Thursday, July 7, 2011

அரசாங்கம்-த.தே.கூ.பேச்சுவார்த்தை போகாத இடத்துக்கு ஆளுக்கு ஆள் வழி காட்டுகிறார்களா? ஆபத்து தமிழர்களின் அரசியற் கோரிக்கைகளுக்கே!முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!:-பகுதி 2.

Thursday, July 7, 2011
கடந்த ஆறுமாத காலத்தில் அரசுடன் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என சுற்றி சுற்றி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்

தமிழர்களின் உண்மையான அரசியல் பொருளாதார நியாயங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டவட்டமான ஒரு அரசியற் தீர்வுக் கோரிக்கை வரைவை இதுவரை காலகட்டத்துக்குள் ஆக்கியிருக்க வேண்டும்.அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ் அறிஞர்கள் அரசியல் யாப்பு சட்டத்தரணிகள் ஆசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகள் மட்டத்தில் பரவலாக அரசியல் அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியற் தீர்வு விவகாரங்களுக்கான கலந்துரையாடல்களை நடத்தியிருக்க வேண்டும்.

அவை தொடர்பாக திட்டவட்டமான நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில் ஆதரவைத் திரட்டியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவுமில்லை. அப்படியான முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டதற்கான அறிகுறி கூட இல்லையே!

தமிழ் மக்கள் தமக்கே பெரும்பான்மையாக வாக்களித்திருப்பதால்

தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்றும் தம்மோடு மட்டுமே அரசாங்கம் தமிழர்களுக்கான அரசியற் தீர்வு பற்றிப் பேச வேண்டும் என்றும் கோருகின்ற ததேகூகாரர்கள் தாம் நடத்தும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு எதனையும் பகிரங்கமாக சொல்கிறார்கள் இல்லை என்பது மட்டுமல்ல. ததேகூவிலுள்ள கட்சிகளின் முக்கிய தலைவர்களோடென்ன! தமது நெருங்கிய ஆதரவாளர்களோடோ கூட

தாம் அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தை தொடர்பாக எதுவும் பேசுவதாகவோ – கலந்துரையாடுவதாகவோ – ஆலோசனைகளை அபிப்பிராயங்களைப் பெறுவதாகவோ இல்லை என்பது பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டாகும்.

இன்னும் ஒரு படி மேலே போய் சொல்வதானால் பேச்சுவார்த்தை அரங்கத்தில் பங்குபற்றும் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் தாங்கள்; என்ன விடயங்களை எப்போது முன்வைத்து பேசுவது என்பது பற்றியும்

ஓட்டுமொத்தத்தில் அரசியற் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு அவசியமான அணுகுமுறை எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் அத்துடன் ஓவ்வொரு விடயதானத்தின் போதும் எவ்வாறான அணுகுமுறைகளைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தை அரங்கத்தில் முன்னேற்றங்களை நிலைநாட்டுவது என்னென்ன விடயங்களி;ல் இறுக்கமான நிலைப்பாட்டை எடுப்பது என்னென்ன விடயங்களில் எந்தெந்த அளவில் விட்டுக் கொடுத்து சமரசம் காண்பது.

போன்ற பல்வேறு தொடர்புபட்ட விடயங்கள் ஒரு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அவசியமாகும்.

இவ்வாறான பிரதானமான விடயங்களில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்ற பிரதிநிதிகளுக்கிடையே ஒரு புரிந்துணர்வு இருப்பது அவசியமாகும் அப்படியான நிலைமை இங்கு இருப்பதாகத் தெரியவில்லை தங்களுக்குள் யார்யார் எந்தெந்த விடயங்களில் முன்தயாரிப்புகளை மேற்கொள்வது பேச்சுவார்த்தை அரங்கத்தில் யார் யார் எந்தெந்த விடயங்களை முன்வைத்து அவற்றுக்கான கொள்கை மற்றும் சட்ட வடிவங்களையும் அந்தப் பிரேரணைகள் அல்லது திருத்தங்களுக்கான நியாயங்களையும் பேசுவது எனும் வேலைப் பகுப்புத் திட்டத்துடன் ததேகூகாரர்கள் செயற்படுவதாச் சிறிதும் தெரியவில்லை.

அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் எதிரணியாக அமர்ந்திருந்தாலும் அரங்கத்தில் எவ்வாறு பொதுவான நம்பிக்கைகளை வலுப்படுத்துவது என்பதிலும் .. கனத்த எதிர்பார்க்கைகளோடு இருக்கும் மக்களுக்கு பேச்சுவார்த்தை அரங்கத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் தொடர்பான தெளிவை ஏற்படுத்துவதிலும்

தாம் அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் ததேகூவினர்

தமது கூட்டுப் பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவதாகக் காண முடியவில்லை. அத்துடன் தம்மை நம்பியிருக்கும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பான தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதில் கூட்டாக இசைந்து செயற்படும் பண்புகளை அவர்கள் கொண்டிருப்பதாகவும் காணமுடியவில்லை.

அரசியல் தீர்வு காணும் விடயத்தை அரசுடன் பேசுவதற்கு தமக்கே தமிழ் மக்கள் ஏக பிரதிநிதித்துவ ஆணை தந்திருப்பதாக உரிமை கோரும் ததேகூகாரர்களிடம் அரசியற் தீர்வு அதற்கான பேச்சுவார்த்தைகள் என்பவற்றில் அவர்கள் கொண்டிருக்கும்; நிலைப்பாடுகள் மற்றும் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகள் ஆகியவற்பை; பார்க்கும் போது அவற்றில் ஓர் ஒருங்கிசைவான தொடர்ச்சியைக் காண முடியவில்லை.

கடந்த ஆறு மாதங்களில் ததேகூகாரர்கள் தாம் அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம் மற்றும் போக்குகள் தொடர்பாகவும்

அத்துடன் ஒவ்வொரு சுற்றுச் சந்திப்புகளுக்கு முன்னும் பின்னும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பத்திரிகை அறிக்கைகள் சவால்கள் விரக்திகள் எனபனவற்றைத் தொகுப்பார்த்தால் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான அரசியற் தீர்வ தொடர்பாக ததேகூ காரர்கள்

குழப்பமான கண்ணோட்டங்களுடனும் குழறுபடியான அணுகுமுறைகளுடனும் உறுதியற்ற நிலைப்பாடுகளுடனுமே உள்ளனர் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

ததேகூக்காரர்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னர் ஒருவிதமாக அரசியல் இசைக்கிறார்கள் பின்னர் அத் தேர்தல்கள் முடிந்ததும் வேறொரு விதமாக அரசியல் இசைக்கிறார்கள்.

சந்திப்புச் சுற்றுக்களில் பங்கு பற்றும் ததேகூ பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் தாம் தாம் விரும்பியவாறு - தத்தமக்கு ஏற்றவாறு – ஒருவருக்கு ஒருவர் முரணாக வெவ்வேறு சுரங்களில் - சுருதிகளில் - தாளங்களில் தங்கள் அரசியற் பாடல்களை இசைக்கிறார்கள்.

ததேகூ வின் தானைத் தலைவர் சேனாதிராஜா அவர்களோ அரசு சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தாவிட்டால் அரச படைகள் உயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து வெளியேறாவிட்டால்

அரசு ததேகூவினரின் அரசியல் ஜனநாயக உரிமைகளை அங்கீகரித்து பாதுகாப்பு தராவிட்டால் அரசுடன் பேச்சுவார்த்தை முறிவடையும்; என ஓங்காரம் எழுப்புகிறார் - போராட்டம் வெடிக்கும் எனப் பிரகடன முழக்கமிடுகிறார்.

ததேகூவின் தேசிய உறுப்பினர் சுமந்திரனோ அவ்வப்போது அரசாங்கம் பேச்சுவார்த்தையை நேரத்துக்கு நடத்தவில்லை என்று பூபாளம் இசைப்பதோடு ஒவ்வொரு சுற்று சந்திப்பு முடிவிலும் ஜனாதிபதி மாளிகையின் வாசலில் வைத்து பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நம்பிக்கையளிக்கிறது என கொட்டு மேளம் கொட்ட மங்கள வாழ்த்தும் இசைக்கிறார்.

ததேகூவின் அரசியல் அசகாய சூரன் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களோ ஒவ்வொரு சுற்றுச் சந்திப்பும் முடிவடைந்து ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியே வருகையில் குதூகலமான சிரிப்போடுதான் வருகிறார். ஆனாலும் அந்தச் சுற்றுகளில் என்னதான் நல்ல மழை பொழிந்ததோ இல்லையோ சுற்று முடிந்து இரண்டாம் மூன்றாம் நாட்;களிலேயே அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதில் உண்மையாகவும் நேர்மையாகவும் இல்லை என முகாரி பாடுவதை விடாப்பிடியாகத் தொடர்கிறார்.

ததேகூவின் கிளிநொச்சி மாவீரன் சிறீதரன் அவர்கள் சுற்றுச் சந்திப்புக்கு பிரதிநிதியாக இல்லாவிட்டாலும் வெளியே நின்ற படியே ததேகூகாரர்களே மிரண்டு போகும் வகையாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையால் எந்தவித பயனுமில்லை எனவும்

எனவே தமிழர் தேசத்துக்கு சுயநிர்ணயமே ஒரே வழி எனவும் புலித் தமிழீழப் பாட்டை மாற்றிப் போட்டு பொங்கு தமிழ்காரர்களுக்கு இன்னல் விழைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு என யுத்தநாதம் கிளப்புகிறார்.

இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு தனது வயது முதிர்வின் காரணமாகவும் நோய்வாய் நிலை காரணமாகவும் தமிழக வீட்டில் அடிக்கடி ஓய்வெடுத்துத் திரும்பும் ததேகூவின் பெருந் தலைவர் சம்பந்தர் அவர்களோமதிப்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும் இலங்கைப் பிரச்சினையில் ததேகூவுடன் தோள் கொடுத்து செயற்படத் தயாராக உள்ளதாகவும் ஐநா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் குழுவினர் வெளிக்கொண்டு வந்திருக்கும் முள்ளிவாய்க்காலின் உண்மைகளை தாமும் அங்கீகரித்து ஆதரிப்பதாகவும் எனவே இந்தியவெளியுறவுத் துறை அமைச்சர் கிருஸ்ணா சொல்லுகிறபடியும் கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய தூதுவர்கள் வலியுறுத்துகிறபடியும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ததேகூ கேட்கிற வகையாக சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு அரசியற் தீர்வைத் தர வேண்டும் என ராகமாலிகாவில் தனக்கிணையாக தர்பாரில் ராஜதந்திர அரசியலை நடத்த எவருமுண்டோ என ஏற்ற இறக்க அகாரங்களோடு அசைத்தசைத்து பாட்டும் நானே பாவமும் நானே என அரியணையில் இருக்கும் மஹிந்தவை அசர வைத்து விடும் நினைப்பில் தனது கட்டைக் குரலை உயர்த்தி எட்டுக் கட்டையில் இசைக்கிறார்.

இப்படி ததேகூகாரர்கள் கதம்ப கச்சேரியை நடத்திக் கொண்டிருக்க ஜனாதிபதியோ மாகாண அமைப்புக்கு பொலிஸ_ம் தரமாட்டேன் நில அதிகாரமும் தர மாட்டேன் வரி அதிகாரங்களும் கிடையாது எல்லா அதிகாரங்களும் கொழும்புக்கே என ஒரே முழக்கில் விடாது முரசறைகின்றார்.

அத்தோடு தனது முழக்கங்களுக்கு இசைவாக பாடல் இசைப்போருக்கு ஆயிரம் பொற்காசுகள் என பட்டயம் அறைந்து திருவிளையாடல் தருமிகளையே தனக்குத் துணையாக திரட்டிக் கொள்கிறார்.

கௌரவ ஜனாதிபதி மஹிந்த அவர்கள் என்னென்ன விடயங்களில் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரத் தயாராக இல்லை என்னும் அவரது பட்டியலில் உள்ள மூன்று விடயங்கள் தொடர்பாக மட்டும்தானா அவர் பிடிவாதமாக இருக்கிறார்! அல்லது

அவர் இன்னும் சொல்லாமல் இருக்கும் - இன்னும் பகிரங்கத்தி;ல் கிளப்பப்படாமல் இருக்கும் மேலும் பல விடயங்களிலும் அதிகாரங்களைப் பகிர அவர் தயாராக இல்லையா! என்பது யாருக்கும் தெளிவாக இல்லை. அவர் எந்தெந்த அதிகாரங்களைத் தரத் தயாராக இல்லை எனும் பட்டியல் அவ்வப்போது அவரது முரசுக்காரானால் அறிவிக்கப்படுகிறது. ஆனால், அவர் என்னென்ன விடயங்களின் மீதான அதிகாரங்களை என்னென்ன அளவில் அரசியற் தீர்வில் பகிரத் தயாராக இருக்கிறார் என்பதை அவரும் முழுமையாகச் சொல்கிறார் இல்லை – அவற்றை அவரிடம் யாரும் திட்டவட்டமாகக் கேட்பதாகவும் தெரியவில்லை. அவர் அதிகாரங்களைப் பகிரத் தயாராக இல்லை என்னும் பட்டியலில் உள்ள விடயங்களைத் தவிர ஏனைய எல்லா விடயங்களிலும் அவர் அதிகாரங்களைப் பகிரத் தயாராக இருக்கிறார் என்ற ஊக முடிவுக்கும் யாரும் வர முடியாது என்னும் குழப்ப நிலையே நிலவுகிறது.

தொடரும்..

No comments:

Post a Comment

Followers

Blog Archive