Thursday, July 29, 2010

தமிழ்க் கட்சிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இட்ட கடிதம் அனுப்பி வைப்பு!

Thursday, July 29, 2010
தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்றுபிற்பகல் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான ந.குமரகுருபரன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ப.உதயராசா, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலர் தி.சிறீதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரும், இக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும்; இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கும் துயரங்களையும், அவலங்களையும் கருத்திற்கொண்டு தமிழ்பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் இணைந்து செயற்பட வேண்டுமென்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது தமிழ்க் கட்சிகள் அனைத்தினது கடமையென்றும், இந்தவகையில் நீண்டகால பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், உடனடியாக எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஆக்கபூர்வமாக உதவுவதற்கும் தமிழ்பேசும் அரசியல் சக்திகள் ஒரு கருத்தொருமைப்பாட்டுக்கு வரவேண்டுமென்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும்; ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
இது விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் கலந்துரையாடி ஒருமித்த நிலைப்பாட்டை அடைய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி இதுவிடயமான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலந்துகொள்ளச் செய்வதற்காக, கூட்டத்தில் பங்கேற்றிருந்த கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதமொன்றையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive