினவா?

என்ற ஆராய்ச்சி ஒரு புறம் இருந்தாலும்,

கடந்த ஆறு மாதங்களில் எட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தேறியிருக்கின்றன, ஒன்பதாவது சுற்று பத்தாவது சுற்று என தொடரவும் உள்ளது என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை சுற்றுக்களில் அரசியற் தீர்வுக்கான ஏதாவது முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா!

அல்லது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளேடான வலம்புரி பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கம் கூறுவது போல

நடக்காத கலியாணத்துக்கு சீதனப் பேச்சுவார்த்தை நடப்பது போல” த்தான் அரசுக்கும் ததேகூவுக்கும் இடையில் ஊரையும் உலகையும் ஏமாற்றும் பேச்சுவார்த்தைச் சந்திப்பு நாடகம் அடிக்கடி அரங்கேற்றப்படுகிறதா!

என்பதைக் கண்டறிந்து தெளிவு பெற முற்படுவது அரசியல் சமூக அக்கறையுடையோருக்கு அவசியமான ஒன்றேயாகும்.

தொடரும்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive