Thursday, July 29, 2010

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் ‐ யசூசி அக்காசி ‐ அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் இலங்கை, ஜப்பானுக்கு விளக்கம்.

Thursday, July 29, 2010
இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் என இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அக்காசி தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோருடனான பேச்சுவார்த்தையின் போது அக்காசி இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர் மக்கள் நிலைமை, புனர்நிர்மாணப் பணிகள், அவசரகாலச் சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளமை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நியமனம் போன்ற விடயங்கள் குறித்து இரண்டு அமைச்சர்களும், யசூசி அக்காசிக்கு விளக்கமளித்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னரான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் எனவும், தற்போதைய சூழ்நிலை மகிழ்ச்சி அளிப்பதாகவும் அக்காசி தெரிவித்துள்ளார்.


அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் இலங்கை இமைச்சர்கள், ஜப்பானிய அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் ஜப்பானிய முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான குழுவினர் தற்போது ஜப்பானில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இயல்பு நிலைமையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஜப்பானிய முக்கியஸ்தர்களுக்கு விளக்கியுள்ளனர்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive