Sunday, January 9, 2011

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பில் ஒன்று கூடல்.

Sunday, January 9, 2011
சர்வதேச தமிழ் எழுத்தாளர்களின் மாநாடு கொழும்பில் கடந்த வியாழன் முதல் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இலங்கையில் முதன்முதலாக நடைபெறும் இம்மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் கோலாகலமாக கண்கவரும் வண்ணமும், ஆழமான தமிழாற்றல் கொண்டதாகவும் அமைந்துள்ளன.

இம்மாநாட்டில் உலக நாடுகள் பலவற்றிலுமிருந்தும் புகழ்பெற்ற தமிழ் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்து நம்நாட்டு ஆர்வலர்களுடன் ஒன்றிணைந்துள்ளமை எம்மவரை நிச்சயம் உற்சாகமூட்டும் என்பதில் ஐயமில்லை.

இயந்திரமயமாகிவரும் உலகில் இலக்கியத்திற்கும் இடமளித்து அதனை எழுத்து வடிவில் எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாத்து ஆவணப்படுத்த உதவி புரியும் இந்த மாநாட்டுக் குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள். இலங்கையில் இம்மாநாட்டினை நடத்த அவர்கள் தீர்மானித்தமை எமக்குப் பெருமையளிக்கிறது.

மூன்று தசாப்த காலமாக இலங்கையில் இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இத்தகைய முக்கியமான மாநாடு இங்கு நடைபெறுவது பாதிக்கப்பட்டிருந்த தமிழ்பேசும் சமூகத்திற்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது என்றால் அது உண்மை.

அதிலும் இதுபோன்ற மாநாடுகள் யாழ்ப்பாணத்தில் அல்லது கிளிநொச்சியில் நடைபெற்றால் அந்தப் பலன் தமிழ் மக்களை முழுமையாகச் சென்றடையும். யுத்த வடுக்கள் தற்போதுதான் அப்பகுதிகளில் ஆற்றுப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே எதிர்காலத்தில் இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு இடம்பெறும்போது அது நிச்சயம் கிளிநொச்சியில் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

இத்தகைய சிறந்த மாநாடுகள் எங்கு நடந்தாலும் அவற்றில் எடுக்கப்படும் தீர்மானங்கள் உரியவாறு நிறைவேற்றப்பட வேண்டும். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் உதித்த செம்மொழிகளில் ஒன்றான எமது தாய்மொழியாம் தமிழ் மொழியை வளர்க்கும் எவரையும் நாம் எங்கிருந்தாலும் உற்சாகப்படுத்த வேண்டும். நாமும் எமது பங்களிப்பை நல்கி அவர்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். வாழ்க தமிழ், வளர்க தமிழ்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive