Thursday, August 12, 2010

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (பகுதி 4)

Thursday, August 12, 2010
தனிநாடு என்ற 'உச்சக்கட்ட' த் தீர்வுக்கு முன்பு வேற எந்த அரசியல் தீர்வும் 'சும்மா' என்ற உசுப்பேத்தல் நன்றாகவே தமிழ் மக்கள் மத்தியில் எடுபட்டது. ஏனைய அரசியல் தீர்வுகள் துரோகத்தனமானது காட்டிக் கொடுப்பு என்ற புலிகளின், புலிகளின் மூதாதையரின் பிரச்சார யுக்திகளுக்கு மத்தியில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான வேறு எந்த அரசியல் தீர்வும் எடுபடாமல் போனது புலி தவிர்ந்த ஏனைய ஈழவிடுதலை அமைப்புக்களின் அரசியல் முன்னெடுப்புக்களை மக்கள் மத்தியில் பெரியளவில் பிரச்சாரப்படுத்தி செயற்பட முடியாமல் போனதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. கூடவே கருத்துக்களைச் சொல்ல தடை என்ற புலிகளின் ஏகபோக செயற்பாடு மக்களுக்கான உண்மை நிலமைகளையும் சாத்தியமான அரசியல் தீர்வு பற்றி செயற்பாடுகளையும் அவற்றைப் பெறுவதற்கான அணுகு முறமையினையும் இதற்கு புலிகள் தடையாக இருப்பதையும் அம்பலப்படுத்தும் வாய்ப்புக்களை இல்லாமல் செய்திருந்ததும் ஏனைய அமைப்புக்கள் அரசியல் ரீதியாக பலமாக இருந்தாலும் ஆதரவு ரீதியில் பலம் பொருந்திய அமைப்பாக தொடர்ந்தும் தம்மை வளர்தெடுக்க முடியாமல் போனது. கூடவே இவ் அமைப்புக்களின் ஆயுதப் போராட்ட காலத்தில் செயற்பட்ட முறைமைகளில் உள்ள சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் இன்னொரு காரணமாக இருந்திருக்கின்றது. கூடவே தமிழ் சமூகத்திலிருந்த முற்போக்கு புத்திஜீவிகளை புலிகள் இல்லாதொழித்தது இச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு மட்டும் அல்லாமல் செயற்படுத்த முடியாமல் போனதற்கும் பெரும் தடையாக இருந்தன. அதனையே ஏகாதிபத்தியங்களும் விரும்பின. இனவாதிகளும் விரும்பின. இதற்கு செயல்வடிவம் கொடுப்பதில் என்னமோ புலிகள் வெற்றிடைந்ததும் ஏனைய விடுதலை அமைப்புகள் தோற்றுப் போனதும் உண்மைதான். இவை எல்லாவற்றிற்கும் மத்தியில் மக்கள் என்னமோ தோற்றுப் போனவர்கள் தான்.

புலிகளின் யுத்தமானது நாளுக்கு நாள் தனது நண்பர் வட்டத்தை குறுக்கி எதிரி வட்டத்தை பெருக்குவதில் பெருவெற்றி கண்டே வந்தது. இதனைப் பற்றி புலிகள் எப்போதும் கவலைப்பட்டதும் இல்லை. வெற்றிகரமான இராணுவத் தாக்குதல் மூலம் எல்லாவற்றையும் சரிகட்டிவிடலாம் என்ற மமதையும் புத்திசாதுர்யம் அற்ற நிலையும் தொடர்ந்து வந்தன. புலிகளால் நிகழ்த்தப்பட்ட இராணுவத்தாக்குதல் மூலம் மாங்குளம் இராணுவ முகாமின் வீழ்ச்சியும், முல்லைத்தீவு இராணுவமுகாமின் விழச்;சியும், யாரும் எதிர்பாராத ஆனையிறவு இராணுவமுகாமின் வெற்றி கொள்ளலும் வெறும் எண்ணிக்கையைக் காட்டி உண்டியல் குலுக்க உதவியதே ஒழிய அரசியல் ஆதரவுத் தளத்தை மக்கள் மத்தியிலும், சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் பலப்படுத்திக் கொள்ள உதவவில்லை என்பதை புலிகளுக்கு உணர்த்தவில்லை. சர்வதேச சமூகத்திடம் தமது போராட்டத்திற்கான தார்மீக ஆதரவை புலிகள் எப்போதும் வளர்த்துக் கொள்ளவில்லை. மாறாக தமது மக்கள் விரோத செயற்பாட்டினால் பயங்கரவாதிகள் என்ற முத்திரையை தாராளமாக குத்திக்கொண்டனர்.

இதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் தலைவரின் வழிகாட்டலில் இராணுவ வெற்றியீட்டப்பட்டது என்ற தனிநபர் சாகச வணக்கத்தை மேலும் வளர்த்து அவரை வெல்ல முடியாத அழிக்க முடியாத கடவுளாக சிருஷட்டிக்க வைத்தது. ஆனால் நிஜத்தில் பிரபாகரன் அப்படியொன்றும் சிறந்த இராணுவ வியூக வகுப்பாளராகவோ அல்லது செயற்பாடாளராகவோ இருக்கவில்லை. ஏன் மாவீரராகவோ இருக்கவில்லை. மாறாக கோழையாக இருந்தார். இதுதான் செட்டியை கல்வியங்காட்டில் முதுகில் சுட்டுக் கொன்றதில் ஆரம்பித்து, முள்ளிவாய்காலில் இறுதி நாட்களில் பதுங்கு குழிக்குள் மட்டும் பதுங்கி இருந்து தனது மேற்குல மீட்போனை மட்டும் எதிர்பார்த்திருந்த நிகழ்வும் கழுத்தில் எந்நேரமும் கட்டியிருந்து புலுடா விட்ட சயனைற் குப்பியை கடிக்காமல் முழம் தாள் இட்டு மட்டியிட்ட செயற்பாடுகளும் ஆகும். புலித்தலைவர் யாராலும் ஏமாற்றப்படவில்லை தன்னாலே தானே ஏமாற்றப்படார். முட்டாள் ஆக்கப்பட்டார். முடமாகவே என்றும் இருந்தார் என்பதே உண்மை நிலை. புலிகள் அமைப்பும் கறையான் பிடித்த கிடுகு வேலியைப் போல் பலமற்ற மறைப்பு மாயத் தோற்றத்தைக் கொண்டிருந்ததே உண்மை. அதுதான் தொடர்ந்து மகிந்த தட்ட வெளிக்கிட பொலு பொலுவென்று கொட்டுப்பட்டதற்கு காரணம். வான் தரை, கடல், ஈருடகம் என்பவை பிரச்சார யுக்திக்கு உதவியனவேயொளிய மாறாக இலங்கை இராணுவத்தை அடித்து கலைக்க, ஏன் தடுத்து நிறுத்த போதுமானவையாக இருக்கவி;ல்லை என்பதே புலிகளின் பரிதாப நிலை.

உண்மையில் புலிகளின் ஓரளவு பலமான இராணுவப்பிரிவு கடற்புலிகள் தான். அதுதான் போரை மாவிலாற்றில் முடுக்கிவிட முன்பே இலங்கை அரசு கடல் புலிகளைப் பலவீனப்படுத்தி கடற் புலிகளை கட்டிப்போடும் செயற்பாட்டையே முதலில் கன கச்சிதமாக இந்திய இராணுவத்தின் ஆசீர்வாதத்துடன் செய்து முடித்தனர். கூடவே சர்வதேச சமூகத்திடம் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம், நம்பத் தகுந்தவர்கள் அல்லர், அரசியல் தீர்விற்கு ஓத்து வரமாட்டார்கள் போன்றவற்றை புலிகளாலேயே நிறுவிவிட்டு போருக்கு புறப்பட்டனர். இதற்கு புலிகளின் ரணில் - பிரபா இன் நோர்வே அனுசரணை காலத்து சமாதான காலத்து செயற்பர்டுகளும், சந்திரிகா அம்மையார் காலத்து சர்வதேசங்களுடனான இராஜதந்திர செயற்பாடுகளும் பெரிதும் உதவின. சர்வதேச சமூகத்திடம் புலிகள் தமது தலையில் தாமே மண்ணைவாரிப் போடுவது போல் அம்பலப்பட்டுகொண்டன.

புலிகளினால் பெரும் நிலப்பரப்பு கட்டுபாட்டிற்குள் இருந்த காலத்திலும் விவசாயம், கடற்தொழில். கால்நடை வளர்ப்பு போன்ற எம் மண்ணிற்கு ஏற்ற சுயபொருளாதாரத்தை கட்டியெழுப்புதலில் புலிகள் எப்போதும் எவ் முன் முயற்சிகளையும் எடுத்திருக்கவில்லை. சரி கடலுக்குதான் செல்ல முடியாது இலங்கை இராணுவம் அனுமதிக்கவில்லை நிலப்பரப்பெங்கும் வியாபித்திருந்த குளங்கள் குட்டைகள் நீரேரிகளில் மீன்வளர்ப்பு திட்டங்களை ஊக்கிவித்திருக்கலாம்தானே. விவசாயத்தை தன்னியல்பாக செய்வதற்கு அனுமதித்து இருக்கலாம்தானே. இவற்றிற்கு எல்லாம் பெரிய நவீன உபகரணமோ அல்லது பொருட்களோ தேவையில்லை. சரி இவர்கள்தான் முன்னெடுக்கவில்லை என்றாலும் இயல்பாகவே எம்மக்களால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த இவ் தொழில் முயற்சிகளை ஊக்கிவிக்காவிட்டாலும் பறவாய் இல்லை குழப்பாமல் இருந்திருக்கலாம். மாறாக உற்பத்திப் பொருட்களை அடிமாட்டு விலைக்கு தமக்கு மட்டுமே விற்க வேண்டும் என்ற நிர்பந்தம் போட்டனர். தாம் கொள்வனவு செய்து அதே மக்களுக்கு கொள்ளை இலாபத்தில் விற்றனர். முதலாளித்துவம் செய்யும் தரகு வேலைகளிலும், வரிகளிலும், கப்பத்திலும் உழைப்பு, உற்பத்தியில் ஈடுபடாத பணம் ஈட்டும் பொருளாதாரக் கொள்கை(ள) களையே புலிகள் கொண்டிருந்தனர்.

இதனால் விரக்தி அடைந்த மக்கள் உற்பத்தியில் ஈடுபடுவதில் மெது மெதுவாக விலத்தி யாரிடமாவது தங்கியிருத்தல் என்ற நிலைக்கு தள்ளப்பட்டன ர், மிகச்சிலர் வெளிநாடுகளில் உள்ள தமது உறவுகளிடத்தும், இன்னும் சிலர் அரசு கொடுக்கும் நிவாரண பொருட்களிலும் இன்னும் சிலர் புலி உறுப்பினர்களாக தம்மை காட்டிக்கொண்டு உயிர்வாழ பழகிக் கொண்டனர். மொத்தத்தில் உற்பத்தியில் ஈடுபடுவதில்லை என்ற சோம்பேறித்தனமான சமூகத்தை கட்டியெழுப்புவதில் புலிகளின் பங்கு மகத்தானதாக இருந்தது. புலிகளின் ஆயுதப் போராட்டத்தில்தான் புலிகளின் தலைவன் தான் சாப்பிடும் தோசை மாவிற்கு கூட தனது எதிரி இலங்கை அரசிடம் கையேந்தி நிற்கும் நிலமையில் இருந்தான். இதனையும் இலங்கை அரசே வழங்கிக்கொண்டு அவனுக்கு எதிரான யுத்தத்தை தொடர்ந்தது. இந்த யுத்தம் ஒரு வலிமை மிக்க உழைக்கும் மக்களை சோம்பேறிகளாக ஆக்கியும் விட்டுச் சென்றிருக்கின்றது என்பது போரின் பின்னான நிகழ்வுகளில் கிராமங்கள் தோறும் உணரப்படுகின்றது.
(தொடரும்...)

No comments:

Post a Comment

Followers

Blog Archive